பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - மீட்புப் பணிகள் பாதிப்பு

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டியர்பைல் ஜோர்டன்
    • பதவி, செய்தியாளர்

ஆஸ்திரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் பூமிக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மையத்தின் இயக்குநர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னர், சுமார் 670 பேர் பூமிக்கு அடியில் புதைந்துவிட்டதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதுவரை ஒரு டஜனுக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் அறுதியான எண்ணிக்கையை இன்னும் சொல்ல முடியவில்லை.

சில இடங்களில் 32 அடிக்கும் மேல் ஆழமான இடிபாடுகள், மற்றும் மீட்புக் கருவிகள் இல்லாததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) அன்று நடந்தது.

பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோஃப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது," என்றார்.

தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

"நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது," என்று அக்டோஃப்ராக் தெரிவித்தார்.

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர்.

ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் அங்கு இருந்திருக்கக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்," என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாகக் குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோஃப்ராக் கூறினார்.

"மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் எனக் கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.

பப்புவா நியூ கினி நிலச்சரிவு

பட மூலாதாரம், Getty Images

"இந்த நிலச்சரிவில் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, அதற்கு இன்னும் நேரமாகலாம்" என்று கேர் ஆஸ்திரேலியா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய(ஞாயிறு) நிலவரப்படி, ஐந்து பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவால் குவிந்துள்ள பெரும் பாறைகள், மரங்கள் மற்றும் மணல்கள் உள்ளிட்ட இடிபாடுகள் கிட்டத்தட்ட 8 மீட்டர் அளவுக்குக் குவிந்துள்ளன.

எங்கா மாகாணத்தில் ஒரேயொரு நெடுஞ்சாலை மட்டுமே இருப்பதாகவும், அதிலும் இடிபாடுகள் சாலைகளுக்குக் குறுக்கே விழுந்துள்ளதால், மீட்புப் பணிகளைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கேர் ஆஸ்திரேலியா அமைப்பு கூறியுள்ளது.

ஏ.எஃப்.பி செய்தி முகமையின்படி, இடிபாடுகளை அகற்ற பெரிய இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் இங்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பப்புவா நியூ கினி உடனான இந்தியாவின் உறவுகள்

பப்புவா நியூ கினிவுடனான இந்தியாவின் உறவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (படத்தில்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பப்புவா நியூ கினி நாட்டின் உச்ச தலைவர் ஜேம்ஸ் மொராபே

கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அங்கு சென்றபோது, பப்புவா நியூ கினி நாடு செய்திகளில் முக்கியத்துவம் பெற்றது.

பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மாரபே விமான நிலையத்தில் அவரை வரவேற்க வந்தார். செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அறிக்கைப்படி, பப்புவா நியூ கினியின் மக்கள் தொகை சுமார் 90 லட்சம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பப்புவா நியூ கினியில் சுமார் 3000 இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. (இது 2020 வரையிலான எண்ணிக்கை)

அவர்களில் பெரும்பாலோர் பட்டயக் கணக்காளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள். ஏப்ரல் 1996இல் இந்தியா தனது தூதரகத்தை பப்புவா நியூ கினி நாட்டில் திறந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006இல், பப்புவா நியூ கினி நாடும் இந்தியாவில் தனது தூதரகத்தைத் தொடங்கியது.

கடந்த 2016ஆம் ஆண்டில், பப்புவா நியூ கினிக்கு சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடுகள் அதன் ஏற்றுமதியைத் தடை செய்தபோதும், இந்தியா பப்புவா நியூ கினிக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது.

பப்புவா நியூ கினி தீவுகள்

பப்புவா நியூ கினி தீவுகள்

பட மூலாதாரம், Getty Images

எரிமலைகள், பூகம்பங்கள் மற்றும் புயல்களால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு நாடுதான் பப்புவா நியூ கினி.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகின் மொழியியல் ரீதியாக வேறுபட்ட நாடுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. பப்புவா நியூ கினியின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் குறைவான அல்லது முற்றும் வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

வெளியுலகத் தொடர்பே இல்லாத பல பழங்குடியினர் இங்குள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இம்மக்கள் விவசாயம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

கடந்த 1906ஆம் ஆண்டில், பப்புவா நியூ கினியின் கட்டுப்பாடு பிரிட்டனிடம் இருந்து ஆஸ்திரேலியாவின் கைகளுக்குச் சென்றது. 1975ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது இந்த நாடு.

ஜேம்ஸ் மொராபே, பப்புவா நியூ கினி நாட்டின் உச்ச தலைவராக உள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)