விசா வைத்திருந்தாலும் இந்திய மாணவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
- பதவி, பிபிசி செய்தியாளர்
சமீபத்தில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்கள் 21 பேரை உடனடியாக விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியுள்ளது அமெரிக்கா.
விமானம் தரையிறங்கிய பிறகு, அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளின் சோதனையின்போது, இந்திய மாணவர்களின் ஆவணங்கள் செல்லாது என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்த அதிகாரிகள், உடனடியாக அவர்களை அடுத்த விமானத்திலேயே ஏற்றி திருப்பி அனுப்பினர்.
இந்த கல்வியாண்டில் அமெரிக்காவிற்கு சென்ற மாணவர்கள் சில காரணங்களால் திருப்பி அனுப்பப்படுவதாக அமெரிக்க குடியேற்ற ஆணையம் தெரிவித்துள்ளது.
விசா இருந்தும் மாணவர்களை படிக்க அனுமதிக்காதது ஏன் ? திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள் மீண்டும் அமெரிக்கா செல்ல முடியுமா ?
என்ன நடந்தது ?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கன்சல்டன்சி பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியான அனில பல்லா, மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாதது தவிர பிற காரணங்களும் இருக்கலாம் என்கிறார்.
இதுகுறித்துபிபிசியிடம் பேசிய அவர், “அமெரிக்கா செல்லும் மாணவர்கள் சமூக ஊடங்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். F-1 விசாக்களுக்கான கட்டுப்பாடு்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நீங்கள் படிக்கப்போகிறீர்கள் என்றால், அது மட்டும்தான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
படிப்பதற்கான விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள், வேலை, தங்குமிடம் மற்றும் தங்களது பயணங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வழியாக தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பேசுகிறார்கள். இதனால், அமெரிக்க அதிகாரிகள் மாணவர்கள் உண்மையிலேயே படிக்கத்தான் வருகிறார்களா என சந்தேகம் கொள்கின்றனர்,” என்றார்.
அமெரிக்க அதிகாரிகளிடம் பேசும்போது அவர்களின் உரையாடலின் தொனியை சரியாகப் புரிந்துகொண்டு, கேள்விகளுக்கு தகுந்த முறையில் பதற்றமின்றி நிதானமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதுபோன்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை சரியாக தயார் படுத்தாததால், மாணவர்கள் அமெரிக்க செல்லும் மாணவர்கள் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.
மாணவர்களின் கனவை முடிவுக்கு கொண்டு வரும் குடியேற்ற அதிகாரிகளின் சோதனை

பட மூலாதாரம், Getty Images
“மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை சமீபகாலமாக ஒரு வணிகமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்களுக்கு யாரும் தேவையான அறிவுரைகளை வழங்குவதில்லை. ஆனால், உண்மையில் அமெரிக்கா வரும் மாணவர்களில் ஒரு சிலரே வேலை செய்யும் நோக்கத்துடன் வருகின்றனர். ஆனால், ஆர்வத்தின் காரணமாக வேலை செய்யும் நோக்கம் இல்லாதவர்களும் சிக்கிக்கொள்கின்றனர்,” என்கிறார் அனில் பல்லா.
சமீபகாலமாக, அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்று அங்கு செல்லும் மாணவர்களுக்கு எதிர்பாராத அனுபவங்கள் ஏற்படுகின்றன.
மாணவர்கள் பல்கலைக்கழங்களில் அனுமதி பெற்று, விசாவைப் பெறுவதற்கான உற்சாகத்துடன் குடியேற்ற ஆணையத்திற்கு வருகிறார்கள். ஆனால், குடியேற்ற அதிகாரிகள் சோதனையின்போது அவர்களின் அனைத்து நம்பிக்கையும் சிதைகிறது.
அமெரிக்காவில் படித்து வரும் ஹைதராபாத்தை சேர்ந்த வெமுரி ராகேஷ் பேசுகையில், “அமெரிக்கா வரும் அனைத்து மாணவர்களையும் சோதனை செய்யவதில்லை. அதில், குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து சோதிக்கிறார்கள். சோதனையின்போது, படிக்க வந்தீர்களா அல்லது வேலைக்கு வந்தீர்களா எனக்கேட்கிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கவும் வேலை செய்யவும் வருகிறார்கள் என இங்குள்ள அதிகாரிகள் நினைக்கிறார்கள். இதனால், வேலை வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கான விசாவில் வருபவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்,” என்றார்.
சோதனை செய்யும் அதிகாரிகள் எதைப் பார்க்கிறார்கள் ?

