சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னைக்குள் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றி சரியாக ஐந்து மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.

பேருந்து நிலையம் துவங்கப்பட்டபோது, பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தை வந்தடைய போதிய பேருந்துகள் இல்லாதது, எந்தப் பேருந்து எங்கே நிற்கும் என்ற தகவல்கள் இல்லாதது, போதிய உணவகங்கள், ஏடிஎம்கள், கடைகள் இல்லாதது என பயணிகள் பல குறைகளைத் தெரிவித்தனர்.

சென்னை நகருக்கென ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் இப்போது எப்படி இயங்குகிறது? பயணிகளின் கருத்து என்ன?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை

பேருந்து நிலையம் துவங்கப்பட்ட போது இருந்த பல குறைகள் தற்போது தீர்க்கப்பட்டிருக்கின்றன. மாநகர பேருந்து நிலையத்திலிருந்து, பிரதான பேருந்து நிலையத்தை வந்தடைவது பயணிகளுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.

இதுதவிர, பிரதான பேருந்து நிலையத்திற்கும் மாநகரப் பேருந்து நிலையத்திற்கும் இடையில் சுவர் ஒன்றும் இருந்ததால், பயணிகள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இது பயணிகளை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.

இப்போது அந்தச் சுவர் அகற்றப்பட்டிருப்பதால், மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பிரதான பேருந்து நிலையத்திற்கு பயணிகளால் நேரடியாக வர முடிகிறது. வயது முதிர்ந்த பயணிகளுக்கென பேட்டரி வாகனங்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர சிறிய ரக பேருந்துகளும் இலவசமாக இயக்கப்படுகின்றன.

அடுத்ததாக, பேருந்து நிலையம் துவங்கப்பட்ட போது போதுமான உணவகங்கள் இல்லாதது பயணிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. இப்போது பெரும் எண்ணிக்கையில் உணவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சில ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு இயங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், மேலும் சில ஏடிஎம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மருந்தகம், தனியார் மருத்துவமனையின் சார்பில் சிறிய மருத்துவமனை ஆகியவையும் செயல்படத் துவங்கியுள்ளன. பல இடங்களில் ஆவின் சார்பில் பால் பொருட்கள் விற்பனை நிலையங்களும் துணிப் பைகளைப் பெறுவதற்கான தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் கூறுவது என்ன?

பயணிகள் கூறுவது என்ன?

சில பயணிகளைப் பொருத்தவரை, அரசு விரைவுப் பேருந்துகள் முன்பதிவிலேயே பெரிதும் நிரப்பப்பட்டு விடுவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

"பேருந்து நிலையத்தில் வசதியெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. குறை ஏதும் சொல்ல முடியாது. கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். சாப்பாடு கிடைக்கிறது, டீ கிடைக்கிறது. அதிலெல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், பேருந்து என வரும்போது எல்லோருமே அரசுப் பேருந்தைத் தான் நம்பி வருகிறோம். அது நிரம்பிவிட்டது எனச் சொல்லும்போது தனியார் பேருந்தைப் பிடித்துச் செல்ல தாமதமாகிறது. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்", என்கிறார் மதுரைக்குச் செல்லவிருந்த பயணியான முத்துக்குமார்.

வேறு சிலரைப் பொருத்தவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட இந்தப் பேருந்து நிலையம் சிறப்பாக இருந்தாலும் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பிரதான பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதை இப்போதும் பிரச்னையாகவே குறிப்பிடுகிறார்கள்.

"பேருந்து நிலையத்தைப் பொருத்தவரை ஒரு விமான நிலையம் எப்படியிருக்குமோ, அதைப் போல வைத்திருக்கிறார்கள். வசதிகளும் நன்றாகவே இருக்கின்றன. முன்பு கோயம்பேடு பேரு்து நிலையத்தில் நிறைய பேர், நிற்பதற்கும் உட்கார்வதற்கும்கூட இடம் இல்லாமல் சிரமப்படுவார்கள். வயதானவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பார்கள்.

ஆனால், இங்கே பெரிய அளவில் இடம் இருக்கிறது. கடைகளும் வந்துவிட்டன. வெளியில் இருந்து உள்ளே வருவது மட்டும் தான் கஷ்டமாக இருக்கிறது. இளைஞர்களுக்கு சிரமமாக இருக்காது. வயதானவர்கள் சிரமப்படுவார்கள் என நினைக்கிறேன்" என்கிறார் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸன்.

