ராஜஸ்தான்: தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
- எழுதியவர், மோஹர் சிங் மீணா
- பதவி, பிபிசி இந்திக்காக, ஜுன்ஜுனுவின் பலெளதா கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு கிராமத்தில் தங்கள் கடையிலிருந்து மதுபானம் வாங்காததால் ஒரு இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்? அக்கிராமத்தின் மக்கள் என்ன சொல்கின்றனர்?
"நான் தனியாக ஆகிவிட்டேன். எனக்கிருந்த துணை போய்விட்டது. என் செல்லம், என் தங்கம். நான் அவனை சிறு வயதில் இருந்து தனியாக வளர்த்தேன். என்னை தூக்கில் போடட்டும் அல்லது அவர்களை தூக்கில் போடட்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன்."
இவ்வாறு புலம்பியபடி, மரத்தடியில் கட்டிலுக்குப் பக்கத்தில் கைகளை கட்டிக்கொண்டு, அழுதுகொண்டே தரையில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்மணி அறுபத்தைந்து வயதான ராதாதேவி.
26 ஆண்டுகளுக்கு முன்பு ராதா தேவியின் கணவர் ஹட்மான் வால்மீகி இறந்தபோது அவரது இளைய மகன் ராமேஷ்வர் பிறந்து ஆறு நாட்களே ஆகியிருந்தன. ராதா தேவி தனித்துப் போராடி ராமேஷ்வரை வளர்த்தார். முதுமையில் அவருக்கு ஆதரவாகவும் துணையாகவும் ராமேஷ்வர் இருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி ராமேஷ்வர் அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில், சுமார் 6 மணி நேரம் தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வயதாகி, உடல் நலிவுற்ற நிலையில் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட ராதாதேவி, தன் மகனைக் கொன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்.
பலெளதா கிராமத்தில் நடந்த சம்பவம்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து சுமார் 250கி.மீ. தொலைவில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஹரியாணா எல்லைக்கு மிக அருகில் பலெளதா கிராமம் அமைந்துள்ளது.
கிராமத்தின் கான்கிரீட் சாலைகள் வழியாக, அரசுப் பள்ளியை ஒட்டிச்செல்லும் மணல் நிறைந்த சாலையில், ஒரு கி.மீ. துாரத்தில் சாலையோரம் கட்டப்பட்ட ஒரு வீடு உள்ளது.
இந்த வீட்டிற்கு உள்ளே ஒரு மரத்தடியில் ராதாதேவி அமர்ந்திருக்கிறார்.
வீட்டின் பின்புறம் சற்று தூரத்தில் கோஷாலா (மாடுகள் பராமரிக்கப்படும் இடம்) உள்ளது. 26 வயதான ராமேஷ்வர் ரூ.9,500 சம்பளத்தில் இங்கு வேலை செய்து வந்தார். வீட்டின் மறுபுறம் சிறிது தூரத்தில் சூரஜ்மல்ஜியின் பெரிய வெறிச்சோடிய மாளிகை உள்ளது.
இந்த மாளிகையில்தான் ராமேஷ்வர் சுமார் 6 மணி நேரம் தடிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
கிராமத்தின் பல இளைஞர்கள் இவ்வாறு தொடர்ந்து அடிக்கப்பட்டாலும் புகார் செய்யாத அளவிற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பயம் காணப்படுகிறது.
"இந்தக் குற்றவாளிகள் RBM என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதில் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எல்லாவித சட்டவிரோத வேலைகளையும் செய்கிறார்கள்," என்று அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான மனீஷ் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிராமத்தில் யாரைவேண்டுமானாலும் அடிப்பார்கள். அவர்கள் கிராமத்திற்குள் பெரும் அச்சத்தை பரப்பியுள்ளனர்,” என்றார் மனீஷ்.
உணவு கூட சாப்பிடவில்லை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ராதாதேவியின் வீட்டின் சூழல் இந்தக் குடும்பத்தின் நிதி நிலையை வெளிப்படுத்துகிறது. அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் கூட வீட்டில் இல்லை. ஒரு கட்டிலில் சில பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சில துணிகள் மற்றும் அணைக்கப்பட்ட அடுப்பும் காணப்படுகிறது.
