கிரிக்கெட்டில் அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலாக மாறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சமி செளத்ரி
- பதவி, கிரிக்கெட் ஆய்வாளர்
டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளின் விளம்பரப் பிரச்சாரத்தில் அமெரிக்கா காட்டிய உற்சாகம் ஒட்டு மொத்தமாக ஐசிசி மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ஆயினும் அமெரிக்க மைதானங்களை மக்கள் கூட்டத்தால் நிரப்ப இது போதுமானதாக இருக்காது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது முன்பின் தெரியாத விளையாட்டு அல்ல. 300 ஆண்டுகளுக்கு முன்பு கூட அமெரிக்க மண்ணில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதற்கு ரசிகர் கூட்டமும் இருந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பல காலம் முன்பே அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
ஆனால் ’பாஸ்டன் டீ பார்ட்டியில்’ ஆங்கிலேயக் கலாசாரத்தின் மீது வெறுப்பைக் காட்டும் விதமாக ஆங்கிலேய தேநீர் பகிரங்கமாக நிராகரிக்கப்பட்டதைப்போல, கிரிக்கெட்டிலும் இதேபோன்ற ஒன்று நடந்திருக்கலாம்.
ஆங்கிலேய கலாசாரத்தை தன் 'ஆன்மாவாக' கருதும் இந்த விளையாட்டு, அமெரிக்கர்களின் வெறுப்பின் இலக்காக மாறியது. கிரிக்கெட்டின் இடத்தை எடுத்துக்கொண்ட பேஸ்பால் பிரபலமடையத் தொடங்கியது.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த தசாப்தத்தில் கிரிக்கெட்டின் பரவலுக்கு ஐசிசி எடுத்த புரட்சிகரமான முடிவுகளின் காரணமாக இப்போது 90க்கும் மேற்பட்ட அணிகள் சர்வதேச டி20 கிரிக்கெட்டை விளையாடுகின்றன.
இந்த எல்லா அணிகளுக்கும் டி-20 கிரிக்கெட்டின் சர்வதேச அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதால் இப்போது முதல்முறையாக அமெரிக்க மண்ணில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு அதன் பிரபலத்தின் அடிப்படையில் ஒரு புதிய சாதனையை உருவாக்குமா அல்லது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு நாள் சர்வதேச உலகக் கோப்பையைப் போல 'தோல்வியாக' மாறுமா என்பது தெரியவில்லை.
ஆனால் இது கிரிக்கெட்டிற்கு சில புதிய பார்வையாளர்களையும், மற்றொரு பெரிய சந்தையையும் கொடுக்கும் என்பது தெளிவாகிறது. விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்
சர்வதேச கிரிக்கெட் தற்போது இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது 25 கோடிக்கும் அதிகமான மக்களைக்கொண்ட சந்தையாகும். ஐசிசிக்கு இதன் மூலம் அதிகபட்ச வருவாய் கிடைக்கிறது.
பாகிஸ்தான் தன் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் நெருக்கடியில் இருந்திருக்கவில்லை என்றால் அது இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய கிரிக்கெட் சந்தையாக மாறியிருக்கலாம்.
ஆனால் அமெரிக்க மண்ணில் நடத்தப்படும் ஐசிசி போட்டிகள் காரணமாக ஒரு முழு கண்டமும் கிரிக்கெட் பொருளாதாரத்தின் புதிய பகுதியாக மாறக்கூடும். இது அடுத்த சில ஆண்டுகளில் கிரிக்கெட் பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர முடியும்.
தன் அரசியல் செல்வாக்கு காரணமாக அமெரிக்கா, ஐசிசியில் இருக்கும் இந்திய மேலாதிக்கத்திற்கு சவால் விடமுடியும். ஏனெனில் டாலருடன் யாரால் மோத முடியும்?
இந்த உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பாக பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஏனெனில் முன்பு 10-12 அணிகள் மட்டுமே விளையாடிய இந்தப்போட்டியில் இப்போது 20 அணிகள் பங்கேற்கின்றன.
பிரபலத்தை பொறுத்தவரை கால்பந்தாட்டத்துடன் ஒப்பிடமுடியாத தொலைவில் இருக்கிறது கிரிக்கெட். ஆயினும் இரண்டாவது பெரிய உலகளாவிய விளையாட்டாக மாறும் பாதையில் கிரிக்கெட் உள்ளது.
சர்வதேச போட்டிகளை பற்றி கணிப்புகளைச் செய்யும்போது அணிகளின் திறனுடன் கூடவே, போட்டி நடக்கும் ஆடுகளங்களின் தரவுகளும் மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அது நமக்குக்கிடைக்காது.
இவற்றில் பல மைதானங்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நடத்துகின்றன. அங்கு போடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய டிராப்-இன் பிட்ச்கள் அமெரிக்க வானிலையில் எவ்வாறு செயல்படும் என்பது யாருக்கும் தெரியாது.

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது
ஆனால் கரீபியன் நிலைமைகள் கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு புதிதல்ல. அவற்றின் சமீபத்திய தரவுகளும் உள்ளன. இதற்கு டி20 கிரிக்கெட்டில் பெரும் முக்கியத்துவம் உள்ளது.
இருப்பினும் பயிற்சி ஆட்டங்களில் பெரிய ஸ்கோர்களை பார்க்க முடியும் என்று கூறுவது அவசரத்தனமாக இருக்கும்.
கடந்த காலத்தை வைத்து பார்த்தால் கரீபியன் சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று சொல்லலாம். அங்கு விளையாடப்படும் ஆடுகளங்களில் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கும் இருக்கும். இது ஆசிய அணிகளின் தன்னம்பிக்கைக்கு ஏற்றம் தரும்.
பாகிஸ்தானைத் தவிர மற்ற பிரபலமான அணிகளின் பெரும்பாலான வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சமீபத்திய பயிற்சியுடன் வருகிறார்கள். அதேசமயம் பாகிஸ்தான் அணி தனது பயிற்சிக்காக ’பாகிஸ்தான் சூப்பர் லீக்’ (PSL) -க்குப் பிறகு மூன்று சர்வதேச தொடர்களை விளையாடியது. இது பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவுகளைத் தரவில்லை.
ஆனால் திறமை மற்றும் அனுபவத்தில் பாகிஸ்தான் மற்ற அணிகளை விட பின்தங்கிய நிலையில் இல்லை.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களின் சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பாக இல்லையென்றாலும், போட்டியில் விளையாடும் பதினோரு வீரர்களிடையே சரியான சமநிலையைக் கண்டறிவதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அரையிறுதியில் நுழைவது இயலாத காரியம் அல்ல.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












