கங்காருவுக்கு முன்பு ஆஸ்திரேலிய நிலப்பரப்பை ஆண்ட விசித்திர உயிரினம்

பட மூலாதாரம், Peter Shouten/Australian Museum
- எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
- பதவி, பிபிசி
வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் 'எக்கிட்னாபஸ்' என்று அழைக்கப்படும் ஒரு விநோதமான உயிரினம் வாழ்ந்ததற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த உயிரினத்தின் தாடை எலும்பின் புதைபடிவ எச்சங்கள் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு மேலும் பல பண்டைய உயிரினங்கள் மற்றும் அழிந்து வரும் மோனோட்ரீம் இனங்களின் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோனோட்ரீம் (Monotreme) என்பது முட்டையிடும் பாலூட்டிகளாகும் ஆகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய உயிரினத்துக்கு 'ஓபலியோஸ் ஸ்ப்ளென்டென்ஸ்’ (Opalios splendens) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இனம் பிளாட்டிபஸ் மற்றும் எக்கிட்னாவுடன் ஒத்திருப்பதால் 'எக்கிட்னாபஸ்' என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டது. 'எக்கிட்னா' என்பது இன்று உலகில் வாழும் ஒரே முட்டையிடும் பாலூட்டி இனம். மற்ற இனங்கள் அழிந்துவிட்டன.
ஆராய்ச்சியை மேற்கொள்ளும் குழு, "ஆஸ்திரேலியாவில் ஒரு காலத்தில் 'மோனோட்ரீம்களின் காலகட்டம்' இருந்ததை ஆய்வு தெரியப்படுத்துகிறது” என்று கூறியது. இவற்றில் நம்ப முடியாத பல அரிய வகை உயிரினங்கள் ஏராளமாகவும், ஆதிக்கம் செலுத்துபவையாகவும் இருந்திருக்கும் என்கின்றனர்.
"இந்த ஆய்வு ஒரு புதிய நாகரிகத்தை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது" என்று முன்னணி எழுத்தாளரும் பேராசிரியருமான டிம் ஃப்ளானரி கூறினார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால ஆராய்ச்சியாளர் எலிசபெத் ஸ்மித் மற்றும் அவரது மகள் க்ளைட்டி ஆகியோர் ஓபல் (படிக கற்கள்) சுரங்கத்தின் அமைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 'மோனோட்ரீம்’ உயிரினங்களின் புதைபடிவங்களை கண்டுபிடித்தனர்.
சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்ட இந்த புதைப்படிவ மாதிரிகளை அவர்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினர். ஆனால் அந்த புதைபடிவங்கள் கண்டுகொள்ளப்படாமல் அருங்காட்சியக டிராயரில் வைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அதனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
பாலூட்டும் விலங்குகளை ஆய்வு செய்யும் பேராசிரியர் ஃபிளானெரி, அந்த புதைபடிவங்களை கண்டவுடன் அதிர்ச்சியானதாகவும், அவை பழங்கால மோனோட்ரீம்களின் எச்சங்கள் என்றும் உடனடியாக அறிந்து கொண்டதாக கூறுகிறார்.
அருங்காட்சியகத்தில் இருந்த புதைபடிவ மாதிரிகளில் சில எலும்புகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட `ஸ்டெரோபோடான் கால்மனி’ (Steropodon galmani) இன உயிரினங்களுடையது. இவை பிளாட்டிபஸ் இன விலங்கின் குட்டையான மூதாதையர்களாகும். ஆனால் மற்ற மாதிரிகள் இதற்கு முன்னர் ஆய்வில் கண்டறியப்படாத விலங்கின் சுவடுகளை கொண்டிருந்தது.
அவற்றை தீவிரமாக ஆய்வு செய்த டாக்டர் ஃப்ளானரி மற்றும் அவரது குழுவினர் இதற்கு முன்னர் அறியப்படாத மூன்று இனங்களின் சுவடுகளை கண்டுபிடித்தனர், இது திங்களன்று `Alcheringa: An Australasian Journal of Palaeontology’ என்னும் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது.
"இந்த புதைபடிவ மாதிரிகளில் இதற்கு முன் பார்த்திராத மோனோட்ரீம் இனங்களின் பண்புகள் இருந்தன’’ என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியக ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் கிரிஸ் ஹெல்கன் கூறுகிறார்.
"ஓபலியோஸ் ஸ்ப்ளென்டென்ஸ் இனத்தின் ஒட்டுமொத்த உடற்கூறியல் அநேகமாக பிளாட்டிபஸ் இனத்தை ஒத்தது தான். ஆனால் தாடை மற்றும் மூக்கு பகுதிகள் மட்டும் எக்கிட்னா இனத்தை போன்று உள்ளது. எனவே இந்த இரண்டு உயிரினங்களின் கலவையாக 'எக்கிட்னாபஸ்' இருந்திருக்கும்" என்று பேராசிரியர் ஹெல்கன் கூறுகிறார்.
"ஓபல் சுரங்கப் பகுதியில் கிடைத்த புதைபடிவங்கள் அனைத்துமே அரிதானவை. குறிப்பாக இந்த மோனோட்ரீம் இனத்தின் மாதிரிகள் மிகவும் முக்கியமாக புரிதலுக்கு வழிவகுக்கும்" என்கிறார் திருமதி ஸ்மித்.
ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் லைட்னிங் ரிட்ஜ் (Lightning Ridge) என்னும் பகுதி, கடற்கரையில் குளிர்ந்த காட்டு பகுதியாக இருந்தது. அங்கு வாழ்ந்ததாக அறியப்படும் மோனோட்ரீம் இனங்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உயிரினங்களின் புதைபடிவ எச்சங்கள் தான் ஓபல் சுரங்கப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
"ஆஸ்திரேலியா, கங்காரு போன்ற மடி கொண்ட மார்சுபியல் (marsupials) இன பாலூட்டி விலங்கினங்கள் வாழ்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முட்டையிடும் பாலூட்டிகளான மோனோட்ரீம்களின் நிலமாக இருந்தது என்பதை இந்த புதைபடிவங்கள் உலகுக்குக் காட்டுகின்றன" என்று ஸ்மித் பெருமிதத்துடன் கூறுகிறார்.
"100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில், கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ வேறு எங்கும் இல்லாத அளவுக்கு லைட்னிங் ரிட்ஜ் பகுதியில் அதிக மோனோட்ரீம்கள் இருந்ததாகத் தெரிகிறது." என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் மற்ற வல்லுநர்கள், ஆஸ்திரேலியா ஒரு காலத்தில் ஏராளமான மோனோட்ரீம்களின் நிலமாக இருந்தது என்பதை நிரூபிக்க மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறுகின்றனர்.
"இது பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவில் தோன்றிய மார்சுபியல் விலங்கினங்களில் இருந்து வேறுபட்டதாக இருந்திருக்கலாம். ஆனால் உறுதியாக கூற எனக்கு கூடுதல் சான்றுகள் தேவைப்படும்" என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக பழங்கால ஆராய்ச்சியாளர் ராட் வெல்ஸ் ஆஸ்திரேலிய ஊடகத்திடம் கூறினார்.
ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஆதரிக்க, ஆஸ்திரேலியா அரசு நிதியுதவி செய்து ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












