பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளால் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன பயன்? முந்தைய வாக்குறுதிகள் என்ன ஆகின?

மோதி - ராகுல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் நாட்டின் ஆளும்கட்சியான பாஜகவின் வாக்குறுதிகளும், எதிர்க்கட்சியான காங்கிரசின் வாக்குறுதிகளும் பேசுபொருளாக மாறியுள்ளன. 30 லட்சம் மத்திய அரசு வேலைகள் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் கூறியிருக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் குறிப்பிடாமல் ஸ்டார்ட்அப் உள்ளிட்ட தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் பெரியளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது பாஜக.

இப்படி இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்கள் என்ன? அவை எந்த வகையில் மக்களுக்கு பயனளிக்கும்? ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளில் பாஜக எந்தளவு நிறைவேற்றியுள்ளது? இதுகுறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக தேர்தல் அறிக்கை

பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய சாராம்சங்கள்

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக தனது அறிக்கையில் புதிய வாக்குறுதிகளுக்கு இணையாக பழைய சாதனைகளையும் பட்டியலிட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் அமலாக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது வாக்காளர் பட்டியல், ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேஷன், தண்ணீர், எரிவாயு இணைப்பு, மின் கட்டணம் ரத்து, திருவள்ளுவர் கலாச்சார மையம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது பாஜக.

மூன்று கோடி ஏழைகளுக்கு வீடுகள், முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கடன், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு, உற்பத்தி, ஸ்டார்ட் அப், விளையாட்டு, முதலீடு, சுற்றுலா மூலம் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அதில் உள்ளது.

அதே போல் மூன்று கோடி பெண்களுக்கு தீதீ (லட்சாதிபதி அக்கா) திட்டம் மூலம் பலன், உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் செம்மொழிகளைப் படிக்க ஏற்பாடு, திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் பலன்கள் உள்ளிட்டவையும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய சாராம்சங்கள்

வேலைவாய்ப்பு, அனைவருக்கும் வாய்ப்பு, கூட்டாட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தனது தேர்தல் அறிக்கை மூலம் கூறியுள்ள காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.

அதற்காக மத்திய அரசில் உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்புதல், நாடு முழுவதும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு, டிப்ளமோ பெற்றவர்கள் அல்லது 25 வயதுக்குட்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும் ஆகியவற்றை தனது திட்டத்தில் இணைத்துள்ளது காங்கிரஸ்.

மேலும், டிஜிட்டல் கற்றலுக்காக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போன்கள் வழங்கப்படும். மகாலட்சுமி யோஜனா திட்டம் மூலம், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். 2025-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் சரிபாதி பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல் மக்களின் தனிப்பட்ட உணவு, உடை, காதல், திருமணம் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அரசின் தலையீடு இருக்காது என்றும் காங்கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.

தேர்தல் பத்திர ஊழல், பிஎம் கேர்ஸ் ஊழல் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ள காங்கிரஸ், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட், கியூட் போன்ற மத்திய தேர்வுகள் அனைத்தும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அயோத்தி ராமர் கோவில்

பாஜக நிறைவேற்றிய வாக்குறுதிகள்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்திருந்த வாக்குறுதிகளில் இருந்து நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய வாக்குறுதிகள் சில உள்ளன.

சட்டப்பிரிவு 370 நீக்கம், ராமர் கோவில் திறப்பு, சிஏஏ சட்டம் ஆகியவை கடந்த தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளவை. இவற்றிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பும் எழுந்தது.

இதுமட்டுமின்றி பொது சிவில் சட்டத்திற்கான வரைவு ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை இந்தாண்டும் வழங்கியிருக்கிறது பாஜக.

இவற்றைத் தாண்டி வேலைவாய்ப்பு, தொழில்துறை, பொருளாதாரம், பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு துறைகளிலும் பாஜக என்ன செய்துள்ளது?

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி இந்தியா 3.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி மதிப்போடு உலகின் 5வது பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது.

பாஜக செய்யத் தவறியவை என்னென்ன?

2014-ஆம் ஆண்டு பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக பார்க்கப்பட்டது 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற வாக்குறுதி. ஆனாலும் அது பரப்புரைகளில் எதிரொலித்ததே தவிர ஆவணப்பூர்வமாக தேர்தல் அறிக்கையில் இல்லை.

சொல்லப்போனால் 2019 மற்றும் தற்போது 2024 தேர்தல் அறிக்கைகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்று பாஜக சொல்லவில்லை. மாறாக தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றே கூறியுள்ளனர்.

அதே சமயம் காங்கிரஸ் கடந்த 2019 தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் மத்திய அரசுப்பணிகள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. தற்போதைய அறிக்கையில் அதை 30 லட்சம் என்று கூறியுள்ளது. அதிலும் பெண்களுக்கு 50% வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, புதிதாக 14 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளது. கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் 1.5 கோடி திறன்சார் மற்றும் திறன்சாரா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதைத்தாண்டி தொழில்துறையில் முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் புதிய தொழில்களை ஊக்குவிப்பதன் வழியாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றே காங்கிரசும் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 மார்ச்சில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.6% ஆகும்.

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம்

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) தரவுகளின்படி, 2024 மார்ச்சில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.6% ஆகும். இதே 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.9% இருந்தது. இடையில் 2020 காலகட்டத்தில் 8% உயர்ந்து தற்போது உள்ள நிலையை அடைந்துள்ளது.

இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 27% இளைஞர்கள் உள்ளனர். சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனிதவள மேம்பாட்டு மையம் (IHD) வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024-இன் படி, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் கிட்டத்தட்ட 83% இளைஞர்களே வேலைவாய்ப்பு அற்றவர்களாக இருப்பதாக கூறியுள்ளது.

ஆனால், இந்த தரவுகளே கூட நம்பத்தகுந்ததா என்று தெரியவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

“இந்தியாவின் உட்சபட்ச கணக்கெடுப்பே மக்கள்தொகை கணக்கெடுப்புதான். அதையே எடுக்காமல் நீங்கள் எந்த தரவுகளை கூறினாலும் அது முழுமையாக இருக்காது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்பதே உண்மை,” என்கிறார் அவர்.

உதாரணத்திற்கு சிவில் விமான போக்குவரத்தை சுட்டிக்காட்டும் அவர், மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது குறைந்துள்ளதாக கூறுகிறார். நீங்கள் தொழில்வளர்ச்சி உள்ளது என்று கூறுகிறீர்கள் என்றால், அங்கு பயணத்துறை வளர்ந்திருக்க வேண்டும். இப்படியே நீங்கள் சேவைத்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறையாக தனித்தனியாக பார்த்தோம் என்றால் பலவீனமடைந்திருப்பதையே பார்க்க முடியும், என்று கூறுகிறார்.

இந்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையின் படி இந்தியா 3.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி மதிப்போடு உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2030-க்குள் 7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோடி உத்திரவாதம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை

2024-இல் பாஜக கூறுவது என்ன?

மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், மோதியின் உத்திரவாதம் என்ற தேர்தல் அறிக்கையோடு களமிறங்கியுள்ள பாஜக, தொழிற்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறுகிறது.

இதுகுறித்து பேசிய பாஜக தமிழ்நாடு மாநிலத்துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “கடந்த 10 வருடங்களில் இந்தியா பல்வேறு கட்டமைப்புகளை நிறுவியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அந்நிய முதலீடுகளும் வந்துள்ளன. 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களின் மூலம் மிகசிறந்த பொருளாதார கட்டமைப்பு உருவாகி வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. இது மென்மேலும் பெருகிக் கொண்டே இருக்கும். வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்,” என்கிறார்.

அரசியல் விமர்சகர் கலையும் தொழிற்துறையை வளர்ப்பதன் மூலம் பாஜக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றே கூறுகிறார்.

