நீங்கள் சைவமா, அசைவமா என்று அறிந்து தேர்தல் வியூகம் வகுக்கும் கட்சிகள் - எப்படி தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது மொபைல் போன்களில் ஏரளாமான செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

கார்களை புக் செய்வதில் தொடங்கி உணவு டெலிவரி சேவை வரை கிட்டத்தட்ட எல்லா சேவைகளுக்கும் செயலிகள் உள்ளன.

உலக அளவில் இதுபோன்ற ஏராளமான செயலிகள் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

இந்தியாவில் ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி அவருக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என்பதைப் பிறர் தெரிந்து கொள்ள உதவும் தளங்களாக இந்த செயலிகள் இயங்கி வருகின்றன.

குறிப்பாக அரசியல் தலைவர்கள் மக்கள் குறித்து தங்களுக்கு என்ன தகவல்கள் வேண்டுமோ, அதை இந்த செயலிகள் மூலமாக தெரிந்துக் கொள்கின்றனர்.

தேர்தல் உத்தி நிபுணரான ருத்விக் ஜோஷி, நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் தனது வாடிக்கையாளர்களாக உள்ள அரசியல்வாதிகளை வெற்றி பெறச் செய்வதற்காகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் பேசுகையில், "ஒரு நபரின் மதம், தாய்மொழி, அவர் சமூக ஊடகங்கள் வழியாகத் தனது நண்பர்களுக்கு என்ன மாதிரியான தகவல்களைப் பகிர்கிறார் என்பன போன்ற தரவுகளையே அரசியல் தலைவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்" என்று கூறுகிறார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் செயல்பாடு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரவுகளைக் கையாள்வதற்கான விதிகளில் தளர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தேவைப்படும் அனைத்து தரவுகளையும் வாங்கிக் கொள்வதாக அவர் கூறுகிறார்.

இன்று நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட அவர்களால் முடியும் என்கிறார் அவர்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022இல் தரவு மீறல் தொடர்பான வழக்கு ஒன்றில், 725 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த ஒப்புக்கொண்டது மெட்டா நிறுவனம்.

தனிப்பட்ட தகவல்களை அரசியல்வாதிகள் கேட்பது ஏன்?

உண்மையில் மக்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் எதற்காக வாங்குகின்றன? என்று கேட்கையில், இந்த தரவுகள் மூலம் வாக்காளர்களை கணிக்க முடியும் என்றும், இந்த கணிப்புகள் எப்போதும் தவறாக போனதே இல்லை என்றும் கூறுகிறார் ருத்விக்.

ஆனால், இதில் எழும் பெரும் கேள்வியே இதுகுறித்து நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதே.

"மைக்ரோடார்கட்டிங் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதன் அர்த்தம் உங்களுடைய தரவுகள், உங்களை குறிவைத்து குறிப்பிட்ட விளம்பரங்களை காட்டுவதற்காகவும், குறிப்பிட்ட நபர்களுக்கு தேவையான தகவல்களை உங்களிடம் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன." என்கிறார் அவர்.

தேர்தல் பிரசாரத்தில் இந்த மைக்ரோடார்கட்டிங் ஒன்றும் புதிதல்ல. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற போது இந்த உத்தி பிரபலமானது.

அந்த சமயத்தில், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, முகநூல் நிறுவனத்தால் விற்கப்பட்ட தரவுகள் மூலம், போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரம்புக்கு ஆதரவான கருத்துகள் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்தது.

அதனை மறுத்த அந்த நிறுவனம், அதன் சிஇஓ அலெக்ஸாண்டர் நிக்ஸை பணிநீக்கம் செய்தது.

2022ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுடன் தொடர்புடைய தரவு மீறல் தொடர்பான வழக்கு ஒன்றில், செட்டில்மென்ட் பணமாக 725 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த ஒப்புக்கொண்டது மெட்டா நிறுவனம்.

இது தாங்கள் பார்த்த விளம்பரங்கள் தங்களது வாக்களிக்கும் முடிவில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளும் இந்த தரவு மீறல் பிரச்னை ஜனநாயகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொண்டு, உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கின.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைக்ரோடார்கெட்டிங் குறித்து இதுவரையிலும் கூட பெரியளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் ஸ்ரீநிவாஸ் கோடாலி.

