டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு - மீண்டும் அதிபரானால் அவருக்கு மன்னிப்பு கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹோலி ஹோண்ட்ரிச்
- பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் டிசி
34 குற்றச்சாட்டுகள், எரிச்சலடைந்த நீதிபதி, அணிவகுத்த சாட்சியங்கள்.
கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என, இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு 12 நடுவர்கள் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
வரலாற்றுபூர்வமான ஒரு விசாரணையைத் தொடர்ந்து வழங்கப்பட்ட வரலாற்றுபூர்வ தீர்ப்பு இது. இதன்மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபரானார் டொனால்ட் டிரம்ப். மேலும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் முக்கியக் கட்சி ஒன்றின் அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவதும் இதுவே முதல் முறை.
அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Reuters
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
இனியும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
முடியும்.
அதிபர் வேட்பாளர்களுக்கு வெகுசில தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 35 வயதை எட்டியிருக்க வேண்டும், 'அமெரிக்காவில் பிறந்த' அந்நாட்டுக் குடிமகனாகவும், குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் அந்நாட்டில் வாழ்ந்தவராகவும் இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கும் எந்த விதிமுறைகளும் இல்லை.
எனினும், இந்தத் தீர்ப்பு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தாண்டு தொடக்கத்தில் ப்ளூம்பெர்க் மற்றும் மார்னிங் கன்சல்ட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், இரு முதன்மை கட்சிகளுக்கும் ஒத்த அளவு ஆதரவு உள்ள மாகாணங்களில், டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், தாங்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என, 53% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
குயின்னிபியாக் பல்கலைக்கழகம் இம்மாதம் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பில், 6% டிரம்ப் ஆதரவு வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது, இரு கட்சிகளுக்கிடையேயான கடும் போட்டியில் விளைவுகளை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப்புக்கு என்ன நடக்கும்?
இவ்வழக்கின் விசாரணைக் காலம் முழுவதும் டிரம்ப் ஜாமீனில் இருந்தார். இது, வியாழக்கிழமை (மே 30) தீர்ப்பு வெளியான பிறகும் மாறாது. டொனால்ட் டிரம்ப் சொந்த ஜாமீனில் (recognisance) விடுவிக்கப்பட்டார்.
அவர் ஜூலை 11 அன்று நீதிமன்றத்திற்குத் திரும்புவார். அன்றைய தினம் இவ்வழக்கின் நீதிபதி ஹுவான் மெர்ச்சன் தண்டனை விவரங்களை அறிவிப்பார்.
தண்டனை வழங்கும்போது, டிரம்ப்பின் வயது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை நீதிபதி கருத்தில் கொள்வார்.
அவருக்கான தண்டனை வாய்ப்புகளுள் அபராதம், நன்னடத்தைக் கண்காணிப்பு அல்லது சிறைத்தண்டனை ஆகியவை உள்ளடங்கும்.
இந்தத் தீர்ப்பை டிரம்ப் 'அவமானகரமானது' எனத் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார், அதன் நடைமுறை பல மாதங்கள் அல்லது அதையும் தாண்டி நீடிக்கும்.
டிரம்ப்பின் சட்டக்குழு இதற்காக மான்ஹாட்டனில் உள்ள மேல்முறையீட்டு நடுவர் மன்றத்தை (Appellate Division) எதிர்கொள்ளலாம்.
இதன்மூலம் தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் டிரம்ப் சிறைக்குச் செல்வது சாத்தியமில்லை, ஏனெனில் மேல்முறையீடு செய்யும்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல்முறையீட்டுக்கான அடிப்படை என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இவ்வழக்கின் மையமாக உள்ள ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸின் ஆதாரங்கள் ஒரு காரணமாக இருக்கும்.
“[ஸ்டார்மி டேனியல்ஸ்] வழங்கிய விவரங்களின் அளவு, இவ்வழக்கை விவரிக்கத் தேவையில்லை,” என, நியூயார்க் சட்டப்பள்ளி பேராசிரியர் ஆனா கோமின்ஸ்கி தெரிவிக்கிறார்.
