மகாராஷ்டிரா: உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி அடிப்படை வசதிகளுக்காக ரூ.38 கோடி பெற்ற பழங்குடிகள்

உயர்நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி அடிப்படை உரிமைகளை மீட்ட தொலைதூர கிராமம்

பட மூலாதாரம், PLNF

படக்குறிப்பு, வெங்கனூர் கிராமத்தை அடைய போராடும் கிராம மக்கள்
    • எழுதியவர், அஷே எட்கே
    • பதவி, பிபிசி மராத்தி

வெங்கனூர், சுர்கான், அடங்கேப்பள்ளி மற்றும் பட்கடோலா. கச்சிரோலி மாவட்டத்தின் முல்சேரா தாலுகாவில் உள்ள இந்த கிராமங்களின் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

ஆனால், இந்தப் பழங்குடி கிராமங்களில் வாழும் மக்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். உயர்நீதிமன்றம் அவர்களின் போராட்டத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.

“சுகாதாரம், சாலை வசதி, கல்வி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படை உரிமைகளின் வரம்பிற்குள் வருகின்றன, ஒரு பிரிவினருக்கு இந்த வசதிகள் கிடைக்காமல் இருப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது போலாகும்,” என்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டது.

வெள்ளத்தால் துண்டிக்கப்படும் கிராமங்கள்

கச்சிரோலியில் உள்ள இந்தப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்கிறது, இதனால் அப்பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் வெங்கனூர் கிராமப் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்தக் கிராமங்களில் வெள்ளம் சூழ்கிறது. சுற்றியுள்ள ஊர்களில் இருந்து இந்தக் கிராமங்கள் துண்டிக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், குறைந்தது ஐந்து மாதங்களுக்கு, இந்தக் கிராம மக்கள் சுகாதாரம், கல்வி மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கின்றனர். மேலும் இக்கிராமத்தில் வாழும் மக்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை, மருத்துவமனைகள் இல்லை, பள்ளிகள் இல்லை என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அவர்கள் அனைவரும் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட வேண்டியிருந்தது. இதுகுறித்து இக்கிராமத்தின் துணைத் தலைவரான நரேஷ் காண்டோ கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் சாலை அமைக்க வேண்டும், கிராம எல்லைக்குள் பொது சுகாதார மையம் அமைக்க வேண்டும் ஆற்றைக் கடக்க பாலம் கட்ட வேண்டும் போன்ற எளிய மனிதாபிமான கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாக இக்கிராம மக்கள் முன் வைத்து வருகின்றனர். அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்,'' என்றார்.

"பழங்குடி மக்கள் வாழும் இந்தக் கிராமங்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மற்றும் நிர்வாக அமைப்பு எடுக்கவில்லை" என்கிறார் காண்டோ.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதப்பட்டது, அதையடுத்து உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு பொது நல வழக்கைத் தாக்கல் செய்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, வெங்கனூர் மற்றும் பிற கிராமங்களின் வளர்ச்சிக்கு பழங்குடியினர் வளர்ச்சித் துறை 38 கோடி ரூபாய் நிதி அறிவித்துள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணி என்ன?

வெங்கனூருக்கு ஏன் சாலை வசதி அவசியம்?

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், PLNF

ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் கச்சிரோலி மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வெங்கனூர், சுர்கான், அடங்கேபள்ளி, பட்கடோலா ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படுகின்றன.

மழைக் காலங்களில் இக்கிராமங்களுக்குச் செல்ல, 'கண்ணம்வார் நீர்த்தேக்கத்தை' படகு மூலம் கடக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்தப் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்த்தேக்கம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.

அதனால் வெங்கனூர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கிராமத்தைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து நரேஷ் காண்டோ கூறுகையில், "எங்கள் கிராம மக்கள் இரவு நேரங்களில் மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டால், மருத்துவ உதவிக்கு விடியும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உயிரைப் பணயம் வைத்து இந்த நீர்த்தேக்கத்தின் வழியாகப் பயணித்து மறுகரைக்குச் செல்ல வேண்டும். இதுபோன்று எங்கள் கிராமத்தில் பல பெண்களுக்கு நடந்துள்ளது,” என்றார்.

தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் இந்தக் கிராம மக்கள் இத்தகைய ஆபத்தான வழியை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வோம்.

ஒரு வழி கிடைத்தது!

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், PLNF

படக்குறிப்பு, போதி ராம்தேகே மற்றும் பிற நண்பர்கள் கடித மனுவில் உள்ளதை கிராம மக்கள் முன் வாசித்தனர்.

