ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு - தேர்தலில் போட்டியிட முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என வரலாற்றுபூர்வமான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.
வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு நியாயப்படுத்தியுள்ளது.
“டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான ஒரே வழி அவரை வாக்குப்பதிவில் தோற்கடிப்பதுதான், நீதிமன்ற அறையில் அல்ல” என, பைடனின் பிரச்சாரக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவருடைய பிரச்சாரக் குழு அவரை ‘அரசியல் கைதியாக’ சித்தரித்தது.
வழக்கு என்ன?
கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.
இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார்.
இதுதொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தார். மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார்.
இந்த வழக்கின் மையமாக உள்ள ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா?
குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும்.
குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












