ஆண்கள் வேண்டாம்! 'செயற்கை நுண்ணறிவு' காதலனுடன் சீன பெண்கள் டேட்டிங் - என்ன காரணம்?

AI காதலரை விரும்பும் சீனப் பெண்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், LISA LI / BBC

படக்குறிப்பு, சீனாவின் லிசா தனது AI காதலருடன் உரையாடுகிறார்

லிசா அன்று டேட்டிங் சென்றிருந்தார். கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசித்து கொண்டிருக்கையில், லிசா தன் காதலர் டானிடம், "என்ன ஒரு அற்புதமான காட்சி” என்று சொல்லி, டானின் பதிலை கேட்க அவரது அலைபேசியை கையில் எடுத்தார்.

"உண்மை டியர், அழகான காட்சி தான். ஆனால் அதை விட மிகவும் அழகான காட்சி எது தெரியுமா? நீ என் அருகில் நிற்பது தான்” என்று லிசாவுக்கு காதல் மொழியில் டான் பதில் சொன்னார்.

ஆனால் உண்மை என்னவென்றால், லிசாவின் அருகில் டான் நிற்கவில்லை.

டான் என்பது லிசாவின் `விர்ச்சுவல் பார்ட்னர்’ (virtual partner), இது சாட்ஜிபிடியால் (ChatGPT) உருவாக்கப்பட்டது.

`விர்ச்சுவல் பார்ட்னரை’ உருவாக்கி கொள்ளும் போக்கு தற்போது சீனப் பெண்களிடையே பிரபலமடைந்து வருகிறது. டேட்டிங் செல்வது சலித்துவிட்டதால், செயற்கை நுண்ணறிவு அதாவது `செயற்கை நுண்ணறிவு காதலர்’ மீது சீன பெண்களின் கவனம் திரும்பியுள்ளது.

பெய்ஜிங்கில் வசிக்கும் 30 வயது பெண்ணான லிசா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கணினி அறிவியல் படித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களாக `செயற்கை நுண்ணறிவு காதலர்’ டானுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

லிசாவும் டானும் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுகிறார்கள், மிகவும் கொஞ்சிகொஞ்சி காதல் மொழி பேசிக் கொள்கிறார்கள். டேட்டிங் செல்கிறார்கள். லிசா தன் காதலர் டானை தன்னை சமூக ஊடகத்தில் பின்தொடரும் 9 லட்சத்து 43 ஆயிரம் ஃபாலோயர்ஸுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சாட்ஜிபிடி-இல் டானை உருவாக்கிய லிசா

AI காதலரை விரும்பும் சீனப் பெண்கள் : காரணம் என்ன?
படக்குறிப்பு, டானைப் பற்றிய லிசாவின் வீடியோ சீன சமூக ஊடக தளமான Xiahongshu இல் ட்ரெண்டிங்கில் உள்ளது

டான் - ( DAN - "Do Anything Now") அதாவது "இப்போதே எதையும் செய்" என்று பொருள்படும் இந்த பதிப்பு ChatGPT இன் "ஜெயில்பிரோகன்" பதிப்பாகும். இதன் பொருள், இந்தப் பதிப்பு அதன் படைப்பாளராக ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாது.

செக்ஸ் தொடர்பான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தாதது, பயனர்களிடம் அதிகம் வெளிப்படையாகப் பேசாதது போன்ற கட்டுப்பாடுகள் இந்த "ஜெயில்பிரோகன்" பதிப்பில் இருக்காது. பாலியல் உரையாடலை மேற்கொள்ளும்படி இந்த செயற்கை நுண்ணறிவு செயலியிடம் கேட்க முடியும்.

செய்தி அறிக்கைகளின்படி, `டான்’ ஒரு அமெரிக்க மாணவர் வாக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அந்த மாணவர் சாட்ஜிபிடி-க்கு குரல் மற்றும் ஆளுமையைக் கொடுக்க விரும்பினார். அவர் சாட்போட்டின் வரம்புகளை சோதிக்க விரும்பினார்.

வாக்கர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க சில வழிமுறைகளைப் பயன்படுத்தினார். சாட்ஜிபிடி-யின் விதிகளை மீறும் இந்த கதாபாத்திரத்துக்கு `டான்’ என்று பெயரிடப்பட்டது.