பட மூலாதாரம், Getty Images
ஹைதராபாத்தை தலைமையிமாகக் கொண்ட அபெக்ஸ் கன்சல்டன்சியின் மேலாளர் எச்.எம்.பிரசாத் பிபிசியிடம் பேசுகையில், “பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின், அவர்களின் நிதி நிலை, பல்கலைக்கழக கட்டணம், வங்கிக் கணக்கு விபரம் உள்ளிட்டவற்றை சரி பார்க்கின்றனர்.
பெரும்பாலும், இந்த நிதி விவரங்கள், மாணவர்கள் அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அவர்களே செலுத்த முடியுமா என்பதை அரிந்துகொள்வதற்காக கேட்கிறார்கள். மேலும், மாணவர்கள மற்றும் அவரின் தந்தையின் வங்கிக்கணக்கை சரி பார்த்து, எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை பார்த்து அவர்களால், அங்கு வாழ்வதற்காக நிதி நிலை உள்ளதா என்பதை சரி பார்ப்பார்கள்.
குடியேற்ற அதிகாரிகளில் சோதனை செய்யும்போது கிடைக்கும் தகவல்களும், முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளும் ஒன்றாக உள்ளதா என ஒப்பிட்டும் பார்பார்கள்,” என்றார்.
சில கன்சல்டன்சி நிறுவனங்கள் மாணவர்களுக்கு போலியான ஆவணங்களை கொடுத்து பல்கலையில் அனுமதி பெறுகின்றனர். அதுவும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் என்கிறார் பிரசாத்.
குடியேற்ற அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் என்ன ?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் தரையிறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் சாதாரணமானவையாகத் தெரியலாம். ஆனால், இந்த கேள்விகள் மாணவர்களின் திறன் மற்றும் நோக்கத்தை தெரிந்துக்கொள்வதற்காவை என்கிறார்கள் கல்சல்டன்சி மேலாளர்கள்.
அப்படி கேட்கப்படும் கேள்விகள் என்ன ?
உங்களிடம் டெபிட்-கிரெடிட் கார்டு உள்ளதா ?
வங்கி இருப்பு எவ்வளவு ?
உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால், அதை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்.
நான் உங்களது தொலைபேசியை பரிசோதிக்கலாமா ? (தொலைபேசியை ஒப்படைத்த பிறகு, அதில் உள்ள தரவுகள் சரிபார்க்கப்படும். உதாரணமாக, வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போடப்பட்டுள்ள பதிவுகள் பரிசோதிக்கப்படும்.)
நோய்க்கு எதாவது மருந்த சாப்பிடுகிறீர்களா ?
நீங்கள் அமெரிக்காவில் எங்கு வாழப் போகிறீர்கள் ?
இங்கே நண்பர் அல்லது உறவினர் யாரையாவது தெரியுமா ?
ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிவு செய்துள்ளீர்களா ?
தூதகரத்திற்கு கொடுத்த ஆவணங்களின் விவரங்கள் என்ன ?
உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படுகின்றது.
தவறான தகவல் கொடுப்பவர்களுக்கு என்ன நடக்கும் ?

பட மூலாதாரம், Getty Images
குடியேற்ற அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றால், அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
முதலில் மாணவர்கள் அளிக்கும் பதில்களை குடியேற்ற அதிகாரிகள் குறித்து வைத்துக்கொள்கிறார்கள். மாணவர்களின் பதில்களில் அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை என்றால், அவர்கள் உடனடியாக அடுத்த விமானத்திலேயே சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
ஆவணத்தில் தவறான தகவல்களை கொடுத்திருந்தால், மாணவர்கள் இரண்டரை மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்படலாம்.
ஒரு முறை திருப்பி அனுப்பப்பட்ட பிறக மீண்டும் அமெரிக்கா செல்ல முடியுமா ?
ஒரு மாணவர் குடியேற்ற அதிகாரிகளிடம் தவறான தகவலை கொடுத்தால், அவர் உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார். அப்படி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் மாணவர், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமெரிக்காவிற்கு செல்ல முடியாது.
அந்த மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இந்த தடை அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும், மற்ற நாடுகளுக்கு பயணிக்கலாம்.
நியூயார்க்கைச் சேர்ந்த குடியேற்றத்துறை வழக்கறிஞரான கவிதா ராமசாமி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மாணவர்களுக்கு குடியேற்ற அதிகாரிகளில் தடை விதிக்கப்பட்டால், அது மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகவே இருக்கும். மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகளுக்கு செல்லாம். ஆனால், அமெரிக்கா அவர்களுக்கு தடை விதித்துள்ளது, மற்ற நாடுகளுக்கு தெரிந்தால், அங்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.
கொரோனா காலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாணவர்கள் வருகை குறைந்துள்ளது ஈடு செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டகளாக வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழங்கள் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பொதுவாக மாணவர்களுக்கான விசாக்களை அதிகம் வழங்குகின்றன. இதில், இந்தியா மாணவர்களுக்கான விசாக்கள்தான் அதிகம்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஸ்டேடிஸ்டா ஆராய்ச்சி துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2021-22 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலாவர்கள் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தர்வர்கள்.
சீனாவில் இருந்து 2.9 லட்சம் மாணவர்களும், இந்தியாவில் இருந்து 1.9 லட்சம் மாணவர்களும் அமெரிக்காவில் உள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின்படி, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் சார்பில் ஜுன் 7 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமொக்கா இந்த ஆண்டு சுமார் இரண்டு லட்சம் விசாக்களை வழங்கியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் வழங்கப்படுவதால், அதிகமான மாணவர்கள் அமெரிக்கா செல்வதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
இருப்பினும், மாணவர்களில் சிலர் தங்களது சமூக ஊடக உரையாடல்களாலும், விசா விதி மீறல்களாலும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












