'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தாய்ப்பால் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் தேவையை ஈடுகட்டும் கட்டமைப்பை எப்படி உருவாக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாய்ப்பால் வணிகமும் தடையும்!

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாகப் பெற முடியும். இதற்காக தாய்ப்பால் வங்கிகள் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளன. சென்னையில் பிறந்து ஆறு மாதம்கூட நிறைவைடையாத குழந்தைகள் 125 பேர் பல்வேறு காப்பகங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசின் தாய்ப்பால் வங்கிகளில் இருந்து தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் தாய்ப்பால் கிடைக்காத குடும்பத்தார் ஆன்லைன் வழிமுறைகளில் தாய்ப்பாலை வணிகரீதியாகப் பெறுவதும் நடக்கிறது. இந்த முறையில் வீட்டில் இருந்தபடியே தாய்ப்பாலை பெற்றுக்கொள்ள முடியும். மிகச் சில நிறுவனங்களே இந்த சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் “ உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006இன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வணிகரீதியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலை வணிகரீதியாக விற்பதற்கு அனுமதி வழங்குமாறு பல அமைப்புகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்தை அணுகியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறான அனுமதிகளை மாநில அரசுகள் வழங்கிட வேண்டாம் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாய்ப்பால் தானம் எதற்காக?

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தேசிய சுகாதார இயக்கத்தின் தரவுகள்படி, இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் 2.7 கோடி குழந்தைகளில் 35 லட்சம் குழந்தைகள் குறை பிரசவத்திலும் 75 லட்சம் குழந்தைகள் எடை குறைவாகவும் பிறக்கின்றன.

இதுபோன்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் பெறுவதிலும், குடிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று தேசிய சுகாதாரத் திட்டம் கூறுகிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு செயற்கையாக ஃபார்முலா பால் வழங்கப்படுகிறது.

இருப்பினும் இந்த வகை ஃபார்முலா பால் குடிப்பதில் பாதிப்புகளும் உள்ளன. Necrotizing Enterocolitis எனும் குடலில் ஏற்படும் தீவிர பாக்டீரியா தொற்று ஏற்படலாம் என்று தேசிய சுகாதாரத் திட்டம் கூறுகிறது.

இதுபோன்ற குழந்தைகளைக் காப்பாற்ற தாய்ப்பால் தானம் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். தாய்க்கு பால் சுரக்காத நேரத்தில் இன்னொரு தாய்மாரிடம் பால் பெற்று வழங்குவதுதான் சிறந்த மாற்று. இதையே உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி நிதியம் அறிவுறுத்துகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் தாய்ப்பாலை ஒருவர் விரும்பி தானமாக அளிக்கலாம். ஆனால் தாய்ப்பால் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனவேதான் அரசே வங்கிகளை உருவாக்கி தாய்ப்பால் பெற்று பாதுகாத்து தேவையானவர்களுக்கு வழங்குகிறது.

தாய்ப்பால் விற்பனை ஏன்?

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட தாய்ப்பால் வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்த தாய்ப்பால் வங்கிகள் பொதுவாக மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கும். தனது குழந்தைக்கு கொடுத்தது போக இருக்கும் பாலைத்தான் தாய்மார்கள் பொதுவாக தானமாக வழங்குவார்கள்.

அல்லது ஏதாவது ஒரு தருணத்தில் தனது குழந்தையை இழந்திருந்தால், அந்த தாய்மார்கள் பிற குழந்தைகளுக்குத் தனது தாய்ப்பாலை தானமாகத் தருவார்கள். இவை பெரும்பாலும் தாய்ப்பால் வங்கி அமைந்துள்ள மருத்துவமனையின் குழந்தைகளுக்கே போதுமானதாக இருக்கும்.

தாய்ப்பாலின் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் பொருளாதார சாத்தியமுள்ள குடும்பங்கள் ஃபார்முலா பாலுக்கு பதிலாக தாய்ப்பாலை வணிக ரீதியில் வாங்கிப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த, நியோலாக்டா என்ற நிறுவனம் தாய்ப்பாலை விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரத்து செய்தது.

