கொல்கத்தா சாதனைமேல் சாதனை! கோப்பை வெல்ல காரணமான 6 அம்சங்கள்

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2015ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஃபைனல் ஆட்டம் போன்றே நேற்றைய 2024 சீசனின் ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டமும் அமைந்திருந்தது.

2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் மெக்கலம் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் முதுகெலும்பை மிட்ஷெல் ஸ்டார்க் தொடக்கத்திலேயே உடைத்து எறிந்தார். அதேபோன்ற சம்பவத்தை நேற்றைய இறுதி ஆட்டத்தை செய்து சன்ரைசர்ஸ் அணியை வதம் செய்துவிட்டார்.

கொல்கத்தா அணி ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின் 3வது முறையாக ஐபிஎல் டி20 சாம்பியன்ஷிப் கோப்பையை கைகளில் ஏந்தி நேற்று மகிழ்ந்தது. கொல்கத்தா கோப்பையை ஏந்தும் தருணத்தில் முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், “ஜி.ஜி.” (GG)மட்டும்தான்.

2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு கொல்கத்தா சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோதும் ஜிஜி இருந்தார், 10 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்லும்போதும் ஜிஜி அணியில் இருந்தார். ஆனால், வீரராக அல்ல “மென்ட்டராக” இருக்கிறார். “இவர் யாரென்று புரிகிறதா…தீ என்று தெரிகிறதா” என்பதைப் போல், கவுதம் கம்பீர்தான் கொல்கத்தா வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்தார்.

இந்தியாவில் 3 முறையும் வெற்றி

கொல்கத்தா அணி இதுவரை 4 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. அதில் 3 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் ஃபைனல்களில் கொல்கத்தா தகுதிபெற்ற 3 தொடர்களிலும் கோப்பையைக் கைப்பற்றியது. 2021ம் ஆண்டு ஃபைனல் துபாயில் நடந்தபோது, சிஎஸ்கே அணியிடம் கொல்கத்தா தோற்றது.

தென் மாநிலங்களுக்கும் கொல்கத்தாவுக்கும் ஒற்றுமை இருக்கிறது, இதுவரை கைப்பற்றிய 3 சாம்பியன் பட்டங்களும் தென் மாநிலங்களில் நடந்த ஃபைனலில் என்பது குறிப்பிடத்தக்கது. 2012(சென்னை), 2014(பெங்களூரு), மீண்டும் 2024(சென்னை) ஆகியவற்றில் கொல்கத்தா அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா அணியின் சாதனைகள்

  • 2024ம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணி மொத்தம் லீக் சுற்றில் 14 போட்டிகள், ப்ளே ஆஃப், ஃபைனல் என 16 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே தோற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 2008ம் ஆண்டு முதல்முறையாக பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப்பின் குறைந்த போட்டிகளில் தோற்று கோப்பையை வென்ற அணியாக கொல்கத்தா அணி மாறியுள்ளது.
  • ப்ளே ஆஃப் போட்டியிலும், ஃபைனலிலும் அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி கொல்கத்தா அணிதான். ஃபைனலில் 57 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணியை கொல்கத்தா வீழ்த்தியது.
  • இந்த சீசனில் மட்டும கொல்கத்தா அணி, தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணிகளை 6 முறை ஆல்அவுட் செய்துள்ளது. ஒரு சீசனில் ஒரு அணி 6 முறை எதிரணிகளை ஆல்அவுட் செய்தது இதுதான் முதல்முறை. இதற்கு முன் 2008, 2010ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் 4 முறை எதிரணிகளை ஆல்அவுட் செய்திருந்தது.
  • கொல்கத்தா அணி இந்தியாவில் நடந்த 3 ஃபைனல்களிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று 100% வெற்றியை உறுதி செய்துள்ளது. 2012, 2014, ஆகிய ஆண்டுகளுக்குப்பின் 2024ல் கோப்பையை கொல்கத்தா கைப்பற்றியுள்ளது.
  • இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 56 டாட் பந்துகளை சன்ரைசர்ஸ் அணிக்கு வீசினர். ஐபிஎல் தொடரின் 17 ஆண்டுகால வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஒரு அணி 56 டாட் பந்துகளை வீசியது இதுதான் முதல்முறையாகும்.

