பிரக்ஞானந்தா: உலகக் கோப்பைக்காக கடைசி வரை போராடிய தமிழக வீரர்

பட மூலாதாரம், FIDE
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இதன்மூலம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்திருக்கிறது.
டைபிரேக்கரின் முதல் சுற்றுகளிலும் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். அத்தகைய நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்தார் பிரக்ஞானந்தா.
பதினெட்டு வயதான பிரக்ஞானந்தா திங்கள் கிழமையன்று டை-பிரேக்கரில் உலகின் 3ஆம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பட மூலாதாரம், FIDE
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் விளையாடுவது இதுவே முதல்முறை.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் 18 வயதை எட்டிய பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் மிக இளம் வயதினர் ஆவார்.
உலக சாம்பியன் பட்டத்திற்கான சவாலை தீர்மானிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற உலகின் மூன்றாவது இளைய நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்க செஸ் மேதை பாபி ஃபிஷ்ஷர் இருவரும் 16 வயதாக இருந்தபோது இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.
பிரக்ஞானந்தாவின் அழைப்புக்காக காத்திருக்கும் அவரது சகோதரி
பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பிரக்ஞானந்தாவின் சகோதரியும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான வைஷாலி ரமேஷ்பாபு பேசினார்.
அப்போது, “பிராக் வெற்றி, தோல்விக்காக ஒருபோதும் விளையாடியதில்லை. அவன் எப்போதும் விளையாட்டை விரும்பி ஆடுவான்,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், FIDE
மேலும், தான் எப்படி சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவரது கவனம் இருக்கும் என்றும் வைஷாலி கூறினார்.
“நானும் பிரக்ஞானந்தாவும் எப்போதும் செஸ் விளையாட விரும்புகிறேன். அதுதான் அவனை ஊக்கப்படுத்துக்கிறது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிராக்கின் வெற்றிக்காக வாழ்த்துவது மட்டுமல்லாமல் பிரார்த்தனை செய்தன. எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” உலகக்கோப்பை ஒரு மாதம் நடக்கும் போட்டியாக இருந்தது. எங்கள் அம்மா பிரக்ஞானந்தா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதை உறுதி செய்தார். அவரது சக்தி அபாரமானது. அதை அவர் இழக்கவே இல்லை. எங்கள் பெற்றோர்தான் எங்களுக்குப் பெரிய ஆதரவு,” என்று தெரிவித்தார்.
ஆட்டத்திற்கு முன் அதிகம் பேசாத பிரக்ஞானந்தா, போட்டி முடிந்த பிறகு தனக்கு அழைப்பார் என்பதால் அவரது அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும் அவரது சகோதரி வைஷாலி தெரிவித்தார்.
“எனது மகன் கடுமையாகப் போராடியுள்ளார். கார்ல்சன் தனது அனுபவத்தை விளையாட்டில் வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது மகன் இன்னும் பல போட்டிகளில் போட்டியிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறுகிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.
பத்து வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தா
பிராக் என்று செஸ் உலகில் பிரபலமாக அறியப்படும் பிரக்ஞானந்தா இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய செஸ் வீரர்களில் ஒருவர்.

பட மூலாதாரம், FIDE
இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
கடந்த ஆண்டு, ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை அவர் தோற்கடித்தார். அதுமட்டுமின்றி, நார்வே கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவையே சேரும்.
செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியரும் இவரே.
செஸ் உலகை கலக்கும் பிரக்ஞானந்தா யார்?

பட மூலாதாரம், FIDE
நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம். எளிமையான முகத்தோற்றத்துடன் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச் சிறிய புன்னகையை வெளிப்படுத்துகிறார், சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.
பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான். இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.
பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.
அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.
பிரக்ஞானந்தா செஸ் மேதை ஆனதன் பின்னணி

பட மூலாதாரம், RAMESH BABU
செஸ் விளையாட்டுக்கும் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியிருக்க தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்ற கதையை பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
“எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், செஸ் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும்.
குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று திட்டமிட்டேன்,” என்றார் ரமேஷ் பாபு.
ஆனால், தனக்கு 4 வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.

பட மூலாதாரம், PRAGGNANANDHAA R./ FACEBOOK
தன் வயது சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் செஸ் போர்டில் இருக்கும் அந்த 64 கட்டங்களின் மீது அவர் கொண்டிருந்த காதல் ரமேஷ் பாபுவின் மனதை மாற்றியது.
தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அவரது அக்காவிடம் இருந்துதான் செஸ் விளையாட்டின் அடிப்படையை பிரக்ஞானந்தா கற்றுக்கொண்டார்.
வீட்டை நிரப்பியுள்ள கோப்பைகள்
சென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகமுள்ள பொருட்கள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள்.
பிரக்ஞானந்தா, எட்டு வயதுக்கு உட்பட்டோர், பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியவர், 2016ஆம் ஆண்டு உலகின் இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற புகழை அடைந்தார். இன்னும் தொடர்ந்து புகழின் உச்சியை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












