இந்தியா வல்லரசாக உருவெடுக்க முடியுமா? சாதகமான அம்சங்களும் சவால்களும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
ஏப்ரல் 19ஆம் தேதி உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ளது. ஆறு வாரங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்தலில் 96.9 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போதைய பிரதமரான நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டுகிறது.
அணு ஆயதம் கொண்டுள்ள நாடாகவும், நிலவில் தனது விண்கலத்தை தரையிறக்கிய நாடாகவும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாக மாறிய இந்தியா, இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தி தற்போது உலகின் 5வது வலிமை மிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது.
பலரும் இந்தியா உலகின் அடுத்த வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளனர். ஆனாலும், அந்த முன்னேற்றம் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கையுடன் கலந்தது.

பட மூலாதாரம், Getty Images
வளர்ந்து வரும் பொருளாதாரம்
கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது பிரதமர் மோதி, “இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், கடைசி மூன்று மாதங்களில் 8.4 சதவீதமாக விரிவடைந்த பொருளாதாரத்தின் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அங்கீகாரத்தை பெற்றது இந்தியா.
ஒரு நாட்டில் உள்ள நிறுவனங்கள், அரசுகள் மற்றும் தனிநபர்களின் பொருளாதார செயல்பாடுகளை அளவிடும் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மூலம் உலகப் பொருளாதாரங்களை வரிசைப்படுத்தலாம்.
அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி உட்பட பல நிதி நிறுவனங்களின் கூற்றுப்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்தி மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வழித்தடத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற போது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சி, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்ய முடியாத அளவிற்கான மோசமான உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறையையே விட்டுச் சென்றது.
அப்போது இந்தியாவின் தனிநபர் ஆயுட்காலம் 35 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் உலக வங்கியின் கூற்றுப்படி, இன்று அது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து 67 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய சராசரி 71 ஆண்டுகள் ஆகும்.
உலகின் அதிக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வைரங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட மருந்துகள் ஆகியவை அடங்கும். இந்தியாவின் செழிப்பு மிக்க சேவைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு, மென்பொருள் துறைகளின் வளர்ச்சியே அதன் பொருளாதார ஏற்றம் காண காரணமாக அமைந்தது.
ஆனால் அதே வேகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். HSBC யின் ஒரு மதிப்பீட்டின்படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை உயரும்போது, 70 மில்லியன் வேலைவாய்ப்புகளை அது உருவாக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் மூன்றில் ஒருபங்கை தாண்டி அதற்கு மேல் உருவாக்க வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Getty Images
'மக்கள் தொகை பெருக்கம்'
பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது குறைவு. ஐ.நா கூற்றுப்படி 2022 ஆம் ஆண்டில், சீனா மக்கள் தொகையின் சராசரி வயது 38.4 மற்றும் ஜப்பான் 48.6 ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகை சராசரி வயது 28.7 ஆக இருந்தது.
தற்போது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. இந்திய பொருளாதார வல்லுநர்களான பஷார் சக்ரவர்த்தி மற்றும் கௌரவ் டால்மியா ஆகியோர் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய மக்கள் தொகையில் வேலைக்கு செல்லும் வயதினரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்று கணித்துள்ளனர்.
ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூவிடம் அவர்கள் பேசுகையில், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் இந்த "உழைக்கும் வயது மக்கள் தொகையையே" நம்பியுள்ளது என்று தெரிவித்தனர்.
ஆனால் அந்த தொழிலாளர்கள் அனைவரையும் நாட்டில் தக்கவைப்பது கடினம். ஐ.நா.வின் கூற்றுப்படி, இந்தியாவைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் . அதாவது சுமார் 1.8 கோடி மக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதில் உயர்கல்வியில் சாதனை படைத்தவர்களும் அடங்குவர்.
இந்தியக் குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வெளிவிவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அதிகமான இந்தியர்கள் காலவரையின்றி வெளிநாட்டில் தங்குவதைத் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதியில்லை. 2022 ஆம் ஆண்டில், 225,000 க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது குடியுரிமையை ரத்து செய்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கை.
பலருக்கும் உள்ளூரில் வேலைவாய்ப்பை பெறுவது சவாலாக அமைந்துள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% என்று கூறுகிறது. இது அமெரிக்காவில் 3.8% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 15-29 வயதிற்குட்பட்டவர்கள் 83% பேர் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வி பெற்றவர்கள் என்றும் தெரிவித்தது.
இந்திய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சித்தார்த்தா டெப், "நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து, இளைஞர்களுடன் உரையாடுகிறேன். அவர்கள் மன சோர்வடைந்துள்ளனர்” என்று கூறுகிறார்.
"பொருளாதார வளர்ச்சியானது நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற புதிய உள்கட்டமைப்பைக் கொண்டுவந்தது. மேலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் பொதுவாகவே இந்தியாவில் உள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்," என்று கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
உழைக்கும் பெண்கள் எங்கே போனார்கள்?
இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 33% என்று அரசு கூறுகிறது. இதை அமெரிக்காவில் 56.5%, சீனாவில் 60.5% மற்றும் உலகளாவிய சராசரி 49% என்ற அளவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவாகவே உள்ளது என்று உலக வங்கி கூறுகிறது.
கடந்த காலத்தை விட அதிகமான இந்தியப் பெண்கள் கல்வியில் முன்னேறியிருந்தாலும், திருமணம் செய்து கொள்ளும் மற்ற பெண்கள், கலாசாரத்தை பின்பற்றி வீட்டில் தங்க வேண்டிய சூழலே உள்ளது.
பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே கூறுகையில், பல உழைக்கும் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் என்கிறார்.
"வேலை ஒப்பந்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களுடன் கூடிய வழக்கமான ஊதியம் பெறும் வேலைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நீடிக்கும் சமத்துவமின்மை
உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஏறக்குறைய இந்தியாவின் பாதி மக்கள் தொகையானது, உலக வங்கியின் சராசரி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறது, அதே நேரத்தில் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 1991 இல் ஒருவரில் இருந்து 2022 இல் 162 ஆக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார கொள்கைக்கான பேராசிரியர் டாக்டர் அசோகா மோதி, "இந்தியாவில் பரந்த சமத்துவமின்மை நிலவுகிறது" என்று கூறுகிறார். மேலும் இதுவே, "பெரியளவிலான கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறுவது முட்டாள்தனமான ஒன்று" என்று கருதுவதற்கான முக்கிய காரணமாகும்.
அப்படியான முக்கிய மாற்றங்களில் ஒன்று, இந்திய பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது உட்பட, சமத்துவமின்மையை போக்கும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவது என்று டாக்டர் மோதி குறிப்பிடுகிறார்.
"நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களுக்கு வேலை கிடைப்பது கடினம். மேலும் கல்வி மற்றும் சுகாதாரமும் மோசமாக உள்ளது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
தீவிரமடையும் அரசியல் கருத்து வேறுபாடு
இந்தியாவில் அரசியல் கருத்து வேறுபாடு ஒன்றும் புதிதல்ல. 1800களில் இருந்தே இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா அல்லது இந்து நாடாக இருக்க வேண்டுமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 80% மக்கள் இந்துக்கள்.
2014 இல் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத பாஜக கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில், ஐ.நா. மற்றும் அமெரிக்க அரசு ஆகிய இரண்டும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தங்களது கவலைகளை தெரிவித்திருந்தன.
‘2014 தேர்தலுக்குப் பிறகு இந்தியா’ குறித்த சர்ச்சைக்குரிய நாவலான Quarterlife என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்ட எழுத்தாளர் தேவிகா ரேஜ், தனது நாடு "வகுப்புவாத முரண்பாட்டின்" அலையை எதிர்கொண்டு வருவதாக நம்புகிறார்.
இதுகுறித்துஅவர் கூறுகையில் : "இந்தியாவில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதற்கு அடையாள அரசியல் ஏற்கனவே ஒரு காரணியாக இருந்தது. ஆனால் 2014 தேர்தல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற மட்டத்தில் இருந்தே மக்களை வெவ்வேறு திசைகளை நோக்கி தள்ளியது."
"இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை மறுப்பது கடினம், ஆனால் அதேசமயம் இந்தியாவில் சிவில் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி வகுப்புவாத முரண்பாடு நிறைந்துள்ளது. இதுபோன்ற சூழல் விரைவில் கைமீறி செல்லும்போது, அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.”

பட மூலாதாரம், Getty Images
"மேற்குலகின் கைப்பாவை அல்ல இந்தியா"
ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் சக்தியாக இந்தியா மாறும் என்று பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் நம்பி வந்தன. அணு ஆயுதம் கொண்ட நாடாக இருப்பதுடன், 1.45 மில்லியன் சுறுசுறுப்பான பணியாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும் கொண்டுள்ளது. ஆனால் இந்தியா எப்போதும் மேற்குலகின் விருப்பப்படி நடந்து கொள்வதில்லை.
ரஷ்யா-யுக்ரைன் போரில் அதன் நடுநிலை நிலைப்பாடு மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான மேற்கத்திய தடைகளை மீறி ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் அது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸின் சர்வதேச உறவுகளுக்கான நிபுணர் சானியா குல்கர்னி, மேற்கத்திய நாடுகள் அணுகுவதற்கு சீனாவை விட இந்தியா "குறைந்த சவால்கள்" கொண்டதாக இருக்கும் என்று மேற்குலகம் எதிர்பார்க்கலாம். ஆனால் எப்போதும் இந்தியாவிற்கு அதன் சொந்த இலக்குகள் இருப்பதாக எச்சரிக்கிறார்.”
"இந்தியா மேற்கத்திய நாடுகளுக்கான தூதராக செயல்படும் என்று எதிர்பார்ப்பது தவறானது" என்று கூறும் அவர், "மேற்கத்திய எதிர்ப்புக்கு எதிரான மேற்கத்தியர் அல்லாத ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதையே இந்தியா வலியுறுத்துகிறது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












