சர்ச்சைக்கு நடுவில் பிரதமர் மோதியின் கன்னியாகுமரி வருகை - தேர்தல் விதிமீறலா, இல்லையா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அவரது வருகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி, நடக்கவிருப்பதால், அதற்கான தேர்தல் பிரசாரம் மே 30ஆம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தை பிரதமர் வந்தடைந்திருக்கிறார். அங்கு அவர் தியானம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமையன்று பிற்பகலில் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடிற்கு வந்தார். அங்கிருந்து பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த அவர், தியானம் மேற்கொள்வதற்காக விவேகானந்தர் நினைவிடத்தைச் சென்றடைந்தார்.
இரண்டு நாட்கள் தியானத்திற்குப் பிறகு ஜூன் 1ஆம் தேதி பிற்பகலில் பிரதமர் டெல்லி திரும்புகிறார்.
எதிர்க்கட்சிகளின் கண்டனம்

பட மூலாதாரம், ANI
ஆனால், அவரது இந்தப் பயணத்திற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோதியின் கன்னியாகுமரி தியானத்தை ரத்துசெய்ய வேண்டுமென குமரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
வாக்காளர்களைக் கவர்வதற்காக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்து, விளம்பரப்படுத்த அனுமதித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டனர்.
மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் பிரதமரின் வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் சில இடங்களில், #Gobackmodi என்ற ஹாஷ்டாகுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், ட்விட்டரிலும் #Gobackmodi ட்ரெண்ட் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி புதன்கிழமையன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்குப் பதிவிற்கு முந்தைய 48 மணிநேரத்தில் யாரையுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். மௌன விரதமாகவோ, வேறு எதுவாகவோ இருந்தாலும் சரி, அது மறைமுகப் பிரசாரமாக இருக்கக்கூடாது."
"மே 30ஆம் தேதி 7 மணியில் இருந்து ஜூன் 1ஆம் தேதிவரை இருக்கிறது. மே 30ஆம் தேதி மாலை மௌன விரதத்தைத் துவங்குவதாக பிரதமர் மோதி அறிவித்திருக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். அவர் அப்படிச் செய்தால், அதை அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் இதுபோலத் தெரிவித்தாலும், மோதியின் வருகை தமிழக ஊடகங்களால் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டதோடு, அவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வது போன்ற காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டன.
பிரதமரின் செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகிறதா?

பட மூலாதாரம், X/BJP4INDIA
"கடந்த 2019ஆம் ஆண்டிலும் இதேபோல பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேதர்நாத்தில் தியானம் செய்தார் பிரதமர். அப்போது யாராவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? அந்த நேரத்தில் தியானம் செய்தது தவறில்லையென்றால், இப்போது மட்டும் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?"
"வாக்குப் பதிவிற்கு முந்தைய 48 மணிநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டால் அது தவறு. ஒரு தனி மனிதராக தியானம் செய்வதில் என்ன தவறு?" என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான என். கோபால்சுவாமி.
அவருடைய தியானக் காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட எதிர்க்கட்சிகள் கோருவது குறித்துக் கேட்டபோது, "அதை தேர்தல் ஆணையத்திடம் ஏன் கோர வேண்டும்? ஊடகங்களிடம் அல்லவா கேட்க வேண்டும்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், ANI
ஆனால், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்தான் என்கிறார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹரி பரந்தாமன்.
"இந்த முறை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் எந்த விதிமீறலையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு மாநிலத்தில் ரம்ஜானுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. ஆனால், ராமநவமிக்குத் துண்டிக்கப்படுகிறது என இரு மதத்தினரைp பிளவுபடுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் பேசினார். தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அப்படித்தான் இதிலும் நடக்கிறது," என்கிறார் அவர்.
பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழ்நாட்டின் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
ஏற்கெனவே ஏப்ரல் 12ஆம் தேதி அமித் ஷா திருமயத்திற்கு வருவதாக இருந்தது. அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அந்தக் கோவிலுக்கு உள்துறை அமைச்சர் வருகை தந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












