நீலகிரி: யானை வழித்தடத்தில் உள்ள விடுதியில் குடும்பத்துடன் வனத்துறை அமைச்சர் தங்கியதாக சர்ச்சை

பட மூலாதாரம், Mathiventhan/Facebook
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்துடன் தங்கிய தனியார் விடுதி, யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் விடுதி என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் சூழலியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அளித்த பதில் என்ன?
யானைகள் வழித்தடத்தில் 821 கட்டுமானங்கள்

பட மூலாதாரம், TNFORESTDEPARTMENT
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்தும் அனுமதியின்றியும் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள், கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் மொத்தமாக 821 கட்டுமானங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதில், தங்கும் விடுதிகள் மற்றும் தங்கும் விடுதியைச் சேர்ந்த கட்டுமானங்கள் 309, வீடுகள், பள்ளி, கோவில், தண்ணீர் தொட்டி போன்றவை அடங்கும்.
அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படுவதாக 27 தனியார் தங்கும் விடுதிகளுக்கு 2018ம் ஆண்டு அக்டோபரில் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
வனத்துறை அமைச்சர் செயலால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தனது குடும்பத்தினருடன் தங்கிய தனியார் விடுதி, மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மசினகுடியை அடுத்துள்ள சிகூர் வனப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மே 27ஆம் தேதி அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
அந்த விடுதி யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத தனியார் தங்கும் விடுதி என்று குற்றம் சாட்டும் சூழலியாளர்கள், அதில் தங்கியதன் மூலம் சட்ட விரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு வனத்துறை அமைச்சரே ஆதரவாக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சூழலியாளர்கள் கேள்வி

யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்பை பகிர்ந்து, நம்மிடம் பேசிய நீலகிரியைச் சேர்ந்த சூழலியலாளர் கே.மோகன்ராஜ், “யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, சில விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அனுமதியற்ற கட்டடங்கள் முழுமையாக அகற்றப்படாமல் சில அப்படியே இருக்கின்றன,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த மோகன்ராஜ், ‘‘நீலகிரியில் தமிழக வனத்துறையின் பல விடுதிகள் இருக்கும் போது சர்ச்சைக்குரிய தனியார் தங்கும் விடுதியை அமைச்சர் தேர்வு செய்தது ஏன்? அவர் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரா?,’’ என கேள்விகளை முன்வைத்தார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

உண்மையில் அமைச்சர் தங்கிய விடுதி யானை வழித்தடத்தில் உள்ளதா? அது ‘சீல்’ வைக்கப்பட்ட விடுதியா? என்பதை அறிய, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
நம்மிடம் பேசிய ஆட்சியர் அருணா, அந்த தங்கும் விடுதியின் ஒரு பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது, அது தற்போது செயல்பாட்டில் இல்லை. சீல் வைக்கப்படாத மற்றொரு பகுதி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, அங்கு தான் அமைச்சர் தங்கியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறை திரும்பப் பெறப்பட்ட பிறகு, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் ஆட்சியர் அருணா.
ஆட்சியரின் விளக்கத்தின் மூலம், அமைச்சர் தங்கிய விடுதியின் ஒரு பகுதி யானைகள் வழித்தடத்தில் இருப்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிகிறது.
வனத்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், "அந்த குறிப்பிட்ட விடுதி முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த விடுதியில் சில கட்டடங்களுக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை.
யானை வழித்தடத்தில் அனுமதியின்றி உள்ள அந்த விடுதியின் சில கட்டடங்களுக்கு நாங்கள் சீல் வைத்துள்ளோம், அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. அனுமதி பெற்று செயல்படும் கட்டடத்தில் தான் அமைச்சர் தங்கியுள்ளார்," என்று கூறினார்.
வனத்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?
சூழலியலாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் தொலைபேசி வாயிலாக பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
நம்மிடம் பேசிய அவர், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அரசு விடுதியில் என்னால் தங்க இயலாது. ஏதாவது ஆய்வுக்காக வந்திருந்தால் நான் அரசு விடுதியில் தங்கியிருக்கலாம். நான் குடும்பத்துடன் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளேன். இதனால், தனியார் விடுதியில் தங்கியுள்ளேன். இந்த விடுதி பல ஆண்டுகளாக உரிய அனுமதி பெற்று தான் செயல்பட்டு வருகிறது,’’ என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












