சர் ஜான் லாரன்ஸ்: டைட்டானிக் மூழ்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த பயங்கர கப்பல் விபத்து

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அமிதாபா பட்டாசாலி
    • பதவி, பிபிசி செய்தியாளர், கொல்கத்தாவில் இருந்து

இந்தியாவில் 137 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரிய கப்பல் விபத்தின் கதை இது.

கடந்த 1887ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி ‘ஜான் லாரன்ஸ்’ என்ற கப்பல் கடலில் விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பல் கல்கத்தாவில் இருந்து (தற்போது கொல்கத்தா) ஒடிஷா மாநிலம் பூரிக்கு சென்று கொண்டிருந்த போது பாகீரதி ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள சாகர் தீவு பகுதியில் சிக்கிக் கொண்டது.

இந்தக் கப்பலில் மொத்தம் 750 பயணிகள் இருந்ததாக அந்தக் கப்பலை இயக்கிய நிறுவனம் அளித்த தகவல் தெரிவிக்கிறது. இந்த விபத்து குறித்த செய்தி அப்போதைய நாளிதழ்களில் வெளியானது. ஒரு பயணிகூட உயிர் பிழைக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விபத்தின் வரலாற்றின் பக்கங்களை பிபிசி புரட்டிக் கொண்டிருந்த போது, தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் அந்தக் கப்பலில் பயணம் செய்யாமல் உயிர்தப்பிய சிலரின் பெயர்கள் மற்றும் தகவல்கள் கிடைத்தன.

இந்தக் கப்பல் விபத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் கப்பல் நீரில் மூழ்கியது. இரண்டு விபத்துகளும் ஒப்பிட முடியாதவை என்றாலும், ஜான் லாரன்ஸ் கப்பல் விபத்து, அந்தக் காலகட்டத்தை மனதில் கொள்ளும்போது மிகவும் மோசமானதுதான்.

ரவீந்திரநாத் தாகூர் தனது 'சிந்து தரங்' கவிதையை லாரன்ஸ் கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணித்தார்.

"இது பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து. ஒடிஷாவை ஒட்டிய கடற்கரையில் மொத்தம் 130 கப்பல்கள் மூழ்கியுள்ளன,” என்கிறார் ஒடிஷாவை சேர்ந்த ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான அனில் தீர்.

பூரி ஜெகந்நாதரை தரிசிக்க கப்பலில் சென்ற மக்கள்

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூரி ஜகன்நாதர் கோவில் (ஓவியம்)

இந்தக் கப்பல் விபத்தின்போது ​​ஹெளராவில் இருந்து தென்னிந்தியா வரையிலான ரயில் பாதை முழுமையாகப் போடப்பட்டிருக்கவில்லை. கப்பல் விபத்துக்கு 12-13 ஆண்டுகளுக்குப் பிறகு 1899-1990க்கு இடையில் ஹெளரா நிலையத்திலிருந்து கட்டாக்கிற்கு ரயில் பயணம் துவங்கியது. கட்டாக்கில் இருந்து பூரிக்கு மற்றொரு பாதை இருந்தது.

முன்னதாக, வங்க மக்கள் பூரி ஜெகந்நாதரை தரிசனம் செய்வதற்காக ஒற்றை மாட்டு வண்டியில் பயணம் செய்தனர், அல்லது கால்நடையாகச் சென்றனர். பல கப்பல் நிறுவனங்கள் இத்தகைய பயணிகளை மனதில் வைத்து சிறப்பு சேவைகளைத் துவங்கின.

கப்பல்கள் மற்றும் ஸ்டீமர்களின் சேவைகள் தொடங்கியபோது, ​​பல வங்கப் பெண்களும் குழந்தைகளும் அவற்றில் பயணம் செய்தனர்.

"பெரும்பாலான இந்தக் கப்பல்கள் மிகவும் பழையவை. ஓய்வு பெறவேண்டிய நிலையில் இருந்தவை. இவை நீண்ட காலமாகப் பிற வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டு, இறுதியாகக் குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதற்காக இங்கு அனுப்பப்பட்டன,” என்றார் அனில் தீர்.

