சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்த 14 போராளிகளை குற்றவாளிகள் என அறிவித்த ஹாங்காங் நீதிமன்றம்

- எழுதியவர், யவெட்டே டான்
- பதவி, பிபிசி செய்திகள்
சுமார் 68 வயதான எதிர்க்கட்சித் தலைவர் முதல் 27 வயது மாணவ செயற்பாட்டாளர் வரை, ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு (Pro-democracy camp) முகாமின் பிரசாரகர்கள் 14 பேர், பிராந்தியத்தின் மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு வழக்கில் ஹாங்காங் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
‘ஹாங்காங் 47’ என அழைக்கப்படும் 47 எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களில் இந்த 14 பேரும் அடங்குவர். சீனாவால் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Law) கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த 47 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த நடவடிக்கை மிகப்பெரிய ஒடுக்குமுறையாகக் கருதப்பட்டது.
இந்த 47 பேர் (8 பெண்கள் மற்றும் 39 ஆண்கள்) அதிகாரப்பூர்வமற்ற முதன்மைத் தேர்தல் மூலம் ஹாங்காங் அரசாங்கத்தை ‘கவிழ்க்க’ முயல்வதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இந்த முதன்மை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், சட்டம் இயற்றுபவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், ‘ஹாங்காங் 47’ ஆர்வலர்களின் இந்தத் திட்டம் ஒரு பெரும் ‘அரசியலமைப்பு நெருக்கடியை’ உருவாக்கியிருக்கும் என்ற வழக்கறிஞர்களின் வாதத்தை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் ஏற்றுக்கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images
வியாழன் அன்று 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினர். அவர்களில் 14 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். லாரன்ஸ் லாவ், ஒரு பாரிஸ்டர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மற்றும் லீ யூ-ஷுன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர். இந்த இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த 14 பேருக்கான தண்டனை குறித்த விவரம் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீதமுள்ள 31 பேர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களில் நான்கு பேர் வழக்கு தொடுத்த தரப்பிற்கு ஆதரவாக சாட்சியமளித்தனர், இதில் முன்னாள் அரசாங்கத் தலைவர்கள் அயு நோக்-ஹின், ஆண்ட்ரு சியூ ஆகியோர் அடங்குவர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டு, சாட்சியமளிப்பது பொதுவாகக் குறைந்த தண்டனைக்கு வழிவகுக்கும் என்றாலும், இது என்எஸ்எல் (தேசிய பாதுகாப்புச் சட்டம்) சட்டத்திற்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி ஹாங்காங்கில் ஜூலை 2020இல் முதன்மை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என்எஸ்எல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சார்பு முகாம் சார்பாகப் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டும், சீனா இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து ஆமோதிக்கிறது. ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இது உதவும் என்றும் சீனா கூறுகிறது. ஆனால் ஹாங்காங்கின் மதிப்புமிக்க சுயாட்சி மற்றும் சுதந்திரங்களை இந்தச் சட்டம் பறித்துவிட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
‘ஹாங்காங் 47’ என்பவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images
இந்த 47 பேரில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டம் இயற்றுபவர்களான கிளாடியா மோ, ஹெலினா வோங், குவாக் கா-கி மற்றும் 2014இல் ஹாங்காங்கை உலுக்கிய, ஜனநாயக சார்பு முகாம் போராட்டங்களின் முகங்களாக இருந்த ஜோசுவா வோங், பென்னி தை போன்ற சிலர் பிரபலமானவர்கள்.
ஆனால் இந்தக் குழுவில் உள்ள ஓவன் சோவ், வென்டஸ் லாவ் மற்றும் டிஃப்பனி யுவன் போன்ற பலர் புதிய தலைமுறை குரல் செயற்பாட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
நகரின் சட்ட மேலவைக்குள் (LegCo- லெக்கோ) புகுந்து, ஹாங்காங்கின் சின்னத்தை வரைந்தது 2019ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களில் ஒரு முக்கிய தருணமாகப் பார்க்கப்பட்டது. அவ்வாறு செய்த நூற்றுக்கணக்கானவர்களில் ‘ஹாங்காங் 47’ குழுவின் லாவ் மற்றும் சோவ் ஆகியோர் அடங்குவர்.
நேரடி அரசியலில் ஈடுபடாமல், ஆனால் 2019 எதிர்ப்புகளால் உற்சாகமடைந்தவர்களான ஹென்ட்ரிக் லூய் போன்ற சமூக சேவகர்கள், மைக் லாம் போன்ற தொழில்முனைவோர், முன்னாள் செவிலியரான வின்னி யூ ஆகியோரும் இந்த 47 பேரில் அடங்குவர்.
பிற முக்கிய நபர்களான நாதன் லா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெட் ஹுய் போன்றவர்களும் முதன்மைத் தேர்தலில் போட்டியிட்டனர், ஆனால் பின்னர் ஹாங்காங்கில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
எனவே 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 47 பேர் கைது செய்யப்பட்ட நேரத்தில், ஹாங்காங்கின் பெரும்பாலான ஜனநாயக சார்பு முகாம் பிரசாரகர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர் அல்லது நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் இன்றுவரை சிறையில் உள்ளனர், ஏனெனில் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவல்கள் என்பது என்எஸ்எல் சட்டத்தின் கீழ் வழக்கமாகிவிட்டன.
பேராசிரியர் - பென்னி டாய்

