பாஜக-அதிமுக: ஜெயலலிதா 'இந்துத்துவ' தலைவர் என்று எந்த அடிப்படையில் அண்ணாமலை கூறினார்?

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை 'இந்துத்துவத் தலைவர்' என பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதற்கு அ.தி.மு.க-வின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான கே.அண்ணாமலை, சமீபத்தில் பி.டி.ஐ செய்தி முகமைக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை பா.ஜ.க. நிரப்பும் என்றும், ஜெயலலிதா ஒரு 'மேம்பட்ட' இந்துத்துவ தலைவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பி.டி.ஐ செய்தி முகமையின் ஆசிரியர்களுடன் பேசிய கே.அண்ணாமலை, தமிழ்நாட்டில் பா.ஜ.க. எந்த ஒரு கட்சியின் ஊதுகுழலாகவோ, அடிபணிந்தோ இருக்காது என்றவர், தொடர்ந்து பேசும்போது, ஜெயலலிதா மறைந்த பிறகு இந்துத்துவச் சித்தாந்தத்தில் இருந்து அ.தி.மு.க விலகிச் செல்வதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு தங்கள் கட்சிக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

"ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தமிழ்நாட்டில் அவர்தான் எல்லோரையும் விட மிகப் பெரிய இந்துத்துவத் தலைவர். 2014-க்கு முன்பாக, பா.ஜ.க. என்ற கட்சியும் ஜெயலலிதா என்ற தலைவரும் இருக்கும்போது, தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாக முன்வைத்த ஜெயலலிதாதான் தமிழக இந்து வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்திருப்பார்," என்று கூறினார்.

பா.ஜ.க தலைவர்களைத் தவிர்த்து, அயோத்தியில் ராமர் கோவிலை ஆதரித்த முதல் அரசியல்வாதி அவர் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2002-03-இல் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததைச் சுட்டிக்காட்டினார்.

"ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். கோவில்களுக்கு நிறைய தானம் செய்தார். திருவரங்கம் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். கோவில்களுக்கு யானைகளைப் பரிசளித்தார். தனி நபராக அவருடைய செயல்பாடுகளைப் பார்த்தால், அவர் ஒரு மேம்பட்ட இந்து தலைவர் என்பது புரியும்," என்றார்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இந்துத்துவ லட்சியங்களில் இருந்து விலகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாகக் கருதப்படும் எஸ்டிபிஐயுடன் கூட்டணி வைத்தது என்றும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

அதிமுக, சசிகலா எதிர்வினை

அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு, எதிர்பார்த்ததைப் போலவே அ.தி.மு.க-விடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வெளியாயின.

இது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001-ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டது. புதிதாக வக்ஃபு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. வக்ஃபு வாரியத்துக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது,” என்றார்.

"அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார் ஜெயலலிதா,” என்றார்.

அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்துக்காகவும் தமிழகத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது," என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் நீண்ட காலத் தோழியான சசிகலாவும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், என்றைக்கும் அவரிடம் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் மதித்த ஒப்பற்ற தலைவராக வாழ்நாள் முழுவதும் இருந்தவர் அவர். இம்மாதிரி ஒரு தலைவரை எவ்வித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது," என்று கூறியிருந்தார்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையையும் ஜெயலலிதா பற்றிய அவருடைய தவறான புரிதலையும்தான் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER

ஜெயலலிதா ‘இந்துத்துவ’ நடவடிக்கைகள் எடுத்தாரா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அ.தி.மு.கவின் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் இந்துத்துவ நடவடிக்கைகள் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கத்தக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1992-ஆம் ஆண்டு நவம்பரில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஜெ.ஜெயலலிதா, "கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்தத் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு கரசேவை நடந்தபோது, அதற்கு அ.தி.மு.க-வினரை அனுப்பியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

2001- 2006-ஆம் ஆண்டுகளில் அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அவரை இந்துத்துவச் சார்புள்ளவராகவே சுட்டிக்காட்டின. 2002-ஆம் அக்டோபர் மாத இறுதியில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டுவந்தார். இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டு மே மாதம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், டிஐஜி-க்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில் "கோவில்களிலும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று 'தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950' மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன,” என்று கூறப்பட்டிருந்தது.

"இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலைசெய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, தமிழக கோவில்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்கென மிருகங்களை பலியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், பொதுமக்களிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், 2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து கட்டாய மத மாற்றத் தடைச் சட்டமும் ஆடு, கோழி ஆகியவற்றை கோவில்களில் பலியிட இருந்த தடையும் நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

‘இஸ்லாம், கிறித்தவத்திற்கும் ஆதரவாக இருந்தார்’

இந்தப் பின்னணியில்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவராகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

ஆனால், பா.ஜ.க-வினர் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இதுபோல எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான வைகைச்செல்வன்.

"ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை கொண்டவர். இறைவழிபாடு செய்தவர். அவர் தன் நம்பிக்கையை ஒளித்து வைக்கவில்லை. ஆனால், அவர் இந்து மத வெறியராக செயல்பட்டவர் அல்ல. பக்தி மார்க்கத்தில் இருந்தாலும் இந்து மதம்தான் பெரியது எனச் சொல்லியதில்லை,” என்றார்.

"ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி வழங்க அரிசி தர ஆணையிட்டார். அதேபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு நிதியுதவி செய்யும் என அறிவித்தார். இப்படி எல்லா மதத்தையுமே சமமாகக் கருதி மதச் சார்பற்றவராகவே செயல்பட்டார். அவரை இந்துத்துவத் தலைவர் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது," என்கிறார் வைகைச் செல்வன்.

அண்ணாமலை சுட்டிக்காட்டியதைப் போல, அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட ஆதரவு தந்தது, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கொண்டுவந்தது, கோவில்களில் ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஆகியவை ஜெயலலிதாவை ஒரு இந்துத்துவவாதியாக காட்டவில்லையா?

"நிச்சயமாக இல்லை. ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரு கோவிலை கட்டலாம் என்றார். பாபர் மசூதியை இடித்துத்தான் அதைக் கட்ட வேண்டுமென சொல்லவில்லை. மதமாற்றத் தடைச் சட்ட கொண்டுவந்தார் என்றாலும், அதை திரும்பப் பெற்றதும் அவர்தான் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆடு, கோழி பலியிடுவதற்கான தடைச் சட்டமும் அதேபோலத்தான் திரும்பப்பெறப்பட்டது. இதைவைத்துக் கொண்டு அவரை இந்துத்துவவாதியாக காட்ட முடியாது," என்கிறார் வைகைச் செல்வன்.

வள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து அவரை இந்து மதத்தைச் சேர்ந்தவராகக் காட்ட ஆளுநர் முயலும் அதே நாளில் அண்ணாமலையும் இப்படிப் பேசுகிறார். தங்களைச் சுற்றி ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள் என்கிறார் அவர்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

ஜெயலலிதா அயோத்தியில் கோவில் கட்டுவதை ஆதரித்தது ஏன்?

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலான 'The Lone Empress' நூலை எழுதிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, அவரை நம்பிக்கையாளர் என்று குறிப்பிடலாமே தவிர, இந்துத்துவ மத அடிப்படைவாதியாக சுருக்க முடியாது என்கிறார் அவர்.

"ஜெயலலிதா கடவுள் நம்பிக்கை உடையவர். அவர் அயோத்தியில் கோவிலை ஆதரித்தது அந்த அடிப்படையில்தான். அவர் பள்ளிவாசல்களுக்கும் செல்வார் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் செல்வார். மத அடிப்படைவாதத்திற்கும் மத நம்பிக்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. ஜெயலலிதா மத நம்பிக்கையாளர். அ.தி.மு.க-வையும் கூட மத நம்பிக்கையுள்ளவர்களின் கட்சி என்று சொல்லலாமே தவிர, அடிப்படைவாதத்தைக் கொண்டவர்களின் கட்சி என சொல்ல முடியாது. பா.ஜ.க. இந்து அடிப்படைவாதத்தை முன்வைக்கிறது. ஆகவே, அ.தி.மு.க-வில் உள்ள இந்து நம்பிக்கையாளர்கள் மத அடிப்படைவாதிகளாக மாறிவிடுவார் எனச் சொல்ல முடியாது," என்கிறார் வாஸந்தி.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. சட்டப் பிரிவு 370வை நீக்குவதை ஆதரித்தது

‘இரண்டு பக்கமும் இருந்தார்’

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, இரு பக்கத்திலும் இருந்தவர் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