"கோஷாலாவில் இருந்து வீட்டிற்கு வந்தான். நான் அவனை சாப்பிடச் சொன்னபோது, இப்போழுதுதானே வந்தேன், சிறிது நேரத்தில் சாப்பிடுகிறேன் என்று சொன்னான். பிறகு குளிர்ந்த தண்ணீர் எடுக்க தொட்டிக்கு அருகில் சென்றான்,” என்று ராதாதேவி கண்களில் கண்ணீருடன் கூறுகிறார்.
"பத்து நாட்களாக நான் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தேன். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக நான் படுத்தேன். நீண்ட நேரமாகியும் ராமேஷ்வர் வரவில்லை. அவனை தேடிச்சென்றபோது, ராமேஷ்வரை மது விற்பனை செய்யும் ஆட்கள் அழைத்துச் சென்றதாக கிராமத்தைச்சேர்ந்த சுபாஷ் என்னிடம் சொன்னான்,” என்று அவர் குறிப்பிட்டார்.
"என்னையும் அங்கே அழைத்துச்செல் என்று நான் கைகூப்பிக் கேட்டேன். நானே தேடிப் போனேன் ஆனால் என் ராமேஷ்வரை எங்கே கொண்டு சென்றார்கள் என்று யாரும் சொல்லவில்லை. நான் சோர்ந்துபோய் வீடு திரும்பி, மூன்று மணிக்கு கட்டிலில் படுத்துவிட்டேன்,” என்றார்.
கையால் வீட்டு வாசலை சுட்டிக் காட்டிய அவர், "மாலை நேரம் கண்விழித்து பார்த்தபோது, ராமேஷ்வர் தரையில் கிடப்பதை கண்டேன். நான் அழத் தொடங்கியதும், அனைவரும் ஒன்று கூடினர். எல்லோரும் என்னை பிடித்துக் கொண்டு கேட்டை அடைத்தனர்,” என்றார் ராதாதேவி.
"என் மகன் யாருடனும் சண்டை போடமாட்டான். என்னுடைய வேறு இரண்டு மகன்களும் கோட்புத்லி மற்றும் சிகர் ஆகிய இடங்களில் தலா 5,000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார்கள். என் ராமேஷ்வர்தான் என்னுடன் இருந்தான். ஏன் என் செல்லத்தை கொன்றார்கள் என்று தெரியவில்லை," என்று ராதாதேவி அழுதபடி கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ராமேஷ்வருக்கு நீதி கிடைக்க, ஜுன்ஜுனு மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டுத் திரும்பிய கிராம மக்கள் மத்தியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜேடுராமும் இருந்தார். ராமேஷ்வருடன் தானும் கடத்தப்பட்டு, வெறிச்சோடிய ஒரு மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
"மே 14-ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு அரசு மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கிக்கொண்டு நான் வந்துகொண்டிருந்தேன். ராமேஷ்வர் கிராமத்தில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தான். நாங்கள் ஒன்றாகவே நடந்து வந்தோம்," என்று ஜேடுராம் பிபிசியிடம் தெரிவித்தார்.
"மதுக்கடைக்காரர்கள் வந்து எங்களை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் சூரஜ்மல்ஜியின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு போனவுடன் மாளிகையின் கதவை மூடிவிட்டு என்னை காதை பிடித்தபடி மண்டியிட்டு அமர வைத்தனர்,” என்று அவர் கூறினார்.
"அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். ஒவ்வொருவரும் அவரை நூறு முறை தடியால் அடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டனர். ராமேஷ்வரின் கைகளைக் கட்டி மேலே தொங்கவிட்டனர். அவர்கள் ராமேஷ்வரை சில சமயங்களில் காலில், சில சமயங்களில் படுக்க வைத்து கம்புகளால் கொடூரமாக தாக்கினர்,” என்று ஜேடுராம் கூறினார்.
"அவர்களில் ஒருவர் அதை வீடியோ எடுத்தார். அவர் முற்றிலும் பயமின்றி இருந்தார். மாலை சுமார் 6 மணி வரை அவரை அடித்துக் கொண்டே இருந்தார்கள். ராமேஷ்வர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார்,” என்றார்.
