ரஷித்கான் பேட்டாலும் பந்தாலும் நிகழ்த்திய அற்புதம் - குஜராத் அணி தோல்வியை வெற்றியாக மாற்றியது எப்படி?

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்று இன்னும் தொடங்கவே இல்லை, ஆனால், அதற்குள் ஒவ்வொரு லீக் ஆட்டமும் பல ட்விட்ஸ்ட்கள் நிறைந்தும், ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்யும் போட்டியாகவும் அமைந்து வருகிறது.

சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் நேற்றுமுன்தினம் பரபரப்பாக அமைந்தநிலையில் அதைவிட பல மடங்கு ரத்தக்கொதிப்பை எகிறச் செய்யும் ஆட்டமாக நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்திருந்தது.

16-வது ஓவருக்குப்பின் ஆட்டத்தின் முடிவில் “ஜிக்ஜாக்” ஏற்படத் தொடங்கியது. ஒரு ஓவர் ராஜஸ்தானுக்கு சாதகமாகவும், மற்றொரு ஓவர் குஜராத்துக்கு சாதகதமாகவும் என யாருமே கணிக்க முடியாதவகையில், இருக்கையைவிட்டும், தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றவிடாமலும் ஆட்டம் அமைந்தது.

ராஜஸ்தான் அணி தனது அனைத்துவிதமான “சிலிண்டர்களை ஃபயர்” செய்தும், இறுதியில் வெற்றியை குஜராத்திடம் கோட்டைவிட்டது. கடைசிப்பந்தில் குஜராத் அணி வெற்றியைச் சுவைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி, பெருமூச்சுவிட்டுக்கொண்டது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 24-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாச்தில் வென்றது.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி

தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் முதல் தோல்வியை அதிலும் சொந்த மைதானத்தில் அடைந்துள்ளது. இதன் மூலம் 5 போட்டிகளில் ஒரு தோல்வி, 4 வெற்றி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்தாலும், நிகர ரன்ரேட் 0.871ஆகக் குறைந்துவிட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்தநிலையில் இந்த போராட்டமான சேஸிங் அந்த அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். 6 போட்டிகளில் 3 தோல்வி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது, நிகரரன்ரேட் மைனஸ் 0.637 என்ற ரீதியில் இருக்கிறது.

குஜராத் அணியின் வெற்றிக்கு கேப்டன் சுப்மான் கில் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலும் நடுவரிசை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து தோல்வியை நோக்கி கொண்டு சென்றனர். ஆனால், 7வது விக்கெட்டுக்கு ராகுல் திவேட்டியா, ரஷித்கான் கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

ரஷித்கான் எனும் பிரமாஸ்திரம்

ரஷித்கான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தன்னுள் மறைந்திருக்கும் பேட்டிங் திறனை வெளிப்படுத்தி, அணியை கரைசேர்த்துவிடுகிறார். இதற்கு முன்பும் பல ஆட்டங்கள் அதற்கு உதாரணமாக அமைந்ந்திருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் கூடுதல் சிறப்பு சேர்த்தது.

பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒரு விக்கெட் 10 டாட் பந்துகள் என ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர்களை ரஷித்கான் கட்டிப்போட்டார். பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 11 பந்துகளில் 24ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

ரஷித்கான் தனது கணக்கில் அடித்த 4 பவுண்டரிகளும், சாதாரண பவுண்டரிகள் அல்ல “கோல்டன் பவுண்டரிகள்” என்றுதான் சொல்ல வேண்டும். ரஷித்கான் அந்த பவுண்டரிகளை அடிக்காமல் இருந்தால், எதுவுமே சாத்தியமாக இருந்திருக்காது.