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங் சுதந்திரத்தை ஆதரித்ததற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ‘சர்வாதிகாரம்’ என்று விவரித்ததற்காகவும், சீனா அவரை ‘கடுமையான வம்புக்காரர்’ என்று அழைத்தது.
அறிஞரும் சட்டப் பேராசிரியருமான பென்னி டாய், ஜனநாயகத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உள்ளிருப்புப் போராட்டத்தை முன்மொழிந்து செய்தித்தாளில் கட்டுரை எழுதியபோது முதலில் கவனத்தை ஈர்த்தார்.
இதுதான் இறுதியில் மேலும் இருவருடன் சேர்ந்து அவர் நிறுவிய ‘ஜனநாயக சார்பு ஆக்கிரமிப்பு மைய இயக்கமாக’ மாறியது. இது ஹாங்காங்கில் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒத்துழையாமை பிரசாரமாகும்.
இயக்கம் உடைந்தது, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019இல், போராட்டங்களில் ஈடுபட்டதற்காக பென்னி டாய் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஒரு வருடம் கழித்து, என்எஸ்எல் சட்டம் திணிக்கப்பட்ட பிறகு, தனது குற்றவியல் தண்டனையின் காரணமாகப் புகழ்பெற்ற ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் (HKU) தனது பணியிலிருந்து நீக்கப்பட்டார் பேராசிரியர் பென்னி டாய்.
பல்கலைக்கழகம் சீன அழுத்தத்திற்கு அடிபணிவதாக டாய் குற்றம் சாட்டினார், மேலும் அதை ஹாங்காங்கின் ‘கல்வி சுதந்திரத்தின் முடிவு’ என்று விவரித்தார்.
"எனது அன்புக்குரிய பல்கலைக்கழகத்தின் நிலையைக் கண்டு நான் மனம் உடைந்தேன்" என்று 60 வயதான அவர் பின்னர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பாகவே, ‘சட்டவிரோத’ முதன்மைத் தேர்தல் என்று ஹாங்காங் மற்றும் சீன அதிகாரிகளால் அழைக்கப்பட்ட தேர்தலை ஏற்பாடு செய்ததற்காக என்எஸ்எல்-இன் கீழ் அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
மாணவர் - ஜோசுவா வோங்

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்கின் மிகவும் பிரபலமான ஜனநாயக சார்பு ஆர்வலரான ஜோசுவா வோங்கின் செயல்பாட்டிற்கான பயணம் 14 வயதில் இருந்து தொடங்கியது.
கடந்த 2014ஆம் ஆண்டு வாக்கில், அவர் குடை இயக்கத்தின் (Umbrella movement) முகமாக மாறியிருந்தார். குடை இயக்கம் என்பது குடையை அரசியல் அடையாளமாகக் கொண்டு, பெரும் மாணவர்கள் கூட்டத்தால் நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு போராட்டம். இது மத்திய ஆக்கிரமிப்பு உள்ளிருப்புப் போராட்டத்துடன் சேர்ந்து இதற்கான எழுச்சி தொடங்கியது.
அவரது அரசியல் செயல்பாடு காரணமாக முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு வெறும் 20 வயது. 2019ஆம் ஆண்டு ஒன்று உட்பட, அவர் பல முறை சிறைக்குச் சென்றுள்ளார். குறிப்பாக நூறாயிரக்கணக்கான மக்கள் பெரும் சர்ச்சைக்குரிய ஒப்படைப்பு மசோதாவுக்கு எதிராக அணிவகுத்தபோது அவர் சிறையில் இருந்தார்.
ஹாங்காங் குடிமக்களை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு விசாரணைக்காக நாடு கடத்த அனுமதிக்கும் மசோதா இது. இந்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் ஹாங்காங்கில் பல மாதங்களாக நடந்தன.
வான் சாய் மாவட்டத்தில் 15 மணிநேரத்திற்கு காவல்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானவர்களில் வோங்கும் ஒருவர். அப்போது அவர்கள் காவல்துறை கட்டடத்தின் மீது முட்டைகளை வீசினர் மற்றும் அதன் சுவர்களில் கிராஃபிட்டி வரைந்தனர். 2019, ஜூன் மாதம் இது நடந்தது.
"காவல்துறை தலைமையகத்தை முழுமையாக முற்றுகையிடுங்கள்" என அவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வீடியோவை சுட்டிக்காட்டி அவர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். வோங், ஒரு நன்கு அறியப்பட்ட பிரசாரகராக இருந்தபோதிலும், 2019 எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு தன்னிச்சையான, ‘தலைமையற்ற’ இயக்கமாகத்தான் பார்க்கப்பட்டது.
எதிர்ப்பு போராட்டங்களில் அவரது பங்கிற்காக கைது செய்யப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் வோங். ஆனால், குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகும் அவர் தொடர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
“ஒருவேளை, நான் தொடர்ந்து சிறையில் இருக்க அதிகாரிகள் விரும்பலாம். ஆனால், சிறைக் கம்பிகளோ, தேர்தல் தடைகளோ, வேறு எந்த தன்னிச்சையான அதிகாரங்களோ நம்மைச் செயல்பாட்டில் இருந்து தடுக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
என்எஸ்எல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் அவர் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
‘மார்க்சிஸ்ட் புரட்சியாளர்’