“ஒருபுறம், ஸ்டார்மி டேனியல்ஸ் வழங்கிய விவரங்கள் அவரை நம்பத்தகுந்தவராக ஆக்குகிறது. வழக்குத் தொடுப்பவராக, நீங்கள் போதுமான விவரங்களை வழங்க விரும்புகிறீர்கள், அதனால் அவர் சொல்வதை நடுவர் நம்புகிறார். மறுபுறம், இந்த விவரங்கள் பொருத்தமற்றதாகவும் பாரபட்சமானதாகவும் மாறும் இடங்களும் உண்டு,” என்கிறார்.
ஸ்டார்மி டேனியல்ஸின் சாட்சியத்தின்போது, டிரம்ப்பின் சட்ட குழு இருமுறை சட்டபூர்வ தவறு நிகழ்ந்ததாக (mistrial) தெரிவித்தது. ஆனால், அது நீதிபதியால் மறுக்கப்பட்டது.
அதற்கு அப்பால், இந்த வழக்கில் மாவட்ட அரசு வழக்கறிஞர் எடுத்த புதிய சட்ட யுக்தி, மேல்முறையீட்டுக்கான காரணத்தையும் வழங்கலாம்.
வணிகப் பதிவுகளை பொய்யாக்குவது நியூயார்க்கில் தீவிரமான தவறான செயலாக இருக்கலாம், ஆனால் 2016 தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்கான சட்டவிரோத முயற்சி என்று கூறப்படும் குற்றத்தின் காரணமாக டிரம்ப் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
வரி மோசடியுடன் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல் சட்டங்களின் மீறல்கள் இந்த வழக்கில் பொருந்தும் என்று வழக்கறிஞர்கள் பரவலாக குற்றம்சாட்டினர்.
மேல்முறையீட்டிற்கான அடிப்படையை உருவாக்கக்கூடிய கூட்டாட்சி சட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றிய கேள்விகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை கூட்டாட்சி சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படாத வழக்குக்கு அதை அரசு வழக்கறிஞர்கள் பயன்படுத்தியதில்லை. அதேபோன்று, மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞருக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகார வரம்பு இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.
டிரம்ப் சிறைக்குச் செல்வாரா?

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் சிறைக்கு செல்வது அதிக சாத்தியம் இல்லையென்றாலும்,சட்ட ரீதியில் அது சாத்தியமானதுதான்.
டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நியூயார்க்கில் குறைந்தபட்சம் கடுமையான குற்றங்களைச் சேர்ந்தவை (class E felonies). இதில் ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலே குறிப்பிடப்பட்டவை போன்று நீதிபதி மெர்ச்சன் குறைந்தபட்ச தண்டனையை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களும் உள்ளன. அவற்றுள், டிரம்ப்பின் வயது, இதற்கு முன் எந்த வழக்கிலும் தண்டனை பெறாதது, அவர் மீதான குற்றங்கள் வன்முறை சார்ந்தவை இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் அடங்கியுள்ளன.
விசாரணையின்போது இவ்வழக்கு குறித்துப் பொதுவெளியில் பேசக்கூடாது என்கிற நீதிமன்ற உத்தரவை டிரம்ப் மீறியதை நீதிபதி கருத்தில் கொள்ளலாம்.
முன்னோடி இல்லாத இந்த வழக்கின் தன்மையை ஆழ்ந்து சிந்தித்து, முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய அதிபர் வேட்பாளரை சிறைக்கு அனுப்புவதை நீதிபதி தவிர்ப்பதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
நடைமுறை சாத்தியம் குறித்த கேள்வியும் உள்ளது. அனைத்து முன்னாள் அதிபர்களைப் போன்றே டிரம்புக்கும் சீக்ரெட் சர்வீசஸ் (Secret Services) எனும் முக்கிய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு முகமையின் சேவையைப் பெறும் உரிமை உள்ளது. இதன்மூலம், அதன் முகவர்கள் டிரம்ப்பை சிறையில் பாதுகாப்பர்.
