பாஜக பிரசார உத்தி: ஒரே செய்தி வாட்ஸ்அப் வழியே பல லட்சம் பேரை சென்றடைவது எப்படி?

- எழுதியவர், யோகிதா லிமாயே, ஷ்ருதி மேனன்&ஜேக் குட்மேன்
- பதவி, பிபிசி நியூஸ்
தான் நிர்வகிக்கும் நூற்றுக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்களில் மெசேஜ்களை அனுப்ப, ஆங்கூர் ரானா மிக வேகமாக தன் மொபைல்போனில் ‘டைப்’ செய்கிறார்.
“நான் 400-450 வாட்ஸ்அப் குழுக்களை வைத்துள்ளேன். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 200-300 பேர் உள்ளனர். இதுதவிர, என்னிடம் சுமார் 5,000 பேரின் தொடர்பு எண்கள் உள்ளன. இவற்றின் மூலம், நான் மட்டும் 10-15,000 பேரை தினமும் அடைய முடியும்,” என கடந்த மாதம் வாக்குப்பதிவு நடைபெற்ற உத்தர பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மீரட் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரான ஆங்கூர் ரானா விளக்குகிறார்.
உத்தர பிரதேசத்தில் தங்களுடைய செய்திகள் லட்சக்கணக்கான வாக்காளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் குழுவில் அவரும் இருந்தார். இச்செய்திகள் உத்தர பிரதேசத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் பிரதிபலிக்கும்.
இந்தப் பணிகள் மிகக் கடினமானவை. ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் 370 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க வாட்ஸ்அப் உட்பட மற்ற மெசேஜ் மற்றும் சமூக ஊடக செயலிகளை முக்கிய வழியாக அடையாளம் கண்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியைத் தேர்ந்தெடுக்கச் சிறப்பான காரணமும் இருக்கிறது. உலகளவில் இந்தியா வாட்ஸ்அப்-க்கான முக்கிய சந்தையாகத் திகழ்கிறது. இங்கு சுமார் 50 கோடி பயனர்கள், வாட்ஸ்அப்பில் பல மணிநேரங்களைச் செலவிடுகின்றனர்.
வாட்ஸ்அப்பில் அவர்கள் 'குட் மார்னிங்' முதல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அனுப்புகின்றனர். குறிப்பாக, அரசியல் கருத்துகளைப் பல்வேறு மொழிகளில் அனுப்புகின்றனர்.
ஆங்கூர் போன்ற தொண்டர்கள் இந்தத் தேர்தல் எந்திரத்தில், பா.ஜ.க குறித்த செய்திகள் அனைத்து தளத்திலும் பங்கு வகிப்பதை உறுதிப்படுத்தும் பெரும் பணியில் சிறிய பங்கு வகிக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள மேலும் 10 பேரிடம் பிபிசி பேசியது. அவர்கள் அனைவரும் தாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிப்பதாகவும் ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 2,000 வரை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

செய்திகள் எங்கிருந்து வருகின்றன?
இந்த நடைமுறை உன்னிப்பாக கண்காணிக்கப்படும் ஒன்றாகும். மீரட்டில் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் கூறுகையில், "தினமும் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்திலிருந்து, பிரதமர் நரேந்திர மோதியைப் புகழ்வது முதல் எதிர்க்கட்சியினரை பா.ஜ.க விமர்சிப்பது வரையிலான டிரெண்ட் செய்யப்பட வேண்டிய அரசியல் செய்திகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை மாநில கட்சி தலைமையகத்திற்கு அனுப்பும்" என்று தெரிவித்தனர்.
அங்கிருந்து அச்செய்திகள் ஆங்கூர் உள்ளிட்ட மீரட் தொகுதி தொண்டர்கள் 180 பேரை வந்தடையும். இவர்கள் அச்செய்திகளை இன்னும் உள்மட்ட அளவில் பரப்புவர். பின், அச்செய்திகள் வாக்குச்சாவடி மட்டத்தில் இந்தப் பிரசாரத்தை நிர்வகிப்பவர்களைச் சென்றடையும்.
குறிப்பாக, இளைஞர்களைச் சென்றடைவதற்கு வாட்ஸ்அப் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறுகிறார் ஆங்கூர். ஊதியம் இல்லாமல் பா.ஜ.க-வுக்கு இப்பணியைச் செய்யும் ஆங்கூர், மும்பையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திவருகிறார். 40 வயதைக் கடந்தவர்கள் ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவதாக அவர் தெரிவிக்கிறார்.
“சராசரியாக, ஒரு நாளுக்கு 1,00,000-1,50,000 புதிய நபர்களை அடைவதுதான் எங்கள் இலக்கு,” என்கிறார் அவர்.
வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பு

சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரசாரம் அதன் போட்டியாளர்களிடம் இருந்து விலகிச் செல்வதாகத் தோன்றுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், தனிப்பட்ட தொடர்புகள் இல்லாமல் இது செயல்படாது என ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அவர்களுக்கு முதலில் மக்களின் தொடர்பு எண்கள் வேண்டும்.
“கட்சியின் உயர்மட்ட தொண்டர் முதல் அடிமட்ட தொண்டர் வரை, தலைவர் உட்பட அனைவரும் 60 வாக்காளர்களுக்கு பொறுப்பானவர்கள்,” என மீரட்டுக்கு அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு பிரசார பொறுப்பாளரான விபின் விபாலா தெரிவிக்கிறார்.
“எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட 60 பேரிடம் நாங்கள் தொடர்ச்சியாக நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் மொபைல் எண்களைப் பெற்று, அவற்றை மெசேஜ் குழுக்களில் இணைப்பதும் எங்களின் பொறுப்புதான்,” என்கிறார்.
தன்னுடைய பொறுப்பில் உள்ள வாக்காளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவுக்கு, ‘ஹியூமானிட்டி இஸ் லைஃப்’ எனப் பெயரிட்டுள்ளார் விபின். அதன்படி, குழுவை வெளிப்படையாக அரசியல் ரீதியாக வைத்திருக்காதது இப்பணியின் ஓர் அங்கம். இணையத்தைப் பொறுத்தவரை எந்த வகையான உரையாடலின் முழு கட்டுப்பாட்டையும் ஒருவர் வைத்திருப்பது சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது குழுக்களிலோ செய்திகள் அனுப்பப்படும்போது, என்ன பகிரப்படுகிறது, முதலில் அச்செய்தி எங்கிருந்து வந்தது என்பதைத் தெளிவாக அறிவது மிகவும் கடினம்.
பகிரப்படும் பொய்யான செய்திகள்
சில குழுக்களில் பிபிசியால் பார்க்கப்பட்ட, பலமுறை பகிரப்பட்ட, வைரல் செய்திகளில், காங்கிரஸ் கட்சி முஸ்லிம் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதாகக் கூறப்பட்ட செய்தியும் ஒன்று.
இந்தியில் உள்ள அச்செய்தியில், “காங்கிரஸ் ஏற்கெனவே இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டது. அதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகக் கூறப்படும் 18 வழிகளும் அச்செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அச்செய்தி எங்கிருந்து வந்தது என்பதை நிறுவுவது கடினம். ஆனால், உண்மை என்னவென்றால், சமீப வாரங்களாக பா.ஜ.க தலைமை, தேர்தல் பிரசாரங்களில் கூறிய கருத்துகளை இது பிரதிபலிக்கிறது.
எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துகள் “இந்நாட்டில் ஊடுருவியவர்களுக்கு” வழங்கப்படும் என முஸ்லிம்களை உணர்த்தும் வகையில் பிரதமர் மோதி இஸ்லாமிய வெறுப்புக் கருத்துகளைத் தெரிவிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் வெளியான காணொளிகள், இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் கூறின. இந்தக் கருத்து, காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பா.ஜ.க-வின் தலைவர்கள் தவறாகத் தெரிவித்தனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொத்துகளைப் பகிர்ந்தளிப்பது குறித்தோ அல்லது முஸ்லிம்கள் என்ற வார்த்தையோ குறிப்பிடப்படவில்லை.
அரசியல் கட்சிகள் அதிகாரப்பூர்வமாகக் கூறுவது பெரும்பாலும் வாட்ஸ்அப் குழுக்களில் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார் ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் கிரண் கரிமெல்லா. ஆனால் பின்னர் அதிகாரபூர்வமானது எது, அதிகாரபூர்வமற்றது எது என்பதைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்று தெரிவித்தார்.
“இது உயர்மட்டத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. முதலில் தொழில்நுட்ப அணியின் (பா.ஜ.க-வின் சமூக ஊடகக்குழு) நடவடிக்கைகள். இதையடுத்து, நீடித்த மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளடக்கங்கள். ஆனால், இதில் புதுமை என்னவென்றால், இந்தச் செய்திகளைப் பரப்புவதில் சாதாரணமான நபர்கள் ஈடுபடுவதுதான்,” என்கிறார் அவர். மேலும், வாட்ஸ்அப் தன்மையைப் பொறுத்து, “எது ஐடி அணியால் உருவாக்கப்பட்டது, எது சாதாரண தொண்டர்களிடம் இருந்து பரப்பப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்” என்றும் கூறுகிறார்.
மேலும், இத்தகைய செய்திகள் ஒரு குறிப்பிட்ட (சமூக) ஊடகத்தில் உருவாகி, பின்னர் அவை எல்லா சமூக ஊடகங்களுக்கும் பரவுவதால், தாங்கள் பார்ப்பது உண்மைதான் என மக்கள் நம்பிவிடுகின்றனர், என்கிறார்.
யுக்ரேனில் போரை நிறுத்தினாரா மோதி?

