PBKS vs RR: ராஜஸ்தானை கரை சேர்த்த ஹெட்மயர் - கடைசிவரை திணறடித்த பஞ்சாப் கிங்ஸ்

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

ஐபிஎல் டி20 தொடரின் அழகே ஒவ்வொரு ஆட்டமும் எப்படி நகரும் என்று கணிக்க முடியாமல் இருப்பதுதான். அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கும், ஆனால் ஆட்டம் ஒருதரப்பாக முடியும். மற்றொரு போட்டியில் குறைந்த ஸ்கோர் குவிக்கப்பட்டாலும், இரு அணிகளும் வெற்றிக்காக கடைசிப் பந்துவரை போராடி ரசிகர்களின் பொறுமையை, இதயத் துடிப்பைச் சோதித்துப் பார்க்கும்.

இதுபோன்ற விதவிதமான சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட போட்டிகள் தொடர் முழுவதும் நிறைந்திருப்பதுதான் இந்த ஐபிஎல் தொடரின் வெற்றியாக அமைந்துள்ளது. அதுபோன்ற ஆட்டம்தான் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடந்தது.

கடைசிப் பந்துவரை எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்களாலும், களத்தில் இருக்கும் வீரர்கள், டக்அவுட்டில் இருக்கும் அணி குழுவினர் என யாராலும் ஊகிக்க முடியவில்லை. அதுபோன்ற உச்ச பரபரப்பு நிறைந்த ஆட்டம் நேற்று நடந்தது.

முல்லான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 27வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நிகர ரன்ரேட் உயரவில்லை

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5 வெற்றிகள் பெற்றும் நிகர ரன்ரேட் பெரிதாக உயராமல் 0.767 ஆகவே இருக்கிறது.

குறைவான இலக்குள்ள இந்த ஆட்டத்தில் குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால் நிச்சயமாக நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால் கடைசிப் பந்துவரை சேஸிங்கை இழுத்து வந்ததால், பெரிதாக நிகர ரன்ரேட் உயரவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் 0.218 ஆக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால், நிச்சயமாக 6வது இடத்துக்கு முன்னேறியிருக்கும்.

திணறிய ராஜஸ்தான்

நேற்றைய இலக்கைப் பொறுத்தவரை 148 என்பது மிகவும் குறைவான இலக்குதான். இந்தக் குறைந்த இலக்கை சேஸிங் செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகப்பெரிய போராட்டம் நடத்தியது ஏன் என்பது வியப்பாக இருக்கிறது.

விக்கெட்டும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது அல்ல, அப்படி இருந்தும் பேட்டர்கள் பொறுப்பின்றி பேட் செய்து ஆட்டமிழந்து ஆட்டத்தை நெருக்கடியில் தள்ளினர்.

எளிதாக வெற்றி பெறக்கூடிய ஸ்கோராக இருக்கும் நிலையில், ஒரு பேட்டர் நிலைத்து பேட் செய்திருந்தால் ஆட்டம் 15 ஓவர்களில் முடிந்திருக்கும்.

இதுபோன்ற குறைந்த ஸ்கரை சேஸிங் செய்யத் தொடங்கும்போது ஏதாவது இரு பேட்டர்கள் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டு பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தினாலே 70% வெற்றி உறுதியாகிவிடும்.

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

ஆனால், ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 39 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சம். மற்ற வகையில் எந்த பேட்டரும் முன்னெடுப்பு செய்து அதிரடியான ஆட்டத்தை ஆடவில்லை. பெரிதாக ஸ்கோர் செய்யாததும் கடைசி வரையிலான போராட்டத்துக்கு காரணம்.

வெற்றிக்கு உரிய டிபெண்ட் செய்ய முடியாத ஸ்கோராக 147 ரன்கள் என்பது இருந்தாலும், கட்டுக்கோப்பான ஃபீல்டிங், துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றால், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கடைசிப் பந்துவரை போராடியது சிறப்பு.

ஹீரோ சிம்ரன்

கடைசி நேரத்தில் சிம்ரன் ஹெட்மயர் மட்டும் கேமியோ ஆடி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 10 பந்துகளில் 27 ரன்கள் சேர்க்காமல் இருந்திருந்தால், ராஜஸ்தான் தோல்வி உறுதியாகி இருக்கும்.