மேலும், முன்னாள் அதிபரை சிறைக்குள் அடைத்து, சிறைத்துறை கட்டமைப்பை இயக்குவது மிகவும் கடினமான செயலாகும். அவரை பாதுகாப்பது அதிக ஆபத்தானதும், செலவுகரமானதும் ஆகும்.
“சிறைத்துறை அமைப்புகள் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் — சிறையின் பாதுகாப்பு, மற்றும் செலவுகளை குறைப்பது,” என, சிறைவாசிகளுக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒயிட் காலர் அட்வைஸ் அமைப்பின் இயக்குநர் ஜஸ்டின் பாபெர்னி கூறுகிறார்.
“டிரம்ப் (சிறையில்) இருந்தால், அது விநோத நிகழ்ச்சி போன்று இருக்கும்… எந்த சிறை வார்டனும் அதை அனுமதிக்க மாட்டார்,” என்றார்.
டிரம்ப் வாக்களிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
டிரம்ப் வசித்துவரும் ஃபுளோரிடாவில் உள்ள சட்டத்தின்படி, வேறொரு மாகாணத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், 'அம்மாகாணத்தில் வாக்கு செலுத்தத் தகுதியற்றவர்' எனும் போதுதான் ஃபுளோரிடாவிலுவிலும் வாக்கு செலுத்தத் தகுதியவற்றாகிறார்.
டிரம்ப்புக்புக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. நியூயார்க்கைப் பொறுத்தவரையில் அவர் சிறையில் அடைக்கப்படாதவரை, டிரம்ப் வாக்குச் செலுத்த முடியும்.
அதாவது, நவம்பர் 5 அன்று டிரம்ப் சிறையில் இல்லாவிட்டால், அவரால் வாக்கு செலுத்த முடியும்.
டிரம்புக்கு மன்னிப்பு கிடைக்குமா?
கிடைக்காது.
அமெரிக்கக் கூட்டாட்சி சட்டத்தால், சட்டவிரோதமானது (federal offences) என அறிவிக்கப்பட்டக் குற்றங்களுக்கு அதிபர் மன்னிப்பு வழங்க முடியும். ஆனால், டிரம்ப் தொடர்பான வழக்கு ஒரு மாகாண வழக்காகும். இதில், டிரம்ப் மீண்டும் அதிபரானாலும் ஒன்றும் செய்ய முடியாது.
கடந்த 2020 அதிபர் தேர்தலில் மயிரிழையில் ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்த டொனால்ட் டிரம்ப் அந்த முடிவை மாற்றச் சதி செய்ததாக ஜார்ஜியாவில் டிரம்ப்புக்கு எதிரான வழக்கிலும் இதே நிலைதான். இவ்வழக்கு தற்போது மேல்முறையீட்டில் உள்ளது.
அரசு ஆவணங்களை தவறாக கையாண்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு மற்றும் 2020 தேர்தலில் முடிவை மாற்றச் சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது என இரண்டு கூட்டாட்சி குற்றங்களிலும் அதிபரால் மன்னிப்பு வழங்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முதல் வழக்கில், ஆதாரங்கள் குறித்த கேள்விகளை தீர்க்காமல் தேதி அறிவிப்பது 'விவேகமற்றது' எனக்கூறி, விசாரணையை காலவரையின்றி, டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி ஒத்திவைத்துள்ளார். டிரம்ப்பின் மேல்முறையீட்டால் இரண்டாவது வழக்கும் தாமதமாகியுள்ளது.
இரு வழக்குககளிலும் நவம்பர் தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்படாது என்றாலும், அதிபர் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தில் டிரம்ப்பும் அடங்குவாரா என்பதை அரசியலமைப்பு நிபுணர்கள் மறுக்கின்றனர். இதை முயற்சிக்கும் முதல் நபராக டிரம்ப் இருக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