அவர் பேசுகையில், “அரசு வேலைவாய்ப்புகள் சுருங்கிப் போய்விட்டன. பாஜக ஸ்டார்ட்அப் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கி விடலாம் என்று நினைக்கிறது. இரண்டாம் நிலை, மூன்றாவது நிலை மாநிலங்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்டு செல்லுதல், வெளிநாட்டு முதலீடுகள், முத்ரா கடன் வழியாக சிறுகுறு தொழில்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது,” என்கிறார்.

"மேலும், காங்கிரஸ் சொல்வது போல் 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்புவது சாத்தியமல்ல. அதற்கான நிதி ஆதாரம் நம்மிடம் கிடையாது. எனவே காங்கிரசின் பல்வேறு வாக்குறுதிகள் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. பாஜகவில் சிலது ஓரளவு சாத்தியமுள்ளனவாக இருக்கின்றன," என்று கூறுகிறார் அவர்.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், GOPANNA / X

படக்குறிப்பு, “நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து நூறு சதவீதமும் இடஒதுக்கீடு கொடுத்துவிடுவோம்" என்கிறார் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா.

சமூக நீதி

சமூக நீதி அரசியல் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. பிரதமர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் வரை களத்தில் சமூகநீதி குறித்து பேசாமல் எந்த கூட்டமும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், தேர்தல் அறிக்கை என்று வரும்போது பாஜக எந்த இடத்திலும் சமூக நீதி என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. மாறாக காங்கிரஸ் சமூக நீதிக்கென தனிப்பக்கமே ஒதுக்கி, சமூக பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டு இடங்களை அனைத்து துறைகளிலும் ஓராண்டுக்குள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, “நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து நூறு சதவீதமும் இடஒதுக்கீடு கொடுத்துவிடுவோம். விகிதாச்சார விகிதத்தில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்,” என்கிறார்.

அதேசமயம் ஏன் சமூகநீதி என்ற வார்த்தையே பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று கேட்டபோது, “சமூகநீதி என்பது நாட்டின் அஸ்திவாரம். அதை சொல்லி மற்றவர்களை போல் ஆதாயம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

“இலவசங்களோ, கவர்ச்சிகரமான அறிவிப்புகளோ எங்களது தேர்தல் அறிக்கையில் இருக்காது. எங்களது அறிக்கையில் பல சமூக நலன் சார்ந்த பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சமூகநீதி என்ற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் திட்டங்களை நாங்கள் அறிவிக்கமாட்டோம்,” என்கிறார் அவர்.

வெறுமனே சொல்வதில் என்ன இருக்கிறது என்று பாஜக அதை தவிர்த்திருக்கிறது என்று கூறுகிறார் அரசியல் விமர்சகர் கலை.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், A S PANEERSELVAN / X

படக்குறிப்பு, “எதெல்லாம் ஜனநாயகத்தை அழிக்குமோ அதை பாஜக செய்யும். அதிகார குவியலை உருவாக்குவதே அவர்களின் இயல்பு" என்கிறார் பன்னீர்செல்வன்.

கூட்டாட்சி

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே பாஜக சிதைத்து விட்டது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களும் வரிப்பங்கீடு, திட்டங்கள் ஒதுக்குதல், நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாஜக பாகுபாடு காட்டுகிறது என்று விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பல லட்சம் கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் நாராயணன் திருப்பதி. அதே சமயம் ஜிஎஸ்டி பகிர்வு கொடுப்பதிலேயே மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக குற்றம் சாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிவரும் அவர், தமிழ்நாடு 1ரூபாய் வரி செலுத்தினால் திரும்பி 29பைசா மட்டுமே தங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு அவர்கள் செலுத்தும் வரியை விட அதிக பகிர்வு வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்.

இதற்கு பாஜக தலைவர்களும் பல முறை மாநிலங்களின் அளவு மற்றும் தேவைக்கு ஏற்றார் போல் சரிவிகிதமாகவே பகிர்ந்து அளிக்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்.

