பிரக்ஞானந்தா: சொந்த நாட்டில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய இளம் செஸ் வீரர்

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், FIDE

நார்வே நாட்டில் நடந்து வரும் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை நேற்று நடந்த போட்டியில் வீழ்த்தினார்.

இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளாசிக்கல் கேம்’ என்று செஸ் விளையாட்டில் அழைக்கப்படும் முறையில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில் கிளாசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டு விளையாடுவது.

இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற சதுரங்க ஆட்ட முறையில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கய பிரக்ஞானந்தா, வெற்றியை தன் வசமாக்கி, நார்வே செஸ் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

தோல்வியடைந்த கார்ல்சன், புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

யார் இந்த ‘பிரக்’

பிரக்ஞானந்தா

பட மூலாதாரம், FIDE

சதுரங்கம் என்றாலே, இது வரை நம் எல்லார் நினைவுக்கும் வரும் பெயர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தாக இருந்தது. தற்போது நினைவுக்கு வரும் பெயர் பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா.

18 வயதான பிரக்ஞானந்தா, சமீபத்தில் அசர்பைஜானில் நடைபெற்ற சதுரங்க உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் உலகின் இளம் வீரரானார்.

2002ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பையை வென்ற பிறகு, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில், உலகின் அப்போதைய இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற கேண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தனது பத்தாவது வயதில் சதுரங்க வரலாற்றில், இண்டர்நேஷ்னல் மாஸ்டர் பட்டம் இளம் வீரரானார்.

எளிமையான குடும்ப பின்னணி

சென்னை பாடி பகுதியில் வசிப்பவர் பிரக்ஞானந்தா. மிக எளிமையான குடும்ப பின்னணி கொண்டவர். அவர் பத்து வயதில் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெறும் வரை, அவரது பெற்றோர்கள் கடன் வாங்கியே போட்டிகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

வீட்டில் சதுரங்கம் சொல்லிக் கொடுக்க சதுரங்க வீரர்கள் யாரும் கிடையாது. சிறு வயதில் அவரது மூத்த சகோதரி வைஷாலி சதுரங்கம் விளையாட தொடங்கினார். அதை பார்த்து ஆர்வம் கொண்ட பிரக்ஞானந்தா, தானும் சதுரங்கம் ஆட தொடங்கினார். சதுரங்கத்தின் மேல் கொண்ட ஆர்வமும், அவரது திறமையும் அவர் இளம் வயதிலேயே பல உயரங்களை தொட காரணமாக இருந்துள்ளன.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், RAMESH BABU

படக்குறிப்பு, பிரக்ஞானந்தா தனது ஏழாவது வயதில் ஏழு வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.

ஆன்லைனில் துரிதமாக விளையாடும் ஏர்திங்க்ஸ் என்ற போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை கடந்த ஆண்டு வென்றார். இதன் மூலம் நார்வே கிராண்ட் மாஸ்டரான 32 வயதான கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார்.

உலக கோப்பை போட்டியில் அவர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், அவரது அசாத்திய ஆட்டத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சதுரங்கம் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கத்தில் வெற்றி பெற்ற போது, சதுரங்கம் குறித்த பேச்சும் முக்கியத்துவமும் எப்படி அதிகரித்ததோ அதேபோன்ற நிலை தற்போது உள்ளது.

பிரக்ஞானந்தாவும் விஸ்வநாதன் ஆனந்தை முன்மாதிரியாக கொண்டே சதுரங்கம் விளையாட தொடங்கினார். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார் என்கிறார் பிரக்ஞானந்தாவின் பயிற்றுநர் ஆர் பி ரமேஷ். “அவர்கள் இருவரும் தொடர்பிலேயே இருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த் பிரக்ஞானந்தாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்தும் வழிகாட்டியும் வருகிறார்” என்கிறார் அவர்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைன் துரித சதுரங்கப் போட்டியில் வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.

ரமேஷ் இந்திய சதுரங்க அணியின் பயிற்றுநராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர். அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த அவர், அந்த பணியை விட்டுவிட்டு, 2008ம் ஆண்டு சதுரங்கப் பயிற்சி பள்ளியை தொடங்கினார்.

பிரக்ஞானந்தாவின் தந்தை கூட்டுறவு வங்கி மேலாளர், அவரது தாய் வீட்டையும் குடும்பத்தையும் பராமரித்து வருகிறார். பிரக்ஞானந்தாவுடன் ஒவ்வொரு போட்டிக்கும் உடன் சென்று அவருக்கு பிடித்தமான தமிழ்நாட்டு உணவுகளை சமைத்து தருகிறார்.

உலக கோப்பையில் பங்கேற்றதுடன் அடுத்ததாக சீனாவில் நடைபெறும் ஆசிய செஸ் போட்டிகளில் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக சதுரங்கத்தில் தங்கம் வென்று கொடுக்கும் முனைப்பில் பிரக்ஞானந்தா இருக்கிறார்.

பிரக்ஞானந்தா சதுரங்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் பொதுவாக இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கான சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதில்லை என்கிறார் அவரது பயிற்றுநர் ரமேஷ். “இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காது. பிரக்ஞானந்தாவுக்கு சதுரங்கம் தான் முக்கியம். எனவே அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்” என்றார்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, போட்டிகளுக்காக வெளிநாடுகள் செல்லும் போது பிரக்ஞானந்தாவுக்கு பிடித்த தமிழ்நாட்டு உணவுகளை அவரது தாயார் சமைத்து தருகிறார்.

சதுரங்கம் தான் பிரக்ஞானந்தாவின் உயிர் என்றாலும் நண்பர்களுடன் அவ்வப்போது டேபிள் டென்னில் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதும் உண்டு. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சிப் பக்கம் திரும்பாத பிரக்ஞானந்தா, எப்போதாவது தொலைக்காட்சி பார்த்தால், அதில் தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக மாதத்தில் 15 நாட்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக சென்று வந்தார் பிரக்ஞானந்தா. பள்ளியில் வழக்கமான வகுப்புகளிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளை மட்டும் நேரடியாக எழுதினார்.

பிரக்ஞானந்தா- இந்தியாவின் சதுரங்க இளம் மேதை

பட மூலாதாரம், FIDE

படக்குறிப்பு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் பிரக்ஞானந்தா.

கடந்த பத்து ஆண்டுகளாக பிரக்ஞானந்தாவுக்கு பயிற்சி அளித்து வரும் ரமேஷ், இத்தனை ஆண்டுகளில் பிரக்ஞானந்தா அபார வளர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார். “கடுமையாக உழைக்கும் பிரக்ஞானந்தா, மிகவும் மேம்பட்டுள்ளார். அவரது திறமைகளை காணும் போது இது ஆச்சர்யமான விசயமே இல்லை” என்கிறார்.

உலகக்கோப்பையில் தோல்வியுற்றாலும் பிரக்ஞானந்தா உற்சாகத்துடனே இருந்து வருகிறார். இந்த போட்டியில் உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களை தோற்கடித்து விட்டு இந்த வயதில் இறுதிச் சுற்றில் இடம் பெற்றதே மிகப்பெரிய மைல்கல் என்கிறார் பயிற்றுநர் ரமேஷ். “அவருக்கு, வெற்றி, புகழ், பணம் இவற்றை விட சதுரங்க ஆட்டமே மிகவும் பிடித்தமானது. அவர் இப்போது தான் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது” என்கிறார் பயிற்றுநர் ரமேஷ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: