இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 17 இந்தியர்களுடன் இந்திய அதிகாரிகள் சந்திப்பு எப்போது? இரு நாடுகளும் பேச்சு

இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை சிறைப்பிடித்த இரான் - உள்ளே உள்ள இந்தியர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Strait of Hormuz

    • எழுதியவர், மட் மர்ஃபி
    • பதவி, பிபிசி நியூஸ்

அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலை சனிக்கிழமை இரான் கைப்பற்றியது.இந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட மொத்தம் 25 பேர் இருந்ததாக சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை விரைந்து மீட்பது குறித்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இது குறித்து இரானிய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் இருந்து 50 மைல் (80 கி.மீ.) தொலைவில் எம்.எஸ்.சி ஏரிஸ் என்ற அந்தக் கப்பலை இரானிய சிறப்புப் படையினர் சிறைபிடித்ததாக, தொடர்புடைய கப்பல் நிறுவனமான எம்.எஸ்.சி அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையால் பெறப்பட்ட வீடியோ பதிவுகள், ஹெலிகாப்டரில் இருந்து கப்பலின் மீது துருப்புகள் தாக்குவதைக் காட்டுகின்றன.

போர்த்துகீசிய கொடி பொருத்தப்பட்டுள்ள அக்கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது.

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலுக்கு சில மணிநேரங்கள் முன்னதாக, இச்சம்பவம் நடைபெற்றது. இதனிடையே, சனிக்கிழமை நள்ளிரவு முதல் இஸ்ரேல் மீது இரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகம் வான்வழி தாக்குதலால் அழிக்கப்பட்டதற்குப் பதிலடியாகக் கருதப்படுகிறது.

கடைசியாக உள்ள கண்காணிப்புத் தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரக கடற்கரையில் எம்.எஸ்.சி. ஏரிஸ் கப்பல், 18 மணிநேரத்திற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி சென்றதைக் காட்டியது. அதன்பின் அதன் கண்காணிப்புத் தரவு முடங்கியதாகத் தெரிகிறது. இப்பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களில் இத்தகைய முடக்கம் வழக்கமானது.

பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, அக்கப்பலில் ஆட்கள் உள்ளதை உறுதிப்படுத்தியது. ஆனால், அதில் இரானிய தலையீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா கடற்கரையில் "பிராந்திய அதிகாரிகளால்" கப்பல் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரானிய ஊடகங்கள் இந்தத் தாக்குதலில் அந்நாட்டின் சிறப்புப் படைகளின் ஈடுபாட்டை பரவலாகக் கூறிவருகின்றன.

இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை சிறைப்பிடித்த இரான் - உள்ளே உள்ள இந்தியர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், Strait of Hormuz

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய துருப்புகள்

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது. அக்கப்பல், “இஸ்ரேலுடன் தொடர்புடையது" என்றும் அது தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலை இரானிய கடற்பரப்புக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ பதிவுகளில், ஹெலிகாப்டரில் இருந்து கப்பல் மீது துருப்புகள் தாக்குவதைக் காணலாம். "வெளியே வராதே" என்று கப்பலில் உள்ளவர் ஒருவர் கத்துவதைக் கேட்க முடிந்தது.

ஒரு வீடியோவில், மற்ற துருப்புகள் கப்பலில் ஏறியதைக் காணலாம். எம்.எஸ்.சி-யின் படி, கைப்பற்றப்பட்ட நேரத்தில் 25 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன் கூறுகையில், இந்தக் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா குடிமக்கள் உள்ளனர்.

"கப்பலையும் அதிலுள்ள சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க இரானுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று ஏட்ரியன் வாட்சன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

"ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு கப்பலைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட கடற்கொள்ளை” என அவர் தெரிவித்துள்ளார்.

"இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மேலும் இரானை இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வைக்க எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்" என அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம், Getty Images

கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அதிகாரிகள் சந்திக்க நடவடிக்கை

இரான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியிருக்கும் இந்திய பணியாளர்களை, இந்திய அதிகாரிகள் விரைவில் சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பலான MSC ஏரீஸில் உள்ள 25 பணியாளர்களில் 17 பேர் இந்தியர்கள்.

இரானின் வெளியுறவு அமைச்சகம், இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையே நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் தொலைபேசி வழியாக பேசினார்.

இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடனான தொலைபேசி அழைப்பின் போது, கப்பலில் இருந்த 17 இந்தியர்களின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாகவும், உதவி கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

"சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், விரைவில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விரைவில் சிக்கியுள்ள குழுவினரை சந்திக்கக் கூடும்" என்று அறிக்கை வெளியிடப்பட்டது. எப்போது சந்திக்கக் கூடும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

'இரானுக்கு தடை விதிக்க வேண்டும்'

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

டெஹ்ரான் அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.

இந்தக் கப்பலை எம்.எஸ்.சி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இது ஓஃபரின் ‘சோடியாக் மெரிடைம்’ உடன் இணைந்த கோர்ட்டல் ஷிப்பிங் நிறுவனத்திடம் இருந்து கப்பலை குத்தகைக்கு விடுக்கிறது.

தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இரானிய புரட்சிகர காவலர் படையை உடனடியாக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, இரானுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அந்த சரக்குக் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டிலிருந்து அப்பிரதேசத்தில் பல கப்பல்களை இரானிய படைகள் கைப்பற்றியுள்ளன.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை இரான் குற்றம்சாட்டி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)