இந்த ரத்துக்கு எதிரான வழக்கு 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தாய்ப்பாலை பதப்படுத்தி விற்கும் ஒரே நிறுவனம் தாங்கள்தான் என்று அந்த நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

விற்பனையைத் தடை செய்தால் மாற்று என்ன?

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

பெயர் குறிப்பிட விரும்பாத குழந்தைகள் நல மூத்த அரசு மருத்துவர் ஒருவர் பி.பி.சி தமிழிடம் கூறுகையில், “ஒரு தனியார் நிறுவனம் தாய்ப்பாலை விற்கக் கூடாது என்ற வாதம் சரிதான். ஆனால் அப்படியான சூழலில் தேவை உள்ளோருக்கு முன் உள்ள மாற்று வாய்ப்புகள் என்ன?" எனக் கேள்வியெழுப்புகிறார்.

"இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 55% குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. அரசு நடத்தும் தாய்ப்பால் வங்கிகளில் ஒரு நாளுக்கு 1.5 லிட்டர் முதல் அதிகபட்சம் 2 லிட்டர் வரை மட்டுமே பெற முடிகிறது."

ஒரு தாயிடம் இருந்து சராசரியாக 200 மி.லி வரை தாய்ப்பால் ஒரு நேரத்தில் கிடைக்கும் எனக் கூறும் மூத்த அரசு மருத்துவர், "இவை தேவையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போதாது," என்கிறார்.

சில தொண்டு நிறுவனங்கள் லாப நோக்கமில்லாமல் செயல்பட்டு தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து தாய்ப்பால் வங்கிகளில் சேர்க்கிறார்கள்.

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

அத்தகைய பணியை அரசாங்கமும் செய்தால் அதிகமானோர் பலனடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். "செயற்கையாகத் தயாரிக்கும் ஃபார்முலா பால் குழந்தையின் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆனால், அவை இன்னும் சந்தையில் கிடைக்கவே செய்கின்றன," என்று அவர் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், "சில தனியார் மருத்துவமனைகளில் தனியார் நிறுவனத்திடம் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஃபார்முலா பாலை கொடுப்பதற்கு நன்கு பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை வாங்கிக் கொடுப்பது நல்லது," என்றும் கூறினார்.

'தாய்ப்பால் வணிகம் வேண்டாம்'

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் அது வணிகமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார் சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் குழந்தைகள் நல மருத்துவர் டி.ரவிக்குமார்.

“குழந்தை பெறாத பெண்கள்கூட, ஹார்மோன்களை ஏற்றிக்கொண்டு தாய்ப்பால் சுரக்கச் செய்ய முடியும். எனவே வணிகத்தை தடை செய்வதுதான் சரி. அதேநேரம் தாய்ப்பால் வங்கிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார்.

'தாய்ப்பால் தானம் செய்யலாம், விற்பனைக்குத் தடை' - உணவுப் பாதுகாப்பு ஆணைய உத்தரவின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தாய்ப்பால் வங்கிகளில் பதப்படுத்தி சேகரிக்க விலையுயர்ந்த நவீன இயந்திரங்கள் தேவை எனக் கூறும் ரவிக்குமார், ஆகவே ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தாய்ப்பால் வங்கிகள் உள்ளதாகவும் இந்த வங்கிகளை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு உதவ வேண்டும் என்கிறார்.

சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. இவை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

தனது குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாத எந்த தாய்மாரும் இந்த தாய்ப்பால் வங்கியை நேரில் சென்று அணுகலாம். வங்கிகளில் தாய்ப்பால் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்படும். அதே போன்று தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள் இந்த வங்கிகளில் தானமாக வழங்கலாம். தாய்ப்பாலை தானமாக வழங்குவதால் தனது குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால், தாயிடம் குறையாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)