டி20 உலகக்கோப்பை: 'பவர்ஹிட்டர்கள்' நிறைந்த பாகிஸ்தானை இந்தியா சமாளிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் இப்போதிதிருந்தே சமூக வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கிவிட்டன.
கடந்த கால வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பெற்ற வெற்றிக்குப்பின் இந்திய அணி வரலாற்றை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பதிலடி கொடுத்தாலும் கடைசிப்பந்தில் மிகுந்த சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்தது.
எனவே, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்கு, எப்போது நடக்கிறது?
ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐசனோவர் பார்க்கில் உள்ள நாசா கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 145 முதல் 400 டாலர் என விற்கப்பட்டாலும், பிளாக்கில் டிக்கெட் விலை 4 ஆயிரம் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலை உயர்விலேயே ஆட்டத்தின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டம் என்பதால், வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு இந்தக் கோப்பை ஏன் முக்கியமானது?
இந்திய அணி கடைசியாக 2013ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது. அதன்பின் 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இறுதிப்போட்டிவரை பல போட்டிகளுக்கு சென்றும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்த முறை நடக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் பல மூத்த வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட அமையலாம்.
முகமது ஷமி காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் வயது காரணமாக அடுத்த 2025-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். ஆதலால், இந்த டி20 உலகக் கோப்பை மூத்த வீரர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அது மட்டுமல்லாமல் கோலி கேப்டன்ஷிப்பில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. அவருக்குப்பின் கேப்டன் பதவி ஏற்ற ரோஹித் சர்மா கடந்த முறை ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிவரை இந்திய அணியைக் கொண்டு சென்றும் கோப்பையைத் தவறவிட்டார்.
இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லத் தீவிரம் காட்டும். ரோஹித் சர்மாவுக்கும், கோலிக்கும் இது கடைசி வாய்ப்பு என்பதால் இருவரிடம் இருந்தும் முழுமையான பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அணிகளுடன் இந்திய அணிக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று நம்பினாலும், பாகிஸ்தானுடன் ஆட்டம் கடும் சவாலாக இந்திய அணிக்கு அமையக்கூடும்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருந்த கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின், முகமது ஷமி, ஹர்சல் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இந்த முறை இல்லை.
அதற்குப் பதிலாக இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியது பெரிய பலம் என்றாலும் அவருக்குத் துணையாகப் பந்துவீச தரமான அளவில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்றே பரவலாகக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கரீபியன் ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு எவ்வாறு எடுபடும் என்பது போட்டி நடக்கும்போதுதான் தெரியவரும். இது தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறன.

பட மூலாதாரம், Getty Images
1000 ரன்களுக்கு மேல் குவித்த 8 இந்திய வீரர்கள்
பேட்டிங்கிற்கு வலு சேர்க்க ஜெய்ஸ்வால், ஆல்ரவுண்டருக்காக ஷிவம் துபே, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
கடந்த உலகக் கோப்பையைவிட அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்களும் கலந்த கலவையாக இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டர்களில் 8 பேர் டி20 போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிக்கும் திறமை படைத்த டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள்.
குறிப்பாக 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்தை விளாசும் திறமையான பேட்டர். கிரிக்விஸ் தளத்தின் ஆய்வுப்படி, டி20 போட்டிகளில் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்டர்களில் சூர்யகுமார்தான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளது.
விராட் கோலி நடந்து முடிந்த ஐபிஎல் டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் துவக்க ஜோடி எப்படி?
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மாவுக்கு இந்த சீசன் ஐபிஎல் தொடர் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது, ஒரு சதம் அடித்தபின், பெரும்பாலான போட்டிகளில் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் மிகப்பெரிய பலமாக அணிக்கு அமையும்.
அதேபோல ஜெய்ஸ்வாலுக்கும் இந்த ஐபிஎல் சீசன் பெரிதாக அமையவில்லை. கடந்த 2023 சீசன் ஜெய்ஸ்வாலுக்கு பொற்காலமாக இருந்தநிலையில் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவு அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஐபிஎல் முதல்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை ஷிவம் துபே வெளிப்படுத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவரால் பெரிதாக ரன் சேர்க்க முடியவில்லை. இந்நிலையில் நடுப்பகுதி பேட்டிங்கை வலுப்படுத்த ஷிவம் துபேவை களமிறக்கும்போது அவரின் செயல்பாடு பெரிதாக எதிர்பார்க்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பந்துவீச்சு எப்படி உள்ளது?
பந்துவீச்சில் பும்ரா மட்டும் ஐபிஎல் சீசனில் கட்டுக்கோப்பாக பந்துவீசி எக்கானமியை சிறப்பாக வைத்திருந்தார். ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பைக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அவரின் செயல்பாடு பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் உலகக் கோப்பையில் பாண்டியா எவ்வாறு பந்துவீசப் போகிறார், பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வாகாத ரவீந்திர ஜடேஜா இந்த முறை அணிக்குள் வந்துள்ளது பலமாகும். சுழற்பந்துவீச்சிலும், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே சிறப்பாக இருந்து நல்ல ஃபார்மில் உள்ளார்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் மெருகேறி இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு குல்தீப் பந்துவீச்சு துருப்புச்சீட்டாக இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 14 சராசரி வைத்துள்ளார். இந்தியாவில் எந்த பந்துவீச்சாளரும் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி குறைவான சராசரி வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இருவருமே பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இதில் இடதுகை பேட்டர்கள் தேவைப்பட்டால் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் சாம்ஸனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் உறுதி.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷிவம் துபே இருப்பது பேட்டிங்கிலும், பகுதிநேர பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் பாகிஸ்தானின் பவர் ஹிட்டர்கள்
பாகிஸ்தானைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது. ஆனால், 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியதால், கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் விலகினார்.