பட மூலாதாரம், Bharatiya Janata Party
இத்தகைய பிரசார விளம்பரம் ஒன்றில், யுக்ரேனில் ரஷ்யா போர் காரணமாக சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக அப்போரை மோதி நிறுத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூற்று, முதலில் போர் தொடங்கியவுடன் மார்ச் 2022இல் சில எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்குகளில் பகிரப்பட்டிருந்தது, அதைச் சில செய்தி ஊடகங்கள் பெரிதாக்கின.
அந்த நேரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இக்கூற்றை நிராகரித்தது. “யாரோ வெடிகுண்டு வீசுவதை நிறுத்துகின்றனர். இதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம் என்பது முற்றிலும் தவறானது என நான் நினைக்கிறேன்,” என செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களே இதைத் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டனர். மேலும், இந்த விளம்பரமும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டது. இந்தக் கூற்றை ஏன் மீண்டும் சொல்கின்றனர் என்ற கேள்விக்கு பா.ஜ.க பதிலளிக்கவில்லை.
மீரட் பல்கலைக்கழகத்திற்கு வெளியே 20 வயதுகளின் தொடக்கத்தில் உள்ள முதன்முறை வாக்காளர்களைச் சந்தித்தோம். இந்தக் கூற்று குறித்து அவர்களுக்குத் தெரியுமா என்றும் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்றும் கேட்டோம்.

எக்ஸ் தளத்தில் இத்தகைய செய்தியைக் கண்டதாகப் பலரும் கூறினர்.
“இந்தியாவின் வேண்டுகோளால்தான் போர் நிறுத்தப்பட்டதாக நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் விஷால் வர்மா என்ற மாணவர். அவரது நண்பர்கள் இதை ஆதரிக்கின்றனர், எங்களைச் சுற்றியிருந்த மற்றவர்களும் அதை ஒப்புக்கொள்வதைப் போன்றே தலையசைத்தனர். சில மாணவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை.
“இது உண்மையல்ல. அரசாங்கம் தங்களுக்கு உதவவில்லை என மாணவர்களே கூறும் காணொளிகளை நான் பார்த்தேன்,” என்கிறார் கபீர் என்ற மாணவர்.
அருகிலுள்ள கிராமத்தில் உள்ளவர்களிடமும் இதே கேள்வியை எழுப்பினோம். இச்செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து இதுகுறித்து தாங்கள் அதைக் கண்டதாக அவர்கள் கூறினர்.
“ஆமாம், மோதியை உலகளவில் மதிப்பதால்தான் போர் நிறுத்தப்பட்டது,” என்கிறார், 41 வயதான விவசாயி சஞ்சீவ் கஷ்யப்.
“போர் நிறுத்தப்பட்டது குறித்து நாங்கள் அறிந்தோம். நாங்களே அங்கு சென்று இதைப் பார்க்கவில்லை. ஆனால், இதில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்க வேண்டும்,” என்கிறார் 75 வயதான ஜக்தீஷ் சௌத்ரி. அக்கிராமத்தைச் சேர்ந்த மற்ற 4 பேரும் இதை ஒப்புக்கொண்டனர்.
மக்கள் எதை நம்புகிறார்களோ அதில் தாக்கம் செலுத்துவது மிக முக்கியமான சக்தி. இறுதியில் அவை அவர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதைப் பாதிக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