அதே போல் “கூட்டாட்சி தத்துவம் என்பது இந்தியாவின் தத்துவ முறைதான். அது இன்னமும் இங்குதான் இருக்கிறது. இந்திய அரசாங்கம் தன்னுடைய நிர்வாக வசதிகளுக்காக மாநிலங்களை பிரித்துள்ளது. தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்காகவே கூறி வருகின்றனர். அப்படி பார்த்தால் மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் தான்,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

பன்னீர்செல்வன் பேசுகையில், “எதெல்லாம் ஜனநாயகத்தை அழிக்குமோ அதை பாஜக செய்யும். அதிகார குவியலை உருவாக்குவதே அவர்களின் இயல்பு. மக்களுக்கான அதிகாரம் ஒன்றுமே இருக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை ஆட்சிமுறையை கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம். அதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,” என்கிறார்.

ஆனால், “காங்கிரஸ் அறிக்கையானது 1989-க்கு பிறகு இந்திய ஆட்சி முறையில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அதற்கு பின்புதான் கூட்டாட்சி குறித்த மாற்றம் ஏற்பட்டது. ஆனால், மோதி ஆட்சியில் அந்த தத்துவம் சிதைக்கப்பட்டு தனிக்கட்சியின் கைகளுக்கு ஆட்சி போய்விட்டது. அதை மாற்றும் ஒன்றாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது,” என்கிறார் பன்னீர்செல்வன்.

இதே கருத்தை வழிமொழியும் கோபண்ணா, “பாஜக ஒற்றை ஆட்சிமுறையை விரும்புகிறது. பிரதமர் தன்னை அதிபராக கருதிக்கொள்கிறார். பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. எனவே அவர்கள் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கவே பார்ப்பார்கள்,” என்று கூறுகிறார்.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக, “கூட்டாட்சி தத்துவத்திற்கு இரண்டு கட்சிகளுமே எதிர் தான்,” என்று கூறுகிறார் கலை.

“குறிப்பாக எமெர்ஜென்சி காலத்தில் ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை திமுகவும், அதிமுகவும் மாநிலப்பட்டியலுக்கு மாற்ற சொல்கின்றன. ஆனால் காங்கிரஸ் அது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று மட்டுமே கூறியிருக்கிறது. எனவே மாநில சுயாட்சி என்பது இந்த இரண்டு தேசிய கட்சிகளின் பட்டியலில் இருக்காது. கூட்டாட்சிக்கு இருவருமே ஒத்துழைக்க மாட்டார்கள்,” என்று கூறுகிறார் அவர்.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY / X

படக்குறிப்பு, “பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தவரை காங்கிரஸ் பொய் சொல்கிறது" என்கிறார் நாராயணன் திருப்பதி.

பெண்களுக்கான திட்டங்கள்

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மேலும் மூன்று கோடி பெண்களுக்கு லக்பதி தீதீ (லட்சாதிபதி அக்கா) திட்டம் மூலம் பலன் பெறுவார்கள் என்று முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு கோடி பேர் பலன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேசமயம் தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், காங்கிரஸ் நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்கு மகாலக்ஷ்மி திட்டத்தின் கீழ், வருடத்திற்கு ஒரு லட்சம், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், அரசுப்பணிகளில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளது.

ஆனால், இது நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்று கூறுகிறார் நாராயணன் திருப்பதி.

“பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தவரை காங்கிரஸ் பொய் சொல்கிறது. உதாரணமாக 30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும் என்று கூறுகிறது. முதலில் அத்தனை லட்சம் பணியிடங்கள் எங்கு இருக்கிறது? அதில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என்றால் ஏற்கனவே உள்ள பணியாளர்களை என்ன செய்ய போகிறது?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் அவர்.

அதேபோல், நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்கு 1 லட்சம் தரப்படும் என்கிறார்கள். இதற்கெல்லாம் எங்கு பணம் இருக்கிறது? அதைக்கேட்டால் ஏழையிலும் ஏழை பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டம் என்கிறார்கள். இப்போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன சொல்வார்கள்? என்று கேட்கிறார் கலை.

