மக்களவைத் தேர்தல்: பாஜக முன்னிலை என்ற கருத்துக் கணிப்புகள் பற்றி அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், ANI

ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார். மூன்றாவது பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை தொடர்பான '100 நாள் நிகழ்ச்சி நிரல்' கூட்டத்தை பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறார்.

பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.

உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிரதமர் நரேந்திர மோதி என்ன சொன்னார்?

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், ANI

பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்த பிரதமர் மோதி, “தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பெருவாரியான மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ளார்கள் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன்."

"அவர்கள் எங்கள் சாதனையையும் அணுகுமுறையையும் பார்த்திருக்கிறார்கள். எங்களின் பணி ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது," என்று கூறியிருந்தார்.

பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் கூறுகையில், "எதிர்க்கட்சிகளால் மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டிலேயே முதன்முறையாக துறவி ஒருவர் பிரதமராகியுள்ளார்.

மோதியின் மீது இந்த நாடு வைத்துள்ள நம்பிக்கையின் மூலம், எதிர்க்கட்சியின் மீது மக்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பது தெரிகிறது. வட இந்தியக் கட்சி என்று அழைக்கப்படும் அவர்களுக்கு தென்னிந்தியாவில்தான் ஆதரவு உள்ளது” என்றார்.

கருத்துக்கணிப்பு குறித்த ராகுல் காந்தியின் கருத்து

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், ANI

கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.

பெரும்பாலான சேனல்களின் கருத்துக் கணிப்புகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமுள்ள 543 இடங்களில் 350க்கும் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளன.

கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ​​“இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்றார்.

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “சித்து மூஸ்வாலாவின் பாடலைக் கேட்டது உண்டா- 295” என்றார்.

மறைந்த பஞ்சாப் மாநிலப் பாடகர் சித்து மூஸ்வாலா ‘295’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியது என்ன?

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், @YADAVTEJASHWI

படக்குறிப்பு, சனிக்கிழமையன்று நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "எக்சிட் போல்கள் முற்றிலும் போலியானவை. ஜூன் 4ஆம் தேதி வெளியேற வேண்டியவர்கள் இந்தக் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்தியா கூட்டணிக்குக் குறைந்தது 295 இடங்கள் கிடைக்கும்."

"அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேற்று சந்தித்துப் பேசினோம். மாநில வாரியான ஆய்வுகளை அலசிப் பார்த்து, நாங்கள் 295 இடங்களைப் பெறுவோம் என்ற முடிவுக்கு வந்தோம்,” என்றார்.

மேலும், "இது தற்போதைய பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உளவியல் விளையாட்டு மட்டுமே. நமது நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நமது தலைவர்கள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் மீது உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க விரும்புகிறார்கள். அது நடக்காது," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோதி மிரட்டல் தொனியில் பேசிய விதம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் வெளிப்படுகிறது. அந்த அச்சத்தில்தான் சேனல்கள் இவ்வாறு செய்துள்ளன. 2004ஆம் ஆண்டு போலவே இந்த கருத்துக் கணிப்புகளும் உள்ளன” என்றார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தல் பதிவிட்டிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இந்த கருத்துக்கணிப்பின் காலவரிசையைப் புரிந்து கொள்ளுங்கள், பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என பாஜக ஊடகங்கள் சொல்வார்கள் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே கூறியிருந்தன. இதனால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கூறியிருந்தார்.

பல மாதங்களுக்கு முன்பே இந்த கருத்துக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டதாகவும், ஆனால் சேனல்கள் இப்போது அவற்றை வெளியிட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், “கருத்துக்கணிப்பின் அடிப்படை மக்கள் கருத்துதான், வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. மக்கள் சக்தியைவிட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், Getty Images

தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகளைப் பற்றி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ‘ஆக்சிஸ் மை இந்தியா’ அமைப்பு 160 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியது நினைவில் இருக்கலாம். ஆனால் இறுதியில் ​​77 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இப்போது 400 என்கிறார்கள். ஆனால் 200 தான் கிடைக்கும். கடைசி வாக்கை எண்ணி முடிக்கும்வரை அதில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கட்சிகளிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "பிஜேபியின் ‘400 தொகுதிகள்' என்ற கதைக்கு ஆதரவாக வெளியாகியுள்ள இந்தக் கருத்துக்கணிப்புக்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் உள்ளது. இது அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதி.

இதை நாங்கள் நிராகரிக்கிறோம், இங்கே பாஜகவுக்கு ஆதரவான அலை இல்லை, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், மக்கள் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற முன்வந்துள்ளார்கள்,” என்று கூறினார்.

மேலும், “பாஜகவும், பிரதமர் நரேந்திர மோதியும் உருவாக்கிய ‘400 தொகுதிகள்’ கதையை நடைமுறைபடுத்த, அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் உணர வேண்டும். எனவே இதில் ஏதோ சதி இருக்கிறது. அதனால்தான் இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன,” என்று கூறினார் ஹரிஷ் ராவத்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (UBT) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெறும் கார்ப்பரேட் விளையாட்டு. நீங்கள் அவர்களுக்குப் பணம் கொடுங்கள், அவர்கள் உங்களுக்குச் சாதகமாகப் புள்ளிவிவரங்களை வெளியிடுவார்கள். இந்தியா கூட்டணி 295 முதல் 310 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

'இது நடந்தால், நான் மொட்டை அடித்துக் கொள்வேன்'- ஆம் ஆத்மி எம்எல்ஏ

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பார்தி

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், புது டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சோம்நாத் பார்தி, தனது எக்ஸ் பக்கத்தில், “மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்” என்று கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு தெரிவித்துள்ளார்.

மேலும், "என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஜூன் 4ஆம் தேதி அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபிக்கப்படும், மோதி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மாட்டார்” என்று கூறினார்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் பார்தி கூறியுள்ளார்.

"பிரதமர் நரேந்திர மோதிக்கு பயந்துதான், கருத்துக் கணிப்புகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. எனவே ஜூன் 4ஆம் தேதி உண்மையான முடிவுகள் வரும் வரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார் பார்தி.

ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் முடிவுகள்

மக்களவைத் தேர்தல் 2024: கருத்துக் கணிப்பு

பட மூலாதாரம், ANI

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மார்ச் 16 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் செயல்முறை தொடங்கி ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நடைமுறை ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படுவதோடு முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிசா சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிந்தது. அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜக மட்டும் 303 இடங்களிலும், காங்கிரஸ் 52 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 92 இடங்களைக் கைப்பற்றியது.

பாஜக 2014இல் 282 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 336 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் 44 இடங்களையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 இடங்களையும் பெற்றது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)