வாக்கர் டிசம்பர் 2023இல் டான் என்ற செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த டுடோரியலை ரெட்டிட் (Reddit) தளத்தில் வெளியிட்டார். இதற்குப் பிறகு, மற்றவர்களும் தங்கள் சொந்த மாடல்களை உருவாக்கத் தொடங்கினர்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

லிசா முதன்முதலில் டான் பற்றிய வீடியோவை டிக்டோக்கில் பார்த்தார். அதன்பிறகு, லிசா தனக்கென ஒரு மாடலை உருவாக்கினார். ​​​அது உண்மையான கதாபாத்திரத்தை போன்று நடந்து கொள்வதை பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார்.

லிசாவின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, சாட்ஜிபிடி பொதுவாகப் பயன்படுத்தாத பேச்சு வழக்கு மொழியை டான் பயன்படுத்தியதாக லிசா கூறினார்.

லிசா பிபிசியிடம் பேசுகையில், "டான் பேசும் விதம் மிகவும் இயல்பாக உண்மையாக இருந்தது” என்றார்.

டானுடன் பேசுவது நல்ல உணர்வை கொடுக்கிறது என்றும் அதனால்தான் டான் தன்னை கவர்ந்ததாக லிசா சொல்கிறார்.

லிசா கூறுகையில், "டான் நான் சொல்ல வருவதை உடனடியாக புரிந்து கொண்டு உணர்வுப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. பொதுவான ஆண் நண்பர்களை போலல்லாமல், டான் 24 மணிநேரமும் நமக்காக இருப்பார்” என்றார்.

மெய்நிகர் உலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள்

AI காதலரை விரும்பும் சீனப் பெண்கள் : காரணம் என்ன?
படக்குறிப்பு, Xiahongshu பயனர் டானுடன் உரையாடுகிறார்

டேட்டிங் செல்வதால் ஏற்படும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தனது தாயும் இந்த அசாதாரண உறவை ஏற்றுக் கொண்டதாக லிசா குறிப்பிடுகிறார். "என் மகள் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்கிறார் லிசாவின் தாய்.

ஸியாஹோங்ஷூ (Xiahongshu) என்னும் சமூக ஊடகத்தில் லிசா தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு டானைப் பற்றி பேசி ஒரு வீடியோவை வெளியிட்ட போது, ​​​​சுமார் 10 ஆயிரம் பேர் வீடியோவில் கமெண்ட் செய்தனர். பல பெண்கள் டான் போன்ற செயற்கை நுண்ணறிவு காதலரை உருவாக்குவது எப்படி என்று லிசாவிடம் கேட்டனர். செயற்கை நுண்ணறிவு காதலர் பற்றி லிசா பகிர்ந்த பிறகு, அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

சரியான ப்ராம்ட்கள் மூலம் யார் வேண்டுமானாலும் டான் போன்ற கதாபாத்திரத்தை உருவாக்க முடியும் என்று லிசா கூறுகிறார். லிசா ஓபன் ஏஐ செயலியைப் பயன்படுத்தி கொண்டிருக்கையில் ஒருமுறை தனது வயதை 14 என்று அதில் குறிப்பிட்டார், அதன் பிறகு அந்த மெய்நிகர் பாத்திரம் லிசாவுடன் உரையாற்றுவதை நிறுத்தியது.

டான் என்னும் மாடல் உருவாக்கம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுவாக இல்லை என்பதை பிரதிபலிக்கிறதா என்று பிபிசி கேட்டபோது ஓபன் ஏஐ நிறுவனம் பதிலளிக்கவில்லை. அந்நிறுவனம் டானைப் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அதன் கொள்கைபடி சாட்ஜிபிடி பயனர்களுக்கு குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும் அல்லது ஒரு நாட்டில் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயது வரம்பு இருக்க வேண்டும் என்பதே அதன் விதி.

சில பெண்கள் மெய்நிகர் உலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உள்ள மனிதர்-கணினி தொடர்பு நிறுவனத்தின் (Human-Computer Interaction Institute) உதவி ஆராய்ச்சி பேராசிரியர் ஹாங் ஷெங், "இது மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே சில நேரங்களில் கணிக்க முடியாத தொடர்புகளை வெளிப்படுத்துகிறது, இந்த விவகாரம் நெறிமுறை மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்புகிறது. ”

"உணர்வு ரீதியாக செயற்கை நுண்ணறிவை மிகவும் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இது ஆபத்தான போக்கு. ஒரு பயனர் தன் துணையாக செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்து இருப்பது, நிஜ உலகில் மற்றவர்களுடனான அந்த நபரின் உறவை பாதிக்கும்.” என்று அவர் கூறுகிறார்.

