ராமநாதபுரம்: திமுக - அதிமுக சவாலுக்கு நடுவே ஓபிஎஸ் கரை சேர்வாரா? இஸ்லாமியர்களின் வாக்குகள் யாருக்கு?

ராமநாதபுரம் தொகுதி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகத்தில் நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட மாவட்டம் ராமநாதபுரம். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்கள் மத்தியில் என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார், திமுக கூட்டணியில் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடும் நவாஸ் கனிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது, அதிமுக வேட்பாளர் என்ன செய்கிறார்? என்பது பிபிசி தமிழ் கள ஆய்வு நடத்தியது.

ராமநாதபுரத்தில் முதல்முறையாக போட்டியிடும் ஓபிஎஸ்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி என மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,97,012 பேர், பெண் வாக்காளர்கள் 8,08,955 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 83 பேர் என மொத்தம் 16,08,125 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் இரட்டை இலை சின்னத்திலும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஏணி சின்னத்திலும், பாஜக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பலாப்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரியா மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் பட்டாணி, வாளி, திராட்சை, கண்ணாடி கிளாஸ், கரும்பு விவசாயி ஆகிய தனி சின்னங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ் கனி 4,69,943 வாக்குகள், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகள் பெற்றனர். 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற பத்து நாடாளுமன்ற தேர்தலில் முதல் மூன்று முறை காங்கிரஸ், ஒரு முறை தமாக, மூன்று முறை அதிமுக வென்றுள்ளது. இரண்டு முறை திமுக நேரடியாகவும், ஒரு முறை திமுக சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரும் இங்கே வென்றுள்ளனர்.

ராமநாதபுரத்தில் முதல்முறையாக போட்டியிடும் ஓபிஎஸ்

பட மூலாதாரம், K.NavasKani/Facebook

படக்குறிப்பு, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கனி.

வேட்பாளர்களின் பின்னணி

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கனி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தொழிலதிபரான இவர் சென்னையை மையமாகக் கொண்டு கூரியர் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகிறார்.

நவாஸ் கனி கடந்த முறை தேர்தலில் போட்டியிடும் போது மக்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லாதவராக இருந்தார். இருப்பினும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக போட்டியிடுவதால் மக்களுக்கு அறிமுகமான நபராக இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேனி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.

ஓபிஎஸ் வெளியூரை சேர்ந்தவர் என்றாலும் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. அவரது தேர்தல் பிரசாரங்களில் மக்கள் அதிகளவு வருவதை காண முடிகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெய பெருமாள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர். இவர் திமுக பின்புலத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சகோதரர் விருதுநகர் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

ஜெய பெருமாள் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இரட்டை இலை சின்னத்தில் ஜெய பெருமாள் போட்டியிட்டாலும் தொகுதி மக்கள் அவரை புதுமுக வேட்பாளராக தான் பார்க்கின்றனர்.

ராமநாதபுரத்தில் முதல்முறையாக போட்டியிடும் ஓபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

மாவட்டம் வளர்ச்சி அடைய வணிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

ராமநாதபுரம் மாவட்ட மேம்பாட்டிற்காக பல கோரிக்கைகள் நவாஸ் கனியிடம் வைக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு சிலவற்றை மட்டும் தான் அவர் செய்து கொடுத்துள்ளதாக கூறுகிறார் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சத்திரக்குடியைஅடுத்த போகலூரில் எந்தவிதமான வசதியும் இல்லாமல் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியால் வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை அகற்ற வேண்டும் என கடந்த முறை நவாஸ் கனியிடம் வணிகர் சங்கம் தெரிவித்ததன் அடிப்படையில் அதை அகற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் செய்து தரவில்லை.

உப்பூர் அனல் மின் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அந்தத் திட்டம் திடீரென கைவிடப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டால் தொழில் வளங்கள் கூடும். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், எனவே அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தெற்கு ரயில்வே சார்பில் கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் - கோவை இடையே தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில் கேரளா செல்லும் பல வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

காரைக்கால் முதல் தூத்துக்குடி வரை ராமநாதபுரம் வழியாக ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்கள் வெளிநாடு செல்வதற்கு வசதியாக உச்சிப்புளியில் விமான நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கடந்த முறை தேர்தலின் போது வர்த்தக சங்கம் சார்பில் நவாஸ் கனிடம் முன் வைத்திருந்தோம்.

நவாஸ் கனி ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கைகள் குறித்து பேசுவதாக தெரிவிக்கிறார், ஆனால் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து இத்திட்டங்களை பெற்று தரவில்லை. ” என வணிகர் சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நவாஸ்கனி என்ன செய்தார்?

