நாடாளுமன்ற தேர்தல் 2024: கருத்துக் கணிப்புகளில் முந்துவது யார்?

பட மூலாதாரம், Getty Images
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இருப்பினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸின் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 33 முதல் 37 தொகுதிகள் வரையும், இரண்டு முதல் நான்கு தொகுதி வரை பாஜகவுக்கும் கிடைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன் கணிப்புப்படி, அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும்.

சிஎன்என் - நியூஸ்18 கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு 36 முதல் 39 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ்(Republic-Matrize) கருத்துக்கணிப்பின்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 35 முதல் 38 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 3 தொகுதிகளும், அதிமுகவுக்கு 0 முதல் 1 தொகுதியும் கிடைக்கலாம் என்று கணித்துள்ளது.
ஜன்கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், பாஜக 0 முதல் 5 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், அதிமுக ஒரு இடத்தைக்க்கூட பிடிக்காது என்றும் கூறியுள்ளது.
தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு
டைம்ஸ் நவ் கணிப்பின்படி, தேசிய அளவில் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 358 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 152 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 33 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பார்க்கும்போது ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய அளவில் பாஜக கூட்டணிக்கு 353 முதல் 368 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 133 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 43 முதல் 48 தொகுதிகளும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சிஎன்என் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 355 முதல் 370 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், இந்தியா கூட்டணி 125 முதல் 140 இடங்களைப் பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு, "பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 377 இடங்கள் (15 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) என்றும், இந்தியா கூட்டணி 151 இடங்களை (10 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் (5 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) வரை கிடைக்கலாம்" எனவும் கூறுகிறது.
மேலும், பாஜக 327 இடங்களையும் காங்கிரஸ் 52 இடங்களையும் பிடிக்கக்கூடும் எனவும் ஜன்கி பாத் கணித்துள்ளது.
கர்நாடகா கருத்துக்கணிப்பு

பட மூலாதாரம், Getty Images
ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 7 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே கணிப்பின்படி, பாஜக கூட்டணிக்கு 23 முதல் 25 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும், இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளா கருத்துக்கணிப்பு
இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 18 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 2 முதல் 3 தொகுதிகளும், இடது ஜனநாயக முன்னணிக்கு 0 முதல் 1 இடமும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏபிபி நியூஸ் - சிவோட்டர் கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 19 இடங்கள் கிடைக்கும் எனவும், பாஜக கூட்டணிக்கு 1 முதல் 3 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எக்ஸிட் போல் என்றால் என்ன?
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை `Exit poll’ என்று அழைக்கின்றனர். Exit என்றால் `வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே இந்த கருத்துக்கணிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதைக் கூறிவிடுகிறது.
ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை கேட்பார்கள். அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இதனை தான் கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம்.
கருத்துக்கணிப்பு நடத்தும் முகமைகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. இவர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், `யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்பார்கள்.
மேலும் உங்களுக்கு பிடித்த வேட்பாளர் யார்? பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்களில் யாரை பிடிக்கும் என்பது போன்ற கேள்விகளையும் கூட கேட்பார்கள்.
இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 வாக்காளருக்கு ஒருவர் என்ற முறையில் அல்லது பெரிய தொகுதியாக இருந்தால் 20 வாக்காளருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தப்படும்.
இந்த கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று கணிக்கப்படும்.
கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images
கருத்துக்கணிப்புகள் குறித்து விளக்கும் பேராசிரியர் சஞ்சய் குமார், "வானிலை ஆய்வு மைய மதிப்பீடுகள் சில நேரங்களில் மிகவும் துல்லியமாக இருக்கும், சில சமயங்களில் நிஜ சூழலுக்கு சற்று நெருக்கமாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் துல்லியமாக இருக்காது. அது போலவே கருத்துக்கணிப்புகளும் இருக்கும்" என்கிறார்.
வாக்கு சதவீதத்தை மதிப்பிடுதல், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை மதிப்பிடுதல் உள்ளிட்ட இரண்டு முக்கிய பணிகளை இந்த கருத்து கணிப்புகள் செய்வதாக அவர் விவரிக்கிறார்.
ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முகமையின் வெவ்வேறு விதமான கருத்து சேகரிப்பு பாணியின் காரணமாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாறுபடலாம் என்று கூறுகிறார் அவர்.
2019 மக்களவைத் தேர்தல்
2019 மக்களவைத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA), சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டது.
கருத்துக் கணிப்புகள் சரி என்று நிரூபிக்கும் வகையிலேயே உண்மையான தேர்தல் முடிவு இருந்தது. பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












