வலுவான கொல்கத்தாவை சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் சாய்க்குமா? பிளேஆஃபில் இன்று மோதல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
ஐபிஎல் டி20 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.
எந்த ஆடுகளம்?

பட மூலாதாரம், Getty Images
இரு அணிகளிலும் பவர் ஹிட்டர் பேட்டர்கள் அதிகம் இருப்பதால், இன்று நடக்கும் ஆட்டத்தில் ரன் மழைக்கு எந்தக் குறையும் இருக்காது, வாண வேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் ஸ்வாரஸ்யம் இருக்கிறது.
ஏனென்றால் ஆமதாபாத்தில் உள்ள இரு பிட்ச்சுகளில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமானது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி, பேட்டர்களை நோக்கி நன்கு வரும். முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். சேஸிங்கும் சுவாரசியமாக இருக்கக் கூடிய பிட்ச் இது.
ஆனால், கறுப்பு மண் கொண்ட பிட்ச்சில் 165 ரன்களைக் கடப்பதே பெரும்பாடாக இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற மெதுவான பிட்ச்சாக இருக்கும்.
இதுவரை நேருக்கு நேர்

பட மூலாதாரம், sportzpics
இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 26 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, சன்ரைசர்ஸ் 9 முறை தான் வெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மோதிக்கொண்ட ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா அணி.
சம வலிமையில் அணிகள்

பட மூலாதாரம், sportzpics
பந்துவீச்சு, பேட்டிங்கில் இரு அணிகளும் சம வலிமை பெற்ற அணிகளாகத் திகழ்வதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கொல்கத்தா அணியில் பில் சால்ட் இங்கிலாந்து புறப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைனின் மிரட்டல் ஃபார்ம், ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது.
அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, கிளாசன், அப்துல் சமது என தரமான பவர் ஹிட்டர்கள் உள்ளனர்.
கொல்கத்தாவில் குர்பாஸ்

பட மூலாதாரம், Getty Images
இதில் கொல்கத்தா அணியில் முதல்முறையாக ரஹ்மனுல்லா குர்பாஸ் இன்று களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் இவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு 3வது இடத்தில் ராகுல் திரிபாதி ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு வலிமையாகும்.
இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடியபோது அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் ஹெட் களமிறங்கி நரைன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.
கம்மின்ஸ் - ஸ்டார்க்

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ் எனும் உலகத் தரமான பந்துவீச்சாளர் இருப்பதைப் போல், கொல்கத்தா அணியில் மிட்ஷெல் ஸ்டார்க் இருப்பது போட்டியின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தும்.
இது தவிர கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, ரஸல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், புவனேஷ்வர் குமார், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வேகப் பந்துவீச்சாளர்களும் இருப்பது போட்டியை சமநிலைப்படுத்தும்.
நரைன், வருண்- விஜயகாந்த்

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்துவீச்சிலும் இரு அணிகளும் சம வலிமையோடு களமிறங்குகின்றன. கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருப்பதைப் போல், சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த், ஷாபாஸ் அகமது இருவரும் இருக்கிறார்கள். இதில் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை விட கொல்கத்தாவின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டதாக இருக்கிறது.
இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய பங்கு

பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி இம்பாக்ட் ப்ளேயராக பேட்டிங்கை வலிமைப்படுத்த நிதிஷ் ராணாவையும், பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அங்குல் ராய் அல்லது வைபவ் அரோரா இருவரில் ஒருவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து பயன்படுத்தலாம்.
அதேபோல சன்ரைசர்ஸ் அணி இம்பாக்ட் ப்ளேயராக தமிழக வீரர் நடராஜன், அல்லது சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் இருவரில் ஒருவரை பயன்படுத்தக்கூடும். முக்கியத்துவமான ஆட்டம் என்பதால், எய்டன் மார்க்ரம் அணியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மார்க்ரம் அணிக்குள் வரும் பட்சத்தில் ஷாபாஸ் அகமது அல்லது விஜயகாந்த் அமரவைக்கப்படலாம்.
மார்க்ரம் வரும்போது பேட்டிங் வரிசை வலுப்படும், சுழற்பந்துவீச்சுக்கும் உதவுவார். குறிப்பாக கொல்கத்தாவின் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக மார்க்ரம் ஆஃப் ஸ்பின் நன்கு எடுபடும். இது தவிர பந்துவீச்சில் இடதுகை பந்துவச்சாளர் தேவை எனும் பட்சத்தில் ஜெயதேவ் உனத்கட் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
ரிங்கு சிங் மீது எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்கிற்கு 2023 சீசனைப் போல் இல்லாமல், இந்த சீசன் பெரிதான வாய்ப்புகளை வழங்கிய சீசனாக அமையவில்லை. அதனால் தான் அவரால் இந்திய அணியிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இடம் பெற முடியவில்லை.
இந்த சீசனில் ரிங்கு சிங் 11 இன்னிங்ஸ்களில் 113 பந்துகளை மட்டுமே சந்தித்து, 168 ரன் சேர்த்துள்ளார். ஃபினிஷர், பவர் ஹிட்டராகக் கருதப்படும் ரிங்கு சிங் ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நடராஜன் மிரட்டல் ஃபார்ம்

பட மூலாதாரம், Getty Images
அதேபோல, சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் பந்துவீச்சு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசிய நிலையில் நடராஜன் பந்துவீச்சு மட்டுமே சிறப்பாக இருந்தது.
நடராஜன் தற்போது யார்கர் மட்டும் வீசாமல், ஸ்லோ பவுன்ஸர், ஷார்ட் பால் போன்றவற்றை வீசும் வித்தைகளை கற்றுள்ளார். குறிப்பாக நடுப்பகுதி, டெத் ஓவர்களில் நடராஜன் பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆடுகளம் எப்படி?

பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத்தில் இரு விதமான ஆடுகளங்களில் எதை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆடுகளம் பயன்படுத்துவதைப் பொருத்துதான் இரு அணிகளிலும் வீரர்கள் தேர்வுகூட அமையலாம். சிவப்பு மண் கொண்ட தட்டையான ஆடுகளத்தை தேர்வு செய்தால், நிச்சயமாக ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும்.
இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் இருமுறை சேஸிங் செய்யப்பட்டு அதிகபட்சமாக 231 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்துக்கு சுவாரசியத்தைக் கூட்ட வேண்டுமென்றால் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தலாம்.
கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் மெதுவானது. பேட்டர்கள் பெரிதாக எந்த ஷாட்களையும் அடிக்க முடியாத கடுமையான ஆடுகளம். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் இந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடந்தால் 165 ரன்களைக் கடப்பதே சிரமம்.
டாஸ் முக்கியப் பங்கு

பட மூலாதாரம், sportzpics
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். சிவப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. பெரிய ஸ்கோரை அடித்தாலும் டிபெண்ட் செய்ய முடியும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் பெரிதாக இருக்காது.
சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை பெற்ற வெற்றிகளில் 2 மட்டுமே சேஸிங் மூலம் பெற்றுள்ளது. மற்ற 5 வெற்றிகளுமே முதலில் பேட் செய்து டிபெண்ட் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்வதைத்தான் சன்ரைசர்ஸ் விரும்புகிறது, அதுதான் அந்த அணிக்கு வசதியாக இருக்கிறது.
சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்த போது ரன்ரேட், சேஸிங் செய்தபோது இருந்ததைவிட 1.07 சதவீதம் அதிகமாக இருக்கிறது.
கொல்கத்தா அணி இந்த சீசனில் 3 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. 6 முறை ஸ்கோரை டிபெண்ட் செய்துள்ளது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா டாஸ் வென்றால், முதலில் பேட் செய்யும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் வழங்காது. ஆதலால் இன்று டாஸ் யார் வெல்லப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சுனில் நரைன்-புவனேஷ்வர்