ரஷித் பற்றி சுப்மான் கில் கூறியது என்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ கடைசிப்பந்தில் வெற்றி என்பது அற்புதமான தருணம். ரஷித் அருமையான வீரர், இவரைப் போன்றவர் அணிக்குத் தேவை. கடந்த போட்டியிலும் திவேட்டியா, ரஷித் கான் முக்கியப் பங்களிப்பு செய்தனர், இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு உதவியுள்ளனர். இருவரும் விளையாடியவிதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசிவரை போராடிய அந்த மனநிலைதான் வெற்றி கொடுத்தது” எனத் தெரிவித்தார்

‘சஞ்சுமல் பாய்ஸ்’ ஆட்டத்தை தவறவிட்டது எங்கே?

15-ஆவது ஓவர்கள்வரை வெற்றி என்னமோ ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம்தான் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அடுத்த 5 ஓவர்களில் வெற்றியை ஒருவர் மாற்றி, ஒருவர் பிடுங்குவதும், தக்கவைப்பதுமாக இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது.

கில் 64 ரன்களுடனும், திவேட்டியாவும் களத்தில் இருந்தனர். சஹல் வீசிய 16வது ஓவரில் கில் இரு பவுண்டரிகளை விளாசிய நிலையில் 3வது பவுண்டரிக்கு ஆசைப்பட்டு வைடு பந்தை அடிக்கமுயன்று விக்கெட்கீப்பர் சாம்ஸனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். சுப்மான் கில் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தான் வெற்றி ஒளிமயமானது. அடுத்துவந்த ஷாருக்கான், திவேட்டியாவுடன் இணைந்தார்.

அஸ்வின் நேற்றைய ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவில்லை, அவரின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், திவேட்டியா ஒருபவுண்டரியும் என 17 ரன்கள் எடுத்தனர்.

கடைசி 3 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஆவேஷ்கான், முதல் இருபந்துகளி்ல் 2 ரன்களையும், 3வது பந்தில் ஷாருக்கானை யார்கர்மூலம் கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்து ட்விஸ்டை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் குஜராத் அணி 7 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

வெற்றியைத் தீர்மானித்த கடைசி 2 ஓவர்

கடைசி 12 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. திவேட்டியா, ரஷித்கான் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரை குல்தீப் சென் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன்னை விட்டுக்கொடுத்த சென், 2வது பந்தைவைடாக வீசினார். அடுத்தபந்தில் திவேட்டியா ஒரு பவுண்டரி விளாசினார். 4வது பந்தை நோபாலாக வீசி 5 ரன்களை குல்தீப் வழங்கினார். 5-வது பந்தை மீண்டும் வைடாக வீசி, கடைசிப்பந்தில் திவேட்டியா ஒரு பவுண்டரி விளாசினார்.

குல்தீப் சென் 2 வைடுகள், ஒரு நோபால் என 6 பந்துகளுக்கு கூடுதலாக 3 பந்துகள் வீசியது, குஜாரத் அணிக்கு சாதகமாக மாறி ரன்சேர்க்க உதவியது. இந்த ஓவரில் 20 ரன்களை குஜராத் அணி சேர்த்தது. 2 வைடுகளையும், நோபாலையும் குல்தீப் தவிர்த்திருந்தால் 7 ரன்களை குறைத்திருக்கலாம்.

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15ரன்கள் தேவைப்பட்டது. போட்டி நேரத்தைவிட கூடுதலாக ராஜஸ்தான் எடுத்துக்கொண்டதால், 30யார்ட் வட்டத்துக்குள் கூடுதலாக ஒருபீல்டரை நிறுத்தும் வகையில் அபராதம் விதிக்கப்பட்டது. பவுண்டரி எல்லையில் 4 பீல்டர்கள் மட்டுமே வைத்து பின்னடைவைச் சந்தித்தது.

கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசினார். முதல் பந்தில் ரஷித்கான் பேட்டை கிராஸ்ச செய்து லெக்திசையில் பவுண்டரி விளாசினார்.

2-வது பந்தில் 2 ரன்களைச் சேர்த்த ரஷித்கான் 3-வது பந்தில் ரஷித்கான் பேட்டின் நுனியில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரி சென்றது. 3 பந்துகளில் குஜராத் அணி 10 ரன்கள் சேர்த்துவிட்டது. 3 பந்துகளையும் ரஷித்கான் ஸ்ட்ரைக்கில் தக்கவைத்துக்கொண்டார்.

கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவை. 4-வது பந்தைதட்டிவிட்டு ரஷித்கான் ஒரு ரன் சேர்த்தார். 5-வது பந்தில் திவேட்டியா பந்தை தட்டிவிட எல்லைக்கோடுவரை சென்ற பந்தை பட்லர் விரட்டிப்பிடித்து பீல்டிங் செய்து எறிந்தார். திவேட்டியா (22) 3வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்அவுட் ஆகி வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

கடைசி ஒரு பந்தில் குஜராத் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார். ஆவேஷ்கான் வீசிய பந்தை பவுண்டரி அடித்து ரஷித்கான் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார்.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

கேப்டனின் கடின பணி எது தெரியுமா? - சாம்சஸின் கருத்து

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ போட்டியின் கடைசிப் பந்தை நினைத்தாலே சிரிப்பு வருகிறது, நேர்மையாகக் கூறினால் அந்த தருணத்தை பற்றி பேசவதே கடினமானது. கேப்டனின் கடினமான பணி என்பது, தோல்விஅடைந்தபின் எங்கு தோற்றோம் என்று விவரிப்பதுதான். சில மணிநேரத்துப்பின் அதைப்பற்றி கூறு முடியும். குஜராத் டைட்டன்ஸ் அணியினர் நன்றாக பேட் செய்தனர், பந்துவீச்சும், பீல்டிங்கும் அருமை. நான் பேட் செய்தபோது 180ரன்கள்தான் வரும் என நினைத்தேன், 197 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்குதான். விக்கெட் நன்கு வறண்டு, பந்து தாழ்வாக வந்தது. பந்துவீச்சு இன்னும் மேம்பட வேண்டும், தொடக்கம் சிறப்பாக இன்னும் அமைய வேண்டும், நாங்கள் இன்னிங்ஸை இழுத்துவந்தது எளிதானது அல்ல. 197 ரன்கள் ஜெய்ப்பூரில் பனிப்பொழிவு இல்லாமல் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான்” எனத் தெரிவித்தார்

டெத்ஓவரில் ஏன் போல்ட் பந்துவீசவில்லை?

ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் 15 ஓவர்கள்வரை வெற்றி இருந்தது. இதில் அஸ்வினுக்கும், குல்தீப் சென்னுக்கும் ஓவர்கள் வழக்காமல் டிரன்ட் போல்ட்டுக்கு ஓவர் வழங்கி இருக்கலாம். ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் 2 ஓவர்கள் வீசிய போல்ட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

அவருக்கு 2 ஓவர்கள் இருந்தது. மிகச்சிறந்த டெத்ஓவர் பந்துவீச்சாளரான டிரன்ட் போல்ட்டுக்கு 2 ஓவர்கள் இருந்தும், அவரைப் பந்துவீசச் செய்யாமல், ஏன் அஸ்வினுக்கும், அனுபவம் இல்லாத குல்தீப் சென்னுக்கும் பந்துவீச கேப்டன் சாம்ஸன் கூறினார் என்பது சமூக வலைத்தளங்களில் விவாதமாகியுள்ளது.

அது மட்டுமல்ல டிரன்ட் போல்டுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படாத நிலையில், அவரும் களத்தில் இருந்தபோது அவரை பந்துவீச அழைக்காதது ஏன் என்றும் கேள்விகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைத்துள்ளனர்.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

கில், சுதர்ஷன் வலுவான அடித்தளம்

197 ரன்கள் இலக்கு அடைவதற்கு கடினமானதுதான் என்றபோதிலும், கில், சாய் சுதர்ஷன் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் ஆவேஷ்கான் வீசிய முதல் ஓவரிலேயே சுதர்ஷன் அப்பர்கட் ஷாட்டில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இம்பாக்ட் வீரராக கேசவ் மகராஜ் விரைவாக வந்தாலும் 2 பவுண்டரிகளை கில் விளாசி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 44ரன்கள் சேர்த்தனர்.