'நாக் அவுட்' நாயகன் ஸ்டார்க்

இறுதிப்போட்டி பிசுபிசுத்து, ஒருதரப்பாக மாறியதற்கு மூல காரணமே கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் மட்டும்தான். ஃபைனலில் ரன் மழையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை ஸ்டார்க் தனது அற்புதமான, மாயாஜால பந்துவீச்சால் ஏமாற்றி, வெறும் 29 ஓவர்களில் முடிக்கவைத்துவிட்டார்.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற மிட்ஷெல் ஸ்டார்க், இறுதிப் போட்டியிலும் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். ப்ளே ஆஃப் சுற்றில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் பந்துவீச்சாளராக ஸ்ட்ராக் உருவாகினார்.

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

ரூ.24 கோடி கொடுத்தது சரிதான் என நிரூபித்த ஸ்டார்க்

ஐபிஎல் ஏலத்தில் ரூ.24 கோடிக்கு மிட்ஷெல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி வாங்கியபோது மென்ட்டர் கவுதம் கம்பீர் அனைவராலும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாக்கப்பட்டார். 2015க்குப்பின் ஐபிஎல் தொடருக்குள் வரும் ஸ்டார்க் எப்படி பந்துவீசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணி தோற்றபோது ஸ்டார்க் ஒருவிக்கெட் கூட எடுக்காதபோது அவருக்கான ஐபிஎல் விலை பெரிதாக விமர்சிக்கப்பட்டது. லக்னெள மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் ஸ்டார்க் மோசமான பந்துவீச்சு இன்னும் விமர்சனத்தை கூர்மைப்படுத்தியது.

ஆனால் மனம்தளராத ஸ்டார்க் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 'கம்பேக்' கொடுத்தார். அதன்பின் முதல் தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி அளித்து கொல்கத்தாவின் வெற்றிக்கும், இறுதிப்போட்டிக்கு செல்வதற்கும் ஸ்டார்க் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.

இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் பேட்டிங் அஸ்திவாரத்தையே வேரோடு பிடுங்கி எறிந்ததுபோல் ஸ்டார்க்கின் துல்லியமான பந்துவீச்சு அமைந்தது. அதிலும் அபிஷேக் ஷர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஸ்டார்க்கின் பந்துவீச்சு இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும் என்று கூறலாம்.

தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதால், ஸ்ட்ரைக்கை அபிஷேக் வைத்திருந்தார். முதல்பந்தில் இருந்து லென்த்தை மாற்றாமல் பந்தை வெளியே ஸ்விங் செய்தார். அபிஷேக்கும் முதல் 3 பந்துகளில் பீட்டன் ஆகி, 4வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். ஆனால், 5வது பந்தில் நினைத்தது நடந்தது.

உண்மையில் முதல் தரமான டெஸ்ட் பந்துவீச்சு, இந்த சீசனில் மாஸ்டர்கிளாஸ் பந்துவீச்சு என்று சொல்ல வேண்டும். சரியான லென்த்தில் பந்து பிட்ச் ஆகி, அபிஷேக்கை நோக்கிச் சென்ற பந்து அவரின் அருகே சென்றபோது லேசாக அவுட் ஸ்விங் ஆகி அபிஷேக்கை ஏமாற்றி ஸ்டெம்ப்பை பதம்பார்த்து சென்றது.

இந்த ஒரு விக்கெட் மூலம் ஸ்டார்க் தனக்கு வழங்கப்பட்ட ரூ.24 கோடி சரியானது என்பதை நிரூபித்து வெற்றிக்கு அச்சாரமிட்டு சென்றார்.

