டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள்

பட மூலாதாரம், ICC
இந்தாண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளது என்பதே பலருக்கும் ஆச்சரியம் தரும் நிலையில், அதற்காக பயன்படுத்தப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள் அதைவிட ஆச்சரியம் தருகின்றன.
ஆம், மற்ற ஊர்களில் நிலையாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஆடுகளங்களை போலன்றி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள அமெரிக்க கிரிக்கெட் ஆடுகளங்கள், கிட்டத்தட்ட 14000 மைல்கள் (22,500 கி.மீ) தாண்டி ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
முதல்முறையாக அமெரிக்காவில் உலகளாவிய பெரிய கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து புளோரிடா வழியாக கப்பல் மூலம் இந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் உள்ள பெஸ்போக் ஆடுகளங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் தொடக்க ஆட்டமான அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான ஆட்டம் மற்றும் குழு நிலை ஆட்டங்களில் முக்கியமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஆகிய இரண்டும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ள போட்டிகளில் 16 போட்டிகள் அமெரிக்காவிலும், 39 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ளது.
இதற்காக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆடுகளங்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் அதற்கான கிரிக்கெட் ஆடுகளங்களை உருவாக்கும் பணி சவால்கள் நிறைந்தது.

பட மூலாதாரம், Getty Images
"எங்களது நோக்கமே வீரர்கள் நன்றாக விளையாடும் அளவிற்கான வேகம் மற்றும் நிலையாக பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களை உருவாக்குவதாகும்" என்று அடிலெய்டில் ஆடுகளங்களை உருவாக்கும் டேமியன் ஹக் கூறுகிறார்.
இவர்தான் தற்போது அமெரிக்காவில் நடக்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்களை தயார் செய்து வருகிறார்.
"நாங்கள் கிரிக்கெட்டை கொண்டாட விரும்புகிறோம். ஆனால், அதில் சவால்களும் உள்ளன."
அக்டோபர் 2023 இல் இருந்தே 10 டிராப்-இன் பிட்ச்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு பிட்ச்களும் இரண்டு ட்ரேக்களாக(Trays) பிரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும் நான்கு ஆடுகளங்களை உருவாக்குவதும், 6 பயிற்சி ஆடுகளங்களை உருவக்குவதும் ஆகும்.
இந்த ஆடுகளங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் களிமண் போன்ற மண்வகை அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பமான காலநிலைக்கு ஏற்றதும், ரோலிங் மற்றும் கடினமான பயன்பாட்டை தாங்கும் அளவிற்குமான ஒரு வகை புற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த பிட்ச் ட்ரேக்கள் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் இருந்து புளோரிடாவுக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த சமயம் நியூயார்க்க்கில் உறைபனி சூழல் இருந்ததால், இவை வெப்பமான சூழல் உள்ள பகுதியில் வளர்க்கப்பட்டு, ஆடுகளம் தயார் செய்யப்படும் இடத்திற்கு சாலைமார்க்கமாக கொண்டு வரப்பட்டன.
வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு ஓட்டுனர்கள் மூலம் இந்த ஆடுகளங்கள் லாரிகள் வழியாக ஓய்வே இல்லாமல் கொண்டுவரப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
காரணம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்ட ஆட்டமான, குரூப் நிலை ஆட்டங்கள், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும். அதற்கு வேகமாக ஆடுகளத்தை தயார் படுத்த வேண்டும்.
மைதானத்தில் ஆடுகளத்தை தயார் செய்ய ஹக் மற்றும் அவரது குழுவுக்கு 12 மணிநேரம் தேவைப்படும். இந்த ஆடுகளங்களில் சில தொடங்கவுள்ள போட்டிக்காக தயார் செய்யப்படுகின்றன.
சமீபத்தில் பிபிசியிடம் பேசியிருந்த ஹக், “நான் கலவையான உணர்வுகளால் சூழப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
"நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாததால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது.”
"இது ஒரு பெரிய வேலை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டோம்.”
"இதில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், எங்களின் பணி என்ன மாதிரியான பலனைத் தரும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் யோசித்துவிட்டோம். இவை நல்ல ஆடுகளங்களாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார் ஹக்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா பங்குபெறும் போட்டிகள்
முதற்கட்ட போட்டிகளில் இந்தியா விளையாடும் நான்கு ஆட்டங்களில் மூன்று போட்டிகள் நியூயார்க் நகரிலும், ஒரு போட்டி லாடர்ஹில் பகுதியிலும் நடைபெற உள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு..
- ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க்
- ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க்
- ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க்
- ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில்
இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா
இதற்கு முந்தைய டி20 போட்டிகளில் இதுவரை ஆறு அணிகள் வென்றுள்ளன.
இதில் 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த சீரிஸின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கான சூழல் இருந்த போதிலும், இலங்கை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா.
இந்நிலையில், இந்தாண்டு தனது இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்கவுள்ளது இந்திய அணி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் டி20 போட்டிகள்
தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 போட்டிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.
அந்த வரிசையில் இரண்டாண்டுகள் கழித்தே டி20 போட்டிகளின் அடுத்த பதிப்பு நடைபெற உள்ளது.
2026இல் நடைபெற உள்ள அடுத்த பதிப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
மேலும் அதற்கடுத்த 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