சஹல் வீசிய 8-வது ஓவரில் சுதர்ஷன் 2 பவுண்டரிகளை விளாசினார். இந்த சீசனுக்கு அறிமுகமாக குல்தீப் சென் பந்துவீச அழைக்கப்பட்டார். குல்தீப் வீசிய 8-வது ஓவரில் சுதர்ஷன் 35 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், அடுத்து குல்தீப் வீசிய 11வது ஓவரில் மேத்யூ வேட் போல்டாகி ஆட்டமிழக்க, அடுத்துவந்த அபினவ் மனோகரும் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 10 பந்துகளில் குஜராத் அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து

நிதானமாக பேட் செய்த கில் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடுவரிசையில் களமிறக்கப்பட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்து சஹல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.

அதன்பின் சுப்மான் கில் ரன்சேர்க்கும் கியரை மாற்றி அஸ்வின் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டர்கள் உள்பட 13 ரன்களையும், சஹல் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டர்கள் 3வது பவுண்டரிக்கு வைடுபந்தை ஆசைப்பட்டபோது ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த கில் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தால்தான் கடைசிவரிசையில் வந்த திவேட்டியா, ரஷித்கான், ஷாருக்கானால் ஓரளவுக்கு பதற்றம் இல்லாமல் பேட் செய்ய முடிந்தது. சுப்மான் கில்லும் தொடக்கத்திலேயே ஆட்டிழந்திருந்தால், குஜராத் அணியின் தோல்வி உறுதியாகி இருக்கும்.

ராஜஸ்தான் - குஜராத்

பட மூலாதாரம், Getty Images

சாம்ஸன், பராக் பொறுப்பான ஆட்டம்

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(24), பட்லர்(8) இருவரும் விரைவாகவே ஆட்டமிழந்ததால், அணியை காக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் சாம்ஸனுக்கும், ரியான் பராக் ஏற்பட்டது. இந்த சீசனில் 5வது போட்டியில்விளையாடும் ஜெய்ஷ்வால் இதுவரை ஒரு போட்டியில்கூட சிறப்பாக பேட் செய்யவில்லை, ஒருஅரைசதம்கூட அடிக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த பட்லர் இந்த ஆட்டத்தில் ரஷித்கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. 6வது ஓவரிலிருந்து சாம்ஸன், பராக் கூட்டணி சேர்ந்து அணியை இழுத்து வந்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 130 ரன்கள் சேர்த்தனர்.

ரஷித்கான் பந்துவீச்சை மட்டும்தான் இருவராலும் அடித்து ஆடமுடியவில்லை. மற்றவகையில் மோகித் ஷர்மா, நூர்அகமது, உமேஷ் யாதவ், பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். சாம்ஸன் நிதானமாக பேட் செய்ய பராக் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி 34 பந்துகளி்ல் அரைசதம் அடித்தார். நூர் அகமதுவின் 17 பந்துகளில் ரியான் பராக் 33 ரன்கள் சேர்த்தார். சாம்ஸனுக்கு பெரிதாக ஸ்ட்ரைக் கிடைக்காதால் தொடக்கத்தில் 20 பந்துகளில் 29 ரன்கள்தான் சேர்த்திருந்தார். அதன்பின் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து சாம்ஸன் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரியான் பராக் 76 ரன்கள்(48பந்து, 5சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து மோகித் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஹெட்மயரும் சிறிய கேமியோ ஆடி 13 ரன்கள் சேர்த்தார், சாம்ஸன்68 ரன்களுடனும்,ஹெட்மயர் 13 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு சாம்ஸன், பராக் சேர்த்த ரன்கள்தான் பிரதானமாகும்.

ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், சஹல், குல்தீப் சென், ஆவேஷ் கான் ஆகிய 4 பேருமே ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். அதிலும் அஸ்வின் பந்துவீச்சு ஏன் நேற்று மோசமாக இருந்தது எனத் தெரியவில்லை. 2 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்த டிரன்ட் போல்டுக்கு ஏன் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பும் கேள்வியாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)