டெல்லி: 6 பச்சிளம் குழந்தைகளை பலி வாங்கிய மருத்துவமனை தீ விபத்து நடந்தது எப்படி?

டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் பலி

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், டியர்பைல் ஜோர்டான், திவ்யா ஆர்யா & ராக்ஸி கக்டேகர் சாரா
    • பதவி, பிபிசி

டெல்லியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட பிரிவில் 12 குழந்தைகள் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி சுரேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார். அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் மருத்துமனையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோர தீ விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளிகளில் மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்து முழு கட்டடத்தையும் புகை சூழ்ந்துள்ளது.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கர்க், பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

தீ விபத்து எப்படி நடந்தது?

டெல்லி மருத்துவமனை தீ விபத்து: 6 குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

“ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ வேகமாகப் பரவியது. வளாகத்தில் இருந்து வெளியேறவும் மேல் தளத்தில் இருந்து கீழே இறங்கவும் ஒரே ஒரு மாடிப்படி வாயில் இருந்ததால் அங்கிருந்து அனைவராலும் தப்பிக்க முடியவில்லை. குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. தீ விபத்து ஏற்பட்டால் தப்பிக்க முடியாத அளவுக்கு கட்டடத்தின் அமைப்பு இருப்பதால், தீயை அணைக்கத் தாமதமாகியது” என்று மீட்பு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மருத்துவமனையின் அமைப்பு குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. வீடுகளுக்கு இடையே நெருக்கமான பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டமைப்பு அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றியுள்ளதா, தீ விபத்துக்கு என்ன காரணம் உள்ளிட்ட தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தளத்தில், "டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது," என்று பதிவிட்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவும் குழந்தைகளின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

"டெல்லி விவேக் விஹாரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியை இறைவன் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்க வேண்டும். மற்ற குழந்தைகளும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஒரு வணிக வளாகத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலியானவர்களில் பலர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தத் தீ விபத்து நெஞ்சைப் பதற வைப்பதாகக் கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

இந்தத் தீ விபத்து நெஞ்சைப் பதற வைப்பதாகக் கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். "இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலட்சியத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது," என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில், "குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்."

"அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சூழலை ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலட்சியத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா பிடிஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "டெல்லி அரசின் ஊழல் நிர்வாகத்தால் இன்னும் கண்களைக்கூட திறக்காத 6 பச்சிளம் குழந்தைகள் பலியாகிவிட்டனர். ஏன் இப்படி நடக்கிறது என்பதுதான் எனது கேள்வி. ஒவ்வொரு முறையும் டெல்லி அரசு தப்பித்து விடுகிறது,” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

'மருத்துவமனையின் தடையில்லா சான்றிதழ் காலாவதி'

காலாவதியான மருத்துவமனையின் தடையில்லா சான்றிதழ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஷாதரா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சுரேந்திர சவுத்ரி

விவேக் விஹார் பகுதி தனியார் மருத்துவமனையின் தடையில்லா சான்றிதழ் (NOC) மார்ச் 31 அன்று காலாவதியாகி விட்டதாகவும், இந்த குழந்தைகள் மருத்துவமனையில் ஐந்து குழந்தைகள் படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்ததாகவும், ஆனால் அங்கு 10க்கும் மேற்பட்ட படுக்கைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை ஷாதரா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சுரேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சுரேந்திர சௌத்ரி, “இந்த மருத்துவமனையில் மொத்தம் 12 குழந்தைகள் இருந்தனர். ஆனால் ஒரு குழந்தை முன்பே இறந்துவிட்டது. ஆறு குழந்தைகள் விபத்தில் உயிரிழந்துள்ளனர், ஐந்து குழந்தைகள் நலமாக உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஆரம்பத்தில் ஐபிசி 304 மற்றும் 308 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனையின் பதிவைச் சரிபார்த்தபோது, ​​மருத்துவமனையின் என்ஓசி காலாவதியானது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் ஐந்து படுக்கைகளுக்குத்தான் அனுமதி இருந்தது, ஆனால் அவர்கள் 10 படுக்கைகளுக்கு மேல் நிறுவியுள்ளனர்," என்று கூறினார் சுரேந்திர சௌத்ரி.

தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு அமைப்பு இல்லை. ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு மூன்று மருத்துவர்கள் இருந்தனர், மேலும் அப்போது பணியில் இருந்த மருத்துவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்."

"ஷார்ட் சர்க்யூட் காரணமாக சிலிண்டர் தீப்பிடித்து, அங்கிருந்து மற்ற இடங்களுக்கும் தீ பரவியது. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான சிலிண்டர்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)