கம்பீர் வழிகாட்டலில் கொல்கத்தா கட்டுக்கோப்பான அணியாக உருவெடுத்தது எப்படி?

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.கொல்கத்தா அணி ஏறக்குறைய 75 சதவீதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2 சீசன்களுக்கு முன்பிருந்த கொல்கத்தா அணியை போல் இந்த சீசனில் அந்த அணி இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். புதிய மென்டர், சப்போர்ட் ஸ்டாஃப், புதிய கேப்டன், புதிய இளம் வீரர்கள் என அனைத்தையும் தயார் செய்தது கொல்கத்தா அணி.

ஐபிஎல் ஏலத்தில் இருந்து சில தேவையற்ற வீரர்களை கழற்றிவிட்டது கொல்கத்தா அணி. குறிப்பாக உமேஷ் யாதவ், பெர்குஷன், டிம் சவுதி, லிட்டன் தாஸ், ஷர்துல் தாக்கூர் போன்ற நட்சத்திர பந்துவீச்சாளர்களை எந்தவிதமான சிந்தனையும் இன்றி கழற்றி விட்டது.

ஆனால், அதற்கு பதிலாக அனைவரும் வியக்கும் வகையில் ரூ.24 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை விலைக்கு வாங்கியது. 25 வீரர்களில் 13 வீரர்களை கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டது.

இதில் 3 ஆல்ரவுண்டர்கள், 4 பேட்டர்கள், 5 பந்துவீச்சாளர்களை கொல்கத்தா அணி தக்கவைத்தது. ஆனால் ஏலத்தில் கொல்கத்தா அணிக்கு ஜாக்பாட்டாக அமைந்த வீரர்கள் ரகுவன்ஷி(ரூ20 லட்சம்), ராமன்தீப் சிங் (ரூ.20 லட்சம்), மணிஷ் பாண்டே(ரூ.50 லட்சம்) ஆகியோர்தான். இந்த 3 பேரும் கொல்கத்தா அணியின் ப்ளேயிங் லெவனுக்கு பெரிய வலிமை சேர்த்தனர்.

கொல்கத்தா அணி ஏலத்தில் ரூ.24 கோடிக்கு ஸ்டார்க்கை இந்த விலைக்கு வாங்கிய போது, மென்ட்டர் கெளதம் கம்பீரை நோக்கி பல்வேறு கிண்டல்களும், கேலிப்பேச்சும், மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்தன. ஆனால், அனைத்துக்கும் சாம்பியன்ஷிப்பை ஸ்டார்க் மூலம் வென்றதன் மூலம் கம்பீர் தனது முடிவை சரியானதாக மாற்றியுள்ளார். ஸ்டார்க்கும் தனக்கான விலை நியாயமானது என்பதை நிரூபித்துள்ளார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனையின் போது கூறுகையில் “ ஸ்டார்க் தனக்கான விலை பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு பந்துவீச்சு மூலம் “ஸ்மார்ட்டான அறை” கொடுத்துள்ளார்” என தனது பாணியில் தெரிவித்தார்.

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்செல் ஸ்டார்க்

ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம்

இந்த சீசனில் இம்பாக்ட் ப்ளேயர் விதி இருப்பதால் ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு குறைந்த நிலையில் கொல்கத்தா அணி ஏலத்தில் ஆல்ரவுண்டர்களை தேடிப்பிடித்து வாங்கியது. அதில் ராமன்தீப் சிங் முக்கியமானவர். ஏற்கனவே அங்குல் ராய், வெங்கடேஷ் அய்யர், ரஸல், நரைன் இருந்தனர். ஆல்ரவுண்டர்களை அதிகப்படுத்தி தனது ப்ளேயிங் லெவனுக்கு வலிமை சேர்த்தது கொல்கத்தா அணி

பேட்டிங்கில் எப்போதுமே அதிரடியான ஆட்டத்தைக் கையில் எடுத்து ஆடும் தன்மையுடையது கொல்கத்தா அணி. இருப்பினும் 2014-ஆம் ஆண்டுக்குப்பின் கொல்கத்தா அணி தனது அடையாளத்தை மெல்ல இழக்கத் தொடங்கியது. பின்னர் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் கொல்கத்தா அணி தனது அடையாளத்தை மெல்ல மீட்டது.

