அறிவாற்றல் முரண்பாடு: தவறு எனத் தெரிந்தே பின்பற்றும் பழக்கங்களை கைவிடும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images
புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என புகைப்பிடிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். சில நேரங்களில் அவர்களேகூட புகைபிடித்துக் கொண்டே, “இது உடலுக்கு மிகவும் கேடு. சீக்கிரம் நிறுத்த வேண்டும்” என்பார்கள், ஆனாலும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள் அல்லது அதை நியாயப்படுத்த சில காரணங்களை வைத்திருப்பார்கள்.
“புகைப்பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள் (உலக சுகாதார அமைப்பின் அறிக்கை), எனவே இதை விடுங்கள்” என அவர்களிடம் கூறினால், “அட, சாலை விபத்தில் எவ்வளவு பேர் இறக்கிறார்கள், அதற்காக சாலையில் பயணம் செய்யாமலா இருக்க முடியும்?” எனக் கேட்பார்கள்.
மேலும் ஆதாரங்களை நாம் அடுக்கினால், அவர்களும் அதற்கு ஏற்றாற்போல புதிய நியாயங்களை, காரணங்களைக் கூறுவார்கள். பணம் சேமிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு ஆடம்பர பொருட்களை வாங்குவது, ஆரோக்கியமாக இருக்க ஆசை ஆனாலும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மறுப்பது என இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
இத்தகைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல்தான் என்ன? இதனால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அறிவாற்றல் முரண்பாடு (Cognitive dissonance)
முன்னர் சொன்னது போல் ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பான உடலுடன் இருக்க வேண்டுமென யாருக்குத்தான் ஆசை இருக்காது. தோற்றம் சார்ந்த அழகு என்பதைத் தாண்டி அவ்வாறு இருப்பதால் உடல்நிலையும் மனநிலையும் மேம்படும் எனப் பெரும்பாலானோருக்கு தெரியும்.
ஆனால் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்றால் அதை உடனே தொடங்காமல் ஏதேனும் ஒரு காரணம் சொல்வார்கள். உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலனைவிட எந்தக் காரணத்திற்காக அதைத் தவிர்க்கிறோமோ அதுதான் முக்கியம் என நினைப்பார்கள்.
இன்னொரு உதாரணம், ஒரு நபர், நன்றாகப் படித்திருப்பார், முற்போக்கான கருத்துகளைப் பேசுவார். ஆனால் தேர்தலில் அவரது கருத்துகள், கொள்கைகளுடன் முரண்படும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பார். அவரது கொள்கைகளைவிட, அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்கான காரணம் அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியதால் இதைச் செய்திருப்பார்.
இந்த மனநிலைக்குப் பெயர்தான் அறிவாற்றல் முரண்பாடு. ஒரு நபரின் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது கொள்கைகளோடு அவர்களின் செயல்கள் முரண்படும்போது எழும் அசௌகரியம் அல்லது பதற்றத்தை இது குறிக்கிறது.
அறிவாற்றல் முரண்பாடு கோட்பாடு 1950களில் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கரால் முன்மொழியப்பட்டது. காலத்திற்கு ஏற்றாற்போல தனிநபர்கள் தங்கள் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் அல்லது நடத்தைகளை மாற்றுவதன் மூலம் இந்த முரண்பாட்டைக் குறைப்பதற்கான உந்துதலை அவர்களால் பெற முடியும் என அவரது ஆய்வு கூறுகிறது.
இதுவொரு சாதாரண பிரச்னை போலத் தெரியலாம். ஆனால் தனி மனிதர்கள் மட்டுமல்லாது, ஒரு குழுவாகக்கூட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1954இல் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ‘தி சீக்கர்ஸ்’ (The Seekers) என்ற வழிபாட்டுக் குழுவின் தலைவர் டோரதி மார்ட்டின் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டார்.
இதுதான் அவரது அறிவிப்பு
"கிளாரியன் எனும் கிரகத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் என்னைத் தொடர்பு கொண்டனர். இந்த ஆண்டின் (1954) டிசம்பர் 25 அன்று இந்த உலகம் அழியும்.
ஆனால், நம் குழு மட்டும் வேற்றுகிரகவாசிகளால் பேரழிவில் இருந்து காப்பாற்றப்படும், பூமி அழிவதற்கு சற்று முன்பு ஒரு விண்கலத்தில் வந்து அவர்கள் நம்மை அழைத்துச் செல்வார்கள். தயாராக இருங்கள்.”
அவரது மிகவும் விசுவாசமான ஆதரவாளர்கள் சிலர், தங்கள் தலைவரின் தீர்க்கதரிசனத்தின் மீதான முழு நம்பிக்கை காரணமாக, தங்கள் சொத்துகளை விற்று, தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, வேற்றுகிரகவாசிகளின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
அவர்களது குழுவில் சில ஒற்றர்களும் இருந்தனர். உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் மற்றும் அவரது சகாக்களான ஹென்றி ரிக்கென், ஸ்டான்லி ஷாக்டர் ஆகியோர் இந்தக் குழுவின் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள ஆதரவாளர்கள் போல உள்ளே நுழைந்திருந்தனர்.
