ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் வீட்டுப் பெண்கள் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, பீல் பழங்குடிப் பெண் நிர்மா குமாரி
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர், பன்ஸ்வாரா மற்றும் ஜெய்பூரிலிருந்து

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் ஆண்களது மனைவியரின் மனநிலையில் இந்துத்துவ சித்தாந்தம் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது? மதம், தேசம், ஜாதி ஆகியவற்றைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தெரிந்துகொள்ள பிபிசி அவர்களிடமே பேசியது.

இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதி பேர் பெண்கள். ஆனால் இது எண்களில் மட்டுமே உள்ளது. உரிமைகள் தருவதில் இது அர்த்தமற்றதாகத் தெரிகிறது. அரசியலிலோ பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது இன்னும் ஒரு கனவுதான்.

ஆனால், அரசியல் இயக்கங்களில் பெண்களின் நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸ் ஆண்களுக்கான அமைப்புதான். அதன் உறுப்பினர்களின் மனைவிமார்கள் அந்த இயக்கத்தில் சேராவிட்டாலும் தங்கள் கணவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மனைவிகள் தங்கள் கணவருக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி அந்தக் கருத்தியலைப் பரப்பவும் செய்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்களுக்கு என்ன கிடைக்கும்? சம அந்தஸ்தா? அதிகாரமா?

சில ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மனைவிமார்களின் மீது அந்த இயக்கத்தின் கருத்தியல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆராய முயற்சித்தோம்.

1993-ஆம் ஆண்டு, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் இருந்து 35கி.மீ. தொலைவில் உள்ள துக்வாடா கிராமத்தில் உள்ள கன்ஹையலால் யாதவின் வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சில சாமியார்கள் வந்திருந்தனர்.

அப்போது கன்ஹையாலாலுக்கு ஒன்பது வயதுதான். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி அதிகம் தெரியாது. கன்ஹையாலால் யாதவ் அந்த ஆண்டே ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்தார்.

வேற்றுச் சாதியைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் இருந்து தண்ணீர் குடித்தது அதுவே முதல் முறை என்று கன்ஹையாலால் யாதவ் நினைவு கூர்ந்தார். அவர் தனது பெயரை யாதவ் என்று எழுதினாலும் அவர் ஒரு தலித்.

“நாங்கள் சாமர் சாதியைச் சேர்ந்தவர்கள். சாமர் சாதியில் பிறந்ததால் ஏற்படும் சவால்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்தச் சவால்களை எளிதாக்கியது. நான் ஆர்.எஸ்.எஸ்-இல் சேராமல் இருந்திருந்தால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பேன். இப்போது என் நல்ல நிலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் மிகப்பெரிய காரணம்,” என்கிறார் கன்ஹையாலால்.

கன்ஹையலால் யாதவ், பன்ஸ்வாராவில் உள்ள அரசுப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக உள்ளார். அதோடு, பன்ஸ்வாராவில் ஆர்.எஸ்.எஸ் மாவட்டப் பணியாளராகவும் உள்ளார். கன்ஹையாலால் யாதவின் மனைவி சந்திரிகா யாதவும் பன்ஸ்வாராவில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, தனது கணவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருப்பதால் அவரது கௌரவம் அதிகரித்துள்ளதாக சந்திரிகா யாதவ் கருதுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கும் தலித்துகள் சொல்வது என்ன?

சாதிப் பாகுபாடு குறித்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார் சந்திரிகா யாதவ்.

“பள்ளியில் படிக்கும்போது கை பம்பிலிருந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது சில பெண்கள் ‘நீ செருப்புத் தைக்கும் ஜாதி தானே’ என்று கேட்டார்கள். என் குடும்பப் பெயர் யாதவ். அந்தப் பெண்களுக்கு என் ஜாதியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால்தான் வந்து கேட்கிறார்கள் என்று நினைத்தேன். அந்த நிமிடம் எனக்கு வெட்கமாக இருந்தது. என் தந்தை ஒரு செவிலியர் கண்காணிப்பாளராக இருந்தார். அவரிடம் கேட்டேன். செருப்புத் தொழிலாளி என்று அழைப்பதில் வெட்கக்கேடானது எதுவும் இல்லை என்று அவர் கூறினார்,” என்கிறார் சந்திரிகா யாதவ்.