ஆனால், இந்த சீசனில் பேட்டிங் என்றாலே அதிரடி ஆட்டம் தான், எதிரணிகளை அதிரவைக்கும், ஸ்தம்பிக்க வைக்கும் ஆட்டத்தை தொடக்கத்திலிருந்தே கையாண்டனர். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. இந்த சீசனில் மட்டும் 6 முறை 200 ரன்களுக்கு மேல் கொல்கத்தா அணி ஸ்கோர் செய்ததற்கு பேட்டிங் அணுகுமுறையில் செய்த மாற்றம்தான்.

இப்படி கொல்கத்தா அணி தங்களை 2024 ஐபிஎல் சீசன் தயாராவதற்கு முன்பே படிப்படியாக தங்களை செதுக்கிக் கொண்டது.

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

நிரூபித்த கவுதம் கம்பீர்

கேப்டனாக மட்டுமல்ல வழிகாட்டியாகவும் கொல்கத்தா அணியை கோப்பையை வெல்ல வைக்க முடியும் என்பதை கவுதம் கம்பீர் நிரூபித்துள்ளார். பல கேப்டன்கள், பயிற்சியாளர்களை மாற்றியபின், கொல்கத்தா அணிக்கு சரியான நபரான கம்பீரை மீண்டும் அழைத்துக்கொண்டது கொல்கத்தா அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருமுறை ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கம்பீர் தலைமையில் வென்ற நிலையில் இப்போது அவரின் வழிகாட்டலில் 3வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. கவுதம் கம்பீர் அணிக்கு வந்தவுடன் பெரிதாக எந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. எந்த வரிசைக்கு எந்த வீரர்களை களமிறக்கலாம், எந்த வீரர் எந்த நிலையில் பந்துவீசினால் சரியாக இருக்கும், எப்போது பந்துவீச வேண்டும், குறிப்பிட்ட வீரரின் ஸ்பெஷலிஸ்ட் திறமை என்ன என்பதை கண்டறிந்து பயன்படுத்தினார்.

கொல்கத்த அணியை தலைகீழாக மாற்றி, அதன் மூலம் சாம்பியன்ஷிப் பட்டத்தை கம்பீர் வென்று கொடுக்கவில்லை. கம்பீர் செய்தது மிகவும் 'ஸ்மார்ட்டான பணி' அதாவது யாரை எங்கு பயன்படுத்தலாம், எப்போது பயன்படுத்தலாம் என்பது மட்டும்தான்.

“கம்பீரின் கேப்டன்ஷிப் ஸ்டெயிலும், எம்எஸ் தோனி கேப்டன்சி ஸ்டைலும் ஒரே மாதிரியாக இருக்கும். இதை இருவரின் கேப்டன்சியில் விளையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்,” என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்குள் வந்த பின், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தா அணி இருந்த அதே புத்துணர்ச்சி, விடாமுயற்சி, வீரர்களிடம் தன்னம்பிக்கை ஆகியவை தெரிகிறது.

குறிப்பாக சரியான இடத்துக்கு தகுதியான பேட்டர்களை, கலவையை கண்டுபிடிக்க கடந்த 2 ஆண்டுகளாக கொல்கத்தா அணி போராடியது, பலபரிசோதனைகளை நடத்தியது. கடந்த 2 சீசன்களில் தொடக்க வீரர்களை மட்டும் 12 முறை கொல்கத்தா அணி மாற்றியது. ஆனால், இந்த சீசனில் சுனில் நரைன், பில் சால்ட் கூட்டணியை ஒரு போட்டியில் இருந்து கூட நீக்கவில்லை. பில் சால்ட் இங்கிலாந்து சென்ற பின்புதான் குர்பாஸுக்கான வாய்ப்புக் கிடைத்தது.அதுவரை கொல்கத்தா அணி நிர்வாகம் நரைன், சால்ட் கூட்டணியை நீக்கவில்லை. இதன் மூலம் சரியான வீரர்களைக் கண்டறியும் பணியை கவுதம் கம்பீர் செய்துள்ளார்.