"ராமேஷ்வர் அங்கேயே மயக்கமாகிவிட்டார். பின்னர் ராமேஷ்வரை அவர்கள் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். எனக்கு வாய்ப்பு கிடைத்ததும் நான் மாளிகையை விட்டு ஓடிவிட்டேன்," என்றார் அவர்.
"அடிக்கும் போது அவர்கள் ‘இருபது லட்சம் ரூபாய் கொடுத்து மதுபான ஒப்பந்தம் எடுத்துள்ளோம். நீ எங்களிடமிருந்துதான் மது வாங்கவேண்டும்’ என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும்," என்கிறார் ஜேடுராம்.
ஹரியாணாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராமேஷ்வர்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
"அடித்ததால் ராமேஷ்வர் சுயநினைவை இழந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை ஹரியாணாவில் சத்னாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது உடலை பலெளதா கிராமத்திற்குக் கொண்டுசென்று அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்," என்று ஜுன்ஜுனு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜர்ஷி ராஜ் வர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
"மாலை 6.30 மணியளவில் கடையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். ராமேஷ்வர் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இதே ஊரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அதில் இருந்தனர். அருகில் வருமாறு என்னை அழைத்தனர். நான் பயந்துவிட்டேன்,” என்று கிராமத்தை சேர்ந்த முகேஷ் கூறினார்.
"காரில் இருந்து இவரை கீழே இறக்கு. அவர் மயக்கம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தாரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். பயத்தில் அவரை கீழே இறக்கியபிறகு நான் இங்கு வந்துவிட்டேன். ராமேஷ்வரின் உடலில் உடைகள் இருக்கவில்லை,” என்றார் அவர்.
ராமேஷ்வரின் அண்ணன் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ராமேஷ்வரின் மூத்த சகோதரர் காலுராம், கோட்புத்லியில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.
"கோஷாலாவில் வேலை செய்வதோடு கூடவே, ராமேஷ்வர் மேளமும் வாசிப்பார். கிராமத்தில் யாராவது வயதானவர்கள் இறந்தால் ராமேஷ்வர் மேளம் வாசிக்க அழைக்கப்படுவார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். ஆடுவதும், பாடுவதும் ராமேஷ்வருக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“கோட்புத்லியில் ராமேஷ்வரின் திருமணத்திற்காகப் பெண் தேடிக்கொண்டிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் இங்கு நடந்துள்ளது,” என்று காலுராம் கனத்த குரலுடன் கூறுகிறார்.
ராமேஷ்வர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கோஷாலாவில் சுமார் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
"அவர் மிகவும் நல்லவர். நிறைய பாடுவார். சிரித்து, நகைச்சுவையாக பேசுவார். காலை ஐந்து மணிக்கே இங்கு வந்துவிடுவோம். மாட்டுக்கு தீவனம் கொடுப்பது மற்றும் சுத்தம் செய்யும் பணியை இங்கு நாங்கள் செய்கிறோம்," என்று இங்கு பணிபுரியும் சந்தோஷ் கூறினார். பிறகு ராமேஷ்வரை நினைத்து அழ ஆரம்பித்துவிட்டார்.
கடையில் இருந்து மதுபானம் வாங்க அழுத்தம்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
சூரஜ்கரில் இருந்து பலெளதா கிராமத்திற்கு வரும் போது பிரதான சாலையிலேயே ஒரு மதுபானக் கடை இருக்கிறது. ராஜஸ்தான் கலால் துறையின் இந்த மதுபானக் கடையின் உரிமம் பலெளதா கிராமத்தைச் சேர்ந்த சுஷீல் குமாரின் பெயரில் உள்ளது.
ஆனால் சுஷீல் குமார், கடையை இயக்கும் ஒப்பந்தத்தை குற்றம் சாட்டப்பட்ட சிண்டுவுக்கு சட்டவிரோதமாக கொடுத்துள்ளார். சிண்டு குற்ற நடத்தை உள்ளவர். அவர் மீது சூரஜ்கர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனது கடையில் இருந்து மது வாங்கும்படி கூறி, சிண்டு கிராம மக்களை மிரட்டுவார், அடிப்பார், என்கின்றனர் அக்கிராமத்து மக்கள்.