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டம் இயற்றுபவரான லியுங் குவோக்-ஹங், அவரது நீண்ட முடி அவரது அடையாளம், அவர் ஒருமுறை தன்னை ‘மார்க்சிஸ்ட் புரட்சியாளர்’ என்று விவரித்தார்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். 68 வயதான அவர் தனது அரசியல் நாடகங்களுக்குப் பெயர் பெற்றவர். எதிர்ப்பின் அடையாளமாக வாழைப்பழங்களை வீசுவது அவரது தனித்துவமான நடவடிக்கைகளில் ஒன்று. 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் சட்டம் இயற்றுபவராகப் பதவியேற்றபோது, அரசியல் பதாகையுடன் கூடிய பலூனை பறக்கவிட்டு மஞ்சள் குடை பிடித்து, ‘குடை இயக்கம் ஒருபோதும் முடிவுக்கு வராது’ என்று அறிவித்தார்.
இதனால் அவர் கவுன்சிலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் என்எஸ்எல் திணிக்கப்பட்ட பிறகு, அவர் தனது நீண்டகால கூட்டாளியான வனேசா சானை மணந்தார். ஒரு முக்கிய சமூக ஆர்வலரான வனேசா சான், ‘சான் போ-யிங்’ என்றும் அழைக்கப்படுகிறார். லீக் ஆஃப் சோஷியல் டெமாக்ராட்ஸ் (League of Social Democrats) என்ற அரசியல் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர்.
அவர்களில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டாலும்கூட, ‘இணையைச் சிறைக்குச் சென்று சந்திப்பதற்கான உரிமை’ போன்ற சட்ட உரிமைகள் தங்களுக்குக் கிடைக்கும் என்பதால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
திருமணத்திற்கு 40 நாட்களுக்குப் பிறகு, லியுங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக களத்தில் போராடும் கிளாடியா மோ

பட மூலாதாரம், Getty Images
கான்டோனீஸ் மொழியில் ஆன்ட்டி மோ (Auntie Mo) என்று அன்புடன் அழைக்கப்படும் கிளாடியா மோ, ஒரு முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர்களில் முக்கியமானவர்.
அவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையில் ஒரு பத்திரிகையாளராக இருந்தார். அங்கு பணியில் இருந்தபோது 1989 தியனன்மென் சதுக்கத்தின் அடக்குமுறையைக் குறித்து செய்திகள் வெளியிட்டார். 67 வயதான அவர் 2006இல் எதிர்க்கட்சியான சிவிக் கட்சியை நிறுவ உதவினார். மேலும் 2012 வாக்கில், அவர் சட்ட மேலவையில் (LegCo) ஒரு இடத்தை வென்றார். அந்தப் பதவியில் நீடிக்கத் தனது பிரிட்டன் குடியுரிமையைத் துறந்தார்.
கடந்த 2020 நவம்பரில் நான்கு ஜனநாயக சார்பு சட்டம் இயற்றுபவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் ஹாங்காங் சட்ட மேலவையில் இருந்து மொத்தமாக ராஜினாமா செய்த 15 உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.
"ஹாங்காங்கின் மீதான சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்குள்ள எதிர்ப்பை அமைதிப்படுத்த அவர்கள் எடுக்கும் இறுதி முயற்சிக்கு எதிராக இதைச் செய்தோம்" என்றார் அவர்.
'கடந்த 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, அதிகாலையில் அவரைக் கைது செய்ய, அவரது வீட்டை துவம்சம் செய்து உள்ளே நுழைந்தது காவல்துறை' என பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ (Financial times) செய்தி வெளியிட்டது. மேலும் இதை ‘சுத்த குண்டர்த்தனம்’ என்று அந்த சர்வதேச ஆங்கில நாளிதழ் விவரித்தது.
இன்றுவரை சிறையில் உள்ளார் கிளாடியா மோ. அவரது கணவர், பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பிலிப் பௌரிங், உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கூட, சிறையில் இருந்து சென்று அவரைச் சந்திக்க கிளாடியா மோ அனுமதிக்கப்படவில்லை.
தன்பாலின பிரசாரகர் - ஜிம்மி ஷாம்