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பலமான பேட்டிங் வரிசை

அதுமட்டுமல்லாமல் நடுவரிசையில் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், கீழ் வரிசையில் ரஸல், ரிங்கு சிங், ராமன்தீப் சிங் என பலமான பேட்டிங் வரிசையை கம்பீர் கட்டமைத்தார். இந்த 6 வீரர்களில் வெங்கடேஷ், ரஸல், ராமன்தீப் சிங் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என கச்சிதமாக அணியைக் கட்டமைத்தார்.

பெரும்பாலும் இந்த வீரர்களைக் கொண்ட ப்ளேயிங் லெவனை கம்பீர் உருவாக்கினார். இந்த வீரர்களில் சிலர் மட்டுமே தேவைக்கு ஏற்றார்போல் மாற்றப்படுவார்களேத் தவிர பிற அணிகளைப் போன்று ஒட்டுமொத்தமாக கலைத்துப்போட்டு அணியின் ப்ளேயிங் லெவனை மாற்றவில்லை.

இதனால் கொல்கத்தா அணிக்கு 9-வது வரிசை வரை பேட்டர்கள் கிடைத்தனர். 9-வது வரிசையில் ஸ்டார்க் வரை ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். ஹர்சித் ராணா, வருண் தவிர 9 பேருமே பேட்டிங் செய்யக்கூடியவர்கள்.

இந்த 9 வீரர்களில் எந்த வீரரும் எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடும் வகையில் நெகிழ்வுத்தன்மையான அணியை கம்பீர் உருவாக்கினார். வெங்கடேஷ் அய்யர் 4வது வீரராகவும் களமிறங்கத் தயாராக இருந்தார், சில நேரங்களில் கீழ் வரிசையிலும் களமிறங்கினார்.

அதேபோல ஹர்சித் ராணா பவர்ப்ளேயிலும் பந்துவீசுவார், டெத் ஓவர்களிலும், நடுப்பகுதியிலும் பந்துவீச கூடியவராக இருந்தார். வைபவ் அரோரா டெத் ஓவர்களிலும், நடுப்பகுதி ஓவர்களிலும் பந்துவீசும் திறமையானவராக மாற்றப்பட்டார். இவ்வாறு அணியை பார்த்துப் பார்த்து செதுக்கியதில் கம்பீர் ஒரு துரோணாச்சாரியாக விளங்கினார்.

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்செல் ஸ்டார்க்

'நாக்அவுட் நாயகன்' ஸ்டார்க்

கொல்கத்தா அணி இந்த முறை போனஸாக அமைந்தவர்கள் ஃபில் சால்ட், மிட்ஷெல் ஸ்டார்க் இருவரும்தான். ஜேஸன் ராய் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஃபில் சால்ட் சேர்க்கப்பட்டார். உண்மையில் ஃபில் சால்ட் இப்படி மிரட்டலான பேட்டிங்கை வழங்குவார் என கொல்கத்தா அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை.

அதேபோல் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும், ஐபிஎல் ரேஸில் கறுப்புக் குதிரை ஒன்று தேவை என்று ரூ.24 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் வாங்கப்பட்டார். உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருக்கும் போது, இயல்பாகவே எதிரணிக்கு ஒருவிதமான அச்சம், எச்சரிக்கை உணர்வு இருக்கும். அந்த மனோநிலையை கொல்கத்தா அணி நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இதுவரை ஸ்டார்க் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஸ்டாரக் கடைசியாக எடுத்த 5 விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தவை. தகுதிச்சுற்றில் ஸ்டார்க் எடுத்த 3 விக்கெட்டுகள், பைனலில் எடுத்த 2 விக்கெட்டுகள் கேம்சேஞ்சராக அமைந்தன.

