பாஜகவுக்கு சாதகமான தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

பட மூலாதாரம், ANI

2024-ஆம் இந்திய நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ஆனால் ஜூன் 1-ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கருத்துக்கணிப்புகள் வெளியானதும் அதுபற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளிவந்துள்ள அனைத்து கருத்துக்கணிப்புகளும், ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

கடந்த சனிக்கிழமை (ஜுன் 1) மாலை கருத்துக்கணிப்புகள் வெளிவந்ததிலிருந்து, அவை குறித்த அரசியல் எதிர்வினைகளும் வந்துகொண்டிருக்கின்றன.

ஒருபுறம், பா.ஜ.க தலைவர்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறும் நிலையில், மறுபுறம், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கருத்துக் கணிப்புகள் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த அரசியல் அறிக்கைகளுக்கு மத்தியில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீது குவிந்துள்ளது. பல சர்வதேச ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் இந்தக் கருத்துக்கணிப்புகள் குறித்த செய்திகள் மற்றும் பகுப்பாய்வுகளை வெளியிட்டு வருகின்றன.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘சந்தை ஏற்றம் காணும்’

அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க், இந்தக் கருத்துக்கணிப்புகள் தொடர்பான செய்தியை வெளியிட்ட போது, ​ ‘தேர்தலில் மகத்தான வெற்றிக்கு மோதி தயாராகிவிட்டார்' என்று தலைப்பு கொடுத்துள்ளது.

அந்தச் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோதியின் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியத் தேர்தலில் தீர்க்கமான பெரும்பான்மை பெறும் என்று பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தலைமை பதவியில் அவர் நீடிப்பார்," என்று தெரிவித்திருக்கிறது.

"அவரது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 272 இடங்களைக் கடந்து பலமான பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும்," என்று ப்ளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.

ப்ளூம்பெர்க்கின் இந்தச் செய்தியறிக்கை, கடந்த வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த இந்திய நிதிச்சந்தையை இந்த முடிவுகள் ஊக்குவிக்கும் என்று கூறுகிறது.

புளூம்பெர்க்கிடம் பேசிய ‘ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ்’ நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக நிபுணர் வி.கே.விஜயகுமார், தேர்தல் முடிவுகளுக்குப் பின் சந்தையில் ஏற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கருத்துக்கணிப்புகள் வெளிவந்ததிலிருந்து, அவை குறித்த அரசியல் எதிர்வினைகளும் வந்துகொண்டிருக்கின்றன

கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை

கத்தாரைச் சேர்ந்த ஊடகக் குழுவான அல்-ஜசீராவும் தனது தளத்தில் கருத்துக் கணிப்புகளைப் பற்றிய செய்தியைப் பிரசுரித்துள்ளது. 'மோதி மேஜிக்: இந்திய தேர்தல் கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க-வுக்குச் சாதனை வெற்றியைக் கணிக்கின்றன' என்று அந்த அறிக்கைக்குத் தலைப்பிட்டிருக்கிறது.

இந்தச் செய்தியில், "சனிக்கிழமை மாலை வெளியான கருத்துக் கணிப்புகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அதீதப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன. ஜூன் 4-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளிவரவிருக்கும் தேர்தல் முடிவுகள் இந்தக் கணிப்பைப் பிரதிபலித்தால், மோதியின் பாரதிய ஜனதா கட்சி, அதிகரித்து வரும் சமத்துவமின்மை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளில் இருந்து மட்டும் தப்பிக்காது, கடந்த 2019 தேர்தலை விட சிறப்பான வெற்றியைப் பெறும்,” என்று தெரிவித்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கருத்துக் கணிப்புகள் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகக் கூறுகின்றனர்

"சுதந்திர இந்தியாவில் எந்தப் பிரதமரும் தொடர்ந்து மூன்று முறை, ஒவ்வொரு முறையும் முந்தையதைக் காட்டிலும் அதிகத் தொகுதிகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. குறைந்தபட்சம் ஏழு இந்திய ஊடக நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வும் அதன் கூட்டணியும், மொத்தமிருக்கும் 543 இடங்களில் 350-380 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளன,” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

"இந்தியாவில் கருத்துக்கணிப்புகளின் நம்பகத்தன்மை முன்னும் பின்னும் இருந்திருக்கிறது. கடந்த கருத்துக்கணிப்புகள் சில சமயம் சில கட்சிகளை குறைத்து மதிப்பிட்டிருக்கின்றன அல்லது மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளன. இருப்பினும், ஒரு சில விதிவிலக்குகள் தவிர, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியக் கருத்துக்கணிப்புகளின் மதிப்பீடுகள் பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கின்றன," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அல்-ஜசீராவிடம் பேசிய டெல்லியைத் தளமாகக் கொண்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான நீலஞ்சன் சர்க்கார், "மோதி மிகவும் பிரபலமானவர். பா.ஜ.க-வின் தேர்தல் பிரசாரம் முற்றிலும் மோதியை மையமாகக் கொண்டது. ​​மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது மகிழ்ச்சியாக இல்லை என்று பல மதிப்பீடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை வாக்குகளாக மாற்றுவது எப்போதுமே சவாலானது," என்றார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் மோதி, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தொலைக்காட்சி சேனலிடம், 'கடவுள் என்னை அனுப்பினார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன்' என்று கூறினார்

தென்னிந்தியாவிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கணிப்பு

அல்-ஜசீராவின் செய்தி மேலும், "இந்தியாவின் தென் மாநிலங்களிலும் பா.ஜ.க சிறப்பாக செயல்படக் கூடும் என்று பல கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் பா.ஜ.க இரண்டு முதல் மூன்று இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இடதுசாரிகளின் கடைசி கோட்டையாகும். இதுநாள் வரை மோதியின் கட்சியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒன்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறலாம்,” என்று தெரிவித்துள்ளது.

