இந்திய நாடாளுமன்ற தேர்தல், மோதி பேச்சு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

இந்தியா, பாகிஸ்தான், நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்த விவாதத்தின் மையத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் அறிக்கைகள் உள்ளன.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சௌத்ரி ஃபவாத் ஹுசைன் சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் குறித்துச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வாக்களித்த பிறகு ஒரு படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அந்தப் படங்களை மறு ட்வீட் செய்துள்ள ஃபவாத் செளத்ரி, "அமைதியும் நல்லிணக்கமும்... வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்," என்று எழுதினார்.

ஃபவாத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "சௌத்ரி அவர்களே, நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் சொந்த விஷயங்களைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட்டிற்கு எந்த தேவையும் இல்லை. பாகிஸ்தானின் நிலைமை இந்த நேரத்தில் மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்களை, உங்கள் நாட்டை கவனித்துக் கொள்ளுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு ஃபவாத் பதில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

அதற்கு பதிலளித்த ஃபவாத் செளத்ரி, "முதலமைச்சர் அவர்களே, தேர்தல்தான் உங்கள் வேலை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்திற்கு எல்லைகள் இல்லை. மன சாட்சி உள்ள எவரும் இதை உண்மை என்று சொல்ல மாட்டார்கள். பாகிஸ்தானில் நிலைமை சிறப்பாக இல்லை. ஆனால் அனைவரும் மேம்பட வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

கெஜ்ரிவால் மற்றும் ஃபவாத் ஹுசைன் இடையேயான இந்த சமூக வலைதள உரையாடலை ஒரு விவகாரமாக ஆக்கிட டெல்லி பா.ஜ.க முயற்சித்தது.

இந்த ஒரு விஷயம் மட்டுமே விமர்சனத்திற்கு காரணமாக இருக்கவில்லை. இந்தியாவில் தேர்தல்களின்போது பாகிஸ்தான் பற்றியும், பாகிஸ்தான் தேர்தல்களின்போது இந்தியா பற்றியும் எப்போதுமே பேசப்பட்டு வருகிறது.

அதைப்பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

பாகிஸ்தான் பற்றி பிரதமர் மோதி கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

பிரதமர் நரேந்திர மோதி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பாகிஸ்தானை குறிப்பிட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத்தின் சப்ளையராக இருந்த அண்டை நாடு இன்று கோதுமை மாவுக்கு கூட போராடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 19ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் ஒரு பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அணுகுண்டு பற்றிய பயத்தின் கனவை எதிர்க்கட்சிகள் காண்கின்றன என்று மற்றொரு தேர்தல் பேரணியில் பிரதமர் மோதி கூறினார்.

மே 26-ம் தேதி பிகார் மாநிலம் காராகாட்டில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "பாகிஸ்தானின் அணுகுண்டுக்கு காங்கிரஸ் பயப்படுகிறது. நாங்கள் மோதி தொண்டர்கள், நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்," என்றார்.

மணிசங்கர் அய்யர் அளித்த ஒரு பேட்டி மிக அதிகமாக வைரலானது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இந்த பேட்டியில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

மணிசங்கர் ஐயரின் இந்த அறிக்கைக்காக, பாஜக தலைவர்கள் காங்கிரஸை குறிவைத்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாகிஸ்தானின் பலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதில் அளித்தார்.

“இதுதான் பாகிஸ்தானின் நிலைமை. நானே அங்கு பாதுகாப்புச் சோதனைகள் ஏதுமின்றி நேராக உள்ளே சென்றிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பத்திரிகை நிருபர் ‘ இவர் எப்படி விசா இல்லாமல் உள்ளே வந்தார், என்று கேட்டார்,” என்றார்.

"பாகிஸ்தான் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் கோபத்திற்கு நான் தான் காரணம் என்பதும் எனக்குத் தெரியும்" என்று அதே பேட்டியில் மோதி கூறினார்.

பாகிஸ்தான் தலைவரும் முன்னாள் அதிகாரியும் என்ன சொன்னார்கள்?

பிரதமர் மோதி, கேஜ்ரிவால் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அப்துல் பாசித், இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹை கமிஷனர்.

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த பேட்டியை ஃபவாத் சௌத்ரி மே 26 அன்று சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனுடன், "பெரிய பதவியில் இருக்கும் சிறிய மனிதர். மோதிக்கு இந்தியாவின் பிரதமர் என்ற அளவில் நவாஸ் ஷெரீப் மதிப்பளித்தார்" என்று எழுதினார்.

பிரதமர் நரேந்திர மோதி மே 10-ம் தேதி மற்றொரு பேட்டியில் பாகிஸ்தானைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

'பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி நாம் அதிகம் சிந்திக்க தேவையில்லை. நமது இலக்குகளை மனதில் வைத்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவை இயக்குவதற்கான வழியை 10 ஆண்டுகளாக மூடிவிட்டேன்,” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

"1947 இல் பாகிஸ்தான் நம்மிடமிருந்து பிரிந்து சென்று விட்டது. அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு வேளை உணவுக்கு வழி செய்துகொள்ள வேண்டும். நாம் நிறையவே முன்னேறி விட்டோம்," என்றார் பிரதமர் மோதி.

பிரதமர் மோதியின் இந்த பேட்டியை இந்தியாவுக்கான பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித் பகிர்ந்துள்ளார்.