ஆஸ்திரேலியாவில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் பலமுறை டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்த அனுபவம் ஸ்டார்க்கிற்கு இருந்தது. ஷெப்பீல்ட் ஷீல்ட், பிக்பாஷ் லீக், உள்நாட்டுப் போட்டி என 5-க்கும் மேற்பட்ட முறை ஹெட்டின் விக்கெட்டை ஸ்டார்க் காலி செய்துள்ளார். இதனால்தான் ஸ்டார்க் பந்துவீச்சில் ஹெட் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இயான் சேப்பல், டாம் மூடி போன்ற ஜாம்பவான்கள் எச்சரித்தனர். ஆனால், கொல்கத்தா அணி தனது பிரம்மாஸ்திரமான ஸ்டார்க்கை தொடக்கத்திலேயே ஏவி, சன்ரைசர்ஸ் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தது.

அதேபோல் இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட்டை ரூ.2 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் வாங்கியது. பில் சால்ட் இந்த சீசன் முழுவதும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார். இதுவரை 12 போட்டிகளில் ஆடிய சால்ட் 435 ரன்களுடன் அனைத்து அணிகளுக்கும் மிரட்டலாக இருந்தார்.

நம்பிக்கை நாயகன் வருண்

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா அணிக்கு நடுப்பகுதி ஓவர்களை வீசுவதற்கு சீசன் முழுவதும் தூண்களாக இருந்தவர்கள் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, மேற்கிந்திய தீவுகள் வீரர் சுனில் நரைன். இருவரின் பந்துவீச்சும் நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்ரேட்டை உயர்வுக்கு தடையாக இருக்கும். லீக் போட்டிகளில் இருவரின் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய திருப்புமுனையாக இருந்துள்ளது. சுனில் நரைன், வருண் இருவரும் கொல்கத்தா அணிக்கு சுழற்பந்து வீச்சின் துருப்புச்சீட்டு.

நரைனைப் பொறுத்தவரை இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விக்கெட் இல்லாமல் வந்தது இல்லை எனும் அளவுக்கு குறைந்தபட்சம் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 482 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் முன்னணி பேட்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணிக்காக ஆடிவரும் சுனில் நரைனை ஒருபோதும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் சர்வதேச கிரிக்கெட் ஏற்றுக்கொண்டதில்லை. பல சீசன்களில் சுனில் நரைனை தொடக்க வரிசை, ஒன் டவுன், நடுவரிசை, கீழ் வரிசை என களமிறக்கி அவருக்கான இடம் என்பதை கண்டறியாமல் கொல்கத்தா அணி இருந்தது.

2018 மற்றும் 2019-ஆம் ஆண்டு சீசன்களில் மட்டும்தான் நரைன் 357 மற்றும் 254 ரன்கள் குவித்தார். ஆனால், மற்ற எந்த சீசன்களிலும் நரைன் பேட்டிங் பங்களிப்பு பெரிதாக இருந்தது இல்லை.

ஆனால், இந்த சீசனில், நரைனுக்கான இடம் தொடக்க ஆட்டக்காரர் தான் என்பதை கம்பீர் கண்டறிந்து அதை கடைசிவரை அவரிடம் இருந்து பறிக்கவில்லை.

உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் நரைன் விளையாடினாலும் ஒரு போட்டியில் கூட சதம் அடித்தது இல்லை. ஆனால், முதல் முறையாக நரைன் ஐபிஎல் தொடரில் சதம் அடித்து அசத்தி தன்னை ஆல்ரவுண்டர் என நிரூபித்துள்ளார்.

பந்துவீச்சில் இந்த சீசனில் இதுவரை 51 ஓவர்களை வீசியுள்ள நரைன் 306 ரன்களை விட்டுக்கொடுத்து 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், அதாவது ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தின் ‘மிஸ்ட்ரி பந்துவீச்சாளர்’ என அழைக்கப்படுபவர் வருண் சக்ரவர்த்தி. 2020-ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வருண் ஒவ்வொரு சீசனிலும் பந்துவீச்சை மெருகேற்றி வருகிறார். 2023 ஆண்டு சீசனில் இருந்து 40 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மட்டும்தான்.

சுழற்பந்து வீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி பந்துவீசி, சர்வதேச பேட்டர்களுக்கே தண்ணி காட்டும் வித்தையை அறிந்தவராக வருண் இருந்தார்.