சென்னை- கிளாம்பாக்கம் இடையேயான பேருந்து சேவை

கிளாம்பாக்கம்

சென்னையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பேருந்து நிலையத்தை வந்தடைவது என்பது எளிதாக இருந்தாலும், மத்திய சென்னை, வடசென்னை போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் இன்னமும் போதுமான பேருந்து வசதி இல்லை என்கிறார்கள்.

பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்லும் ஓசூரைச் சேர்ந்த சேகர், போரூர் பகுதியிலிருந்து கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்கிறார்.

"மாநகருக்குள் இருந்து பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க வேண்டும். போரூர் சந்திப்பிலிருந்து 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்து தான் வருகிறது. சில சமயங்களில் அடுத்தடுத்து பேருந்துகள் வருகின்றன அல்லது வெகு நேரத்திற்கு பேருந்துகளே வருவதில்லை. இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும்", என்கிறார் சேகர்.

ஆம்னி பேருந்துகள் தொடர்பான பிரச்னை

ஆம்னி பேருந்துகள் தொடர்பான பிரச்னை

சென்னையிலிருந்து இந்தப் பகுதியை வந்தடைய ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்திற்கும் வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிராக ஒரு புதிய ரயில் நிலையத்தை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சுமார் 20 கோடி ரூபாய் தென்னக ரயில்வே-க்கு அளிக்கப்பட்டது.

இந்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் நிறைவடைய சற்றுத் தாமதமாகும் எனத் தெரிகிறது.

ஆம்னி பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களுக்கு என தனித்தனியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இங்கே சில அலுவலகங்கள் இதற்கென கட்டப்பட்டிருக்கின்றன. அவை பணிகள் முடிந்து இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஆம்னி பேருந்துகளை இயக்குபவர்களைப் பொருத்தவரை, இந்தப் பேருந்து நிலையம் குறித்துப் பேசுவதையே தவிர்க்க விரும்புகிறார்கள். ஒரு சிலர் மட்டும் சில பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"அதாவது முன்பெல்லாம் வடபழனி, அசோக் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதி தந்திருந்தார்கள். இப்போது இங்கு மட்டும் தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்றாகிவிட்டது. புதிய பேருந்து நிலையம் என்பதால் பயணிகள் வந்து சேர காலதாமதமாகிறது.

இதனால், 15 முதல் 25 நிமிடங்கள் தாமதமாகத் தான் எல்லா பேரு்நதுகளும் புறப்படுகின்றபடுகின்றன. அதேபோல, எங்களுக்கான அலுவலகத்தில் உள்ள பணிகளை முடித்து விரைவில் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்கிறார் ஆம்னி பேருந்து உரிமையாளரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவருமான ராஜேந்திரன்.

பெயரை வெளியிட விரும்பாத சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றொரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது முன்பு பல இடங்களில் பேருந்துகள் நிற்கும் என்பதால், விடுமுறை காலங்களிலும் முகூர்த்த நேரங்களிலும் பல இடங்களிலும் பயணிகள் காத்திருப்பார்கள்.

ஆனால், இப்போது எல்லோருமே இங்கு வந்து தான் ஏற வேண்டும் என்று சொல்லிவிட்டதால், விடுமுறை நாட்களுக்கு முன்பாக இங்கே பெரிய கூட்டம் குவிகிறது, இது பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது என்கிறார்கள் அவர்கள்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுவது என்ன?

போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுவது என்ன
படக்குறிப்பு, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

இந்த பேருந்து நிலையத்தில் கூடுதலாக சில வசதிகளைச் செய்யச் சொல்லிக் கேட்டிருப்பதாகச் சொல்கிறார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான எஸ்.எஸ். சிவசங்கர்.

"கோயம்பேட்டிலிருந்து இந்தப் பேருந்து நிலையத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. எங்களைப் பொருத்தவரை ஒரு விஷயத்தைச் செய்து தர வேண்டுமென சிஎம்டிஏ-விடம் சொல்லியிருக்கிறோம்.

அதாவது, எந்தப் பேருந்து எந்த நடை மேடையில் இருந்து எப்போது புறப்படும் என்பதைக் காட்டும் விதமாக, விமான நிலையத்தில் இருப்பதைப் போல ஒரு எலக்ட்ரானிக் டிஸ்பிளே போர்டுகளை வைத்துத் தர வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறோம். விரைவில் செய்துவிடுவார்கள் என நம்புகிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பிறகு, பேருந்து நிலையத்தைப் பார்வையிட இருக்கிறேன்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் எஸ்.எஸ். சிவசங்கர்.

தற்போது பேருந்து நிலையத்தின் நிர்வாகம், பராமரிப்பு ஆகியவை புனேவைச் சேர்ந்த பிவிஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)