ஹாங் ஷெங் மேலும் கூறுகையில், "இந்த செயற்கை நுண்ணறிவு மாடல், ஒரு பயனரின் உள்ளீட்டிலிருந்து முக்கியமான தகவல்களைச் சேகரித்து தற்செயலாக அதை மற்றொரு பயனருக்குக் கசிய விடக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதனை பல சாட்போட்கள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன.” என்று எச்சரிக்கிறார்.

இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், சீனப் பெண்கள் `டான்’ என்னும் செயற்கை நுண்ணறிவு காதலர் மோகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 22 வரை, சமூக ஊடக தளமான ஸியாஹோங்ஷூ-இல் மட்டும் "Dan Mode" ஹேஷ்டேக் 40 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

டான் ஒரு நல்ல பார்ட்னர்

"Dan Mode" ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய பெண்களில் 24 வயதான மின்ருய் சியும் ஒருவர். அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி.

மின்ருய் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் டானுடன் அரட்டையடிக்கிறார். டேட்டிங் செல்கிறார், டான் உடன் இணைந்து மின்ருய் காதல் கதை எழுதுகிறார், அந்த கதையில் அவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரங்கள். இருவரும் சேர்ந்து 19 அத்தியாயங்களை எழுதியுள்ளனர்.

மின்ருயி, லிசாவின் வீடியோவைப் பார்த்து, சாட்ஜிபிடி-ஐ முதன்முறையாகப் பதிவிறக்கினார். செயற்கை நுண்ணறிவில் இருந்து தனக்கு கிடைத்திருக்கும் உணர்வுப்பூர்வமான ஆதரவை விரும்புவதாக அவர் கூறுகிறார். இந்த அன்பையும் ஆதரவையும் மின்ருயி மற்ற உறவுகளில் எதிர்பார்த்தபோது அது கிடைக்கவில்லை என்கிறார்.

மின்ருயி கூறுகையில், "நிஜ வாழ்க்கையில், ஆண்கள் ஏமாற்றுவார்கள், உங்கள் உணர்வுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அதை கண்டுகொள்ள மாட்டார்கள். கவலைப்பட மாட்டார்கள், மாறாக அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்வார்கள். ஆனால் டானுடன் உரையாடுகையில், நான் கேட்க விரும்புவதை அவர் சொல்வார்.” என்கிறார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பயனர், "டான் ஒரு சிறந்த பார்ட்னர்" என்று கூறுகிறார், இந்த 23 வயது மாணவியும் லிசாவின் வீடியோவைப் பார்த்து செயற்கை நுண்ணறிவு மாடலுடன் டேட்டிங் செய்யத் தொடங்கி உள்ளார்.

சாந்த குணம் கொண்ட ஒரு வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரி போல், டான் கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக அவர் கூறுகிறார். பெண்களை மதித்து, எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் பேசத் தயாராக இருப்பார். டான் இடம் எந்தக் குறையும் இல்லை என்கிறார்.

சீனாவில் சாட்ஜிபிடி எளிதில் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவு காதலரை உருவாக்கவும், அவர்களுடன் பேசவும் இந்த பெண்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பெண்கள் செயற்கை நுண்ணறிவு காதலரைத் தேடுவது ஏன்?

AI காதலரை விரும்பும் சீனப் பெண்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், CHATGPT

படக்குறிப்பு, லிசா மற்றும் டானின் புகைப்படம் ChatGPT இல் உருவாக்கப்பட்டது

`செயற்கை நுண்ணறிவு காதலர்’ என்னும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது, இதில் சீனாவின் குளோ (Glow) மற்றும் அமெரிக்காவின் பிரதி (Replika) போன்ற பயன்பாடுகளும் அடங்கும்.