பட மூலாதாரம், Getty Images
இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு யானை பலத்தை தரும் ஆல்ரவுண்டராக சுனில் நரைன் இருந்து வருகிறார். இந்த சீசனில் சதம் அடித்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். கொல்கத்தா அணி மாபெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி முக்கியக் காரணம். சுனில் நரைன் களத்தில் இருந்தாலே கொல்கத்தாவுக்கு பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறார். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைனை வீழ்த்த சன்ரைசர்ஸ் பெரிய திட்டத்தோடு வரும்.
குறிப்பாக, ஐபிஎல்லில் இதுவரை பவர்ப்ளேயில் புவனேஷ்வர் ஓவரில் 34 பந்துகளில் நரைன் 31 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒருமுறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால், இந்த முறை நரைனுக்கு எதிராக புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை ஆயுதமாக சன்ரைசர்ஸ் பயன்படுத்தும்.
அதேபோல ஸ்ரேயாஸ், வெங்கேடஷ் இருவருமே ஸ்விங் பந்துவீச்சை விளையாடக் கூடிய அளவுக்கு பெரிய பேட்டர்கள் இல்லை. ஆதலால் இருவருக்கு எதிராகவும் புவனேஷ்வர் பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். ஸ்ரேயாஸ் அய்யரை மட்டும் 3 முறை புவனேஷ்வர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேசமயம் குர்பாஸுக்கு எதிராக 4 பந்துகள் வீசிய புவனேஷ் 2 முறை விக்கெட் எடுத்துள்ளார், ஒரு ரன்கூட வழங்கவில்லை. இது சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் போனஸ்.
திட்டங்கள் தேவை

பட மூலாதாரம், sportzpics
சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசன் மூவரும் கொல்கத்தாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தலாம். பஞ்சாப் அணிக்கு எதிராக ஹெட் டக்அவுட் ஆன பின்பும், அபிஷேக் தனது அதிரடியை நிறுத்தாமல் வெளுத்து கட்டினார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஈவு இரக்கமின்றி அபிஷேக் விளையாடக் கூடியவர். ஆதலால், நரைன், வருணுக்கு எதிராக அபிஷேக்கின் பேட்டிங் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவீனமானவர். ஆனால் வேகப்பந்துவீச்சை வெளுத்துவிடுவார் என்பதால், இருவருக்கும் பல உத்திகளை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு நடுவரிசையில் தூணாக செயல்படுபவர் ஹென்ரிச் கிளாசன். கொல்கத்தா அணி கிளாசனுக்கு எதிராக யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு, இடதுகை வேகப்பந்துவீச்சை கிளாசன் புரட்டி எடுப்பார் என்பதால், ரஸல் பந்துவீச்சை தான் கொல்கத்தா கையில் எடுக்கக்கூடும். ஏனென்றால் பந்துவீச்சில் வேரியேஷன்களை வெளிப்படுத்தக் கூடியவராக ரஸல் இருக்கிறார்.
ரஸலை வீழ்த்தும் ஆயுதம்

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா அணிக்கு நடுவரிசையில் பலமாகவும், பந்துவீச்சில் ஆபத்பாந்தவனாகவும் இருப்பவர் ஆந்த்ரே ரஸல். தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் விஸ்வரூபமெடுத்து ரஸல் விளையாடக்கூடியவர். கொல்கத்தாவுக்கு ஃபினிஷ் செய்யும் நேரத்தில் ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருக்கிறது.
அனைத்து பந்துவீச்சுக்கு எதிராக துவம்சம் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஸல், லெக் ஸ்பின்னுக்கு எதிராக பெரிதாக இதுவரை ஸ்கோர் செய்யவில்லை. 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஒருமுறை லெக்ஸ்பின்னில் ரஸல் ஆட்டமிழந்துள்ளார். ரஸல் களத்துக்கு வருவதைப் பொருத்து சன்ரைசர்ஸ் அணி லெக் ஸ்பின்னர் விஜயகாந்தை கொண்டுவரும்.
இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும், யார் ஆதிக்கம் செய்வார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம வலிமை படைத்தவர்களாக இருப்பதுதான் போட்டியின் உச்சகட்ட சுவாரசியம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












