கூகுள்பே, பேடிஎம் நம்மை செலவாளி ஆக்குகிறதா? கையில் பணம் வைப்பதே சிறந்ததா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
காலையில் நடைபயிற்சி முடிந்ததும், எப்போதும் தேநீர் அருந்தும் அந்த கடையில் ஒரு தேநீரையும் சில பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டுவிட்டு மொபைலில் யுபிஐ மூலம் பணம் செலுத்த முயன்றபோது, தொழில்நுட்ப காரணத்தால் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியவில்லை என்று வந்தது. மீண்டும் வேறு செயலி மூலம் முயன்றபோதும் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தது. யுபிஐ பரிவர்த்தனைக்கு பழகிவிட்டதாலும், நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வந்ததாலும் கையில் பர்ஸை எடுத்துவரவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பேருந்து பயணத்தின்போது, “ஏடிஎம்மில் பணம் எடுக்க மறந்துவிட்டேன். டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லை, நீங்கள் எனக்கு பணமாக 500 ரூபாய் கொடுத்தால் நான் யுபிஐ மூலம் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்” என்று ஒருவர் என்னிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.
யாரிடமும் உதவிக் கேட்க முடியாத நிலையில் கடை உரிமையாளரிடமே, “யுபிஐ வேலை செய்யவில்லை. பணத்தை பிறகு தரட்டுமா” என்று தயக்கத்துடன் கேட்டேன். “அதற்கென்ன தாராளமாக பின்னர் தாருங்கள்” என்று அவர் கூறியதும்தான் நிம்மதி வந்தது.
சிறு தொகையாக இருந்ததால் பிழைத்தோம், இதுவோ பெரிய தொகையாக இருந்தாலோ அல்லது தெரியாத இடமாகவோ இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
நண்பர் ஒருவரும் இதேபோன்ற நிலை தனக்கு ஏற்பட்டதாக ஒருமுறை கூறியிருந்தார். கூடவே, பணமாக இருக்கும்போது குறைந்த அளவு செலவு செய்ததாகவும் யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறிய பின்னர் வீண் செலவு செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். “கையில் 100 ரூபாய் இருந்தால் அதற்கு ஏற்ப உணவகத்துக்கு செல்வேன், இப்போது யுபிஐ காரணமாக போன் மூலம்தானே செலுத்தப் போகிறோம் என ஆடம்பர செலவு செய்கிறேன்” என்பது அவர் வைத்த வாதம்.
யுபிஐ நிச்சயம் நல்ல முன்னெடுப்புதான். தற்போது சாலையோர கடைகள் மூலம் பெரிய பெரிய மால்கள் வரையில் எங்கும் யுபிஐ மூலம் நாம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளை நாம் அதிகம் சார்ந்து இருக்கிறோமா? யுபிஐ காரணமாக நேரடியாக பணத்தை கொடுத்து பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கிறோமா? யுபிஐ காரணமாக வீண் செலவு செய்கிறோமா?
பணமதிப்பிழப்புக்கு பின் பிரபலமடைந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு முறை இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. யுபிஐ மூலம் எந்த வங்கி கணக்கிற்கும் மொபைல் மூலம் நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கி கணக்கு போன்ற விபரங்கள் தேவையில்லை.
யுபிஐ பரிவர்த்தனை அறிமுகப்பட்ட அதே 2016ஆம் ஆண்டின் நவம்பர் 8ஆம் தேதி இரவில், 500 மற்றும் 1000 ரூபாய்கள் இனி செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்தது. அதேபோல் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையும் கனிசமாக அதிகரித்தது. 2016ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் முதன்முறையான ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் அளவை கடந்து யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை அதிகரித்தாலும் அனைத்து இடங்களிலும் யுபிஐ சென்றுசேராத நிலையே அப்போது நிலவியது.
2016ஆம் ஆண்டின் இறுதியில் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக பீம்(BHIM) செயலியை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தற்போது, (பணம்)நோட்டுகளிலும் சில்லறைகளிலும் வியாபாரங்கள் நடக்கின்றன. பீம் செயலி மூலம் வர்த்தகம் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பேசியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரே மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாயை கடந்த யுபிஐ பரிவர்த்தனை
2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டன. அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்த அளவு 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. 2018ஆம் ஆண்டி டிசம்பர் மாதத்தில் 1 லட்சம் கோடி ரூபாயையும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 10 லட்சம் கோடி ரூபாயையும் தாண்டியது.
தற்போது பெருநகரங்கள் முதல் குக்கிராமம் வரை யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 100 கோடி முறைக்கு மேல் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதில், 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டிகை காலம் வரவுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
இந்தியா மட்டுமல்லாது சௌதி அரேபியா, ஃபிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான் உட்பட பல நாடுகளும் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
யுபிஐ பரிவர்த்தனை - பணத்தை மறந்துவிடுகிறோமா?
கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் யுபிஐ மூலம் அதிகம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். தற்போது என் பரிவர்த்தனைகள் அனைத்தும் யுபிஐ-யை சார்ந்தே இருக்கிறது. வீட்டு வாடகையை யுபிஐ மூலமே வீட்டு உரிமையாளருக்கு அனுப்பி விடுகிறேன். காலையில் கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்குவது முதல் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்து பரிவர்த்தனைகளையும் யுபிஐ மூலமே செய்கிறேன். ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும்.
இந்த அளவுக்கு பணத்தை தவிர்த்து யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வது என்பது சரியானதுதானா என்று பொருளாதார நிபுணர் விவேக்கிடம் கேட்டபோது, “நிச்சயமாக யுபிஐ-யால் பலன் அதிகம். தற்போது அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக வந்துவிட்டது. அனைத்து தரப்பினரும் அதன் மூலம் பரிவர்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர். பர்சில் பணத்தை வைத்துக்கொண்டு யாராவது திருடி விடுவார்களா என்று பயப்பட வேண்டிய தேவையில்லை. ” என்றார்.
தேநீர் கடையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் கூறியபோது, “ஒரு சில நேரங்களில் இதுபோன்று ஏற்படுவதை வைத்து யுபிஐ-யை குறை சொல்ல முடியாது. அதேபோல், யுபிஐ-யை காரணம் காட்டி பணத்தை வைத்துக்கொள்வதில்லை என்று கூறுவதும் சரியானது அல்ல. நீங்கள் பயணம் செல்லும்போது ஒருசில இடங்களில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம். எனவே, சிறு அளவில் பணத்தை வைத்துக்கொள்வது எப்போதுமே அவசியம்” என்றார்.
மேலும், தற்போது யுபிஐ மூலம் ஏடிஎம் மையத்தில் ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் டெபிட் கார்டு பயன்பாடு குறைந்துவிடும். யுபிஐ, கிரெடிட் கார்டு போன்றவைதான் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
யுபிஐ காரணமாக வீண் செலவு செய்கிறோமா?
முன்பெல்லாம் சிறு வியாபாரம் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோர் பணம் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு வங்கி கடன் கிடைப்பது என்பது சிரமமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் வருவாய்க்கான கணக்கு அவர்களிடம் இருக்காது. தற்போது யுபிஐ காரணமாக அவர்களின் வருவாயை வங்கி கணக்கு மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதனால், அவர்களுக்கு சிறிய அளவில் கடன் தேவைப்படும்போது எளிதாக பெற்றுக்கொள்ள முடிகிறது என்றும் விவேக் கூறுகிறார்.
தற்போது யுபிஐயில் கிரெடிட் கார்டையும் இணைக்கும் வசதி வந்துள்ளது. இதேபோல், கிரெடிட் தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும் வசதியை (Pre sanctioned credit line) அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கையில் பணம் இருக்கும்போது பார்த்து பார்த்து செலவு செய்தோம் என்றும் ஆனால் யுபிஐ காரணமாக கண்மூடித்தனமாக செலவு செய்கிறோம், அப்படி இருக்கும்போது இத்தகைய வசதிகள் காரணமாக வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுவது குறித்து பேசிய விவேக், “வீண் செலவு செய்பவர்கள் எப்படி இருந்தாலும் செலவு செய்யத்தான் செய்வார்கள். அதனை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
யுபிஐ காரணமாக அதிகமாக செலவு செய்கிறோம் என்று நினைத்தால் , சம்பளம் போட்டவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி போன்ற சேமிப்பில் முதலீடு செய்யலாம். யுபிஐ மூலமே இவற்றை எளிதாக செய்ய முடியும். இதனால், ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்க முடியும்” என்று விவேக் ஆலோசனை வழங்குகிறார்.
யுபிஐ பரிவர்த்தனைகள் காரணமாக வீண் செலவுகளை நாம் குறைக்க முடியும் என்றும் கூறும் அவர்,
“பணமாக செலவு செய்யும்போது எதற்கு எவ்வளவு செலவு செய்தோம் என்று நாம் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. அதேநேரம், யுபிஐ மூலம் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய்தோம் என்பதை ஒருசில செயலிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதம் முடிந்த பின்னரும் எதற்கு எவ்வளவு செலவு செய்துள்ளோம் என்பதை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு தேவைக்கு அதிகமாக செலவு செய்திருக்கிறோம் என்று கருதினால் அதனை நீங்கள் குறைத்துக்கொள்ள முடியும். ” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












