ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாம் காப்ரால்
- பதவி, பிபிசி செய்திகள்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது.
அண்மையில் டிரம்ப் இரண்டு தனித்தனி நியூயார்க் சிவில் வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளை எதிர்கொண்டார். ஆனால் அவர் மீதான குற்றவியல் விசாரணைகள் சற்று வித்தியாசமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.
இவ்வழக்கில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் `கிரிமினல்’ ரகம் அல்ல என்று வாதிட்ட அவர், தான் குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.
எட்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் இவ்வழக்கின் விசாரணை, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பின் பரப்புரையில் விளைவுகளை ஏற்படுத்தும். பரப்புரையில் ஈடுபடுவதிலிருந்து அவர் அடிக்கடி விலகியிருக்க நேரிடும்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் எதிர்கொள்ளும் வழக்கு என்ன?
கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட டிரம்ப் உடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.
டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ என பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.
டிரம்புடனான தொடர்பு குறித்து மௌனமாக இருப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்த பணத்தை தனக்கு ட்ரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் "சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தும்" முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.
வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்குச் செலுத்தியது தவறு என்று குற்றம்சாட்டுகிறது.
மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் தேர்தல் பரப்புரை பாதிக்கப்படுமா?
எதிர்வரும் 2024 தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகக் கருதப்படும் ட்ரம்ப், பகலில் நீதிமன்றத்தில் இருக்கவும், இரவில் பிரசாரம் செய்யவும் உறுதிபூண்டிருந்தார். சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.
இருப்பினும், அவர் வரும் மே 17-ஆம் தேதி தனது மகனின் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழா நடக்கும் நாளில் விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். விசாரணை நாளுக்கு சில தினங்கள் முன்னர் இதுகுறித்து முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ட்ரம்ப் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. சமீபத்தில் முடிவடைந்த இரண்டு சிவில் வழக்குகளிலும் அவர் அவ்வப்போது விசாரணைக்கு வந்துவிடுவார். அவர் விருப்பப்படி நீதிமன்றத்துக்கு வந்துப் போவார். ஆனால் இம்முறை நடக்கும் விசாரணையில், அவர் ஒரு குற்றவியல் பிரதிவாதி என்பதால், ட்ரம்ப் செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது.
ட்ரம்ப் தனது குற்றவியல் விசாரணையில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்படலாம்.
நீதிமன்றத்திற்கு வராமலிருப்பதை ஞாயப்படுத்த சில வரையறுக்கப்பட்ட காரணிகள் உள்ளன. மற்றொரு விசாரணைக்குச் செல்ல அல்லது ஒரு முக்கியமான நிகழ்வுக்குச் செல்ல ட்ரம்பை நீதிபதி அனுமதிக்க முடியும்.
ஆனால் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்ப்பது பெரிய குற்றமாகப் பார்க்கப்படும் என்று முன்னாள் வழக்கறிஞரும் வெஸ்ட் கோஸ்ட் ட்ரையல் வழக்கறிஞர்களின் தலைவருமான நேமா ரஹ்மானி கூறினார்.
மேலும், “ஜூரியாக இருக்கப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஜூரியாக இருக்கும் போது, வழக்கில் ஒரு தரப்பினர் தங்கள் நேரத்தை மதிக்காமல் இருப்பதை கண்டால், அது தண்டனை பெறுவதற்கான உறுதியான வழி," என்றும் அவர் கூறினார்.
முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியை வென்றுவிட்ட நிலையில், தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக கருதப்படுகிறார். இனி அவர் கவலைப்பட வேண்டியது நவம்பர் மாதப் பொதுத் தேர்தல் பற்றி மட்டுமே.
ஆனால் தற்போது நடக்கும் ஆறு முதல் எட்டு வார விசாரணை அவரது பரப்புரைக்கு இடையூறாகவும், அதிபர் ஜோ பைடனை எதிர்கொள்வதில் சிக்கலாகவும் அமையும். மேலும், வழக்குச் செலவுகள் அவரது பரப்புரை நிதியையும் பாதிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
விசாரணை எப்படி நடக்கும்?
கடந்த ஆண்டு, டிரம்புக்கு எதிரான வரி மோசடி விசாரணையை மேற்பார்வையிட்ட மான்ஹாட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹுவான் மெர்சன், 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமர்வில் செயல்படுகிறார். ஆனால், ஒரு முன்னாள் அமெரிக்க அதிபரின் குற்றவியல் விசாரணை நீதிபதியாக அவர் இருப்பது இதுவே முதல் முறையாகும். இது அவரது வாழ்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருக்கும்.
முன்னதாக ட்ரம்ப், “நீதிபதி என்னை வெறுக்கிறார். எனவே அவர் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், நீதிபதி மெர்சன் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டார்.
ட்ரம்ப் தனது பல்வேறு வழக்குகளுக்காக பல சட்ட வல்லுனர்கள் குழுவை அமர்த்தியுள்ளார். அவரை இங்கு பிரதிநிதித்துவப்படுத்துவது சூசன் நெசெல்ஸ் மற்றும் டோட் பிளான்ச் தலைமையிலான குழுவாகும்.
ட்ரம்ப் மீது குற்றம்சாட்டிய முதல் நபரான மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், வழக்குத் தொடர எட்டு அனுபவமுள்ள வழக்குரைஞர்களைக் கொண்ட குழுவைக் கூட்டியுள்ளார். வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை முன்வைக்க குறைந்தபட்சம் 15 முதல் 17 நாட்கள் தேவைப்படும் என்றும், சில நிபந்தனைகளில் இரு தரப்பினரும் உடன்படவில்லை என்றால் இன்னும் அதிக அவகாசம் தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.
ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் கோஹன் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடந்த காலம் குறித்த தீவிரமான குறுக்கு விசாரணைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்.
இதற்கிடையில், ட்ரம்ப் தன்மீதான குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்றும் ‘அரசியல் நோக்கம் கொண்டவை’ என்றும் வாதிட்டார். ஆனால் இந்தக் கூற்றுகளை நிரூபிக்க அவர் எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.
நீதிபதி மெர்சனின் விதிகளின்படி, புதன்கிழமைகள் அல்லது ஏப்ரல் 29 அன்று நீதிமன்றம் இயங்காது. ட்ரம்பின் சட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அனுசரிக்கும் யூதர்களின் பாஸ்கா பண்டிகையை முன்னிட்டும் விசாரணை இடைநிறுத்தப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
நீதிபதிகள் எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?
நியூயார்க் குற்றவியல் விசாரணைகளுக்கு ஆறு மாற்று நீதிபதிகள் உட்பட 12 நீதிபதிகள். விசாரணை தொடங்குவதற்கு முன்னர், நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்கள், பலவிதமான கேள்விகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். ட்ரம்ப் பற்றிய செய்திகளை எங்கிருந்து தெரிந்துகொள்கிறார்கள், என்பது தொடங்கி, அவர்கள் முன்னர் டிரம்ப் பேரணியில் கலந்து கொண்டார்களா என்பது வரை பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
ட்ரம்பின் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றைப் படித்தீர்களா அல்லது கோஹனின் பேச்சுகளில் ஏதாவது கேட்டிருக்கிறீர்களா என்றும் அவர்களிடம் கேட்கப்படுகிறது.
ரஹ்மானியின் கூற்றுப்படி, நீதிபதிகளின் தேர்வு விசாரணையின் பெரும்பகுதியை எடுத்துக்கொள்ளக்கூடும். ஏனெனில் "டொனால்ட் ட்ரம்ப் யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி அனைவருக்குமே ஒரு கருத்து உள்ளது," என்கிறார்.
"யாரும் எந்தச் சார்புகளுமற்று நீதிமன்ற அறைக்குள் வருவதில்லை," என்றும் ரஹ்மானி கூறினார். எனவே, பாரபட்சமற்ற ஒரு நீதிபதிக் குழுவைத் தேர்வு செய்ய, வாதப் பிரதிவாதக் குழுக்கள் 500 நீதிபதிகளில் இருந்து சல்லரை போட்டுத் தேடலாம்.
நீதிபதி மெர்சன் கேள்விகள் கேட்பதற்கான நேரத்தை வரையறுக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் விசாரணை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமா?
அமெரிக்காவில், நீதிமன்ற விசாரணைகளின்போது ஒளி-ஒலி பதிவுகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் நியூயார்க்கும் ஒன்றாகும்.
நீதிமன்ற அறைகளுக்குள் கேமராக்களை அனுமதிப்பது நீதிபதிகளின் சொந்த விருப்பம் சார்ந்தது. பெரும்பாலான நாட்களில் டிரம்பின் சிவில் மோசடி விசாரணையில் இருந்து ஒரு சில காணொளிகள் கிடைத்தன. ஆனால் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது நீதிபதி மெர்ச்சன் தனது நீதிமன்ற அறையில் கேமராக்களை அனுமதிக்கவில்லை. எனவே இந்த விசாரணையிலும் கேமராக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் குறைவு.
எனவே, இந்த வழக்கின்மீது பரவலான ஆர்வம் இருந்தபோதும் விசாரணையை நேரில் பார்க்க மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்குள் வெகுசில பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எஞ்சியுள்ள மக்கள், ஊடகச் செய்திகள் மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும், டிரம்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமகவுமே இவ்வழக்கைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