அவரை பொறுத்தவரை, “பெண்களுக்கான விஷயத்தில் மாநில கட்சிகளான அதிமுகவின் கட்சி பதவிகளில் இடஒதுக்கீடு, திமுகவின் பெண்களுக்கும் சொத்துரிமை திட்டம் போன்ற திட்டங்களே முக்கியமானது. இந்த விஷயத்தில் தேசிய கட்சிகள் பெரியளவு கவனம் செலுத்தியது போன்று தெரியவில்லை,” என்கிறார்.

அதேசமயம் இந்தியாவில் உள்ள 10 கோடி பெண்களுக்கு பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக கூறுகிறது.

ஆனால், கடைசியாக எரிவாயு சிலிண்டருக்கான மானியம் எப்போது வந்தது என்று கூட யாருக்கும் தெரியாது. அந்தளவிற்கே இவர்களின் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த சிந்தனை இருப்பதாக கூறுகிறார் பன்னீர்செல்வன்.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருவள்ளுவர் கலாச்சார மையத்தை உலகம் முழுவதும் அமைக்க உள்ளதாக கூறியுள்ளது பாஜக.

தமிழும், தமிழ்நாடும்

நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் எனினும், இதில் எப்போதும் தமிழ்நாட்டின் பங்கு தனித்துவமானது தான். அதற்கு சான்றாக சமீபத்தில் அதிக முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றதை சுட்டிக்காட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள்.

தொடர்ந்து பல கூட்டங்களில் தமிழில் பேசி உரையை ஆரம்பிக்கும் பிரதமர் மோதி, தனது முதல் நேர்காணலையே தமிழ் ஊடகத்திற்கு வழங்கியிருப்பது பலருக்கும் ஆச்சரியம். ஆனால், பிரதமர் மோதி மட்டும் பாஜகவின் தமிழுணர்வு இந்த தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கிறதா?

பாஜக தங்களது வாக்குறுதிகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மொழிகள், இசை ஆகியவற்றை உலகமறிய செய்யப்போவதாக அறிவித்துள்ளது. மேலும், தொன்மையான மொழிகளை ஆய்வு செய்ய, கற்றுக்கொள்ள, பரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், “தமிழை செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட கிளாசிக்கல் இன்ஸ்டிட்யூட்டுக்கு இன்னமும் பணியாளர்களை நியமிக்கவில்லை. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இதை கூட செய்யவில்லை என்றால், தற்போது திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று அறிவிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் பன்னீர்செல்வன்.

கோபண்ணா பேசுகையில், “7 முதல் 8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு கடந்த ஐந்து வருடங்களில் 78 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறீர்கள். அதே பயன்பாட்டில் இல்லாத 25,000 பேருக்கு மட்டுமே தெரிந்த சமஸ்கிருதத்துக்கு 1400 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியிருக்கிறீர்கள். இது மாதிரி தமிழ்மொழி புறக்கணிப்பு, மாநில மொழி புறக்கணிப்பு, மற்ற கலாச்சாரங்களை புறக்கணிக்கும் பாஜக சொல்வதெல்லாம் பொய்,” என்கிறார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டிருக்கும் ஆர்டிஐ தகவலின்படி, 2017 - 2022 காலகட்டத்தில் மட்டும் சமஸ்கிருத மொழிக்காக மத்திய அரசு 1074 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும், இதே 2017 - 2020 காலகட்டத்தில் தமிழ் மொழிக்காக 3 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்து அந்தந்த மாநிலங்கள் அவற்றின் மொழிகளை வளர்ச்சியடைய செய்கின்றன. ஆனால், மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு உதவுகிறது என்றால் அதற்கு காரணம் அந்த மொழி எந்த மாநிலத்தின் தாய்மொழியும் அல்ல. எனவே இதை ஒப்பிடுவதே சரியல்ல,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

மேலும், “முதலில் தமிழ்நாட்டில் தமிழுக்காக அரசு என்ன செய்தது? தமிழ்மொழிக்கு நாங்கள் பணம் ஒதுக்கவில்லை என்று கேட்பதே அவர்களால் தமிழ்மொழிக்கு எதையும் செய்ய முடியவில்லை என்று உணர்த்துவதாகவே நான் பார்க்கிறேன்,” என்று கூறுகிறார் அவர்.