"பாகிஸ்தானுக்கு இதனால் பலன் கிடைக்கும். பொறுமையாக இருங்கள். இந்தியாவுக்குத் தான் பாகிஸ்தானின் தேவை அதிகமாக உள்ளது.. தேர்தலில் மோதி வெற்றி பெற்றால் அவர் தனது அறிக்கையை திரும்பப் பெறுவார். பொறுமையாக இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்." என்று அப்துல் பாசித் மே 11 ஆம் தேதி எழுதினார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பிரதமர் மோதி, கேஜ்ரிவால் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், REUTERS

இந்திய தேர்தல்களில் பாகிஸ்தான் பற்றி பேசப்பட்டது குறித்து பல பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய நோமன் மாஜித், டான் நாளேட்டில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.

இக்கட்டுரையின் தலைப்பு- ’இந்திய தேர்தல்களில் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்கள்’.

இந்தியாவின் மக்களவைத் தேர்தலின் மையத்தில் மீண்டும் முஸ்லிம்கள் இருப்பதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. 2019 மக்களவை தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சாரம் இந்தியாவிற்கு வெளியே உள்ள எதிரிகளை மையமாகக் கொண்டிருந்தது.

பாஜகவும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் 2019 தேர்தலில் ’நாங்கள் ஊடுருவிச் சென்று தாக்குவோம்’ கூறி வந்தனர். 2024 தேர்தலில் இந்திய முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்று சொல்கிறார்கள் என்று இந்தக்கட்டுரை குறிப்பிடுகிறது.

டான் கட்டுரையில் பிரதமர் மோதியின் அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவர் (மோதி), காங்கிரஸ் உங்கள் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று கூறியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அவ்வாறு கூறவில்லை. எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடவில்லை. பாஜக-ஆர்எஸ்எஸ், முஸ்லிம்களை வெளியாட்களாகக் கருதுகிறது," என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோதியும், பா.ஜ.க-வும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாகுபாடு காட்டுவதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 'அனைவருடனும், அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற கொள்கையுடன் செயல்படுவதாக பா.ஜ.க கூறுகிறது.

மலீஹா லோதி என்ன சொல்கிறார்?

பிரதமர் மோதி, கேஜ்ரிவால் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் மலீஹா லோதி

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதியும் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.

டான் நாளேட்டில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையில், "நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராவது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அவரது கட்சி 400 இடங்களில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

தனது கட்டுரையில் பிரதமர் மோதியின் ஓர் அறிக்கையை மலீஹா குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் (மோதி) இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் நடத்துவோம் என்ற பாகிஸ்தானின் அச்சுறுத்தல், வோட் ஜிஹாத் போன்ற விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். ஒரு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "முன்பு தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போது, காங்கிரஸ் கட்சி ஆவணங்களை அனுப்பியது. ஆனால் நாங்கள் வீடு புகுந்து பயங்கரவாதிகளை கொன்றோம்" என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானில் கோதுமை மாவு பற்றாக்குறை இருப்பதாக மோதி கூறியதையும் இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கோதுமை மாவு விலை தொடர்பாக பாேராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

"மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வகையான அணுகுமுறை இந்தியா-பாகிஸ்தான் உறவை மோசமாக்கக் கூடும். பாகிஸ்தான் குறித்த மோதியின் அறிக்கைகள் தேர்தல் அரசியலின் ஒரு பகுதிதான் என்று சிலர் கூறுகிறார்கள். இருப்பினும், இந்த வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்று மலீஹா லோதி அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

"பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் பாஜக சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். இதை மனதில் வைத்துப்பார்த்தால், அடுத்த அரசில் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தேர்தல்

இம்ரான் கான் மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம், MEA

படக்குறிப்பு, இம்ரான் கான் மற்றும் நரேந்திர மோதி

தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் ’இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேர்தல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ஒரு அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் முடியும் தருவாயில் இருக்கும்போது, பாகிஸ்தான் அழுவது தற்செயலாக இருக்க முடியாது என்று பிரதமர் மோதி கூறியிருந்தார்.

இந்தியாவில் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் என பாகிஸ்தான் தூதாண்மை அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

2019 தேர்தலுக்கு முன்பு, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் பற்றி இந்தியா பேசியது.

இந்த வான்வழித் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துகளும் இந்த கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுடனான பதற்றத்தை அதிகரிப்பதன் மூலம் பாஜக தேர்தலில் ஆதாயம் தேடுகிறது என்றும் கட்டுரை தெரிவிக்கிறது.

ஃபவாத் செளத்ரி, ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்து அவரைப் பாராட்டியதாகவும் அதே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸை பாஜக தாக்கியதும் வெளிச்சத்திற்கு வந்வந்துள்ளது.

"இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பாகிஸ்தானில் யாரும் ஃபவாத் செளத்ரியின் ட்வீட் பற்றி கேட்பதில்லை. ஆனால், எல்லைக்கு மறுபுறம் பாஜக இதை (ஃபவாத் செளத்ரியின் ட்வீட்) ’காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டு’ என்று கூறுகிறது. பாகிஸ்தானிலும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறையாகும் இது,” என்று கம்ரான் யூசுஃப் இந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

2019 இல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்ரான் கான் 2019 ஏப்ரலில் அளித்த பேட்டியில், "வலதுசாரி கட்சியான பாஜக வெற்றி பெற்றால், காஷ்மீர் பிரச்னையில் ஏதோ வகையிலான உடன்பாட்டை எட்ட முடியும்" என்று கூறியிருந்தார்.

“பரஸ்பரம் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேசியவாதம் பற்றி ஒருவர் கேள்வி எழுப்புவாரேயானால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற பாகிஸ்தான் உதவியது,” என்று ட்ரிப்யூன் கட்டுரை மேலும் கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)