சர் ஜான் லாரன்ஸ் கப்பலுக்கும் இதே நிலைதான். இது கொல்கத்தாவில் உள்ள கங்கைப் படித்துறையில் இருந்து ஒடிஷாவின் சாந்த்பலி வரை சென்றது.

சுவாமி விவேகானந்தரின் சகோதரர் மகேந்திரநாத் தத், 'ஆஜாதஷத்ரு ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தா' என்ற புத்தகத்தில் இந்த வழித்தடம் பற்றி விளக்கியுள்ளார்.

தற்போது இணையத்தில் கிடைக்கும் இந்நூல் கடைசியாக 1939-40-இல் பதிப்பிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் 64-வது பக்கத்தில்,“அந்தக் காலத்தில் பூரிக்குச் செல்வதற்காக மக்கள் படகில் சாந்த்பலியை அடைவார்கள். அங்கிருந்து மாட்டு வண்டியில் செல்வது வழக்கம்,” என்று மகேந்திரநாத் தத் எழுதியுள்ளார்.

அதே ஆண்டு மே 25-ஆம் தேதி, சர் ஜான் லாரன்ஸ் கப்பல், கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) துர்கா பிரசாத் சோட்டேலால் படித்துறையில் இருந்து புறப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு ஜூன்-ஜுலை மாதம் நடைபெறும் பூரி ஜெகந்நாதரின் ரத யாத்திரை துவங்க இருந்தது. திருவிழாவைக் காணச் சென்ற பயணிகளால் கப்பல் நிரம்பியிருந்தது.

அந்தக் காலத்தில் கல்கத்தாவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக நேரடியாக லண்டனுக்கு செல்லும் கப்பல்கள், கல்கத்தாவிலிருந்து திப்ருகர் செல்லும் கப்பல்கள், பம்பாயிலிருந்து லிவர்பூல் செல்லும் கப்பல்கள் என எந்தெந்தக் கப்பல்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன என்ற விவரங்கள் இங்கிலீஷ்மேன் நாளேட்டில் வெளியாகும்.

இதில் சர் ஜான் லாரன்ஸ் கப்பலின் செயல்பாடுகள் குறித்தும் வெளியிடப்பட்டது. மேலும் சாந்த்பலியில் இருந்து கட்டாக் வரை மற்றொரு கப்பல் இயங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

புயல் முன்னறிவிப்பு

பயணத்தின் முன்னர், சர் ஜான் லாரன்ஸ் கப்பலின் நேர அட்டவணை பல நாட்களுக்கு ‘இங்கிலீஷ் மேன்’ ஆங்கில நாளிதழில் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டது. இதனுடன் சாகர் தீவை நோக்கிப் பெரும் புயல் வர உள்ளதாகவும், அதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக மாறும் என்ற வானிலை முன்னறிவிப்பும் வெளியிடப்பட்டது.

‘தி இங்கிலீஷ்மேன்’ நாளேடு மே 23-ஆம் தேதி புயல் குறித்த வானிலை முன்னறிவிப்பையும் வெளியிட்டது.

மே 22 அன்று பல்வேறு வானிலை நிலையங்கள் கல்கத்தாவை ஒட்டிய கடல் கொந்தளிப்பாக இருப்பதாக அறிவித்தன. இதில் டைமண்ட் தீவு மற்றும் சாகர் தீவு பகுதிகளும் அடங்கும்.

இருப்பினும் மே 25-ஆம் தேதி சர் ஜான் லாரன்ஸ் அல்லது பிற கப்பல்கள் புறப்படுவதற்கு முன்போ பின்போ, கல்கத்தாவில் உள்ள டயமண்ட் துறைமுகத்திலிருந்து கடல் குறித்து எந்த அறிக்கையும் பெறப்படவில்லை.

சர் ஜான் லாரன்ஸ் உட்பட பல கப்பல்களுக்கு புயலால் ஏற்பட்ட சேதம் மற்றும் இறந்த பயணிகளின் விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை கல்கத்தா துறைமுக ஆணையம், வங்காள அரசுக்குச் சமர்ப்பித்தது.

அந்தமானில் உள்ள போர்ட் பிளேருக்கும் கல்கத்தாவுக்கும் இடையே தந்தி சேவை தொடங்கப்பட்டிருந்தால், புயல் குறித்த துல்லியமான முன்னறிவிப்பு கிடைத்திருக்கும் என்று அக்காலப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர் ஜான் லாரன்ஸ் கப்பல் பற்றி ’தி இங்கிலீஷ்மேன்’ நாளேட்டில் வெளியான ஒரு விளம்பரம்

கப்பல் விபத்துக்குள்ளானது எப்படி?