கடைசிப் பந்துவரை வெற்றிக்காகப் போராடிய ஹெட்மயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

திசை மாறிய ஆட்டம்

ராஜஸ்தான் அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்களும், அடுத்த 9 ஓவர்களில் 52 ரன்களும் சேர்த்தது. 15 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

முப்பது பந்துகளில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் 4 விக்கெட்டுகள் சரிந்தது, கட்டுக்கோப்பான பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு வெற்றியை எளிதாக ராஜஸ்தானுக்கு வழங்கவில்லை.

பரபரப்பு நிறைந்த கடைசி ஓவர்கள்

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

சாம் கரன் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ரியான் பராக், ஜூரெல் இருந்தனர். இந்த ஓவரை நெருக்கடியாக வீசிய சாம்கரன் 6 ரன்கள் மட்டுமே வழங்கினார். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

அர்ஷ்தீப் வீசிய 17வது ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்த நிலையில் 4வது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மயர் களமிறங்கினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானுக்கு கிடைத்தது.

கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சல் படேல் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 6 ரன்னில் சசாங்சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் ஹெட்மயர் ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்பட 14 ரன்கள் சேர்த்து பதற்றத்தைக் குறைத்தார்.

நெருக்கடி ஏற்படுத்திய விக்கெட் சரிவு

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், பாவெல் களத்தில் இருந்தனர். சாம்கரன் வீசிய 19வது ஓவரில் பாவெல் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார்.

ஆனால், 3வது பந்து ஸ்லோ பவுன்சராக வீச விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பாவெல் 11 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேசவ் மகராஜ் ஒரு ரன்னில் லிவிஸ்டோனிடம் கேட்ச கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தாலும், 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்தது.

எதிர்பாராத இரு சிக்ஸர்கள்

IPL 2024: RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ஹெட்மயர், போல்ட் களத்தில் இருந்தனர். அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளை ஹெட்மயருக்கு யார்கராக வீச ரன் ஏதும் எடுக்கவில்லை.

மூன்றாவது பந்தை யார்கராக வீச முயன்று தவறவே, ஹெட்மயர் சிக்ஸருக்கு விளாசினார். 4வது பந்தில் ஹெட்மயர் 2 ரன்கள் எடுக்கவே ஆட்டம் பரபரப்பானது.

கடைசி 2 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் ஃபுல்டாஸாக வீசவே, ஹெட்மயர் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

ரபாடாவின் புயல்வேகம்

பஞ்சாப் அணி போட்டியை கடைசிப் பந்துவரை இழுத்து வந்து நெருக்கடி கொடுக்க அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான் காரணம். குறிப்பாக ரபாடா அற்புதமாகப் பந்துவீசினார். 4 ஓவர்களை வீசிய ரபாடா 18 ரன்கள் கொடுத்து சாம்ஸன், ஜெய்ஸ்வால் இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

IPL 2024: RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

இதில் 14 டாட் பந்துகளும் அடங்கும். பவர்ப்ளே ஓவரில் ரபாடா இரு ஓவர்களையும் கட்டுக்கோப்பாக வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நடுப்பகுதி ஓவர்களில் மீண்டும் ரபாடா பந்துவீச வந்தபோது, ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றிப் பயணித்தது.

அப்போது ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சில் ஜெய்ஸ்வால், கேப்டன் சாம்ஸன் வீழ்ந்தனர். ரபாடா தன்னுடைய 4 ஓவர்களில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க அனுமதித்தார்.

அதேபோல கேப்டன் பொறுப்பேற்று ஆடிய சாம் கரனும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப், ஹர்சல் படேல் இருவர் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை வாரி வழங்கினர். மற்றவகையில் லிவிங்ஸ்டோன், ஹர்பிரித் பிராரும் ஓவருக்கு 7 ரன்களுக்குள்தான் கொடுத்தனர். இதில் அர்ஷ்தீப், ஹர்சல் படேல் கட்டுக்கோப்பாக வீசியிருந்தால், ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியிருக்கும்.