ரஸல் எனும் ‘கடோத்கஜன்’

கொல்கத்தா அணிக்கு கடோத்கஜனாக தேவைப்படும் நேரத்தில் எந்த உருவத்தையும் எடுத்து விளையாடக் கூடியவர் ஆந்த்ரே ரஸல். ரஸல் பந்துவீச வந்துவிட்டாலே 80 சதவீதம் விக்கெட் கிடைக்க வாய்ப்புண்டு என்பதால், அவரை இக்கட்டான நேரத்தில் தான் கேப்டன் ஸ்ரேயாஸ் பயன்படுத்தினார்.

பேட்டிங்கில் எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறும் அளவுக்கு ரஸல் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடியவர். ரஸில் பேட்டிங் திறமை 2015வது சீசனுக்குப்பின்புதான் வெளிப்படத் தொடங்கி ரஸல் களத்தில் இருந்தாலே ஆட்டம் எந்த நேரத்திலும் மாறலாம் என எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

இந்த சீசனில் ரஸல் 13 போட்டிகளில் 222 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணியிடம் திணறியபோது, ரஸலின் அதிரடி அரைசதம் தான் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது. தேவைப்படும் நேரத்தில் பேட்டர், பந்துவீச்சாளர் அவதாரம் எடுத்து ஆட்டத்தை திருப்புவதில் ரஸல் வல்லவர். கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்தே ரஸலை கொல்கத்தா அணி தக்க வைத்திருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறந்த கலவை, எதிரணியை குழப்பும் வரிசை

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா அணியில் லீக் ஆட்டங்கள், ப்ளே ஆஃப் ஆட்டங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் 7 பேட்டர்கள், 4 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும். அந்த 7 பேட்டர்களில் 3 பேர் ஆல்ரவுண்டர்களாக இருப்பர், இம்பாக்ட் ப்ளேயர் மூலம் சூழலுக்கு ஏற்றாற்போல் பந்துவீச்சாளர் அல்லது பேட்டர் தேர்வு செய்யப்படுவர். அதிலும் குறிப்பாக எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே வலது கை பேட்டர், இடதுகை பேட்டர்கள் வரிசையை கொல்கத்தா அணி நிர்வாகம் மாற்றி அமைத்தது.

ஸ்ட்ரைக்கில் இருந்த வலது கை பேட்டர் ஆட்டமிழந்தால் அதற்குப் பதிலாக அதே வலதுகை பேட்டர் களமிறங்குவார். இடது கை பேட்டர் ஆட்டமிழந்தாலும் அதே வரிசையில் பேட்டர்களை களமிறக்கி எதிரணிக்கு பெரிய பளுவை கொல்கத்தா அணி ஏற்படுத்தியது.

பேட்டர்களை எந்த வரிசையிலும் களமிறங்கும் வகையில் தயார் செய்திருந்தது. குறிப்பாக வெங்கடேஷ் அய்யர் 6 இன்னிங்ஸ்களில் 3வது வரிசையில் களமிறங்கினார், ரகுவன்ஷி 7முறை 3-வது வரிசையிலும், ஸ்ரேயாஸ் 14 இன்னிங்ஸ்களில் 10 முறை 4-வது வரிசையிலும் களமிறங்கினார். அதேசமயம், வெங்கடேஷ், ஸ்ரேயாஸ், ரிங்கு சிங் ஆகியோர் 3 முறை 5-வது வரிசையிலும் களமிறங்கி விளையாடியுள்ளனர். 6-வது வரிசையில் ரிங்கு அல்லது ரஸல், 7-வது வரிசையில் ராமன்தீப் 7 முறையும், ரிங்கு, வெங்கடேஷ் 5 முறையும் களமிறங்கியுள்ளனர். இதுபோன்ற எந்த நிலைக்கும் ஏற்றார்போல் பேட்டிங்கை மாற்றியமைக்கும் வகையில் வீரர்களை தயார் செய்திருந்தனர்.

