சந்திரபாபு நாயுடு பாஜகவை ஆட்டுவிப்பாரா? தெலுங்கு தேசத்தின் வியூகம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜி.எஸ். ராம்மோகன்
- பதவி, ஆசிரியர், பிபிசி தெலுங்கு சேவை
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் பரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்கள் தேசிய அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளன.
543 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையோடு சேர்த்து ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒடிஷாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியை வீழ்த்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைப் பெற்றுள்ளது சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி.
இந்நிலையில் மீண்டும் தேசிய அரசியலில் சந்திரபாபு பேசுபொருளாகியுள்ளார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் சுனாமியையே உருவாக்கியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி 151 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களையும் வென்றிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் எதிர்பார்த்ததைவிடவும் அதிக வாக்குகளைப் பெற்று தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு இந்த சட்டமன்றத் தேர்தல், வாழ்வா சாவா என்ற தேர்தலாகக் கருதப்பட்டது. இதில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டால் அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியே என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் தற்போது அக்கட்சி பெற்றிருக்கும் வாக்குகள் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. மேலும் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபுவுக்கும் தேசிய அரசியலில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாஜக தனித்து ஆட்சி அமைக்கப் போதிய இடங்களைப் பெறாத காரணத்தால், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் அதற்கு மிகவும் முக்கியமானவை. சந்திரபாபு எதிர்பார்த்த சூழலும் இதுதான்.
அனுபவம் மிக்க அரசியல் தலைவரான சந்திரபாபு, கடந்த காலங்களிலும் இதேபோன்று தேசிய அளவிலான அரசியல் சூழல்களில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
உதாரணத்திற்கு, 1984 தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
மேலும் ஒரு கட்டத்தில் மத்தியில் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் முடிவு செய்யும் அளவிற்கான முக்கிய சக்தியாகத் தாம் இருந்ததாக அக்கட்சி கூறிக்கொண்டது. ஒருவேளை அதே நிலையைத்தான் இப்போதும் அக்கட்சி விரும்புகிறது.
பாஜகவுடன் வலுவான சித்தாந்தப் பிணைப்பு இல்லை

பட மூலாதாரம், TWITTER
தேசிய அளவில் அனைவரது பார்வையும் தற்போது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் மீது திரும்பியுள்ளது. இவர்கள் இருவருமே அடிக்கடி கூட்டணிக் கட்சிகளை மாற்றிக் கொள்வதில் பெயர் போனவர்கள் மட்டுமின்றி, அதிக தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்கள்.
இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகளை மாற்றியபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததே காரணம் என்று கூறினார் சந்திரபாபு. அதன் காரணமாகவே அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணம் என்னவென, சரியான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் ஒரு சதவீத வாக்கு வங்கிகூட இல்லாத ஒரு கட்சிக்கு 6 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 10 எம்எல்ஏ தொகுதிகள் வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மத்திய அரசு மற்றும் அதன் அதிகாரத்தின் துணையுடன் மட்டுமே, மாநிலத்தில் அதிகாரம் மிக்க சக்தியாக இருந்து வரும் ஒய்எஸ்ஆர் கட்சியுடன் போட்டியிட முடியும். ஆனாலும், அவரது முடிவு புத்திசாலித்தனமான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை.
சந்திரபாபுவுக்கும் பாஜகவுக்கும் சித்தாந்த ரீதியாகவோ அல்லது உணர்வுபூர்வமாகவோ எந்தப் பிணைப்பும் இல்லை. எந்தவொரு வலுவான சித்தாந்தமும் அற்ற முதலாளித்துவத் தலைவர் சந்திரபாபு. சூழலைப் பொறுத்தே அவரது முடிவுகளும் மாறும்.
எனவே அவர்களை நீண்டகாலம் இணைத்து வைத்திருப்பதற்கான எந்தக் காரணமும் இல்லை. இதனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம், எப்போது வேண்டுமானாலும் அரசியல் கணக்குகள் மாறலாம்.
தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைந்துவிட்டதால், உடனடியாக மாற்றம் எதுவும் ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் கடும் விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.
கடந்த காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இருந்தபோது, ராம ஜென்மபூமி, சட்டப்பிரிவு 370, பொது சிவில் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை கூட்டணியின் பொதுத் திட்டத்தில் (Common Minimum Program) இடம் பெறாத வகையில் பார்த்துக் கொண்டதாக தெலுங்கு தேசத்தின் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதே கொள்கைகள் இப்போதும்கூட பின்பற்றப்படலாம். தேவையைப் பொறுத்தே களத்தின் நிறமும், சூழலும் மாறலாம். ஆனால், பாஜக கண்டிப்பாக அதை விரும்பாது. இந்த முரண்பாடு எங்கு அழைத்துச் செல்லும் என்று தற்போது எதையும் கணிக்க முடியாது.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