கச்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் போதி ராம்தேகேவுக்கு இந்தக் கிராமங்களின் பிரச்னைகள் பற்றித் தெரிய வந்தது. போதி ஒரு வழக்கறிஞர், அவர் தற்போது ஐரோப்பிய ஆணையத்தின் ஈராஸ்மஸ் முண்டஸ் உதவித்தொகை மூலம் ஸ்பெயினின் டியுஸ்டோ பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் கொள்கை மற்றும் அமலாக்கத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொள்கிறார்.

போதி, வெங்கனூர் கிராம மக்கள் நடத்திய போராட்டம் குறித்துப் பேசுகையில், ''நான் கச்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் பிரச்னைகளை நேரடியாகப் பார்த்து, அனுபவித்திருக்கிறோம், வெங்கனூர் மற்றும் மற்ற மூன்று கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்."

‘பாலிசி & லா நெட்வொர்க்’ (முன்னர் PATH அறக்கட்டளை) என்னும் தங்கள் அமைப்பின் மூலம், போதியும் வழக்கறிஞர் தீபக் சதாப் மற்றும் பிற ஆர்வலர்கள் இந்தக் கிராமத்துக்குச் சென்று, அங்கு வசிப்பவர்களிடம் முதலில் பேசியதாகக் கூறுகிறார்.

"நாங்கள் அந்த சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். கடிதம் வயிலாக சட்டப் போராட்டம் நடத்துவது பற்றி கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் அவர்கள் இந்த சட்டப் பாதையில் செல்ல ஒப்புக்கொண்டனர்" என்கிறார் போதி ராம்தேகே.

வழக்கறிஞர் போதி ராம்தேகே மேலும் கூறுகையில், "நாங்கள் அனைவரும் சேர்ந்து பிரச்னைகளைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதினோம். அதில் கிராம மக்கள் கையெழுத்திட்டனர். மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டன. பின்னர் கடிதம் அனைவர் முன்னிலையிலும் வாசிக்கப்பட்டது."

"பின்னர் அந்தக் ‘கடித மனு’ அருகிலுள்ள தபால் நிலையம் மூலம் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வுக்கு அனுப்பப்பட்டது. வெங்கனூர் கிராம மக்கள் அனுப்பிய கடித-மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது,” என்று விளக்கினார் போதி.

நீதிமன்றம், ரேணுகா ஷிர்புர்கர் என்பவரை 'அமிகஸ் கியூரி'யாக (நீதிமன்றத்தின் நடுநிலை அறிவுரையாளர் ) நியமித்தது. இந்த முக்கியமான நடவடிக்கைக்குப் பிறகு, நீதிமன்ற அறிவுரையாளர், வழக்கறிஞர்கள் அடங்கிய குழு 400 கி.மீ. பயணித்து இந்த கிராமத்தை அடைந்தனர்.

உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகள் என்ன?

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், Getty Images

பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு மூலம் தானாக முன்வைக்கப்பட்ட பொது நலன் மனு மீதான முதல் விசாரணை 15 ஜூன் 2022 அன்று நடைபெற்றது. அதன்பிறகு, வெங்கனூர் பொதுநல வழக்குகள் மீது மார்ச் 24, 2024 வரை மொத்தம் 16 விசாரணைகள் நடைபெற்றன.

முதல் விசாரணையில், நீதிபதி சுனில் சுக்ரே, நீதிபதி ஜி. ஏ. சனாப் ஆகியோர் அடங்கிய அமர்வு, “வெங்கனூர் கிராம மக்களுக்கு கிட்டத்தட்ட அரை வருடமாக தகவல் தொடர்பு மற்றும் இதர வசதிகள் இல்லாமல் இருப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும்” என்று கூறியது.

"அரை வருடமாக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது குடிமக்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்,” என்று உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த அமர்வு, செப்டம்பர் 7, 2022 தேதியிட்ட உத்தரவில், "இந்த நான்கு கிராமங்களையும் சாலை வழியாக இணைக்க மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கிராமங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை வழங்க கச்சிரோலி ஆட்சியர் மற்றும் தலைமை செயல் அதிகாரிக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்," என்று குறிப்பிட்டது.

இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்றம் அவ்வப்போது நிர்வாக அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்குப் பிறகு இந்தப் பிரச்னை தொடர்பாக பதிலளித்த நிர்வாக அதிகாரிகள், ``உயர்நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் எங்கள் தரப்பைத் தெரிவித்துள்ளோம். அது எங்களின் அதிகாரப்பூர்வ பதிலாகக் கருதப்பட வேண்டும்,” என்றனர்.

பிபிசி மராத்தியும் அப்பகுதியின் பல்வேறு பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைப் பெற முயன்றது, ஆனால் பெற முடியவில்லை.