கப்பல் இறுதியில் எங்கு இருந்தது என்ற தகவல்கள் நாளிதழ்களில் வெளியாயின. சர் ஜான் லாரன்ஸ் கப்பல் முந்தைய நாள் இரவு கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு சாகர் தீவு அருகே இருந்தது என்று மே 26-ஆம் தேதி இங்கிலீஷ்மேன் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

அதன்பிறகு, கப்பல் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் மறுபுறம் சர் ஜான் லாரன்ஸின் அடுத்த பயணம் குறித்து நாளிதழ்களில் தினசரி அறிவிப்புகள் வெளியாயின.

கப்பல் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்று மே 27-ஆம் தேதி கப்பலின் முகவர்கள் சாந்த்பலியில் இருந்து கல்கத்தாவிற்கு தந்தி அனுப்பினார்கள். புயல் பெரும் அழிவு ஏற்படுத்தியதை பிரிட்டிஷ் அரசு அறிந்தது.

நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசின் ஸ்டீமர் ’ரெசல்யூட்’ மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஸ்டீமர், 'மெட்ராஸ்' கல்கத்தாவிலிருந்து புறப்பட்டது.

ஒரு நாள் கழித்து, 750 பயணிகளுடன் பயணித்த சர் ஜான் லாரன்ஸ் கப்பல் மூழ்கிவிட்டதாக அஞ்சப்பட்டது.

மறுபுறம், கல்கத்தாவை நோக்கி வந்துகொண்டுந்த 'நேபாள்' என்ற கப்பலின் மாலுமி மே 27 அன்று கல்கத்தாவிற்கு தந்தி மூலம் ஒரு செய்தி அனுப்பினார். சாகர் தீவு அருகே கப்பலின் பல சிறிய மற்றும் பெரிய துண்டுகள் காணப்படுவதாக அவர் கூறினார்.

நேபாள் கப்பலில் இருந்தவர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றினார்கள். அவரது பெயர் அப்துல் லத்தீஃப். அவர் விபத்தை நேரில் கண்ட சாட்சி. அன்றைய தினம் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான விவரங்களை அரசுக் குழுவிடம் அவர் அளித்தார். ஆனால் அவர் விவரம் கூறுவதற்கு முன்பாகவே இங்கிலீஷ்மேன் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டது.

கப்பலின் பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு கொந்தளிப்பான கடலில் சுமார் 17 மணிநேரம் தத்தளித்ததாகவும், அதில் இரண்டு மணிநேரம் தனக்குச் சுயநினைவு இருக்கவில்லை என்றும் பின்னர் ‘நேபாள்’ கப்பலால் காப்பாற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் லத்தீப் கூறினார்.

பயணிகளின் விவரங்கள் ஏதேனும் உள்ளதா?

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1887ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி கப்பல் மூழ்கியது பற்றிய செய்தியறிக்கை

ஆங்கில மற்றும் பெங்காலி செய்தித்தாள்கள் தினசரி இது பற்றிய செய்திகளை வெளியிடும் அளவுக்குக் கப்பல் மூழ்கிய சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்தக் கப்பலில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சிலர் பிரிட்டிஷ் குடிமக்கள்.

திறமையான கப்பல் கேப்டன் உட்பட பல பேர் இறந்தனர் என்று செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. பல கப்பல்கள் மற்றும் வணிகர்களின் இழப்பு அப்போதைய பிரிட்டிஷ் அரசை உலுக்கியது.

ஆதரவற்ற இந்தியக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை கல்கத்தாவின் ஷெரீஃப் துவங்கினார். வைஸ்ராயின் பாராட்டையும் அவர் பெற்றார்.

கப்பல் விபத்துகள் தொடர்பான ஒரு குழுவையும் அரசு அமைத்தது. மறுபுறம், சர் ஜான் லாரன்ஸ் கப்பலில் யாராவது உயிர் பிழைத்தார்களா என்று செய்தித்தாள்கள் மும்முரமாக விசாரித்தன.