டிசம்பர் 25 அன்று உலகம் அழியவில்லை என்றால் இந்தக் குழு தங்கள் தவறை உணர்ந்து கொள்ளும் என அவர்கள் நினைத்தார்கள். அதேபோல டிசம்பர் 25 வந்தது, அன்று உலகம் அழியவில்லை. ஆனால் இந்தக் குழு தங்கள் தலைவரைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அவரை மேலும் கொண்டாடினார்கள்.
எப்படி என்றால், இங்குதான் அறிவாற்றல் முரண்பாடு வேலை செய்தது.
திடீரென்று குழு தலைவர் மார்ட்டின் ஒரு செய்தியை வெளியிட்டார், “வேற்றுகிரகவாசிகள் உலகை அழிக்க வேண்டாமென முடிவு செய்துவிட்டார்கள், காரணம் நமது குழு மேற்கொண்ட பிரார்த்தனைகள் தான். அதனால்தான் ஒன்றும் நடக்கவில்லை,” என்று அந்தச் செய்தியில் கூறினார்.
குழு நபர்களும் வெளியே சென்று இதை பொது மக்களிடம் கூறி, “பார்த்தீர்களா எங்கள் மகிமையை, நாங்கள் செய்த பிரார்த்தனையால் உலகம் அழிவிலிருந்து தப்பித்தது” என்று பரப்புரை செய்தார்கள்.
உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர் இதன்மூலம் புரிந்துகொண்டது என்னவென்றால், உலகம் அழியவில்லை என்பது குழுவின் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
இருந்தும் தங்களது தலைவரின் தீர்க்கதரிசனத்தை நம்பியது சரிதான் எனத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அல்லது தங்களது செயல்கள் குறித்து மகிழ்ந்துகொள்ள அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. தங்கள் பிரார்த்தனையால்தான் உலகம் அழியவில்லை என்ற காரணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
தனது இத்தகைய ஆய்வுகள் மூலம்தான் அறிவாற்றல் முரண்பாடு கோட்பாட்டை முன்மொழிந்தார் உளவியலாளர் லியோன் ஃபெஸ்டிங்கர்.
அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தும் பாதிப்புகள்

“கடந்த 2020இல் உலகம் முழுவதும் கொரோனா பரவியபோது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சொன்னபோது பலரும் அணியவில்லை. ஒரு உயிர்கொல்லி நோய் பரவுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்தும்கூட சிலர் முகக்கவசம் அணியாமல் சுற்றினார்களே, அதுவே அறிவாற்றல் முரண்பாட்டின் விளைவுதான்,” என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.
தொடர்ந்து பேசிய அவர், “நமக்கு ஒரு எண்ணம் வருகிறது, அது நமக்கு நல்லதல்ல, தவறு எனத் தெரிந்தும் அதைச் செய்வது என்பது மனிதர்களில் பலருக்கும் உள்ள பழக்கம். சிந்தனை மற்றும் செயல்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாடு உளவியல் பதற்றத்தை உருவாக்குகிறது.
இந்தப் பதற்றத்தைக் குறைக்க சிலர் தங்களது தவறுகளை நியாயப்படுத்துவார்கள் அல்லது தங்களது சிந்தனையை மாற்றிக் கொள்வார்கள். எனவே ஒருவர் தனது பகுத்தறிவு சிந்தனைகளை அடையாளம் கண்டு, இதைச் செய்தால் தவறு, அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து அதைச் சரிசெய்ய வேண்டும்.
தொடர்ந்து நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கக்கூடாது. அவ்வாறு செய்து கொண்டே இருந்தால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்," என எச்சரிக்கிறார் மருத்துவர் கிருபாகரன்.
“நம்முடைய எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. அதற்கு எப்படி எதிர்வினை புரிகிறோம் என்பதைப் பொறுத்துதான் எல்லாம். எனவே உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைக் கவனியுங்கள், அதில் எதைச் செயலாக மாற்ற வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் எனபதை யோசித்தால் அதுவே இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் கிருபாகரன்.
குற்றவுணர்வுக்கு வழிவகுக்கும் அறிவாற்றல் முரண்பாடு

பட மூலாதாரம், Getty Images
குற்றவுணர்வு என்பது அறிவாற்றல் முரண்பாடு ஏற்படுத்தக்கூடிய முக்கியச் சிக்கல்களில் ஒன்று எனக் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.
“சமீபத்தில் ஒரு கணவன்- மனைவி என்னிடம் ஆலோசனை பெற வந்தார்கள். கணவர் நன்றாகப் படித்தவர், நல்ல பணியில் இருப்பவர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இதையெல்லாம் தாண்டி, கணவருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் தாம் செய்வது தவறு எனத் தெரிந்து மனைவியிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு எனத் தெரிந்தும் ஏன் செய்தீர்கள் எனக் கேட்டால், அவரிடம் பதில் இல்லை.
என்னால் இந்த குற்றவுணர்வைத் தாங்க முடியவில்லை என அழுகிறார். இதுபோன்ற பல வழக்குகள் உள்ளன. தவறு எனத் தெரிந்தால், அந்த சிந்தனையைச் செயலாக மாற்றக்கூடாது. பின்னர் குற்றவுணர்வில் தவிப்பதால் நாம் இழந்தவை மீண்டும் வராது அல்லவா!” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