“இருபது நாட்களுக்கு முன்பு இதே ஆட்கள் ஜீத்துவையும், பவனையும் அடித்தனர். என்னை மண்டியிட வைத்தனர். எங்கள் கடையில் இருந்து மது வாங்குங்கள் என்று இவர்கள் சொல்வார்கள்,” என்று பலெளதா கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நிற்கும் காலு ஷர்மா கூறினார்.
"இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் இப்போது அந்த இளைஞரை கொன்றுவிட்டார்கள். பிறகு அவர்கள் வேறு யாரையாவது கொல்வார்கள்," என்று காலு ஷர்மா குறிப்பிட்டார்.
“இறந்தவர் தங்கள் கடையில் இருந்து மது வாங்கிக் குடிக்கவில்லை என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவரை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார்," என்று எஸ்.பி ராஜர்ஷி ராஜ் வர்மா கூறினார்.
‘கால்களில் விழுந்தும் விடவில்லை’

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
"நான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். என் அப்பாவையும் ராமேஷ்வரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். அதனால் நான் உணவைக்கூட சாப்பிடாமல் அங்கிருந்து ஓடினேன்,” என்று இதுகுறித்து ஜேடுவின் மகன் மனீஷ் கூறினார்.
"நானும் என் மனைவியும் மாளிகைக்குச் சென்றபோது அங்கு என் தந்தையை மண்டியிட்டு அமர வைத்திருந்தனர். ராமேஷ்வரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அவரை தடி மற்றும் பெல்ட்டால் அடித்தார்கள். நானும் என் மனைவியும் கைகூப்பிக் கெஞ்சினோம். அவர்களது கால்களில் விழுந்தோம். ஆனால் 'நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். சிறிது நேரத்தில் அவரை விட்டுவிடுவோம்' என்று அவர்கள் சொன்னார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"நான் கிராம மக்களிடம் உதவி கேட்கச் சென்றேன். ஆனால் எல்லோரும் என்னை சூரஜ்கர் சென்று காவல்துறையில் புகார் கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் காவல்நிலையத்துக்கு செல்ல எனக்கு தைரியம் இருக்கவில்லை. காவல் நிலையத்திற்குச் சென்றால் எனக்கு என்ன ஆகுமோ என்று பயந்தேன்,” என்றார் அவர்.
"அவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று என் தந்தையும் மிரட்டப்பட்டார். பிறகு என் தந்தையை மாளிகையில் இருந்து விட்டுவிட்டார்கள்," என்று மனீஷ் குறிப்பிட்டார்.
"11 மணிக்கு ராமேஷ்வர் வீடு திரும்பினார். மதியம் 3 மணியளவில் மதுகடைக்கார்கள் ராமேஷ்வரை அழைத்து சென்றது தெரிய வந்தது. நான் பலரையும் தொலைபேசியில் அழைத்தேன். 'வாருங்கள் நாம் சென்று அவரை விடுவிப்போம்' என்று சொன்னேன். ஆனால் யாரும் என்னுடன் வரத்தயாராக இருக்கவில்லை," என்று கோஷாலாவில் வேலை பார்க்கும் சந்தோஷ் கூறினார்.
இலக்கை எட்டாவிட்டால் கலால் துறை அபராதம் விதிக்கிறது

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
ராஜஸ்தான் கலால் துறை வெவ்வேறு மதுபான விற்பனையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு (உத்தரவாதம்) மதுபானத்தை விற்பனை செய்ய இலக்கை வழங்குகிறது. அந்தத் தொகையை விடக் குறைவாக விற்பனை நடந்தால், ஒப்பந்த ஆபரேட்டருக்கு கலால் துறை அபராதம் விதிக்கிறது.