அவர், தனது கணவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால், ஜாதி அடிப்படையிலான அவதூறுகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், சமூகத்தில் அவரது மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் கருதுகிறார்.

“ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் எனது கணவரை பாய் சாஹேப் என்றே அழைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் சந்திரிகா யாதவ்.

ராஜஸ்தானில் உள்ள உதய்பூரைச் சேர்ந்த நாராயண் கமேதி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ். இயக்கத்தின் மண்டல இணைச் செயலாளராக உள்ளார். கமேதியின் மனைவி சுசீலா உதய்பூர் மாவட்ட மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். சுசீலாவிடம், அவரது கணவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தது அவர்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கேட்டோம்.

அதற்கு சுசீலா, ​​“அவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்திருக்காவிட்டால், இப்போது நான் உங்களிடம் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதுபோல் என்னால் செய்திருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததால்தான் நாங்கள் எங்கள் எல்லையில் இருந்து வெளியே வர முடிந்தது. அமைப்பின் எந்த நிகழ்ச்சி என்றாலும் தொண்டர்களின் மனைவிகளும் வருவார்கள். அவருடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு யாரும் சாதி பற்றி கேட்பதில்லை. அனைவரும் சமம்,” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, ஆர்எஸ்எஸ்-இல் மண்டல இணைச் செயலாளராக உள்ள நாராயண் கமேதியின் மனைவி சுசீலா உதய்பூர் மாவட்ட மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

பெண்கள் உண்மையில் அதிகாரம் பெற்றுள்ளனரா?

தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மனைவிமார்கள் தங்கள் கணவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் இருப்பதால், தாங்கள் அதிகாரம் பெற்றதாகவும், சமூகத்தில் அங்கீகாரமும் மதிப்பும் பெற்றதாகவும் கருதுகின்றனர். சுசீலா கமேதியும், சந்திரிகா யாதவும் பேசும் அதிகாரத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும், தலித் அடையாளம் மற்றும் அதன் அரசியல் குறித்து புத்தகம் எழுதியவருமான கன்ஷியாம் ஷாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம்.

​​“வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால் இது சுசீலாவுக்கும் சந்திரிகா யாதவுக்கும் அதிகாரம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த அதிகாரத்திற்கு ஒரு எல்லை உண்டு. ஆர்.எஸ்.எஸ்-இல் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு வரம்பு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஒரு பிராமண மற்றும் இந்துத்துவ அமைப்பு. இதில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இந்துச் சாதி அமைப்பில் உள்ள அதே இடம் தான் கிடைக்கும்,” என்றார்.

பேராசிரியர் ஷா மேலும் கூறுகையில், “இந்தியாவில் தலித்துகளும் பழங்குடியினரும் இன்னும் சமமாக நடத்தப்படவில்லை. எந்தவொரு அமைப்போ அல்லது கட்சியோ அவர்களை நல்ல முறையில் நடத்தினாலும், அது கூடுதல் சலுகை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது கூடுதல் சலுகை இல்லை அது அவர்களின் உரிமை என்று உணர்வதில்லை,” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, பன்ஸ்வாரா ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ராஜஸ்தான் தர்ம பிரசார் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் நிறைய மாறிவிட்டது, என்கிறார்.

"நாடு முழுவதும் சுமார் 2,000 ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர்கள் இருப்பார்கள். அவர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் தலித்துகள். முன்பு இப்படி இல்லை. சங்கத்தின் தலித் அல்லது பழங்குடியின தொண்டர் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. பகுஜன்களை (பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய மக்களைக் ஒட்டுமொத்தமாகக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல்) சங்கத்தின் சித்தாந்தத்துடன் இணைப்பது எங்கள் கொள்கையின் ஒரு பகுதியாகும்,” என்றார்.