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் ஒரு சில கோரிக்கைகளை நவாஸ் கனி நேரடியாக செய்து கொடுத்தாலும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ஏமாற்றத்தை தந்துள்ளது என்கிறார் தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 117 வருவாய் கிராமங்களுக்கு காப்பீட்டுத் தொகை விடுபட்டு போனது. அதை அறிந்த நவாஸ்கனி உடனடியாக டெல்லி வேளாண் துறை அதிகாரிகளிடம் பேசி பெற்றுத் தந்தார்.

காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் நவாஸ்கனி பேசியதாக சொல்லி இருக்கிறார். இருப்பினும் நவாஸ் கனியின் பேச்சு வெறும் அழுத்தமாக இருந்ததைத் தவிர நடைமுறைக்கு வரவில்லை என்பதால் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.” என தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பக்கியநாதன் தெரிவிக்கிறார்.

ராமநாதபுரத்தில் முதல்முறையாக போட்டியிடும் ஓபிஎஸ்

‘ஒவ்வொரு தேர்தலின் போதும் வெடிக்கும் கச்சத்தீவு பிரச்னை’

மீனவர் பிரச்னை எல்லா தேர்தல்களிலும் பிரதிபலிக்கிறது, ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்கிறார் மீனவர் அலெக்ஸ்.

மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும், அதே போல் இந்த முறையும் கச்சத்தீவு பிரச்னை பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. கச்சத்தீவு மீட்கப்பட்டு மீனவர்கள் உரிமை காக்கப்பட்டால் மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படும்.

கடந்த முறை நவாஸ்கனி பாராளுமன்றத்தில் மீனவர் பிரச்னை குறித்து பலமுறை அழுத்தம் கொடுத்தார் ஆனால் மீனவர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. மீனவர்களை சந்தித்த ஓபிஎஸ் மீனவர்கள் முன்னிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை தொலைபேசியில் தொடர்புகொண்டு மீனவர் பிரச்னை குறித்து பேசினார்.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், மீன்களை சேமித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்கு அமைத்து தருவதாக உறுதி அளிப்பவர்களுக்கு மீனவர்கள் இந்த முறை வாக்களிப்பார்கள்” என்கிறார் மீனவர் அலெக்ஸ்.

ராமநாதபுரம் தொகுதி நிலவரம்

‘நவாஸ் கனியைப் பார்த்ததில்லை’

தேர்தல் கள நிலவரம் தெரிந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தை சேர்ந்த குடும்பத்தலைவி செல்வியிடம் பேசினோம். “குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது, ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ராமேஸ்வரம் மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பி நவாஸ் கனியை பெரும்பாலும் பார்த்ததில்லை.

தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஆங்காங்கே தெரு விளக்குகள், நிழற்குடைகளை நவாஸ்கனி அமைத்துக் கொடுத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நவாஸ் கனியின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது என்பது எங்களை போன்ற சாமானியர்களின் கருத்தாக உள்ளது. பன்னீர் செல்வம் முன்னாள் முதல்வர் என்றாலும் வெளியூரை சேர்ந்தவர் என்பதால் மக்கள் தங்களது பிரச்னையை எப்படி சொல்வது என்ற சந்தேகம் அனைவரின் மத்தியில் உள்ளது” என்கிறார் செல்வி.

இஸ்லாமியர்களின் வாக்குகள் யாருக்கு?

பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளிடம் பிபிசி தமிழ் பேசியது, அப்போது அவர்கள், "சிஏஏ சட்டம் உள்ளிட்டவற்றால் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் நிச்சயம் வாக்கு செலுத்த போவதில்லை. ஒருவேளை முன்னாள் முதல்வர், அதிமுகவில் இருந்து விலக்கபட்டவர் என்ற அனுதாபத்தில் அவருக்கு ஒரு சில இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது" என்கிறார்கள்.

"கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இருந்ததால் இஸ்லாமியர்களின் வாக்குகள் அப்படியே நவாஸ்கனிக்கு கிடைத்தது. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இருப்பதால் இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கும் வாக்களிப்பார்கள், வாக்குகள் சிதறுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு" என்கின்றனர் சில இஸ்லாமிய அமைப்புகள்.

‘ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமையும்’

தேர்தல் நெருங்குவதால் இறுதி கட்ட தீவிர பிரசாரத்திற்கு நடுவே பிபிசி தமிழிடம் பேசிய திமுக கூட்டணி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி, “கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை மக்களுக்கு செய்துள்ளேன். ஆனால் மக்களின் பல கோரிக்கைகள் என்னால் செய்து கொடுக்க முடியாததற்கு பாஜக அரசே காரணம்.

புதிதாக அமைய உள்ள இந்தியா கூட்டணி அரசு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றும். புதிய ஆட்சி அமைந்தவுடன் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைத்து தரப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில் சேவை தொடங்கப்படும்.