பட மூலாதாரம், Getty Images
நீண்டகால அரசியல் மற்றும் தன்பாலின ஆர்வலரான, ஜிம்மி ஷாம் ஹாங்காங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு குழுக்களில் ஒன்றான சிவில் மனித உரிமைகள் முன்னணிக்கு (CHRF- சிஎச்ஆர்எப்) தலைமை தாங்கினார்.
இந்தக் குழு 2021இல் கலைக்கப்பட்டது, சீனாவின் அடக்குமுறையால் தாங்கள் சந்திக்கும் மோசமான சவால்களுக்கு மத்தியில் இனியும் செயல்பட முடியாது என்று அவர்கள் கூறினர்.
கடந்த 2019இல் பலமுறை மோசமாகத் தாக்கப்பட்டார் ஷாம். ஒருமுறை, தலையில் காயத்துடன் ரத்தம் சொட்டத் தெருவில் விடப்பட்டார். சிஎச்ஆர்எஃப் குழு, அரசாங்க ஆதரவாளர்களைக் குற்றம் சாட்டியது. மேலும் அந்த நேரத்தில் ஜனநாயக சார்பு ஆர்வலர்களுக்கு எதிரான பிற தாக்குதல்களுக்கும் அவர்களையே குற்றம் சாட்டியது, ஆனால் அவை ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.
ஜிம்மி ஷாமுக்கு 37 வயதாகிறது. அவர் 2013இல் நியூயார்க்கில் தனது துணையை மணந்தார். வெளிநாட்டு தன்பாலின திருமணங்களை ஹாங்காங் அங்கீகரிக்க வேண்டுமெனப் போராடினார். 2023ஆம் ஆண்டில், ஹாங்காங்கின் உயர்நீதிமன்றம் தன்பாலின உறவை அங்கீகரிக்க ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டபோது, தனது போராட்டத்தில் ஓரளவு வெற்றி பெற்றார் ஷாம்.
ஆனால் அப்போது ஹாங்காங்கின் முதன்மைத் தேர்தல்களில் பங்கு வகித்ததற்காக சிறையில் இருந்தார் ஷாம். அவருக்கு ஜாமீன் பலமுறை மறுக்கப்பட்டது. ஷாம் ஒரு மன உறுதி நிறைந்த இளைஞர் என்றும், அவர் விடுவிக்கப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களை அவர் தொடர்ந்து செய்வார் என்றும் ஒரு நீதிபதி கூறினார்.
பத்திரிகையாளர் - க்வினெத் ஹோ

பட மூலாதாரம், Getty Images
முப்பத்தி மூன்று வயதான க்வினெத் ஹோ, வியாழன் அன்று ‘நாசவேலைக்காக’ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக பிபிசி சைனீஸ், அரசாங்கத்தால் நடத்தப்படும் ‘ஆர்டிஹெச்கே’ ஒளிபரப்பு சேவை, ஸ்டாண்ட் நியூஸ் உள்ளிட்ட பல செய்தி முகமைகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது ஒரு கும்பலால் தான் தாக்கப்பட்டதை அவர் கவனக்குறைவாக நேரலையில் ஒளிபரப்பியபோது, அவர் புகழ் பெற்ற நபராக மாறினார். அந்தத் தாக்குதலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹாங்காங் அதிகாரிகளால் சட்டவிரோதமாகக் கருதப்பட்ட 2020 முதன்மைத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். மேலும் அவரது தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளையும் பெற்றார். ஓராண்டு கழித்து, அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின்போது, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து 12 ஜனநாயக சார்பு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்தது தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.
"சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் ஜனநாயகத்திற்காகப் போராடுவது எப்போதுமே ஒரு கற்பனையே என்பதைப் பெரும்பாலான ஹாங்காங் குடிமக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
ஆனால் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் லீ, அவரை "அமைதியாக இருங்கள்" என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












