தமிழ்நாட்டில் தியானம் செய்ய இருக்கும் பிரதமர் மோதி - என்ன காரணம்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், X/BJP4India

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மலைக்கோயிலில் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோதி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தற்போது நடந்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் பிரதமர் நரேந்திர மோதி தங்கக்கூடும் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அங்கே அவரது திட்டம் என்ன? அதற்கு என்ன தாக்கம் இருக்கும்?

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கான தேர்தல் பிரசாரம் மே 30-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. பிரசாரம் முடிவுக்கு வந்த பிறகு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தங்கக்கூடும் பிடிசி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமையன்று பிற்பகலில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பிரதமர் நரேந்திர மோதி, மாலை நான்கு மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அதற்குப் பிறகு அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகு மூலம் சென்றடைகிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் அவர், அன்று இரவு அங்கேயே தங்குகிறார். அடுத்த நாள் அதாவது மே 31-ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு மதியம் 1:30 மணியளவில் செல்கிறார். இரவு 12 மணி வரை அங்குள்ள விவேகானந்தர் சிலை முன்பாக அவர் தியானம் செய்வார் எனக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு கீழே உள்ள மண்டபத்துக்குச் செல்பவர், அடுத்த நாள் மதியம் வரை அங்கே இருந்து தியானம் செய்யவிருக்கிறார்.

இதற்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அன்று மாலையே தில்லி சென்றடைகிறார்.

மூன்று நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தங்க இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்திகைகளும் நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோதி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜூன் 1-ஆம் தேதிதான் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், கன்னியாகுமரிக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

காங்கிரஸ்

பட மூலாதாரம், X/SPK_TNCC

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதல் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை (மே 28) அன்று பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோதி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது,” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை (புதன், மே 29) கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்திருந்தார்.

நரேந்திர மோதி
படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு கேதார்நாத்தில் பிரதமர் மோதி

பிரதமர் மோதியின் திட்டம் என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் முடிவதன் பிறகு எங்காவது ஓரிடத்திற்குச் சென்று தனிமையில் இருப்பதை பிரதமர் மோதி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தபிறகு உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தவர், பிறகு ஒரு குகையில் தியானம் மேற்கொண்டார்.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, மகாராஷ்டிராவில் உள்ள பிரதாப்கர் கோட்டைக்குச் சென்றார்.

இதுபோலச் செய்வதன் மூலம் கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் கூடுதல் தாக்கம் ஏற்படுத்த மோதி விரும்புகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"கடந்த முறை இதுபோல கேதார்நாத் சென்றார். அதற்குப் பிறகு 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த முறை இறுதி கட்டத்தில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் 30 இடங்களையாவது பெற வேண்டுமென நினைக்கிறார் மோதி. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 இடங்களைத் தவிர பிற இடங்கள் சாதகமாக இல்லை. பிஹாரே அவருக்கு சாதகமாக இல்லை. விவேகானந்தர் பாறைக்குச் செல்வது இதையெல்லாம் எந்த அளவுக்கு மாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் ஷ்யாம்.

இன்னொரு விஷயத்தையும் ஷ்யாம் சுட்டிக்காட்டுகிறார். ஜூன் ஒன்றாம் தேதியன்று இந்தியா கூட்டணி தங்களது கூட்டத்தை நடத்தவிருக்கின்றன. இதனால், செய்திகள் முழுக்க மோதியே ஆக்கிரமிப்பது நடக்காது, இந்தியா கூட்டணி குறித்த செய்திகளும் இடம்பெறும் என்கிறார் அவர்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டம் 1962-இல் உருவானது

விவேகானந்தர் நினைவிடம்

கன்னியாகுமரி கடலுக்குள் பிரதான நிலப்பரப்பில் இருந்து 490மீ. தூரத்தில் உள்ள பாறை மீது விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டிருக்கிறது.

1893-இல் உலக சமயங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து சுமார் 490மீ. தொலைவில் உள்ள இப்பாறைக்கு நீந்திச் சென்று, அங்கு 3 நாட்கள் தியானத்தில் அமர்ந்தார் என்று தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்காட்டுச் சின்னங்களும் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (இது நடந்தது டிசம்பர் 25, 26, 27-ஆம் தேதிகளில் எனவும் அனுமானிக்கப்படுகிறது).

இத்தியானத்தின் போது அவருக்கு அறிவொளி கிடைத்ததாக அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர்.

விவேகானந்தருக்கு இங்கே ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டம் 1962-இல் உருவானது. 1964-இல் தமிழ்நாடு அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் சுமார் ஒரு கோடி ரூபாய் செலிவில் இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இம்மண்டபம் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தில் ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள் உள்ளன.

சபா மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலை உள்ளது. இம்மண்டபம் இந்துக் கோவில்களின் கலையம்சங்களைக் கொண்ட 12 கருங்கல் தூண்களையும், பேலூர் இராமகிருஷ்ண ஆலயத்தின் விமான அமைப்பின் அம்சத்தையும் கொண்டுள்ளது. இம்மண்டபத்தின் கிழக்கில் ஸ்ரீபாத பாறையை நோக்கியவாறு சுவாமி விவேகானந்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)