இந்தியாவில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்குமே பணியாற்றி வருவதாக தெரிவித்திருந்தது. இந்த இரு கட்சிகளுமே இந்த கூற்றை மறுத்தன.

இந்தியாவின் அப்போதைய தகவல் மற்றும் தொழிநுட்ப அமைச்சரான ரவி சங்கர் பிரசாத்தும் கூட, இந்திய மக்களின் தரவுகளை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக இந்த நிறுவனம் மற்றும் முகநூலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வாக்காளர்கள் மீதான மைக்ரோடார்கெட்டிங் குறித்து இதுவரையிலும் கூட பெரியளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் தரவு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான ஸ்ரீநிவாஸ் கோடாலி.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தேர்தல் ஆணையங்களை போல இதர ஆணையங்களும் தேர்தலில் இந்த மைக்ரோடார்கட்டிங் செலுத்தும் தாக்கம் என்ன என்பது குறித்து புரிந்துக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இவை சில நடவடிக்கைகளையும் எடுக்கின்றன. ஆனால், இந்தியாவில் அப்படி எதுவும் நடப்பது போல் எங்களுக்கு தெரியவில்லை” என்கிறார்.

"இந்தியாவில் இந்த பிரச்னை மேலும் சிக்கலாகி வருகிறது. காரணம், இந்தியாவில் ஒட்டுமொத்த தரவுகளுக்கும் அரசின் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை” என்று கூறுகிறார் ஸ்ரீநிவாஸ்.

இந்தியாவில் 65 கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் மூன்றாம் தரப்புடன் தரவுகளை பகிரக்கூடிய பல்வேறு செயலிகளும் உள்ளன.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களின் தனிப்பட்ட தரவுகள் அரசின் தகவல் களஞ்சியத்தில் இருந்து தனியாரின் கைகளுக்கு விற்கப்படுகிறது என்கிறார் ஸ்ரீநிவாஸ்.

அரசும் தனிப்பட்ட தகவல்களை விற்கிறதா?

உண்மையை சொல்ல வேண்டுமெனில் உங்கள் ஸ்மார்ட்போன்களால் மட்டுமே உங்களது தரவுகள் கசிவதில்லை. அரசிடமே மக்களின் தனிப்பட்ட தரவுகள் குறித்த பெரும் களஞ்சியம் உள்ளது. அவற்றை அரசே தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றது.

“ குடிமக்களின் தரவுகளை அரசே பெரும் தகவல் களஞ்சியமாக உருவாக்கி , அதை தனியார் நிறுவனங்களோடு பகிர்ந்துகொண்டுள்ளது” என்று கூறுகிறார் ஸ்ரீநிவாஸ்.

இது நாட்டு மக்கள் மீதான கண்காணிப்பு அச்சுறுத்தலை அதிகரித்து விட்டதாக கூறுகிறார் இணைய சுதந்திர அறக்கட்டளையின் இயக்குநர் பிரதிக் வாக்ரே.

தற்போதைய நிலையில் மக்களிடமே எந்த தகவல் ரகசியமானது என்று தீர்மானிப்பதற்கான அதிகாரம் இல்லை என்று கூறுகிறார் அவர்.

கடந்த ஆண்டு தகவல் பாதுகாப்பு சட்டம் ஒன்றை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்னும் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போதுமான விதிமுறைகள் இல்லாததால் உருவாகும் பிரச்னை என்று கூறுகிறார் ஸ்ரீநிவாஸ்.

இவ்வளவு தரவுகள் இருப்பதன் விளைவு என்ன?

'உலகின் மிகப்பெரும் தகவல் சுரங்கமாக' இந்தியா இந்த தேர்தல் ஆண்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறுகிறார் ருத்விக் ஜோஷி.

இதில் விஷயம் என்னவென்றால் இங்கு யாருமே சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்று கூறும் அவர் பின்வருமாறு அதை விளக்குகிறார்.

“நான் ஒன்றும் ஒரு செயலியிடம் அந்த செயலியை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்றோ அல்லது பயனாளர்களின் தொடர்பு எண்ணை கொடு என்றோ கேட்கவில்லை.”

"ஆனால் என்னால், குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் அசைவம் அல்லது சைவம் இதில் எதை சாப்பிடுகிறார்கள் என்று கேட்க முடியும்."

"அந்த செயலியும் இந்த தரவுகளை எனக்கு கொடுக்கும். காரணம் அந்த பயனர் ஏற்கனவே அந்த தரவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பார்."