பேராசிரியர் கன்ஷ்யாம் ஷா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க வேண்டுமென்றால், பகுஜன்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளது.

"இந்துத்துவாவின் சித்தாந்தம் அதன் பின்னால் தலித்துகள் மற்றும் பழங்குடியினரை அணிதிரட்டுவதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. ஆனால் இந்த அணிதிரட்டல் சமத்துவம், பகுத்தறிவு, மற்றும் அறிவியல் சிந்தனைக்காக அல்ல," என்கிறார்.

1925-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மொத்தம் ஆறு தலைவர்கள் இருந்திருக்கின்றனர். அதில் நான்காவது தலைவரான அதாவது ராஜேந்திர சிங் தவிர அனைவரும் பிராமணர்கள். ராஜேந்திர சிங் ஒரு தாக்கூர், அதாவது ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனைவரும் உயர் சாதியினர்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆர்எஸ்எஸ்-இன் தலைவர் ஆக்குவார்களா என்று சுசீலா கமேதியிடம் கேட்டபோது, தன் கணவர் நாராயண் கமேதியைச் சுட்டிக்காட்டி, "இவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை தலைவர் ஆகியிருக்கலாம்," என்று கூறிச் சிரிக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, ரேகா உபாத்யாயின் கணவர் சுரேஷ் உபாத்யாய் 1968 இல் ஆர்எஸ்எஸ் தொண்டரானார்.

வீட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரைச் சேர்ந்த சுரேஷ் உபாத்யாய் 1968-இல் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தார். உபாத்யாய் ராஜஸ்தான் அரசாங்கத்தில் பொறியாளராக இருந்தார், 2019-ஆம் ஆண்டுவரை ஆர்.எஸ்.எஸ்-இல் துறைத் தொடர்புத் தலைவராக இருந்தார். தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் மண்டல அதிகாரியாக உள்ளார். சுரேஷ் உபாத்யாயின் மனைவி ரேகா உபாத்யாயிடம், ஒரு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரின் மனைவியாக இருப்பது எத்தகையது என்று கேட்டோம்.

அதற்கு, ரேகா உபாத்யாய், ​​“ஒரு தன்னார்வலரின் மனைவியாக இருப்பது எளிதல்ல. திருமணத்திற்குப் பிறகு, உபாத்யாய் ஜி நீண்ட பயணங்களில் செல்வார். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் வீட்டின் அனைத்துப் பொறுப்புகளும் என் மீது விழுந்தன. இப்போது அது பழகிவிட்டது. ஆனால் அந்தக் கடினமான சூழ்நிலைகளில், நான் தனியாகப் போராடக் கற்றுக்கொண்டேன். சில சமயங்களில் மனக்கசப்பு வரும். அமைப்பில் இல்லாவிட்டாலும், ஆர்எஸ்எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் மனைவிகளும் இதே சித்தாந்தத்தைத்தான் பின்பற்றுகிறார்கள்,” என்றார்.

ரேகா உபாத்யாயின் மகள் சுக்ரிதி உபாத்யாய் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாரானார். ஆனால் வெற்றிபெறவில்லை. இப்போது அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘சங்கல்ப்’ திட்டத்தில் இணைந்துள்ளார். இந்தத் திடத்தின் கீழ், ஏழைகளின் திறமையான குழந்தைகளுக்கு குடிமைப் பணித்தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

ரேகா உபாத்யாயிடம், தன் மகளை ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவருக்குத் திருமணம் செய்து கொடுப்பீர்களா, என்று கேட்டோம். பதிலுக்கு ரேகா உபாத்யாய், "மாட்டேன். ஏனென்றால் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக வாழ முடியாது. எனது முழு குடும்பமும் இந்த சித்தாந்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

ரேகா உபாத்யாய், தனது கணவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருப்பதால், தான் தேசம் மற்றும் இந்து மதம் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றதாக உணர்கிறார். இந்துத்துவாவுடன் இருப்பது தேசத்துடன் இருப்பது என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
படக்குறிப்பு, சுரேஷ் உபாத்யாய், தனது மனைவி ரேகா உபாத்யாய் மற்றும் மகள் சுக்ரிதி உபாத்யாய் ஆகியோருடன்

