கொல்கத்தாவை 3 முறை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர், இந்திய அணி பயிற்சியாளர் ஆகிறாரா?

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கௌதம் கம்பீர்

மே 26 இரவு.

சென்னையில் வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இறுதிப் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். பரபரப்பான சூழல் நிலவியது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் அனைவரும் வியர்வையில் நனைந்திருந்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிக் கொண்டிருந்தது. சுமார் 12 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிந்தது.

அவ்வபோது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பக்கம் ஊடக கேமராக்கள் திரும்பின. அவரது அணி விளையாடும் போதெல்லாம், கேமராக்கள் மைதானத்தை ஃபோகஸ் செய்வதைப் போலவே காவ்யா மாறனையும் ஃபோகஸ் செய்வது வழக்கம். கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கவே, காவ்யா கேமராக்களுக்கு பை சொல்லிவிட்டு சிறிது நேரம் போகஸில் இருந்து விலகிச் சென்றார்.

கொல்கத்தாவின் ரிங்கு சிங் போன்ற பல வீரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர். பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார். வெற்றி 100% உறுதியான பிறகு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்பது போன்று அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவர்தான் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர்.

கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட், ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. அதுவரை அமைதியாக இருந்த கவுதம் கம்பீர் இப்போது இருக்கையில் இருந்து எழுந்து நின்று வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் அடித்த ஷாட் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 'ஐ.பி.எல் 2024’ சாம்பியன் ஆனது.

கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை சுனில் நரைன் கட்டிப்பிடித்து நன்றியுணர்வை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் அழைத்துச் சென்றார். வாணவேடிக்கைகளால் வானம் ஒளிர்ந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொல்கத்தா அணி இதுவரை மூன்று முறை பெற்றுள்ளது.

கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி - 'கௌதம் கம்பீர்’.

கொல்கத்தா அணி வென்றதும் கவுதம் கம்பீர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், "யாருடைய எண்ணங்களும் செயல்களும் உண்மையாக நேர்மையாக இருக்கின்றனவோ, அவர்களின் தேர், ஸ்ரீ கிருஷ்ணரால் இயக்கப்படும்," என்று பதிவிட்டார். 

கவுதம் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024-இல் சாம்பியன் ஆனது எப்படி?

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா அணியுடன் கெளதம் கம்பீர்

கொல்கத்தா அணி, கவுதம் கம்பீர் மற்றும் டீம் இந்தியா

கொல்கத்தா முதன் முதலில் 2012-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அப்போது கவுதம் கம்பீர் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கெளதம் தான் கேப்டனாக இருந்தார்.

தற்போது கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியனாகியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ளார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.

முன்னதாக, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் ஒரு ஆலோசகராக, லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் வெற்றிக்குப் பிறகு, கம்பீரின் கடந்தகால வெற்றிகளையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. 2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் (ODI) கம்பீர், 9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும்.

முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012ல் கம்பீர் மற்றும் ஷாருக் கான்

கொல்கத்தா அணிக்குத் திரும்பிய கம்பீர்

கம்பீர் 2023-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு ஆலோசகராக மீண்டும் கொல்கத்தா அணிக்குத் திரும்பினார். கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியதால், அதில் பல்வேறு மாற்றங்களை செய்வார் என்று கருதப்பட்டது.

கம்பீரின் உத்தி என்னவெனில், பில் சால்ட்டுடன் இணைந்து சுனில் நரைனை ஆரம்ப இன்னிங்ஸ் விளையாடச் செய்வது தான். இந்த உத்தி அந்த அணிக்குப் பெரிதும் பயனளித்தது. அணி 8 முறை 200-க்கு மேல் ரன் குவித்தது.

ஒரு அலோசகராக, ஆலோசகராக கம்பீரின் அணுகுமுறையை அணி வீரர் நிதிஷ் ராணாவின் வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும். நிதிஷ் ராணா கூறுகையில், “கௌதம் கம்பீர் எங்கள் அலோசகராக முடிவு செய்தபோது, அவருக்கு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அதற்கு கம்பீர் அளித்த பதில் என்னை ஊக்கப்படுத்தியது. 'நம் அணி மேடையில் நின்று கோப்பையை உயர்த்தும்போது தான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியான தருணம்’ என்று கம்பீர் சொன்னார். கம்பீரின் இந்த வார்த்தைகள் என்றைக்கும் என் மனதில் நிற்கும்,” என்றார்.

கவுதம் கம்பீரின் வியூகத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

டிசம்பர் 2023.

ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் நடந்த சமயம். அந்த நிகழ்வின் போது மேசையில் கௌதம் கம்பீர் அமர்ந்திருந்தார்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24 கோடியே 75 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி இவ்வளவு விலை கொடுத்து ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறை. இந்த முடிவு குறித்து அந்த சமயத்தில் சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது அந்த முடிவு சரி என்பது போல், கொல்கத்தா சாம்பியன் ஆனதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சமூக வலைதளங்களில், மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்ததற்காக கவுதம் கம்பீருக்கு மக்கள் தற்போது நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் ஸ்டார்க்கின் படத்தை வைத்து மீம்ஸ் ஆக பகிர்ந்து வருகின்றனர். 24 கோடி ரூபாய் வீணாகி விட்டது என்று யாரெல்லாம் சொன்னீர்கள்? என்று கேள்வி எழுப்புவது போன்று மீம்ஸ் பகிரப்படுகிறது.