அல்-ஜசீராவிடம் பேசிய அரசியல் விமர்சகர் அசிம் அலி, "தெற்கில் காணப்படும் முன்னிலை அதிர்ச்சியளிக்கிறது. மேலும் கணிப்புகள் மிகப்பெரிய முன்னிலையைக் காட்டுகின்றன. பா.ஜ.க எந்த இடத்திலும் வெற்றி பெறாவிட்டாலும், அதன் வாக்கு சதவீதம் அதிகரித்தாலே, அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்," என்றார்.

ப்ளூம்பெர்க், இந்தக் கருத்துக்கணிப்புகள் குறித்த மற்றொரு கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு: 'இந்தியாவின் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெறும் கூச்சலாகக் கூட இருக்கலாம்’.

அந்தக் கட்டுரையில், "பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவார், இதை கிட்டத்தட்ட ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் கூறுகிறது. இருப்பினும், இந்தக் கூற்றுகள் முற்றிலும் தவறானவை என்று கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும். தொலைக்காட்சி நிலையங்களில் மோதி அரசுக்கு அதிக செல்வாக்கு உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"செவ்வாயன்று (ஜுன் 4), பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எத்தனை இடங்களைப் பெறும் என்பது தெரிந்துவிடும். ஆனால் எல்லா கருத்துக்கணிப்பும் அது 350 இடங்களுக்கு மேல் பெறும் என்று சொல்வது நம்பத்தகாதது," என்கிறது.

"350 இடங்களைத் தாண்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2019 முடிவைப் போலவே இருக்கும். அப்போது மோதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீதான விமானத் தாக்குதலை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றினார். இந்த முறை தேசியப் பாதுகாப்பு தேர்தல் பிரச்னை அல்ல. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆக்ரோஷமான தேர்தல் பிரசாரத்தை நடத்தியது. அதில் அவர்கள் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றிய பிரச்சினையை எழுப்பினர். ஆனால் மோடி அவற்றைப் பற்றிப் பேசவில்லை,” என்கிறது அந்த அறிக்கை.

பிரதமர் மோதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தொலைக்காட்சி சேனலிடம், 'கடவுள் என்னை அனுப்பினார் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன்' என்று கூறினார். தொழிலதிபர் கெளதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகக் குழுவிற்கு அளித்த பேட்டியில், 1,000 ஆண்டுகளின் தொலைநோக்குப் பார்வை குறித்து மோதி பேசினார், என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"ஊடகங்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவது இது முதல் முறையல்ல. 2004-இல் வெளியான கருத்துக்கணிப்புகள் தவறு என்று நிரூபிக்கப்பட்டன. அந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கருத்துக்கணிப்புகள் 240 முதல் 275 இடங்களை வழங்கின. ஆனால் அது 187 இடங்களை மெட்டுமே பெற்று தோல்வியுற்றது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்புகள் மிகவும் அசாதாரணமானவை. ஏனெனில் குறைந்தபட்சம் மூன்று கருத்துக்கணிப்புகளாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் முழக்கமான ‘400 இடங்களில் வெற்றி’ என்பதைப் பிரதிபலித்திருக்கின்றன.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றிய பிரச்சினையை எழுப்பியது

கருத்துக் கணிப்புகள் குறித்த சந்தேகம்

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போதுமே துல்லியமானவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்க நாளிதழான 'தி வாஷிங்டன் போஸ்ட்', 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்டத்துக்குப் பிறகு - 'இந்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏன் நம்பகத்தன்மை அற்றவை?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அந்தக் கட்டுரையில், 'இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் தொடர்பாக அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர் பிரவீன் ராய், 1998 மற்றும் 1999-ஆம் தேர்தல்களுக்கான கணிப்புகள் முற்றிலும் துல்லியமானவை என்றும், 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் முற்றிலும் நேர்மாறானவை என்றும் அந்தச் செய்தித்தாளிடம் தெரிவித்திருந்தார்.

அந்தக் கட்டுரை மேலும், "இந்தியாவில் அரசியல் கருத்துக் கணிப்புகள் ஒரு பக்கச் சார்பு உள்ளவை என்று ஒரு பரவலான பார்வை உள்ளது. இந்தப் பார்வை நியாமானதும்கூட. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை இந்திய ஊடக நிறுவனங்கள் நடத்துகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பக்கச்சார்பானவை," என்று தெரிவித்திருந்தது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2024, பா.ஜ.க, காங்கிரஸ், கருத்துக்கணிப்புகள்

கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்?

டைம்ஸ் நவ் கணிப்பில், தேசிய அளவில் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 358 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 152 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 33 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பார்க்கும்போது ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு, இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணிக்கு 353 முதல் 368 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 133 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 43 முதல் 48 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று கூறுகிறது.

சிஎன்என் கணிப்பில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு 355 முதல் 370 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், இந்தியா கூட்டணி 125 முதல் 140 இடங்களைப் பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு, "பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு 377 இடங்கள் (15 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) என்றும், இந்தியா கூட்டணி 151 இடங்களை (10 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 15 இடங்கள் (5 இடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்கலாம்) வரை கிடைக்கலாம்" எனவும் கூறுகிறது.

பா.ஜ.க 327 இடங்களையும் காங்கிரஸ் 52 இடங்களையும் பிடிக்கக்கூடும் எனவும் ஜன்கி பாத் கணித்துள்ளது.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)