"பலெளதா கிராமத்தின் மதுபான ஒப்பந்தத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு) உத்தரவாதம் உள்ளது. அதாவது துறையின் விதிகளின்படி மதுபான ஒப்பந்ததாரர் ஒரு வருடத்தில் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை விற்கவில்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்," என்று ஜுன்ஜுனு மாவட்ட கலால் அதிகாரி அமர்ஜீத் சிங் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சிண்டு பலெளதா கிராமத்தில் உரிமம் பெறாமலேயே சட்டவிரோதமாக மதுபானக் கடையை நடத்தி வருகிறார். இது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமர்ஜீத் சிங்கிடம் கேட்டபோது, "இது பற்றி எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
”இது குறித்து உரிமம் பெற்றவர் கூட துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் மூன்று நாட்களாக கடை மூடப்பட்டுள்ளது. உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்கிறார் அவர்.
காவல்துறை சொல்வது என்ன?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
பலெளதா கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி நிர்வாகம் மே 23-ஆம் தேதி மாலை புல்டோசர்களால் வீடுகளை தகர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
"சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுவதும் உடனடியாக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளிகள் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்," என்று ஜுன்ஜுனு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜர்ஷி ராஜ் வர்மா பிபிசியிடம் கூறினார்.
"இந்த வழக்கில் முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் உள்ளனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மைனர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேறு ஒருவரையும் இதில் நாங்கள் குற்றவாளியாகச் சேர்த்துள்ளோம். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார். அவர் சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் எஸ்.பி. வர்மா தெரிவித்தார்.
இறந்த ராமேஷ்வரின் 38 வயதான மூத்த சகோதரர் காலு ராம், சம்பவம் நடந்த மறுநாள், அதாவது மே 15-ஆம் தேதி சூரஜ்கர் காவல் நிலையத்தில் சிண்டு, பிரவீன் குமார், சுபாஷ், சுகோ, பிரவீண், திபேந்திரா உட்பட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்தார்.
போலீசார் ஐபிசி பிரிவுகள் 143, 341, 323, 362, 342, 302, 201 மற்றும் எஸ்.சி எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தார். அது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கத் தாமதமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி. வர்மா,"சம்பவம் நடந்தபிறகு 16-ஆம் தேதியே நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டோம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சமூக வலைதளங்களில் வீடியோ வந்தது,” என்று பதில் அளித்தார்.
சம்பவம் குறித்த அரசியல் எதிர்வினை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கேலாட் சமூக வலைதளமான X-இல் ட்வீட் செய்துள்ளார். “ஜுன்ஜுனுவில் மதுபான மாஃபியா தலித் இளைஞரை அடித்துக் கொன்று, அதன் வீடியோவை வைரலாக்கியிருப்பது, ராஜஸ்தானில் அரசு மற்றும் காவல்துறையின் பலவீனத்தின் அடையாளமாகும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
”மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஊடகங்களில் தனது பிம்பத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கும் ராஜஸ்தான் அரசு, இந்தச் சம்பவங்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இவை மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோதி ஆட்சியில் தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்கள்,” என்று பதிவிட்டுள்ளது.
பீம் ஆர்மியின் ராஜஸ்தான் பிரிவின் முன்னாள் தலைவர் ஜிதேந்திர ஹட்வால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க வந்தார். “இந்தச் சம்பவத்தால் தலித் சமூகத்தில் கோபம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும், எனவே கடுமையான சட்டத்தை நாங்கள் கோருகிறோம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“மாநில பா.ஜ.க அரசு குற்றவாளிகளைப் பிடித்துள்ளது. அவர்களின் வீடுகளின் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் என்று சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால், இந்த இளைஞர்கள் ஏன் குற்றங்களைச் செய்கிறார்கள்? வேலையில்லாத இளைஞர்கள் மது அருந்தும் அல்லது வியாபாரம் செய்யும் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தாததால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று காங்கிரஸின் ஜுன்ஜுனு மாவட்டத் தலைவர் தினேஷ் சுண்டா பிபிசியிடம் தெரிவித்தார்.
“அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது பயம் இருக்க வேண்டும். எனவே, எந்த ஒரு நடவடிக்கையும் சாத்தியம் என்பதை குற்றவாளிகளுக்குத் தெரிவிக்கும் சிமிஞ்சை இது,” என்று பா.ஜ.க-வின் ஜுன்ஜுனு மாவட்டத் தலைவர் பன்வாரி லால் சைனி குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












