குஜராத் தீ விபத்தில் 27 பேர் பலி, விதிகளை மீறிய வணிக வளாகம் - உயிர் தப்பியவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வணிக வளாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவெனப் பரவியதால், சில நிமிடங்களில் விளையாட்டு மையம் மொத்தமும் எரிந்தது. தீ விபத்தில் உடல்கள் மோசமாகக் கருகியதால், இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் காரணமாக, ராஜ்கோட்டின் உள்ளூர் அரசு அதிகாரிகள், விளையாட்டு மையத்தின் உரிமையாளர்கள், மற்றும் குஜராத் அரசு மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பயங்கரமான தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
தீ விபத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை குஜராத் அரசு அமைத்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட டிஆர்பி வணிக வளாகத்தின் விளையாட்டு மையம், சிமென்ட் கொண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு அல்ல என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் டிஆர்பி விளையாட்டு மையத்தின் நிர்வாகம் தீக்காப்பு விதித்தொகுப்பு (Fire safety) தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் தீயணைப்புப் படை கூறுகிறது.
'தீக்காப்பு விதித்தொகுப்பு' அனுமதி பெறவில்லையென்றால், இந்த விளையாட்டு மையம் தொடர்ந்து இயங்கியது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. சம்பவம் குறித்து காவல்துறை, தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
காவல்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தவால் கார்ப்பரேஷனின் உரிமையாளர் தவால் தக்கர் மற்றும் டிஆர்பி விளையாட்டு மையத்தின் ஆபரேட்டர்களும், ரேஸ்வே எண்டர்பிரைசஸ் பங்குதாரர்களுமான அசோக்சிங் ஜடேஜா, கிரித்சிங் ஜடேஜா, பிரகாஷ்சந்த் ஹீரன், யுவராஜ்சிங் சோலங்கி மற்றும் ராகுல் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக குஜராத் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குஜராத் காவல்துறை கமிஷனர் ராஜு பார்கவா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நேற்று மாலை (26.05.2024) விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 6 பேர் மீது ஐபிசி 304, 308, 336, 338 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் மீதமுள்ள நான்கு பேரை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் தங்களின் இப்போதைய முயற்சியாக இருக்கும் என்றும் கூறினார்.
தீ விபத்தைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காப்பாற்றவும், தீயணைப்புப் படையிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழைப் (NOC) பெறாமல், இந்த அபாயகரமான பகுதியில் விளையாட்டு மையம் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையின் எஃப்ஐஆர் கூறுகிறது.
இந்த விளையாட்டு மையத்தின் ஆபரேட்டர்கள், 'தங்கள் வளாகத்தில் மனிதர்களுக்கு சிறிய அல்லது கடுமையான காயம் ஏற்பட அல்லது உயிரிழக்கக்கூட வாய்ப்பு உள்ளது' என்பதை அறிந்திருந்தும் தொடர்ந்து விளையாட்டு மையத்தை இயக்கியதன் மூலம் கடும் குற்றம் புரிந்துள்ளதாக காவல்துறையின் எஃப்ஐஆர் கூறுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

இறந்தவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை முதல் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர்கள் இந்த விபத்தில் உயிரோடு இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா, எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த எந்தத் தகவலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றார்.
தீ விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், ராஜ்கோட்டில் உள்ள எய்ம்ஸ், கிரிராஜ் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒருவர் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “விபத்தின்போது அந்த இடத்தில் எனது உறவினர் இருந்தார். மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எதுவும் தெரிய வரும்,” என்றார்.
ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்த ரவிபாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். “இந்த விபத்தில் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை என்னால் பார்க்க முடியவில்லை."
"தேர்தல் நேரத்தில் தலைவர்கள் வீடு வீடாகச் செல்கிறார்கள். ஆனால் இதுபோன்ற அவலங்களின்போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைவிட மன்னராட்சியே சிறந்ததாகத் தெரிகிறது,” என்று கூறினார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும்கூட, மேற்கொண்டு பேச முடியாமல் சோகத்தில் திணறுகிறார் ரவிபாய். இதன் மூலம் தீ விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நம்மால் அறிய முடிகிறது.
'முதல் மாடியில் இருந்து குதித்து தப்பினோம்’

தீ விபத்து நடந்த இடத்தில் இருந்த தக்ஷ் என்பவரிடம் பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்யா பேசினார். தக்ஷ், தனது 10 வயது சகோதரருடன் வணிக வளாகத்தின் விளையாட்டு மையத்திற்குச் சென்றுள்ளார்.
“நாங்கள் அங்கு விளையாடத் தொடங்கியவுடன் கீழே தீப்பற்றியதாக தகவல் வந்தது. புகை மூட்டத்தைக் கண்டு மக்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் டிஆர்பி ஊழியர்கள் எங்களை அவசரப் பாதை வழியாக அழைத்துச் சென்றனர். ஆனால் அவசரப் பாதைக்குக் கீழே இருந்த மரப்பலகைகளில்தான் தீப்பிடித்திருந்தது. அதனால், அந்த வழியாக வெளியேற முடியவில்லை,” என்று தக்ஷ் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மூலையில் ஷீட் கொண்டு அடைக்கப்பட்ட தடுப்பு இருந்தது, அதற்குப் பின்னால் ஒரு வழி இருந்தது. அங்கிருந்த மூன்று பேரையும் என் சகோதரனையும், அந்த வழியாக முதல் மாடியில் இருந்த குதிக்கச் சொன்னேன். நானும் பின்னர் குதித்தேன்,” என்றார்.
அவசரப் பாதையும், பிரதான வழியும் அடைக்கப்பட்டதால், மக்கள் மேலிருந்து குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அவ்வாறு குதிக்க முடியாத சிலர் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
தக்ஷின் சகோதரருக்கு கை மற்றும் நெற்றியில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை காணவில்லை

வணிக வளாகத்திற்கு அருகில் வசிக்கும், சித்தராஜ்பாயின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் விளையாட்டு மையத்தில் இருந்தனர், அதில் நான்கு பேரை இன்னும் காணவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களை மீட்க மாடிக்குச் சென்ற அவரது மகனும் திரும்பவில்லை.
பிபிசி செய்தியாளர் தேஜஸ் வைத்யா அவருடன் உரையாடினார். இந்தs சம்பவம் நடந்தபோது, இந்த விளையாட்டு மையத்தின் முன்புறம் உள்ள சாலையில்தான் அமர்ந்திருந்தார் சித்தராஜ்பாய்.
“தீ பரவிய 15 நிமிடங்களில், அனைத்தும் எரிந்துவிட்டது. தீ மிகவும் வேகமாகp பரவியது. நாங்கள் 500 அடி தூரத்தில் இருந்தோம். ஆனாலும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் உள்ளே சிக்கி இருக்கிறார்கள் என்பதை நான் அப்போதுகூட உணரவில்லை,” என்கிறார் சித்தராஜ்பாய்.
மேலும், இந்த விளையாட்டு மையம் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும் இந்தத் தீ விபத்து எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
"இந்தச் சம்பவத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது எங்கள் குடும்பத்தில் ஒரு மகளும் அவளுடைய தாயும் மட்டுமே மீதம் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவார்கள்?" என்றும் சித்தராஜ்பாய் கேள்வி எழுப்புகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