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா சாம்பியன்ஷிப் வெல்ல காரணங்கள்

  • முதலில் மென்ட்டராக வந்த கவுதம் கம்பீர். ஏற்கெனவே கம்பீர் தலைமையில் 2 சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி, அவரை மென்ட்டராக அமைத்ததில் இருந்து புதிய உத்வேகத்தைப் பெற்றது. லக்னெள அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட கம்பீர் முக்கியக் காரணமாக அமைந்திருந்தார். கொல்கத்தா அணிக்கு மென்டராக கம்பீர் வந்தபின் அவரின் அணுகுமுறை, வீரர்களுக்கு வழங்கிய சுதந்திரம், கட்டுக்கோப்பு ஆகியவை வெற்றிக்கு முதல் காரணம்.
  • இரண்டாவதாக அணியின் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் செய்யாமல் அந்த “கோர் டீம்” ஒற்றுமையை, தொடர்ந்து பராமரித்து வந்தது. சில போட்டிகளில் வேண்டுமென்றால், வெங்கடேஷுக்குப் பதிலாக ரகுவன்ஷி களமிறங்கி இருக்கலாம். மற்ற வகையில் ப்ளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் சென்றது.
  • 3வதாக சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி கொல்கத்தாவின் பெரும்பாலான வெற்றியை பவர்ப்ளே ஓவர்களிலேயே உறுதி செய்தனர். எந்த எதிரணியின் பந்துவீச்சையும் உடைத்தெறியும் அதிரடி தொடக்கக் கூட்டணியாக வலம்வந்தனர். இந்த சீசனில் இரு பெரிய அதிரடி பேட்டர்கள் வெற்றியின் சுமையை தங்களின் தோளில் சுமந்தது 3வது காரணமாகும்.
  • 4வதாக வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு. இருவரும் சேர்ந்து நடுப்பகுதி ஓவர்களில் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்து, ஆட்டத்தை திருப்பிவிட்டனர். இருவரும் ரன்களை விட்டிருந்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை திசைதிருப்பும் மந்திரக் கோல்களை இருவரும் தங்கள் விரல்களில் வைத்திருந்தனர். வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களையும் நம்பாத கொல்கத்தா நிர்வாகம் இருவரை நம்பியே இந்த சீசன் முழுவதும் களமிறங்கியது. அதிலும் வருண் சக்ரவர்த்தி 2023 சீசன் தொடங்கியதில் இருந்து 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 சீசன்களில் அதிக விக்கெட்டுகளை எந்த சுழற்பந்துவீச்சாளர்களும், வேகப்பந்துவீச்சாளர்களும் வீசாத நிலையில் அந்த இடத்தை வருண் நிரப்பியுள்ளார். 27 இன்னிங்ஸ்களில் விளையாடிய வருண் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.16 எக்கனாமி வைத்துள்ளார்.
  • 5வதாக மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சு. ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் நாக்அவுட் போட்டிகள் என்றாலே 100 சதவீதம் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடிவிடுவார்கள். எந்தவிதமான சமரசமும் ஆட்டத்தில் இருக்காது என்பதை ஸ்டார்க் நிரூபித்தார். 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்தான் ஸ்டார்க் வீழ்த்தி இருந்தாலும், கடைசியாக அவர் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் கேம் சேஞ்சிங் விக்கெட்டுகளாகும். முதல் தகுதிச்சுற்றில் ஸ்டார்க் வீழ்த்திய 3 விக்கெட்டுகள், இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் கொல்கத்தாவுக்கு கோப்பையை உறுதி செய்தது.
  • 6-வதாக ஆந்த்ரே ரஸலை குறிப்பிடலாம். கொல்கத்தா அணிக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வீரர்கள் பங்களிப்பு செய்திருந்தாலும், வந்து சென்றாலும், 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நிலையான பங்களிப்பை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அளித்து வருபவர் ரஸல். இறுதி ஆட்டத்தில் ரஸல் தனது பந்துவீச்சு வேரியேஷனில் எடுத்த 3 விக்கெட்டுகளும் சன்ரைசர்ஸ் பேட்டிங் முதுகெலும்பை உடைத்து எறிந்தன. தேவைப்படும் நேரத்தில் பேட்டர் அவதாரம், பந்துவீச்சாளர் அவதாரம் எடுத்து கொல்கத்தா அணிக்கு தூணாக இருந்து வருகிறார் ரஸல்.
KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