கச்சத்தீவை மீட்டு மீனவர்கள் மீன்பிடி உரிமையை பெற்று தர முழு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மீனவர்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் போட்டியிடுவது அது உங்களுக்கு பலவீனமாக இருக்குமா என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியதற்கு, “நான் கடந்த முறை ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இம்முறை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த முறை மக்களுக்கு செய்து கொடுத்த நலத்திட்டங்களை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறேன்.

முன்னாள் முதல்வரை பொறுத்தளவில் ஒரு சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். சரியான கட்டமைப்பு இல்லை. அவர் சமுதாய ரீதியாக ராமநாதபுரத்தை தேர்வு செய்து இங்கு போட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கட்சியைப் பார்த்து மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள் தவிர. சமுதாய ரீதியாக வாக்களிக்க மாட்டார்கள். எனவே இது அவருக்கு பெரிய பின்னடைவாக அமையும்” என்கிறார் நவாஸ்கனி.

ராமநாதபுரத்தில் முதல்முறையாக போட்டியிடும் ஓபிஎஸ்

பட மூலாதாரம், P.Ravindhranath/X

படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் ஓபிஎஸ் மிகவும் நெருக்கமாக இருப்பதால் தீர்வுகள் உடனே கிடைக்கும் என்கிறார் ரவீந்திரநாத்.

‘குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’

மாவட்ட வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை நேரடியாக பிரதமரிடம் இருந்து ஓபிஎஸ் அவர்கள் பெற்று தருவார் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட காலப் பிரச்னையான குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இளைஞர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன் வைத்து ஓபிஎஸ் அவர்கள் மக்களை சந்தித்து வருகிறார்.

வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் நல்ல வரவேற்பளிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோதியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் ஓபிஎஸ் அவர்கள் வெற்றி பெற்றால் மக்களின் பிரச்னைகளை நேரடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி தீர்வு பெற்றுத் தருவார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்னையாக உள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இலங்கையில் உள்ள பல அரசியல் தலைவர்கள் ஓபிஎஸ் அவர்களுடன் நட்புடன் இருப்பதால் மீனவர் பிரச்னை குறித்தும் உடனடியாக பேசி தீர்க்கப்படும். நரேந்திர மோதி கச்சத்தீவை மீட்டு மீனவ மக்களின் உரிமையை மீட்டெடுப்பார், அதற்கு ஓபிஎஸ் அவர்கள் உறுதுணையாக இருப்பார்” என்றார்.

ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன என பிபிசி தமிழ் கேட்டதற்கு பதில் அளித்த ரவீந்திரநாத், “தென் மாவட்டங்களில் பல மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாறிவரும் நிலையில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் ராமநாதபுரம் பின்தங்கி உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ராமநாதபுரத்தை தேர்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாறியதற்கு ஓபிஎஸ் அவர்களின் பங்களிப்பு முக்கிய காரணம். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தையும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவார்” என்றார்.

பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதால் முன்னாள் முதல்வருக்கு பின்னடைவு ஏற்படுமா என பிபிசி கேட்டதற்கு பதில் அளித்த அவர், “பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் அவர்கள் போட்டியிடுகிறார் என்பது ராமநாதபுரம் மக்கள் மத்தியில் சென்றடைந்து விட்டது. எனவே பன்னீர் செல்வம் என்ற பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. அது எங்களை எந்த அளவிலும் பாதிக்காது.” என ரவீந்திரநாத் தெரிவித்தார்

ராமநாதபுரம் தொகுதி நிலவரம்

அதிமுக வேட்பாளர் கூறுவது என்ன?

அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாளிடம் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் அவர் வைக்கும் வாக்குறுதிகள் குறித்து பிபிசி தமிழ் கேட்டதற்கு, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை முன் வைத்து மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதால் இதற்கெல்லாம் தீர்வு பெற்றுத் தருவதாக மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்துள்ளேன். கச்சத்தீவை மீட்பது, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்ற வாக்குறுதிகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறேன்.

மாவட்டம் முழுவதும் மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். இந்த முறை நிச்சயம் அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு மக்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் நிச்சயம் மக்களுக்காக பணி செய்வேன்” என ஜெய பெருமாள் தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள ஒ.பன்னீர் செல்வங்கள் சார்பாக வாளி, திராட்சை, கரும்பு விவசாயி உள்ளிட்ட சின்னங்கள் மற்றும் 'ஐயா OPS அவர்களுக்கு வாக்களியுங்கள்' என்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

மக்களைச் சந்தித்து பல இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.

ராமநாதபுரம் தொகுதி நிலவரம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)