ஸ்டார்க் மீதான இந்த அன்புக்கு காரணம் - பந்துவீச்சில் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் ஸ்டார்க் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் விளையாடியது. ஒன்பது வெற்றி, மூன்றில் தோல்வி. 20 புள்ளிகளுடன் கொல்கத்தா சாம்பியன் ஆனது.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கௌதம் கம்பீர் மற்றும் ஷாருக்கான்

கொல்கத்தா அணியும் கெளதம் கம்பீரும்

வெற்றிகளை வசப்படுத்தும் கௌதம் கம்பீரிடம் மந்திரக்கோல் எல்லாம் எதுவும் இல்லை ஆனால் அவர் வகுக்கும் வியூகம் மிக முக்கியமானது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஏழு சீசனிலும் கம்பீரின் தலைமைத்துவத்தை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ் தனது கட்டுரையில் "கொல்கத்தா அணி சில கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டது. ஆனால் கவுதம் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தினார். கவுதம் கம்பீர் என்னும் மனிதர் அருகில் இருந்தால் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்று அணியின் நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் தெரியும். பயிற்சி முகாம்களின் போது, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரூ ரசல் முக்கியத்துவம் பெறுவதை கம்பீர் உறுதி செய்தார். இதன் விளைவாக, போட்டியில் சுனில் 488 ரன்கள் குவித்து வெற்றி பெற்றார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றியில் அணியின் நிர்வாகமும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் தாயார் ஆப்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அவர் இந்தியாவில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவது அணி மீதான அவரது அன்பைக் காட்டுகிறது. அணியை நிர்வகிப்பவர்கள் வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் இந்த அன்புக்கு காரணம்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் பேசுகையில், “உங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற நிர்வாகம் அமைந்தால் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் கவுதம் சார், ஷாருக் சார், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் வீரர்களை குடும்பம் போன்று நடத்துவார்கள்," என்றார்.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கம்பீர் 2023 இல் லக்னோவின் ஆலோசகராக இருந்த சமயத்தில் கோலியுடன் களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது

கம்பீரின் பிம்பம்

கவுதம் கம்பீர் எப்போதும் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கும். கம்பீர் மட்டும் இல்லை, பல வீரர்கள் மீது இந்த விமர்சனம் வைக்கப்படுவது வழக்கம். மைதானத்தில் விராட் கோலியுடன் கம்பீர் வாக்குவாதம் செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ஐ.பி.எல் போட்டியிலும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது, ஆனால் இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து கொண்டனர். 'களத்திற்கு வெளியே நண்பர்கள்' என்று கம்பீர் சொல்வது வழக்கம். இந்தக் கூற்றை தனது கிரிக்கெட் வாழ்நாளில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் கம்பீரை நேர்காணல் செய்திருந்தார்.

அதில் "கவுதம் கம்பீர் பற்றி தவறான புரிதல் உள்ளது. ஆனால் அவர் அப்படி இல்லை,” என்று அஷ்வின் கூறினார்.

இந்தக் காணொளியில் கௌதம் கம்பீர், "என்னால் முடிந்தவரை ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறேன்," என்று கூறியிருந்தார். "இதில் என்ன தவறு? இது என் இயல்பு. என்னைப் பொறுத்தவரையில் வெற்றி பெறுவது ஒரு ஆசை. நான் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன்," என்றார்.

இதே நிகழ்ச்சியில் கம்பீர், "நான் பேசும் போது சிரிப்பதில்லை என்று பலர் சொல்வார்கள். என் முகத்தில் எப்போதும் விளையாட்டு தொடர்பான பதற்றம் இருக்கும். மக்கள் நான் சிரிப்பதைப் பார்ப்பதற்காக வருவதில்லை. நாங்கள் வெற்றி பெறுவதைப் பார்க்கவே வருகிறார்கள். என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது. நான் பாலிவுட் நடிகர் இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்,” என்றார்.

கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டனாக இருந்தபோது விளையாடிய வீரர் பியூஷ் சாவ்லா கூறுகையில், "நல்ல சூழல் இருந்தால், எந்த வீரரை வைத்தும் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்பதை கம்பீர் அறிவார். அவர் கிரிக்கெட்டை மிகவும் அழகாகப் படித்து வைத்திருக்கிறார்,” என்றார்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தியில், முன்னாள் கே.கே.ஆர் வீரர் மன்விந்தர் பிஸ்லா, "கவுதம் கம்பீர் தனது அணியின் வீரருக்காக நெஞ்சில் புல்லட்டையும் சுமப்பார்," என்று புகழ்ந்திருக்கிறார்.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம், ANI

கம்பீர் கொல்கத்தாவில் நீடிப்பாரா?

ஐ.பி.எல்-லில் கொல்கத்தாவை சாம்பியன் ஆக்கிய ஆலோசகரான கௌதம் கம்பீர் அந்த அணியில் நீடிப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

'இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்க முடியுமா?' என்ற யூகங்களும் உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ESPN Cric Info நிகழ்ச்சியில் பேசுகையில், "எனது பார்வையில், கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார். ஐ.பி.எல் வெற்றி இதனை உறுதி செய்துள்ளது,” என்றார்.

அதே நிகழ்ச்சியில், டாம் மூடி, "முதலில் கொல்கத்தா அணியில் ஒரு ஆலோசகராக தனது இன்னிங்ஸை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கம்பீர் நினைத்திருக்க கூடும். டீம் இந்தியாவின் பயிற்சியாளராக வருவதைப் பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று இருக்கிறார் போலும், ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு,” என்றார்.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் கவுதம் கம்பீர் எந்தளவுக்கு கவனமாக இருக்கிறார் என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியவரும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)