ஆனால் டி20 போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்திய பெருமை பாபர் ஆஸமிற்கு இருப்பதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசம் கான், பாபர்ஆஸம், பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கேப்டன் பாபர் ஆஸம் மட்டும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு 5 பந்துக்கு ஒரு பவுண்டரி அடிக்கும் வகையில் சராசரியை பாபர் ஆஸம் வைத்துள்ளது அந்த அணிக்கு பெரிய பலம். 118 டி20 போட்டிகளில் 3,987 ரன்களுடன் பாபர் ஆஸம் சராசரி 41 ரன்களும், 129 ஸ்ட்ரைக் ரேட்டும் என வலுவான பேட்டராகத் திகழ்கிறார். ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இருமுறை பைனலுக்கும், அரையிறுதிக்கும் அழைத்துச் சென்ற அனுபவம் வாய்ந்த கேப்டனாக பாபர் ஆஸம் இருக்கிறார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றிகளில் பாபர் ஆஸம் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. பாபர் ஆஸம் நங்கூரமிட்டாலே பெரும்பாலான ஆட்டங்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
துருப்புச் சீட்டாக விளங்கும் இமாத் வாசிம்
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இப்திகார் அகமது அரசைதம் பெரிதாக உதவியது. இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தவிர சயிம் அயூப், முகமது ரிஸ்வான், பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சதாப் கான், இமாத் வாசிம், அப்ரர் அகமதுவும், வேகப்பந்துவீச்சுக்கு ஷாஹீன்ஷா அப்ரிதி, முகமது அமிர், அப்பாஸ் அப்ரிதி, ஹாரிஸ் ராப், நசீம் ஷா என பெரிய படை உள்ளது.
இதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிம் கரீபியன் மைதானங்களில் மட்டும் 54 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர். ஜமைக்கா தலாவாஸ் அணியில் இடம் பெற்று இமாத் வாசிம் பந்துவீசியிருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கரீபியன் மைதானங்களில் மட்டும் 58 விக்கெட்டுகளை இமாத் வாசிம் வீழ்த்தி 18 சராசரி வைத்துள்ளார்.
கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியில் இருந்த ஹைதர் அலி, ஆசிப் அலி, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், ஷான் மசூத், முகமது நவாஸ், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இந்த முறை பாகிஸ்தான் அணியில் இல்லை.
இவர்களுக்குப் பதிலாக, அப்ரார் அகமது, ஆசம் கான், இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், சயீம் அயூப், உஸ்மான் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் அப்ரார் அமகது, ஆசம் கான், அப்பாஸ் அப்ரிதி, சயூம் அயூப், உஸ்மான் கான் ஆகியோருக்கு இது முதல் உலகக் கோப்பைத் தொடராகும். இதில் அப்ரார் அகமது மட்டும் ஸ்பெலிஸ்ட் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது, இதில் ஓய்வு அறிவித்திருந்த இமாத் வாசிம் இந்த தொடருக்காக மீண்டும் வந்துள்ளார்.
இந்த டி20 உலகக் கோப்பைத்தொடருக்காக தென் ஆப்பிரிக்க முன்னாள்வீரர் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக பாகிஸ்தான் அமர்த்தியுள்ளது. கிறிஸ்டன் தலைமையில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியது. இது தவிர பீல்டிங் பயிற்சியாளராக சிமன் ஹெல்மட்டையும், உளவியல் பயிற்சியாளராக டேவிட் ரீடையும் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்காக அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
நேருக்கு நேர்
கடந்த 1952ம் ஆண்டில் தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் இன்றுவரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் தொடங்கிய மோதல், ஒருநாள் போட்டிக்கு படர்ந்து, டி20 வரை நீண்டுள்ளது.
ஆனால் அரசியல்காரணங்களுக்காக இரு அணிகளுக்கு இடையே கடந்த 1962 முதல் 1971 வரை எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. ஆனால், 2008-ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா ரத்து செய்தது.
இரு அணிகளும் சர்வதேச போட்டிகளில் மட்டும் பொதுவான நாடுகளில் நடக்கும் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். மற்ற வகையில் இருதரப்பு நாடுகளின் பயணங்கள், கிரிக்கெட் தொடர்கள், கடந்த 14 ஆண்டுகளாக நடக்கவில்லை
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை வென்றுள்ளது, ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 12 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8 வெற்றிகளும், பாகிஸ்தான் 3 வெற்றிகளும் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2012-இல் ஆமதாபாத்தில் நடந்த டி20 போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.
அதேபோல, 2016ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தாகாவில் நடந்த ஆட்ட்டத்தில் பாகிஸ்தானை 83 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியதுதான் குறைந்தபட்ச ஸ்கோரில் ஆட்டமிழந்ததாகும்.
இந்திய அணிக்கு எதிராக 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் 79 ரன்கள் சேர்த்ததுதான் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் இந்திய அணிக்கு எதிராக முகமது ஆசிப் 2007ல் டர்பனில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 18 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அணி விவரம்
இந்திய அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யாஸஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தான் அணி:
பாபர் ஆஸம்(கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ராப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது அமிர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சயிம் அயூப், சதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிதி, உஸ்மான் கான்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