ஆனால் இந்திய பத்திரிகையான 'ரைஸ் அண்ட் ரைட்' ஹூக்ளியில் சில பயணிகளின் தடயங்களைக் கண்டறிந்தது. ஆனால் இங்கிலீஷ்மேன் நாளிதழ் அந்த விவரங்கள் தவறானது என்று கூறியது.

சர் ஜான் லாரன்ஸ் கப்பலில் இருந்த பயணிகளின் விவரம் எதுவும் கப்பல் நிறுவனத்திடம் இல்லை என்று மற்றொரு ஆங்கில நாளேடு எழுதியுள்ளது. எதிர்காலத்தில் பயணிகளின் முழுமையான பட்டியல் இல்லாமல் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அது எழுதியது.

உயிர் பிழைத்தவர்கள் பற்றிய தகவல்

சர் ஜான் லாரன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த துர்கா பிரசாத் சோட்டேலால் காட் என்ற இடத்தில் இருந்துதான் கப்பல் தனது பயணத்தை தொடங்கியது

சர் ஜான் லாரன்ஸ் கப்பலில் இருந்து யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அரசு ஆவணங்கள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள் கூறியபோது, ​​சுவாமி விவேகானந்தரின் சகோதரர் மகேந்திரநாத் தத், இரண்டு பயணிகள் உயிருடன் திரும்பினர் என்று எழுதினார்.

சுவாமி விவேகானந்தரின் பால்ய நண்பர் பிரம்மானந்தா, சர் ஜான் லாரன்ஸ் கப்பலில் சிலருடன் பயணம் செய்தார். அவர் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் முதல் தலைவராக இருந்தவர். சன்னியாசம் எடுப்பதற்கு முன்பு அவர் பெயர் ரகால்.

“பல்ராம் பாபுவின் தந்தை இறந்தபோது ​​அவரது இறுதி காரியங்களுக்காக துளசிராம் கோஷ், ரகால் மற்றும் பலர், சாமான்களுடன் சர் ஜான் லாரன்ஸ் கப்பலில் புறப்பட்டனர். அங்கிருப்பவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக அவர்கள் சென்றனர்,” என்று மகேந்திரநாத் எழுதினார்.

”கப்பல் டயமண்ட் துறைமுகத்தை அடைந்தபோது புயலில் சிக்கியது. நல்ல வேளையாக இருவரும் தங்கள் சாமான்களை கப்பலில் வைத்துவிட்டு டைமண்ட் துறைமுகத்தில் இருந்து கல்கத்தா வந்தனர். சில நாட்களுக்குப் பிறகு சர் ஜான் லாரன்ஸ் கப்பல் மூழ்கியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்ததாக அறியப்பட்டது,” என்று தத் எழுதினார்.

ஆனால் இந்த விபத்தில் மற்றொருவர் உயிர் தப்பினார். பூரி செல்லும் வழியில் அந்தக் கப்பலில் தான் ஏன் இறக்கவில்லை என்று அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார்.

அந்தச் சம்பவத்தைப் பற்றி பண்டிட் சிவானந்த் சாஸ்திரி தனது 'ராம்தனு லாஹிரியும் அப்போதைய வங்க சமாஜமும்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிரம்ம சமாஜத்தின் முதல் தலைவரான மோகன் பாசுவின் தாயார் உமா கிஷோரியும் சர் ஜான் லாரன்ஸில் பூரிக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது பேரன் கப்பல் மூழ்கிவிட்டதாகக் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட உமா கிஷோரி அழத் தொடங்கினார். ”முற்பிறவியில் நான் என்ன பாவம் செய்தேன், நான் ஏன் அந்தக் கப்பலில் இருக்கவில்லை என்று கூறி அவர் அழுதார்,” என்று சிவானந்த சாஸ்திரி எழுதுகிறார்.

ரயில் சேவைக்கான கோரிக்கை

1930-இல் நடந்த பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1930-இல் நடந்த பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

கப்பல் விபத்துக்குப் பிறகு இந்திய செய்தித்தாள்கள் அரசை தினமும் விமர்சித்து வந்தன. மறுபுறம், கட்டாக் வழியாக பூரி-கல்கத்தா-ஹெளரா ரயில் பாதைக்கான கோரிக்கையும் வலுத்தது.