"தமிழ்நாட்டிலிருந்து அயோத்தியில் நடந்த கரசேவைக்கு ஆட்கள் அனுப்பப்பட்டதில் ஜெயலலிதாவுக்கு பங்கு இருந்தது. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் அது தவறு என்ற நிலைப்பாட்டை எடுத்தார் ஜெயலலிதா. அதேபோல, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதை ஒரு இயல்பான விஷயமாக்கியவரும் ஜெயலலிதாதான். 90-களின் பிற்பகுதியில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. ஆகவே, இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் கொண்டு வருவது ஆகியவை இந்துத்துவ சிந்தனைகள்தான். ஆனால், அது தேர்தல் ரீதியாகப் பலனளிக்கவில்லையென்றால் அவற்றைக் கைவிடவும் அவர் தயாராக இருந்தார்," என்கிறார் பன்னீர்செல்வம்.

திராவிட இயக்கக் கட்சிகளில் இதுபோன்ற போக்கைத் துவங்கிவைத்தது ஜெயலலிதா அல்ல, எம்.ஜி.ஆர் தான் என்கிறார் பன்னீர்செல்வன். "சிவாஜி கணேசன் திருப்பதிக்குச் சென்றுவந்தார் என்பதற்காக அவர் திராவிட இயக்கத்தை விட்டே விலக நேர்ந்தது. ஆனால், 1977-இல் தான் முதலமைச்சர் ஆனவுடன் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவருடைய இந்த நடவடிக்கையை நாம் தற்போது பார்க்கும் இந்துத்துவத்துடன் ஒப்பு வைத்துப் பார்க்க முடியாது. இருந்தாலும் மத நம்பிக்கையை வெளிப்படையாகக் காட்டுவது அவரது காலத்திலேயே துவங்கிவிட்டது," என்கிறார் அவர்.

தற்போது அண்ணாமலை அ.தி.மு.க-வைக் குறிவைப்பது, அவர்களோடு கூட்டணி இல்லை என்பதால்தான் என்கிறார் பன்னீர்செல்வன். "எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. சட்டப் பிரிவு 370வை நீக்குவதை ஆதரித்தது. சிஏஏ-வை ஆதரித்தது. இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும். எடப்பாடி கே.பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எப்போதும் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் தான் இருந்தார்கள். பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என்றவுடன் இதுபோன்ற கருத்துகளைச் சொல்கிறார் அண்ணாமலை," என்கிறார் பன்னீர்செல்வன்.

ஜெயலலிதாவை இந்துத்துவத் தலைவர் என குறிப்பிடலாமா?
படக்குறிப்பு, பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி

‘இந்து மதத்தின் மீது பற்று வைத்திருந்தார்’

ஜெயலலிதா இந்து மதத்தின் மீது பெரும் பற்று கொண்டவர் என்பதையே அண்ணாமலை சொல்லியிருக்கிறார், அதில் தவறேதும் இல்லை என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"இந்துத்துவம் என்பது வாழும் முறை என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் ஜெயலலிதாவை இந்துத்துவவாதி எனச் சொல்கிறோம். ராமர் கோவிலை இங்கே கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும் என்று கேட்டவர். கரசேவைக்காக பல லட்சம் கையெழுத்துக்களை பெற்று அனுப்பியவர்,” என்றார்.

"ஜெயலலிதாவை பிற மதங்களுக்கு எதிரானவர் எனச் சொல்லவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரிய பற்று வைத்திருந்தவர் என்ற அர்த்தத்தில்தான் இதைச் சொல்கிறோம். அவர் உயிரோடு இருந்திருந்தால் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்குச் சென்றிருப்பார். ஆகவே அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு சரியான கருத்து," என்கிறார் அவர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, நெருங்கிவந்த அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் 2021 சட்டமன்றத் தேர்தலை சேர்ந்தே எதிர்கொண்டன. ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இரு கட்சிகளும் பிரிந்துவிட்டன. சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2023-இல் ஒரு ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை பல முன்னாள் முதல்வர்கள் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர் என்றும் 1991-96 காலகட்டம் ஊழலில் மிக மோசமான காலகட்டமாக இருந்தது என்று கூறியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு வந்தது.

இதற்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, அ.தி.மு.க. தலைவர்களும் முன்னாள் முதல்வர்களுமான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார். இப்போது, ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)