ஆண்களின் வரிசையில் பெண்கள்

நாங்கள் பேசிய தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள், தங்கள் கணவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இல் இருப்பது தங்களின் மரியாதையை அதிகரித்திருப்பதாக உணர்கிறார்கள். அதேசமயம் உயர் சாதித் தொண்டர்களின் மனைவிகள் இந்துத்துவாவுடன் இருப்பது தேசத்துடன் இருப்பது என்று நினைக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் கன்ஷ்யாம் ஷா, "உயர் சாதி தொண்டர்களின் மனைவிகள் இந்துத்துவாவுடன் இருப்பது தேசத்துடன் இருப்பது என்று சொல்லும்போது, ​​உண்மையில், அவர்களுக்கு அவர்களின் சுயநலமே தேசிய நலன் என்பதை அவர்கள் அறிவார்கள்,” என்கிறார்.

ஷா மேலும், “சாதி அமைப்பின் படிநிலையை இந்துத்துவா அரசியல் உடைக்கவில்லை. ஆண்களின் ஆதிக்கத்தை உடைக்கவில்லை. இந்துத்துவா அரசியல் என்பது மதத்தின் அதிகாரத்திற்குச் சவால் விடுவதில்லை. ஆனால் உயர்சாதிப் பெண்கள், தாங்கள் சாதி அமைப்பின் உச்சத்தில் இருப்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஆண்களின் ஆதிக்கத்திலும் கூட, தங்கள் கணவர்கள்தான் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்,” என்றார்.

“மதத்தின் அதிகாரம் அவர்களது ஆண்களிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறான நிலையில், இந்த அரசியலை தேச நலனுடன் இணைப்பதால் அவர்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை,” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

இந்திய முஸ்லிம்கள் பற்றி ஆர்.எஸ்.எஸ்-இன் பார்வை

ஆர்.எஸ்.எஸ்-இன் பன்ஸ்வாரா திட்டம் பீல் பழங்குடியினருக்கானது. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தின் மக்கள்தொகையில் 70% பேர் பழங்குடியினர். அவர்களில் அதிகமானோர் பீல் பழங்குடியினர்.

பன்ஸ்வாராவிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ள ஜெர்லானி கிராமத்தைச் சேர்ந்த பீல் பழங்குடியினப் பெண் நிர்மா குமாரி, ஆர்.எஸ்.எஸ்-இன் பன்ஸ்வாரா திட்ட அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோயிலில் அமர்ந்திருக்கிறார்.

நிர்மா குமாரியுடன் மேலும் ஏழு பீல் பெண்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த 2 பேர் அவர்களிடம் ஏதோ சொல்கிறார்கள்.

இந்தப் பெண்கள் அந்தந்தப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ‘பள்ளி’ நடத்துகிறார்கள். நிர்மா குமாரிடம் அப்பள்ளியில் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டோம்.

அதற்கு நிர்மா குமாரி, “குழந்தைகள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பூமிக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். பெற்றோர் பாதங்களைத் தொட வேண்டும். பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவக் குழந்தைகளையும் எங்கள் பள்ளிக்கு அழைத்துவந்து அவர்களுக்கும் பொட்டு வைக்கிறோம். வீட்டிற்குச் செல்வதற்கு முன், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளின் மீது கோபப்படக் கூடாது என்பதற்காக அவர்களது பொட்டு அழிக்கப்படும்,” என்றார்.