'பெருமையாக இருக்கிறது'

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பேசுகையில், “விக்கெட் சிறிது மெதுவாக இருந்ததால் பந்து நின்று சென்றன. நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பேட்டிங்கில் அளிக்கவில்லை என்றாலும் ஃபினிஷிங் சிறப்பாக இருந்தது.

நாங்கள் எங்களால் முடிந்தவரை வெற்றிக்காக முயன்றோம். 150 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

நெருக்கடியாக வந்து தோற்றாலும் பல பாசிட்டிவ் விஷயங்களை அடையாளம் கண்டோம். பேட்டிங்கில் இன்னும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பந்துவீச்சு, ஃபீல்டிங் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக இருந்தது. வெற்றிக்கு அருகே வந்து முடியவில்லை என்பது வருத்தம். நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம்.

முலான்பூர் அனைவருக்குமே புதியதாக இருந்தது, இருப்பினும் தகவமைத்துக் கொண்டோம். கடைசிப் பந்துவரை ஆட்டத்தைக் கொண்டு சென்ற எங்கள் பந்துவீச்சாளர்களைக் கண்டு பெருமையாக இருக்கிறது,” எனத் தெரிவித்தார்

பேட்டிங்கில் திணறிய பஞ்சாப் கிங்ஸ்

IPL 2024 : RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்காக பந்துவீ்ச்சாளர்கள் போராடிய அளவுக்கு பேட்டர்களும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருந்தால், ஆட்டம் நிச்சயமாக பஞ்சாப் கிங்ஸுக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனால், பஞ்சாப் அணியில் ஜிதேஷ் ஷர்மா சேர்த்த 29 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது.

அனுபவம் மிகுந்த பேட்டரான பேர்ஸ்டோவுக்கு கட்டம் சரியில்லை. இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட சராசரியாக 30 ரன்களைக்கூட கடந்திருக்கமாட்டார். இந்த ஆட்டத்திலும் ஹெட்மயருக்கு கேட்ச் பயிற்சி அளிப்பதுபோல் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் 15 ரன்னில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய அதர்வா தைடே 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரப்சிம்ரன் சிங்(10), சாம் கரன்(6), சசாங் சிங்(9), லிவிங்ஸ்டோ(21) என வலிமையான பேட்டிங் வரிசை இருந்தும் ஒருவர்கூட நிலைத்து பேட் செய்யவில்லை.

இந்த 4 பேட்டர்களின் படுமோசமாக இருந்ததே விக்கெட் இழப்பிற்கு காரணம் என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால் பஞ்சாப் வெற்றியை உறுதி செய்திருக்கும்.

கடைசி வரிசையில் களமிறங்கிய அஷுடோஷ் சர்மா கேமியோ ஆடியதால் ஓரளவுக்கு கௌரமான ஸ்கோரை பஞ்சாப் பெற்றது. அஷுடோஷ் 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என மந்தமாக பேட் செய்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும்தான் பஞ்சாப் அணி 72 ரன்கள் சேர்த்ததால்தான் கௌரவமான ஸ்கோர் கிடைத்தது.

இல்லாவிட்டால் 120 ரன்களில் பஞ்சாப் அணி சுருண்டிருக்கும். பஞ்சாப் அணியில் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை எவ்வாறு களத்தில் செயல்படுத்துகிறது என்பதில்தான் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி அடங்கியிருக்கிறது.

கட்டுக்கோப்பான ராஜஸ்தான் பந்துவீச்சு

IPL 2024: RR vs PK

பட மூலாதாரம், SPORTZPICS

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்து பஞ்சாப் அணியை 147 ரன்களில் கட்டுப்படுத்தினர். ஆனால், ராஜஸ்தான் அணியின் பேட்டர்களும், பஞ்சாப் பேட்டர்களை போல் தங்களின் பணியை முழுவதுமாகச் செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 ரன்டேட்டுக்கு அதிகமாக ரன்களை கொடுக்கவில்லை. கடந்த போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே போல்டுக்கு ஏன் வழங்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த முறை 4 ஓவர்கள் வீசிய போல்ட் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கேசவ் மகராஜ் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

யஜூவேவந்திர சஹல் 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் 200வது விக்கெட்டை எடுத்தார். ஆவேஷ், குல்தீப் சென்னும் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)