கிரிக்கெட் மைதானமே இல்லாத அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பையை நடத்த ஐசிசி தீர்மானித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
கிரிக்கெட் என்றதும் கண்டிப்பாக யாருக்கும் அமெரிக்காவோ, அமெரிக்க கிரிக்கெட் அணியோ நினைவுக்கு வராது. ஏனெனில் கிரிக்கெட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை. அங்கு கூடைப்பந்து, ரக்பி, கால்பந்து மற்றும் பேஸ்பால் போன்ற விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. இருப்பினும், சில டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்க மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன, பின்னணி என்ன என்பதை ஆராயும் கட்டுரை தான் இது!
நியூயார்க்கைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் உத்கர்ஷ், “அமெரிக்க மக்களுக்கு கிரிக்கெட் பற்றி பெரிதாக எதுவுமே தெரியாது. சிலருக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு இருக்கிறது என்று மட்டும் தெரியும். நான் எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கையில் கிரிக்கெட் பற்றிய பேச்சு வந்தது. அவர்களை பொருத்தவரை `எல்லா கிரிக்கெட் போட்டிகளும் ஐந்து நாட்களுக்கு நடக்கும். கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை உடை அணிந்து தான் விளையாடுவார்கள்’ என கருதுகின்றனர்.” என்றார்.
உத்கர்ஷ் தனது அலுவலகத்திற்கு அருகில் டி20 உலகக் கோப்பை நிகழ்வு பற்றிய விளம்பரத்தை சுட்டிக்காட்டினார். உலகக்கோப்பை போட்டிகள் தனது நாட்டில் ஏற்பாடு செய்யப்படுவதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் அவர் ஒரு கிரிக்கெட் ரசிகர். தங்களுக்குப் பிடித்த விளையாட்டைப் பார்க்க இனி நள்ளிரவு நேரங்களில் எழுந்திருக்க வேண்டியதில்லை. நேரடியாகவே பார்க்கலாம் என்று அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உத்கர்ஷை போன்று அமெரிக்காவில் லட்சக்கணக்கான கிரிக்கெட் பிரியர்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்காக காத்திருக்கிறார்கள்.
ஐசிசி அமைப்பு, 2024 இல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் என்று 2021 இல் அறிவித்த போது பலர் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு ஏற்ற வசதிகள் இல்லை. அமெரிக்காவிடம் வலுவான கிரிக்கெட் அணி கூட இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்காவில் கிரிக்கெட்டின் தாக்கம் மிகக் குறைவு.
இங்கு பலருக்கும் எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், அமெரிக்காவில் கிரிக்கெட் நிர்வாகக் குழுவான யுஎஸ்ஏ கிரிக்கெட், தங்கள் நாட்டில் உலகக் கோப்பையை நடத்த விண்ணப்பித்தது ஏன்? அவர்களின் கோரிக்கையை ஐசிசி எதன் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த முடிவு குறித்து எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னால் மூன்று நோக்கங்கள் இருக்கலாம் .
1. கிரிக்கெட் விளையாட்டை புதிய நாடுகளுக்கு எடுத்துச் செல்வது
2. கிரிக்கெட்டுக்கான புதிய சந்தையைக் கண்டறிவது
3. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பது.
இதில் ஐசிசியின் முதல் நோக்கம் நிறைவேறியுள்ளது.
கிரிக்கெட், ஒலிம்பிக் மற்றும் சந்தைப்படுத்தல்

பட மூலாதாரம், Getty Images
மும்பையில் அக்டோபர் 2023இல் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு அமெரிக்காவில் கிரிக்கெட் மீதான ஆர்வமும் நம்பிக்கையும் அதிகரித்திருப்பதே காரணம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்றும் ஒலிம்பிக் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. இளைஞர்கள் இந்த விளையாட்டை மிகவும் விரும்புவதாகவும் கூறினர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி, "உலகெங்கிலும் உள்ள 250 கோடி மக்கள் இந்த விளையாட்டுகளைப் பார்ப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.” என்றார்.
அவர் இந்திய வீரர் விராட் கோலியை குறிப்பிட்டு ஒரு உதாரணத்தை முன் வைத்தார். சமூக ஊடகங்களில் அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பற்றி குறிப்பிட்டார்.
காம்ப்ரியானி கூறுகையில், “சமூக வலைதளங்களில் விராட் கோலியை 34 கோடி மக்கள் பின்தொடர்கின்றனர். உலகில் அதிகம் பேர் பின் தொடரும் வீரர்களில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த எண்ணிக்கை லெப்ரான், டாம் பிராடி மற்றும் டைகர் வுட்ஸ் ஆகியோரை விட அதிகம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028ல் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால் ஐஓசி மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பயனடைவார்கள். ஏனெனில், பாரம்பரியமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தாண்டி, கிரிக்கெட் சர்வதேச அரங்கில் சென்றடைகிறது.
மற்றொரு புறம் விளையாட்டு நிர்வாகிகள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் சில ஊடக நிறுவனங்கள் கிரிக்கெட்டை ஒரு நல்ல விளம்பர வாய்ப்பாக பார்க்கிறார்கள். இதனை நாங்கள் அமெரிக்க கிரிக்கெட் வீரர்களிடம் சொன்னோம். ” என்று விவரித்தார்.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் மற்றும் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். 2020-21 அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.