நிர்மா குமாரி மேலும் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்-இல் இணைந்ததன் மூலம், தனது பிரபல்யம் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் தன்னை அறியத் தொடங்கி விட்டதாகவும் கூறுகிறார். ​​“நான் குறைந்தது 20 கிராமங்களுக்கு ஆர்-எஸ்-எஸ் பள்ளிகளுக்குச் செல்கிறேன். அந்த எல்லா கிராமங்களில் உள்ளவர்களுக்கும் என்னைத் தெரியும். இதற்கு முன் என்னை யாருக்கும் தெரியாது,” என்றார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ சித்தாந்தத்தில், மதச்சார்பின்மை, தேசியவாதம், மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே மற்றும் இந்திய முஸ்லிம்கள் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்துத்துவ வாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர், "இந்திய முஸ்லிம்களின் தாய்நாடு இந்தியா, ஆனால் அவர்களது புனித பூமி தொலைவில் உள்ள அரேபியா" என்று கூறினார். "அத்தகைய சூழ்நிலையில், அவரது விசுவாசம் தந்தை மற்றும் புனித பூமிக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் வேரூன்றிய மதங்களை நம்புபவர்களின் புனித பூமியும் இந்தியாதான்," என்றார்.

மேலும், அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் தாய்நாடு மற்றும் புனித பூமி ஆகிய இரண்டும் இந்தியாவில் உள்ளன. சாவர்க்கரின் கூற்றுப்படி, அவர்களின் விசுவாசம் முஸ்லிம்களைப் போல பிரிக்கப்படவில்லை.

இந்துத்துவச் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் சில சமயங்களில் இந்த தர்க்கத்தின் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியைச் சந்தேகிக்கிறார்கள்.

இந்தியாவின் முஸ்லிம்கள், நாதுராம் கோட்சே மற்றும் மகாத்மா காந்தியைப் பற்றி இந்தப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் மனைவியர் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மதமும் தேசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா?

மகாத்மா காந்தியை எப்படி பார்க்கிறீர்கள் என்று ரேகா உபாத்யாயிடம் கேட்டோம். மகாத்மா காந்தி மீது அவருக்கு மரியாதை இருக்கிறதா?

அதற்கு பதிலளித்த ரேகா உபாத்யாய், “எனது சிறுவயதில் எனக்குக் கற்பிக்கப்பட்டதை வைத்து எனக்கு அவர்மீது மரியாதை உண்டு. ஆனால், நாதுராம் கோட்சே எனக்கு ஒரு சிறந்த நபர். அவர் தன்னைப் பற்றிக் கூறும் பேச்சைக் கேட்டிருக்கிறேன். கோட்சேவின் பேச்சைக் கேட்டு நான் பலமுறை அழுதிருக்கிறேன்,” என்றார்.

இந்திய முஸ்லிம்களைப் பற்றிக் கூறும் நிர்மா குமாரி, "இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது. இங்கு வாழ விரும்புகிறவர்கள் இந்துத்துவத்தை ஏற்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டும்," என்றார்.

இதுகுறித்து, வரலாற்றாசிரியர் இம்தியாஸ் அகமதுவிடம் கேட்டோம்.

“மதத்தையும் நாட்டையும் ஒன்றுக்கொன்று எதிராகக் காட்ட, வேண்டுமென்றே ஒரு முயற்சி செய்யப்படுகிறது. மதம் மற்றும் நாட்டிற்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று விசுவாசமாக இருப்பதைத் தடுக்கின்றன என்று நான் நினைக்கவில்லை. இந்தியனாக இருப்பது முஸ்லிமாக இருப்பதற்குத் தடையல்ல. முஸ்லிமாக இருப்பது இந்தியனாக இருப்பதற்குத் தடையல்ல. இது முற்றிலும் ஆதாரமற்ற வாதம்,” என்றார் இம்தியாஸ் அகமது.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் பெண்கள் ஆண்களைப் பின்பற்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் மதத்தின் அதிகாரத்தைக் கேள்வி கேட்காத ஒரு சித்தாந்தத்தால் பெண்கள் அதிகாரம் பெற முடியாது என்று பலர் நம்புகிறார்கள்.

அமெரிக்காவில், பெண்கள் குடியரசுக் கட்சியை விரும்புகிறார்கள். பழமைவாதக் கருத்துகளை ஆதரிக்கும் கட்சியை பெண்கள் ஏன் விரும்புகிறார்கள் என்று அங்கு கேள்வி கேட்கப்படுகிறது. அதேபோல், இந்தியாவிலும், நரேந்திர மோதியைப் பிரதமராக்குவதில் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு முக்கியமானது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)