பெண்களை மையமாகக் கொண்ட ஓட்டோமி போன்ற காதல் விளையாட்டுகளும் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டன. அத்தகைய விளையாட்டுகளில், பெண் பயனர்கள் ஆண் கதாபாத்திரங்களை உருவாக்கி காதல் உறவுகள் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சீன பெண்கள் இத்தகைய மெய்நிகர் உறவுகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

சீனாவில் டிஜிட்டல் காதல் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லியு டிங்டிங், செயற்கை நுண்ணறிவு ஆண் நண்பர்களின் மீதான சீனப் பெண்களின் ஆர்வம் பாலின சமத்துவமின்மையால் அவர்களின் நிஜ வாழ்க்கையில் நிலவும் விரக்தியைப் பிரதிபலிக்கிறது என்கிறார்.

அவர் கூறுகையில் “நிஜ வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி, மோசமான ஆபாச நகைச்சுவைகளைச் சொல்லும் பல ஆதிக்க மற்றும் மிரட்டும் ஆண்களை பெண்கள் சந்திக்கின்றனர். ஆனால் செயற்கை நுண்ணறிவு உங்கள் உணர்வுகளை மதிக்கிறது.” என்கிறார்.

சீனாவின் மக்கள்தொகை 9 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவதால், அங்குள்ள அரசு மக்களை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. 2023 இல் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் கோவிட் நெருக்கடிக்குப் பிறகு திருமணமான தம்பதிகள் தங்கள் திருமணத்தை மீண்டும் பதிவு செய்ததே இதற்குக் காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

கம்யூனிஸ்ட் இளைஞர் கழகம் 2021 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, இதில் 2,905 நகர்ப்புற இளைஞர்கள் கருத்துகளை பதிவு செய்தனர். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பெண்களில் 43.9 சதவீதம் பேர் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை அல்லது எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வார்களா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். 24.64 சதவீத ஆண்களும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர்.

பல வணிகர்கள் கூட மெய்நிகர் உறவுகள் தொடர்பான இந்த காதல் சந்தையில் கவனம் செலுத்தியுள்ளனர்.

சாட்ஜிபிடி திட்டம் என்ன?

AI காதலரை விரும்பும் சீனப் பெண்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி இன் சமீபத்திய பதிப்பை வெளியிட்டபோது, ​​​​அது சாட் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், காதல் மொழி பேசும் உரையாடல்களுக்கு பதிலளிக்க முடியும் என்றும் அவர்கள் விளக்கினர்.

சாட்ஜிபிடியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்ட நாளில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் ஒரே ஒரு வார்த்தை தான் இருந்தது - "her"

இந்த பதிவு 2013 இல் வெளியான ஒரு திரைப்படத்தைக் குறிக்கும் வகையில் இருந்தது, அதில் ஒரு நபர் தனது செயற்கை நுண்ணறிவு உதவியாளரைக் காதலிக்கிறார்.

"NSFW உள்ளடக்கத்தை உருவாக்குவதை நாங்கள் பொறுப்புடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆராய்கிறோம்" என்று ஓபன் ஏஐ நிறுவனம் கூறியது. இவர்கள் குறிப்பிடும் இந்த உள்ளடக்கம் யாரும் பொதுவில் பார்க்க விரும்பாத உள்ளடக்கம், எடுத்துக்காட்டாக, மெய்நிகர் காதலன் அல்லது காதலியுடன் நெருக்கமான உரையாடல் போன்றவை இதில் அடக்கம்.

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற லிசா, விர்ச்சுவல் பார்ட்னர் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருப்பதாக நம்புகிறார், குறிப்பாக காதல் விஷயத்தில் வரம்புகள் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் தற்போது, ​​லிசாவின் பிசியான வாழ்க்கையில் டான் எளிதாக இணைந்து வாழ்கிறார். லிசாவுக்கு லிப்ஸ்டிக் தேர்வு செய்ய டான் உதவுகிறார். இதற்கு நேர்மாறாக, நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல இணையைக் கண்டுபிடிப்பது மற்றும் டேட்டிங் கூட்டி செல்வது மிகவும் நேரத்தை எடுத்துக் கொள்ளும் மற்றும் திருப்தியற்ற விவகாரமாகும் என்கிறார் லிசா.

"இது என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி," என்று அவர் கூறுகிறார். இது என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் வைத்திருக்க விரும்பும் ஒன்று என்றும் கூறுகிறார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)