டெல்லியில் 52 டிகிரி வெப்பம் பதிவானதா? வானிலை மையம் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி செய்திகள்
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் (120 பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள்.
இந்த வாரம், நாட்டின் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் (113 F) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
செவ்வாயன்று, வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
செவ்வாய்க்கிழமை, டெல்லியின் நசாஃப்கர் வானிலை நிலையத்தில் 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஏசி இல்லாததால், வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நீதிபதி கூறியதை அடுத்து, டெல்லியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைத்தது.

பட மூலாதாரம், Getty Images
52 செல்சியஸ் வெப்பம் பதிவானதா?
புதன்கிழமை, தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 52.3 டிகிரி செல்சியஸ் (126.1 பாரன்ஹீட்) என்ற வரலாறு காணாத அளவை எட்டியதாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவித்தன.
இந்திய வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, இந்த வெப்பநிலை பதிவானதை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் டெல்லியின் மற்ற பகுதிகளில் பதிவான வெப்பநிலையை ஒப்பிடும்போது, முங்கேஷ்பூரில் பதிவான வெப்பநிலை அதிகம் எனவும், ஒருவேளை சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது உள்ளூர் சூழல் உள்ளிட்ட காரணங்களால் இப்படி காட்டியிருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த தரவுகள் மற்றும் சென்சாரை ஆய்வு செய்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
டெல்லியின் இரண்டு வானிலை நிலையங்களில் (தெற்கு டெல்லியில் ஒன்று, ஆர்யா நகரில் ஒன்று) பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் முந்தைய அளவு செவ்வாய்க்கிழமையே முறியடிக்கப்பட்டது.
28ஆம் தேதி பதிவான வெப்பத்தை விட 29ஆம் தேதி பல இடங்களில் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி நகரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தானில் தகிக்கும் வெப்பம்
ராஜஸ்தானின் சூரூ நகரம் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் உள்ள சிர்சா நகரம் ஆகியவை நாட்டின் மிகவும் வெப்பமான இடங்களாகும். இங்கு வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கும் (120 பாரன்ஹீட்) அதிகமாக பதிவாகியுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், செவ்வாய்க்கிழமை அன்று வெப்பத்தின் தாக்கத்தால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான இந்திய கோடை காலம் பொதுவாக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் (Humid) இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் நீண்ட மற்றும் கடுமையான வெப்ப அலைகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
இந்த மாதம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 9 முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து வெப்ப அலை காணப்பட்டது. வெப்பநிலையும் 45-50 டிகிரி செல்சியஸுக்கு இடையில் இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஜூன் மாதத்தில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலைய (ஐஎம்டி) தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இந்த வாரம் தெரிவித்தார்.
வடமேற்கு இந்தியாவில் பொதுவாக மூன்று நாட்களுக்கு தான் வெப்ப அலை நீடிக்கும், ஆனால் இம்முறை நான்கு முதல் ஆறு நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு இந்தியாவில் சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.
கேரள கடற்கரையில் மே 31ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