முழுமையான வெற்றி

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “இந்த வெற்றி முழுமையானது. இதைத்தான் வீரர்களிடம் கேட்டோம், அதை வழங்கியுள்ளனர். இந்த வெற்றியின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நாங்கள் முதலில் பந்துவீசியது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்துமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு வாழ்த்துகள். அதிக அழுத்தம் கொண்ட ஆட்டத்தில் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டார்.

இளைஞர்கள் வளரும் வீரர்கள் அதிகம் கற்க வேண்டும். எப்போதும் மந்திரக்கோலை கையில் வைத்துக்கொண்டு எப்போது பந்துவீச என ரஸல் என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். பெரும்பாலான ஆட்டங்களில் திருப்புமுனையை ரஸல் தனது பந்துவீச்சால் ஏற்படுத்திக் கொடுத்தார். ஃபைனலில் எங்களுக்கான வெற்றியை வெங்கடேஷ் எளிதாக்கினார். ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர். எந்த தனிநபரும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது, இது குழுவின் வெற்றி, முழுமையான வெற்றி” எனத் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பாராட்டு

சன்ரைசர்ஸ் அணி 2வது இடம் பெற்றதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் தளத்தில் படத்தை பதிவிட்டு பாராட்டுத் தெரிவித்திருந்தது. அதில் “சன்ரைசர்ஸ் அணியை மதிக்கிறோம். ஒரு மோசமான ஆட்டம், ஒட்டுமொத்த அற்புதமான சீசனையும் எந்தவிதத்திலும் விவரிக்காது. 2024 ஐபிஎல் சீசனில் மறக்கமுடியாத சில பங்களிப்புகளை வழங்கினீர்கள், சீசனின் டாப் ஒன்னாகவும் இருந்தீர்கள்” என தெரிவித்துள்ளது.

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

"எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை"

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “கொல்கத்தா அணியினர் சிறப்பாகப் பந்துவீசினர், நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அவர்கள் வழங்கவில்லை. அதாவது ஆமதாபாத் ஆட்டம்போல் இதுவும் அமைந்தது. சேப்பாக்கம் விக்கெட்டை புரிந்துகொள்ள முடியவில்லை, 200 அடிக்கும் விக்கெட்போல் இல்லை. 160 ரன்கள்தான் சேர்க்க முடியும். 250 ரன்களுக்கு மேல் 3 முறை இந்த சீசனில் அடித்தது இந்த சீசனில் மறக்க முடியாதது. எங்களுக்கு இது மிகப்பெரிய சீசனாக அமைந்தது. இந்த அணி வீரர்களோடு, சப்போர்ட் ஸ்டாப்களுடன் அதிகமாக இதற்குமுன் பணியாற்றியதில்லை, ஆனால் சீசன் முடியும் தருவாயில் அவர்களின் நெருக்கம் அதிகமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மிரட்டலான அணியாக மாறிய சன்ரைசர்ஸ்

2024 சீசன் சன்ரைசர்ஸ் அணிக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்திருந்தது. இந்த சீசனில்தான் அதிகபட்ச ரன்களை(287) அடித்து, சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்தது. அதே சன்ரைசர்ஸ் அணிதான் ஃபைனலில் 113 ரன்களுக்குச் சுருண்டு குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.