ஒடிஷா மக்கள் ஏற்கெனவே இதைக் கோரி வந்தனர். ஒடிஷாவின் வரலாற்றை ஆய்வு செய்துள்ள தியானேஷ்வர் நாயக், 1866ஆம் ஆண்டு பஞ்சத்தில் ஒடிஷாவின் பெரும்பாலான மக்கள் இறந்ததாகத் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

ஒடிஷா சரியான கவனம் பெறவில்லை என்பதை பிரிட்டிஷ் அரசு இதற்குப்பிறகு உணர்ந்தது. 1867-இல் வறட்சி ஆணையம், ஒடிஷாவின் வளர்ச்சிக்காகச் சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப் பரிந்துரைத்தது. ஆனால் ரயில் பாதை குறித்து ஆணையம் குறிப்பிடவில்லை.

ஒடிஷாவின் பஞ்ச சூழ்நிலையைச் சமாளிக்க ரயில்வே இணைப்பை அதிகரிக்க வேண்டும் என்று பஞ்சம் குறித்த ஆணையம் 1881-ஆம் ஆண்டில் பரிந்துரைத்தது என்று நாயக் எழுதுகிறார்.

இறுதியில், 'சர் ஜான் லாரன்ஸ்' மூழ்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 1887-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அரசுக்கும் பெங்கால் நாக்பூர் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் இடையேயான ரயில் பாதையை ஒடிஷா வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

கப்பல் மூழ்கிய பிறகு ஹெளரா மற்றும் கட்டாக் இடையே ரயில் பாதை அமைக்கப்படவேண்டும் என்று வங்காளத்தில் இருந்து தீவிர அழுத்தம் தொடங்கியது.

“ரயில் பாதைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார அம்சங்களைக் கருத்தில் கொண்டு, சத்தீஸ்கர் மற்றும் நாக்பூர் இடையே ரயில் இணைப்பில் அரசு அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சர் ஜான் லாரன்ஸ் மூழ்கியதையும் மற்ற கப்பல்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் கருத்தில் கொண்டு, கல்கத்தாவிலிருந்து கட்டாக் வரையிலான ரயில் பாதையையும் பின்னர் தென்னிந்தியாவில் ஏழு ரயில் பாதைகளையும் அமைக்கும் பணிகளை அரசு துரிதப்படுத்தியது,” என்கிறார் ஆய்வாளர் அனில் தீர்.

ஹெளரா-கட்டக் ரயில் இணைப்பை ஆய்வு செய்ய 1892-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1899-90-க்கு இடையில் இந்த ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஓடத் துவங்கின என்று தென்கிழக்கு ரயில்வேயின் இணையதளத்தில் உள்ள தகவல் தெரிவிக்கிறது.

விபத்தில் இறந்தவர்களின் நினைவாக…

கப்பல் விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கப்பல் விபத்து விவரம் அடங்கிய நினைவுக் கல்வெட்டு

ஏழு ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் மங்கிய தோற்றத்துடன் இருக்கும் ஒரு கல்வெட்டின் படத்தைப் பார்த்தேன். இதைப் பற்றிய ஒரு கட்டுரையும் உள்ளது.

இந்தக் கல்வெட்டு, சில பிரிட்டிஷ் பெண்களால் ’கங்கா காட்’ இல் நிறுவப்பட்டது. இந்த தகடு, ‘சர் ஜான் லாரன்ஸ்’ கப்பலில் மூழ்கி உயிரிழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் நினைவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு இன்றும் கல்கத்தாவில் லால்காட்டில் காணப்படுகிறது. அதை நானும் பார்த்தேன்.

"இந்தத் தகடு 1887-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி சர் ஜான் லாரன்ஸ் கப்பல் கடலில் மூழ்கியதில் இறந்த பயணிகள், குறிப்பாக அதில் உயிரிழந்த பெண்களுக்காகச் சில ஆங்கிலேய மகளிரால் அர்ப்பணிக்கப்பட்டது," என்று பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் அதில் எழுதப்பட்டுள்ளது.

137 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தக் கல்வெட்டு அந்நாட்களில் நடந்த பயங்கரமான கல்கத்தா கப்பல் விபத்தை நினைவூட்டுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)