ருத்விக்கின் நிறுவனமான நீதி-ஐ (Neeti I) தரவுகளை பயன்படுத்தி சில தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் நடத்தையை புரிந்து கொள்கின்றது.

"உதாரணத்திற்கு, உங்கள் மொபைலில் 10 வெவ்வேறு இந்திய செயலிகள் இருக்கலாம். அவை அனைத்திற்குமே உங்களது தொடர்பு எண்கள், போட்டோக்கள், மைக், ஸ்பீக்கர், தற்போதைய இருப்பிடம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பீர்கள்.” என்கிறார் அவர்.

இந்த தரவுகள் தான், ஒரு கட்சியின் ஊழியர்கள் சேகரிக்கும் தரவுகளோடு சேர்த்து, யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும், அவரது மனைவி எந்த கோவிலில் பூஜை செய்ய வேண்டும், அவர் எங்கு என்ன பேச வேண்டும், அவர் என்ன உடை உடுத்த வேண்டும் என்று கூட முடிவெடுக்க உதவுபவை.

மக்களவைத் தேர்தல் 2024
படக்குறிப்பு, அரசு மற்றும் அதன் அமைப்புகளுக்கு சட்டத்தில் உள்ள ஏராளமான விதிவிலக்குகள் மூலம், அவை மக்களின் தனிப்பட்ட தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர்வதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன.

மக்களின் மனநிலையை மாற்ற முடியுமா?

இருப்பினும் இவற்றை வைத்துக் கொண்டு மக்களின் மனநிலையை மாற்ற முடியுமா என்பது குறித்து தெளிவான பதில்கள் எதுவும் இல்லை.

ஆனால், நிபுணர்களின் கருத்துப்படி அடிப்படையாகவே இது மக்களின் தனியுரிமையை மீறும் செயலாகும். இதன் பயன்பாடு அதிகரித்தால், அது மக்களுக்கு எதிராகவும் கூட பயன்படுத்தப்படும்.

பிரதிக் வாக்ரே கூறுகையில், “ அரசின் நலத்திட்டங்களுக்காக பயனாளியிடம் இருந்து பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுவதற்கும், அதே தகவல்கள் மைக்ரோடார்கெட்டிங் மூலம் மாநில மற்றும் தேசிய அளவில் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு எதுவும் இல்லை என்பதை பார்க்கிறோம்” என்கிறார்.

அரசு மற்றும் அதன் அமைப்புகளுக்கு சட்டத்தில் உள்ள ஏராளமான விதிவிலக்குகள் மூலம், அவை மக்களின் தனிப்பட்ட தரவுகளை மூன்றாம் நபரிடம் பகிர்வதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளன.

இதுபோன்ற சூழலில் எதிர்காலத்தில் அமையும் அரசும் இதை அடுத்தபடிக்கு எடுத்துச் சென்று, நமக்கு யார் ஆதரவு தருகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் பலன்களை வழங்குவோம் என்று முடிவெடுக்கும் வாய்ப்புகள் கூட இருப்பதாக கவலைத் தெரிவிக்கிறார் வாக்ரே.

ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "தரவுகளை இப்படி பயன்படுத்துவது இந்தியாவில் மேலும் 'போலித் தகவல்கள்' பரவுவதற்கே வழிவகுக்கும்" என்கிறார்.

“செயற்கை நுண்ணறிவு, இலக்கு வைக்கப்பட்டு காட்டப்படும் விளம்பரங்கள் மற்றும் மைக்ரோடார்கெட்டிங் ஆகிய அனைத்தும் 'கணக்கீட்டு முறையிலான பிரச்சாரத்தின்' கீழ் வரக்கூடியது” என்கிறார் அவர்.

அப்படி 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் செல்வாக்கு செலுத்தியதாக சில சந்தேகங்களும் எழுப்பப்பட்டதாக கூறுகிறார் ஸ்ரீநிவாஸ்.

“தேர்தல்களில் பணம் செலவழிப்பது மற்றும் பயன்படுத்துவது குறித்து எப்படி நெறிமுறை வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவோ அதுபோல தரவு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் முறையான நெறிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் தேர்தல்கள் நியாயமாக நடக்கும்", என்கிறார் அவர்.

“இதே ஒன்று அல்லது ஒரு சில குழுக்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கிறது என்றால், அப்படி நடக்கும் தேர்தல் நியாயமானதாக இருக்காது” என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)