பேட்டிங்கில் அசுரத்தனமாக செயல்பட்டு எதிரணிகளின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி செயல்பட்டது. தொடக்கத்திலிருந்தே பேஸ்பால் கிரிக்கெட் உத்தியை கையில் எடுத்த சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட்டை தயார் செய்தது. கொல்கத்தா அணிக்கு நரைன், சால்ட் எவ்வாறு வலுவான தொடக்கத்தை அளித்தார்களோ அதேபோன்ற தொடக்கத்தை இருவரும் வழங்கினர். இருவரின் பேட்டிங்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை வாரிக்கொடுத்தன.

சன்ரைசர்ஸ் அணியை நிர்வகிக்கவே, வழிநடத்தவே ரூ.20 கோடிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை வாங்கியது நிர்வாகம். பாட் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பேற்றபின் ஆட்டத்தின் போக்கிலும், கேப்டன்ஷிப் உத்தியிலும் பல மாற்றங்கள் வந்தன. அந்த மாற்றம் ஒவ்வொரு வெற்றிக்கும் உதவியது. எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என தெரிந்து சரியாக கம்மின்ஸ் செயல்பட்டார். குறிப்பாக ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களுடனே கம்மின்ஸ் அற்புதமான கேப்டன்ஷிப்பை செய்து இறுதிப்போட்டிவரை அழைத்து வந்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாக அமைந்து, நடுப்பகுதி ஓவர்களில் அணியை கட்டமைக்கும் பொறுப்பை கிளாசன் பார்த்துக்கொண்டார். கிளாசன் இருக்கும்வரை வெற்றி உறுதியில்லை என்று எதிரணி நம்பும் அளவுக்கு பேட்டிங் இருந்தது. இந்த சீசனில் எதிரணிகளை இரக்கமின்றி வதம் செய்யும் பேட்டராக கிளாசன் இருந்தார்.

ஆனால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் பேட்டிங்கில் தோல்வி அடைந்தபோது, ஒட்டுமொத்த அணியும் தோல்வி அடைகிறது என்ற ரகசியத்தை கொல்கத்தா அணி கண்டுபிடித்து அந்த அச்சாணிகளை பிடுங்கி சன்ரைசர்ஸ் வண்டியை கவிழ்த்தது. தகுதிச்சுற்றிலும், ஃபைனலிலும் இருவரின் விக்கெட்டுகளை கழற்றியபோதே, பாதி தோல்வியை சன்ரைசர்ஸ் ஒப்புக்கொண்டது.

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் 2024 கோப்பையை முன்னாள் வீரர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.

கொல்கத்தா அணியின் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்கான நினைவுப்பரிசு பயிற்சியாளர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு வழங்கப்பட்டது, சாம்பியன்ஷிப் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார். 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடிக்கான காசோலையை அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்றுச் சென்றார்.

யாருக்கு எந்த விருது?

  • வளர்ந்துவரும் வீரருக்கான விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்பட்டது(ரூ.10 லட்சம் பரிசு).
  • 2024 சீசனில் 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தனது வசம் வைத்திருந்த விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டுக்குப்பின் 2வது முறையாக கோலி ஆரஞ்சு தொப்பி விருது பெற்றார்.
  • அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஊதா தொப்பி விருது பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் ஹர்சல் படேலுக்கு(24) வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.
  • 2024ம் ஆண்டு சீசனின் விருது(ரூ.10 லட்சம்), மதிப்பு மிக்க வீரர் விருது(ரூ.10லட்சம்) இரண்டையும் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைன் பெற்றார்.
  • அதிக சிக்ஸர்கள் அடித்த விருது சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • அதிக பவுண்டரி அடித்த விருது சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • சிறந்த ஸ்ட்ரைக் ரேட் விருது டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஃப்ரேசர் மெக்ருக்கிற்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • 2024 சீசனின் சிறந்த கேட்சுக்கான விருது கொல்கத்தா அணி வீரர் ராமன் தீப் சிங்கிற்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • நேர்மையான அணிக்கான விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதான வடிவமைப்பாளர்களுக்கு சிறந்த ஆடுகளத்தை வடிவமைத்தமைக்கான விருது (ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)