அரசியல் விமர்சகர் கலையை பொறுத்தவரை, “திருவள்ளுவரை எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கடமையில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பயன்படுத்துகிறது பாஜக,” என்று நம்புகிறார்.

இதைத்தாண்டி நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகளை அந்தந்த மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்தலாம், இல்லையென்றால் ரத்து செய்யப்படும் என்பது போல் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆனால், பாஜக நீண்ட நாட்களாகவே நீட் தேர்வு அவசியமானது என்றும், அதை வைத்து மாணவர்களிடம் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறி வருகிறது. இந்த முறை ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு பாஜக கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டு போராட்டம் நடத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக அந்த சட்டங்களை திரும்ப பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் நிலை என்ன?

இந்தியாவில் 11 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் பெற்றுவருவதாகவும், கடந்த ஆட்சியில் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்திருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச ஆதாரவிலையை அதிகரித்தல், நவீன முறையில் விவசாயத்தை ஊக்குவித்தல், விவசாய காப்பீடு, விவசாயிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் பாஜக அளித்துள்ளது.

ஆனால், 2020-ஆம் ஆண்டு பாஜக கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டு போராட்டம் நடத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக அந்த சட்டங்களை திரும்ப பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையே உள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், எம்எஸ்.சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நவீன முறையில் விவசாயம், காப்பீடு உள்ளிட்ட அம்சங்களையும் அது சேர்த்துள்ளது.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், KALAI

படக்குறிப்பு, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள் உள்ளன” என்று கூறுகிறார் அரசியல் விமர்சகர் கலை.

தேர்தல் அறிக்கைகள் கூறுவது சாத்தியமா?

தேர்தல் அறிக்கைகளின் முக்கிய சாரம்சங்களான வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம் என எல்லா கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. ஆனால், அவை சொல்லும் அனைத்தும் சாத்தியப்படுமா?

பன்னீசெல்வன் கூறுகையில், “மாநிலத்துக்கு ஏற்றார் போல் ஒரு அரசியலை செய்கிறது பாஜக. இங்கு வந்தால் சமூகநீதி என்பது, வேறு மாநிலத்துக்கு சென்றால் வேறு எதையாவது பேசுவது தான் அதன் வேலை. சமீபத்தில் கூட கச்சத்தீவு பிரச்னையை பாஜக கிளப்பியது,” என்கிறார்.

ஆனால், “அது எதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை என்பதற்காக அதை விட்டுவிட்டது. அவ்வளவு தீவிரமாக பேசிய பாஜக குறைந்தபட்சம் அதுகுறித்த சிறு வார்த்தையை கூட அறிக்கையில் இணைக்கவில்லை. எனவே, அவர்கள் வெளியில் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று என்பதைத்தான் இதைக்காட்டுகிறது” என்கிறார்.

கோபண்ணாவோ, “அவர்களிடம் சொல்வதற்கு எதுவுமே இல்லை. 2025க்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் உள்ள நாடாக மாற்றுவேன் என்று சொன்னார்கள். ஆனால், அது முடியாது என்று தற்போது தெரிந்தவுடன் 2027 என்கிறார்கள். நாட்டை தற்போது 180 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளதாக மாற்றி விட்டார்கள். இந்த பத்தாண்டுகளில் 128 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து வாக்குறுதிகளும் தோல்வியே” என்று கூறுகிறார்.

நாராயணன் திருப்பதி கூறுகையில், “நாங்கள் போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதற்கு மாறாக நாங்கள் வளர்வதன் மூலம், இந்த நாடு வளரும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும், பெண்களும், இளைஞர்களும், விவசாயிகளும் வளர்வார்கள்” என்கிறார்.

“ஐந்துகிலோ அரிசி, வயதானோருக்கான மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சாத்தியமுள்ள வாக்குறுதிகளை பாஜக கொடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள் உள்ளன,” என்று கூறுகிறார் அரசியல் விமர்சகர் கலை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)