அமெரிக்காவில் ஆசிய வம்சாவளியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கிரிக்கெட் மீதான ஆர்வமும் அதிகமாக தென்படுகிறது. இது ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. எனவே, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில், கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஐசிசி பல நாடுகளுக்கு இணை உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியதுடன், அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தது. டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் நடத்துவதும் இந்த செயல்முறையின் ஒரு பகுதி தான் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவை கிரிக்கெட்டுக்கான புதிய சந்தையாக ஐசிசி பார்க்கிறது என்பதை மறுக்க முடியாது.
`வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்’ மற்றும் `யுஎஸ்ஏ கிரிக்கெட்’ அமைப்புகளின் பங்கு

பட மூலாதாரம், Getty Images
ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கிந்திய தீவுகள் அணி, கடந்த பத்தாண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமானால், அதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பயனடைவார்கள் என கரீபியன் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் நம்புகின்றனர்.
டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கான முன்மொழிவு ஐசிசிக்கு அனுப்பப்பட்டபோது, பராக் மராத்தே அமெரிக்க கிரிக்கெட் அமைப்பில் சுயாதீன இயக்குநராக இருந்தார். முன்னாள் ஐசிசி தலைமை இயக்க அதிகாரி இயன் ஹிக்கின்ஸ் அமெரிக்க கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பையை நடத்தும் முடிவில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
இருப்பினும், உலகக் கோப்பையை நடத்துவது மட்டுமே நாட்டில் கிரிக்கெட்டின் பரவலை அதிகரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு நீண்ட காலம் ஆகும்.
புதிய சவால்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது கிரிக்கெட் விளையாட்டும் அங்கே வந்தது. இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற பிரிட்டன் ஆட்சியின் கீழிருந்த மற்ற நாடுகளைப் போல் அமெரிக்காவில் கிரிக்கெட் பரவவில்லை.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கிரிக்கெட் விளையாட்டு அமெரிக்காவில் உயரடுக்கு மக்களின் விளையாட்டாகக் கருதப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது பேஸ்பால் விளையாட்டின் புகழ் அதிகரித்தது.
அந்த நேரத்தில் கிரிக்கெட் என்பது வெறும் ஐந்து நாள் ஆட்டமாக கருதப்பட்டது, எனவே கிரிக்கெட் மீது அமெரிக்கர்கள் கவனம் செலுத்தவில்லை.
இருப்பினும், கடந்த இருபது ஆண்டுகளில் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அமெரிக்காவிலும் இந்த விளையாட்டை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் சில சிக்கல்களும் இருந்தன.
2017ஆம் ஆண்டில் அமெரிக்க கிரிக்கெட் அமைப்பு மீது ஐசிசி நடவடிக்கை எடுத்தது. `யுஎஸ்ஏ சிஏ’ அப்போது அமெரிக்காவில் கிரிக்கெட்டின் ஆளும் குழுவாக இருந்தது. ஆனால், நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததால் அந்த அமைப்பை ஐசிசி நீக்கியது. அதன் பின்னர் `USA கிரிக்கெட்’ என்னும் அணி உருவானது. 2021 ஆம் ஆண்டில், இந்த அமைப்பிலும் பிரச்னை வெடித்தது. பராக் மராத்தே மற்றும் இயன் ஹிக்கின்ஸ் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்தனர்.
ஐபிஎல் மற்றும் பேஸ்பால் லீக் போலவே, மேஜர் லீக் கிரிக்கெட்டும் அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் சர்ச்சைகள் இருந்தன. நிர்வாகப் பிரச்னைகளை தவிர்த்து, வேறு சில பிரச்னைகளும் உள்ளன. கிரிக்கெட்டுக்கு தேவையான உள் கட்டமைப்பு அமெரிக்காவிடம் இல்லை. அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் கூட கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன, ஆனால் அமெரிக்காவில் இல்லை.
புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மற்றும் டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்த பயன்படுத்தப்படும். `நாசாவ் கவுண்டி’ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும்,, உள்ளூர் மக்களிடையே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த சமூக சேவகரான க்ருஷிகா, “தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் கிரிக்கெட்டைப் பற்றி அறிந்தவர்கள் வெகு சிலரே. அவர்களுக்கு கிரிக்கெட்டை பற்றி விளக்க பேஸ்பால் பயன்படுத்துகிறேன். அமெரிக்காவில் கிரிக்கெட்டின் பரவலை அதிகரிக்க இந்த வழி உதவும்.
மக்கள் சீக்கிரமாக கிரிக்கெட்டை விரும்புவர் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் ஒலிம்பிக்கைத் தவிர, விளையாட்டைப் பொருத்தவரை, ரசிகர்கள் தேசத்தை விட தங்கள் மாநிலத்தை அதிகம் மதிக்கிறார்கள். எனவே அவர்கள் அமெரிக்க கிரிக்கெட் அணியை பெரிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அமெரிக்காவின் கிரிக்கெட் அணியில் தற்போது ஏராளமான புலம்பெயர்ந்தோரும், தெற்காசிய மற்றும் கரீபியன் வம்சாவளி வீரர்களும் உள்ளனர்.
இருப்பினும், டி20 உலகக் கோப்பை மற்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நாட்டில் கிரிக்கெட்டின் பிம்பத்தை மாற்றும் என்று அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












