அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக - சிக்கிமில் ஆட்சி அமைக்கும் எஸ்.கே.எம்

பட மூலாதாரம், ANI
இந்தியாவின் இரு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 2, 2024) வெளியானது.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. சிக்கிமில் `சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா’ (எஸ்கேஎம்) வெற்றி பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31இல் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 46 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 6 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஎ) 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற ஒரே தொகுதியான பாமெங் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் குமார் ஒய் பாஜகவின் டோபா லாம்னியோவை தோற்கடித்துள்ளார். அதேநேரம், மெபோ மற்றும் டோய்முக் ஆகிய இடங்களில் பிபிஎ-வும், யாச்சுலி, போல்டுமாஸ் டியும் மற்றும் லேகாங் ஆகிய இடங்களில் என்சிபியும் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக இங்கு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றி, முந்தைய தேர்தலைவிட அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இங்கு பத்து தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. என்பிபி 5 தொகுதிகளையும், என்சிபி 4 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது.
சிக்கிம் தேர்தல் நிலவரம்

சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, இங்கு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி 32 தொகுதிகளில் 31 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) கட்சியால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
எஸ்பிஎஃப் வெற்றி பெற்ற ஒரே தொகுதியான ஷயாரியில் இருந்து டென்சிங் நோர்பு லாம்டா என்ற வேட்பாளர் 6,633 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் எஸ்கேஎம் கட்சியின் குங்கா நிமா லெப்சா என்ற வேட்பாளர் 5,319 வாக்குகள் பெற்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எஸ்.கே.எம் கட்சிக்கு 17 தொகுதிகளும், எஸ்டிகே கட்சிக்கு 15 தொகுதிகளும் கிடைத்தன. சிக்கிமில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
அருணாச்சல பிரதேச வெற்றி குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றிக்கு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில், "அருணாச்சல பிரதேசத்திற்கு மனமார்ந்த நன்றி. அழகு நிறைந்த இந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள், வளர்ச்சிப் பாதைக்காக பாஜகவுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்" என்று பதிவிட்டார்.
பாஜக தலைவர் ஜேபி நட்டா, ``அருணாச்சல பிரதேசத்திற்காக எங்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பெமா காண்டு யார்?

பட மூலாதாரம், ANI
அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட்டது. பெமா காண்டு ஏற்கெனவே தனது தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார்.
முதல்வர் பெமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டுவும் முதல்வராகப் பதவி வகித்தவர்தான். 2016ஆம் ஆண்டு முதல் முறையாக மாநில முதல்வராகப் பதவியேற்ற பெமா, அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு காங்கிரஸை விட்டு வெளியேறினார். அதே ஆண்டின் தொடக்கத்தில், அவர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியில் சேர்ந்தார், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் பாஜகவில் சேர்ந்தார். அவர் முதல்வராவதற்கு முன், மாநிலத்தின் சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும் இருந்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