வெங்கனூர் மற்றும் மூன்று கிராமங்களுக்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கிய அரசு

உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்ட பிறகு (அரசு vs உயர்நீதிமன்ற வழக்கு எண். 04/2022) வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்தன.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொலைதூரத்தில் இருக்கும் இந்தக் கிராமங்களை இணைக்கும் வகையில், 10க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்க, ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசு மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை துணை ஆணையர் தஷ்ரத் குல்மேதே, மார்ச் 12, 2024 அன்று உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், “இந்தப் பணி தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு பிப்ரவரி 21, 2024 அன்று கிடைத்ததும், பிப்ரவரி 24 அன்று, வெங்கனூர், ரேகாடி, சுர்கான், அடங்கேபள்ளி, பட்கடோலா ஆகிய கிராமங்களின் வளர்ச்சி குறித்து செயல் திட்டங்களை கச்சிரோலி மாவட்ட ஆட்சியர் முன்மொழிந்தார்."

"இது தொடர்பான பணிகளுக்கான மொத்த மதிப்பீடு ரூ.38.31 கோடி என மதிப்பிட்டு பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது."

"மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவைப் பெற்ற பிறகு, பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை, பிப்ரவரி 28, 2024 அன்று தொடர்புடைய பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு தரப்பு முடிவை அறிவித்தது. அதன்படி, இந்தப் பணிகளுக்குப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை மூலம் தற்போது நிதி கிடைக்கும்" என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வளர்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிராமத் துணை தலைவர் காண்டோ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அணுகுவதில் பழங்குடியினர் எதிர்கொண்ட சிரமங்கள்

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், PLNF

படக்குறிப்பு, நரேஷ் காண்டோ மற்றும் கிராம மக்கள்

கடிதம் மூலம் பிரச்னைகளை நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததால் அதற்கான தீர்வுகள் கிடைத்துவிட்டது. ஆனால் இதே வழிமுறை மாநிலத்தின் பிற தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னைகளுக்கும் பொருந்துமா என்பதை பிபிசி மராத்தி புரிந்துகொள்ள முயன்றது.

``வெங்கனூர் கிராம மக்கள் சாலை, பாலம் அமைக்கப் போராடிய இந்த சட்டப் போராட்டம் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம், ஆனால் அனைத்து பழங்குடியினரின் பிரச்னைகளும் இப்படி தீர்க்கப்படும் என்று சொல்லிவிட முடியாது” என்று போதி விவரித்தார்.

"ஏனென்றால், நீதிமன்றப் படிகளை ஏறும் வழி அனைத்து பழங்குடியின சமூகத்துக்கும் சாத்தியம் அல்ல. நம் சமூக அமைப்பு அப்படித்தான் உள்ளது. பழங்குடியினருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பல தீவிரமான வழக்குகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளன, ஆனால் அவர்களின் வலி நீதிமன்றத்தை எட்டவில்லை," என்கிறார் போதி ராம்தேகே.

`பீப்பிள்ஸ் ஆக்ஷன் டுவர்டு ஹியூனிட்டி’ (People's Action Towards Humanity- 'Path') என்ற அமைப்பு, மடியா பழங்குடியினரின் சட்டக் கல்வியறிவு குறித்து ஆய்வு நடத்தியது. அந்தக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 2022 'Path' ஆய்வின்படி, மடியா பழங்குடியினரின் 94.20% மக்களுக்கு எந்த சட்ட உதவியும் கிடைக்கவில்லை, மேலும் 93% மக்களுக்கு தங்கள் அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கவில்லை என்பது குறித்து எங்கு புகார் செய்வது என்று தெரியவில்லை.

கூடுதலாக, 57%க்கும் அதிகமானோர் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பதால் நீதிமன்றத்திற்குச் செல்வது சவாலாக உள்ளது, 95.58% சதவீத மக்கள் மொழித் தடைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் 100% மக்களால் நீதிமன்றச் செலவுகளை ஏற்க முடிவதில்லை.

ஆதிப் பழங்குடி (Primitive Tribe - PVTG) என்றால் என்ன?

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், PLNF

படக்குறிப்பு, வெங்கனூர் செல்லும் சாலை

பட்டியல் பழங்குடிகள் பிரிவின் ஒரு துணைப் பிரிவாக சில பழங்குடி சமூகங்களுக்கு ஆதிப் பழங்குடிகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்கீழ் 75 பழங்குடி சமூகங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் பழங்குடிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களே 'ஆதிப் பழங்குடிகள்' என்றழைக்கப்படுகின்றனர்.