பேட்டர்களில் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்குவோர், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு பேட் செய்யக்கூடிய பேட்டர்கள் என இரு பிரிவுகளை பிரித்து கொல்கத்தா களமிறக்கியது. ராமன்தீப், ரஸல், சால்ட், நரைன், வெங்கடேஷ் ,ரகுவன்ஷி, ரிங்கு ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர், நரைன், ஸ்ரேயாஸ் இருவரும் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்டும், ரஸல், ராமன்தீப் சிங் இரு பந்து வீச்சுக்கு எதிராக 140-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தனர். அணியின் சூழலைப் பார்த்தும், எதிரணியில் யார் பந்துவீச வருகிறார்கள் என்பதைக் கணித்தும் பேட்டர்களை தேர்வு செய்து கொல்கத்தா அணி களமிறக்கியது.

பந்துவீச்சில் நேர்த்தியான செயல்பாடு

பலம் வாய்ந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாகியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனில் நரைன்

கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சின் வீரர்கள் தேர்வில் பெரிதாக எந்த மாற்றத்தையும் இந்த சீசனில் செய்யவில்லை. இதனால்தான் கொல்கத்தா அணியில் 6 பந்துவீச்சாளர்கள் 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புதிய பந்தை நன்றாக ஸ்விங் செய்யவும், சீமிங்கில் வீசவும் ஸ்டார்க், வைபவ் அரோராவை தேர்ந்தெடுத்து வைத்திருந்தது கொல்கத்தா நிர்வாகம்.

நடுப்பகுதி ஓவர்களை வீச சுனில்நரைன், வருண் சக்ரவர்த்தியுடன், ஹர்சித் ராணா, ரஸலை பயன்படுத்தியது. இதில் நடுப்பகுதியில் முழுமையாக சுழற்பந்து வீச்சாளர்கள் நரைன், வருண் ஆதிக்கம் இருக்கும்.

டெத் ஓவர்களில் ரஸல், ராணா இருவரும் தங்களின் பந்துவீச்சு வேரியேஷனில் எதிரணியைக் கட்டுப்படுத்தினர். இந்த நிலையான கலவை இருந்ததால் அங்குல்ராய், சூயஷ் ஷர்மா போன்ற பந்துவீச்சாளர்களின் உதவி அதிகம் தேவைப்படாமலே இருந்துவிட்டது.

பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் கொல்கத்தா அணி சிறப்பான கலைவையை அமைத்தது. அனைத்து அணிகளின் பந்துவீச்சோடு ஒப்பிடுகையில் கொல்கத்தா அணியின் ஒட்டுமொத்த சராசரி 22.94 ஆகவும், 9.39 என 3வது சிறந்த எக்கானமி ரேட்டும் வைத்திருந்தது.

பலவீனத்தை சரி செய்த கொல்கத்தா

கொல்கத்தா அணி கடந்த 2022, 2023 சீசன்களில் பேட்டர்கள் ஆட்டமிழந்த விதத்தை ஆய்வு செய்தால், பெரும்பாலானோர் ஷார்ட் பந்துகளுக்கு விக்கெட்டை பறிகொடுத்தது தெரியவந்தது என 'கிரிக் இன்ஃபோ' ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த இரு சீசன்களிலும் கொல்கத்தா அணி பேட்டர்கள் ஷார்ட் பால்களுக்கு எதிராக 17.17சராசரியும், 7.67 ரன்கள் மட்டுமே ஓவருக்கு சேர்ந்திருந்தனர்.

ஆனால் இந்த சீசனில் ஷார்ட் பால்களுக்கு ஆட்டமிழப்பதைக் குறைத்து, ரன் சேர்ப்பதையும் அதிகப்படுத்தி கொல்கத்தா பேட்டர்கள் விளையாடினர். இதனால் எந்த அணிக்கும் எதிராக 9.76 ஸ்கோரிங் ரேட்டும், 29 சராசரியும் வைத்திருந்தனர். குறிப்பாக சுனில் நரைன் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட்டை 172 ஆக உயர்த்தினார், ஸ்ரேயாஸ் 133 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். வெங்கடேஷ் 163 என ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு சென்றார். அதிலும் ரஸல் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக 203 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஷார்ட் பந்துகளில் ஆட்டமிழப்பதைத் தவிர்க்கும் பொருட்டு செய்தபயிற்சிகள், மேம்பட்ட பேட்டிங் ஆகியவை கொல்கத்தாவை வலிமையாக்கியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)