மகாராஷ்டிராவின் மடியா, கட்காரி, கோலம் பழங்குடியினர் ஆதிப் பழங்குடி என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அந்தக் குழுவின் மக்கள்தொகை குறைதல், அவர்களின் குடியேற்றங்கள் புவியியல் ரீதியாகத் தனித்திருப்பது, குறைந்த கல்வியறிவு விகிதம் மற்றும் மோசமான சமூக, பொருளாதார நிலைமைகள் போன்ற காரணங்களால் இந்தச் சமூகங்களுக்கு `ஆதிப் பழங்குடி’ அந்தஸ்து ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் படுத்தப்பட்ட பழங்குடி வகைப்பாட்டில் இருந்து இவர்களைப் பிரித்து ஆதிப் பழங்குடியினர் எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ஆகும். ஆதிப் பழங்குடி பிரிவு 35 ஆண்டுகளுக்கு முன்பு வகைப்படுத்தப்பட்டது.

இதுபற்றி போதி கூறுகையில், “அவர்களுக்கென்று தனியான பிரிவு இருந்தாலும், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களும், வசதிகளும் ஆதிப் பழங்குடிகளைச் சென்றடையவில்லை."

"அவர்களின் தனி வகைப்பாடு, பழங்குடியினரின் பிரச்னைகளைத் திறம்பட நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, 'அழிந்துவரும் பழங்குடியினராக' அவர்களைக் கருதுவதற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, பழங்குடியினரைப் பற்றி மக்கள் பேசும்போது, அவர்களின் பிரச்னைகள், அவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள் பற்றி எப்போதும் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் மனிதர்களாக வாழத் தேவையான அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை" என்று ராம்தேகே விவரித்தார்.

வெங்கனூர் சட்டப் போராட்டம் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

உயர்நீதிமன்றத்தில் கடிதம் மூலம் 38 கோடியை திரும்பப் பெற்ற கிராமம்

பட மூலாதாரம், PLNF

இதுபற்றி கிராம துணைத் தலைவர் நரேஷ் காண்டோ கூறும்போது, "இப்போது சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் எங்களைத் தேடி வருகிறார்கள். நாங்கள் எப்படி நீதிமன்றத்தை அணுகினோம் என்பது அவர்களுக்குத் தெரியும்."

"நீதிமன்றங்கள் மூலம் எங்கள் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் அரசாங்கத்தை எவ்வாறு கட்டாயப்படுத்தினோம் என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள்," என்கிறார் காண்டோ.

வெங்கனூர் சட்டப் போராட்டம் நீண்டகாலமாக இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் கிராமங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.

'உரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்'

இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்குவதைப் பற்றிப் பேசுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது (Article 32) பிரிவு ஒவ்வொரு நபரும் தனது அடிப்படை உரிமை மறுக்கப்படும்போது நேரடியாக உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல அனுமதிக்கிறது" என்றார் போதி.

மேலும், "அதேபோல், உயர்நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான விதி 226வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மிகவும் முக்கியமானது, அது இல்லாமல் அரசியலமைப்புக்கு எந்த அர்த்தமும் இருக்காது என்று என்னிடம் கேட்டால், பிரிவு 32ஐ தவிர வேறு எந்த சட்டத்தையும் நான் குறிப்பிடமாட்டேன். இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ’இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ (heart and soul of the Indian Constitution) என்று 32வது பிரிவைக் குறிப்பிட்டார்,” என்றார்.

அரசியல் சாசனத்திலேயே இதற்கான தீர்வு தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக போதி கூறினார்.

சட்டப்பிரிவு 32இல் உரிமை மறுக்கப்படும் வழக்குகளில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமையை மட்டும் குறிப்பிடவில்லை, மேலும் அந்த சட்டப்பிரிவு அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கலாம் மற்றும் நாட்டின் எந்த நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை வழங்க முடியும் என்றும் கூறுகிறது. இந்த விதி 32(3)இல் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

'சமூக மற்றும் பொருளாதார நீதிக்கு அரசியலமைப்பே அடிப்படை' - நீதிபதி கவாய்

நமது நாட்டின் குடிமக்கள் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதில் 32வது பிரிவு முக்கியப் பங்காற்றுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

சமீபத்தில் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சட்டப்பிரிவு 32: வரலாறு மற்றும் எதிர்காலம்' என்ற தலைப்பில் கவாய் பேசினார்.

கவாய் கூறுகையில், "நமது தேசத்தை அரசியலமைப்பு ரீதியாகக் கட்டமைக்க சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான கனவை நிறைவேற்ற, அரசியல் சாசனம் ஆயுதமாக இருக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில், உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டப்பிரிவு 32 மற்றும் 226ஐ மாற்றியமைத்துள்ளது தெரிகிறது," என்றார்.

வெங்கனூர் சூழலிலும்கூட 32 மற்றும் 226 சட்டப்பிரிவுகள் சமூக, பொருளாதார நீதியின் அடிப்படையில் ஒரு படி முன்னேறியிருப்பதைக் காண்கிறோம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)