'ஸ்கூட்டி - ரூ.3 லட்சம், பைக் - 5 லட்சம்' - ஹைதராபாத்தில் குழந்தை விற்கும் கும்பலின் சங்கேத மொழி

குழந்தை விற்கும் கும்பல்
    • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

'ஒரு ஸ்கூட்டி வேண்டும் என்று கூறி இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால், ஒரு சில நாட்களில் பெண் குழந்தை கிடைக்கும்.'

'இதே பைக் வேண்டும் என்று கூறி நான்கு முதல் ஐந்து லட்சம் கொடுத்தால் இரண்டு மூன்று நாட்களில் ஆண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம்.'

இவைதான் தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பிடிபட்ட குழந்தை விற்கும் கும்பல் பயன்படுத்திய ரகசிய வியாபார மொழி.

பெண்குழந்தை ஒன்றை விற்க முயன்ற போது அந்தக் கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தைகள் டெல்லி மற்றும் புனே போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஹைதராபாத்தின் ரச்சகொண்டா காவல்துறை, 11 நபர்கள் கொண்ட குழு ஒன்றை கைது செய்துள்ளது.

இதுவரை இப்படி 14 குழந்தைகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் இந்தக் குழந்தைகளை வாங்கி, தற்போது வளர்த்து வரும் பெற்றோர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, மீட்கப்பட்ட குழந்தைகள்

காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள்

மீட்கப்பட்டுள்ள 14 குழந்தைகளும் ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு, அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அவர்களை வளர்த்து வரும் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டபோது, பெற்றோர்கள் அனைவரும் கதறி அழுகத் தொடங்கினர்.

பணம் கொடுத்து தான் அந்தக் குழந்தைகளை வாங்கியதாக அந்தப் பெற்றோர்கள் ஊடகத்தின் முன்னிலையிலேயே ஒப்புக் கொண்டனர்.

அதே சமயம் அழுதுகொண்டே தாங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

மெடிப்பள்ளி காவல்நிலையத்தில் திரண்ட பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும் தங்களிடம் இருந்து அந்தக் குழந்தைகளைப் பிரித்துவிட வேண்டாம் என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர்.

குழந்தைகளும் அழுதபடியே இருந்தன. அதில் இரண்டரை வயது மற்றும் மூன்று வயது குழந்தைகளும் தங்களது வளர்ப்புப் பெற்றோரைப் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தன.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, அக்ஷர்ஜோதி அறக்கட்டளை நிறுவனர் அனுஷா

யார் இந்த கும்பல்?

காவல்துறை வழங்கியுள்ள தகவலின்படி, ஹைதராபாத் புறநகர் பகுதியான பீர்ஜாதிகுடாவில் சோபராணி என்ற மருத்துவ உதவியாளர் ஒருவர், முதலுதவி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அக்ஷர்ஜோதி அறக்கட்டளை மற்றும் உள்ளூர் ஊடக பிரதிநிதியான, மான்யம் சாய்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இவரது அமைப்பினர் இரண்டு குழுக்கள் அமைத்து குழந்தையை தத்தெடுப்பது போல மே 22-ஆம் தேதி சோபராணியிடம் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைத் தத்தெடுப்பது போல் நடித்து இந்தக் கும்பல் குறித்து வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளனர்.

அன்று நடந்த சம்பவம் குறித்து அக்ஷர ஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் அனுஷா பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

“சோபாராணி என்ற மருத்துவர் ஒரு ஆண் குழந்தையைத் தத்து கொடுப்பதாகக் கூறினார். நாங்கள் எங்கள் முடிவைக் கூறக் கொஞ்சம் தாமதம் ஆன போது, குழந்தை வேறு யாருக்காவது சென்றுவிடும் என்றும் அவசரப்படுத்தினார். முதலில் இதற்காக ரூ.10,000 கொடுத்தோம். பின்னர் கடந்த 20-ஆம் தேதி பெண் குழந்தை வேண்டும் என்று கேட்டோம். முதலில் அவர் எங்களை விஜயவாடா வரச் சொன்னார். நாங்களோ அவரை ஹைதராபாத்திலேயே இருக்கச் சொன்னோம். அப்படிதான் அங்கு சென்று, இந்த குழந்தை விற்பனை கும்பலை அம்பலப்படுத்தினோம்,” என்றார்.

இது குறித்து உள்ளூர் ஊடகப் பிரதிநிதியான, மான்யம் சாய்குமாரிடம் பேச முயன்றபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, காவல் ஆணையர் தருண் ஜோஷி

டெல்லி மற்றும் புனேவில் இருந்து வாங்கப்படும் குழந்தைகள்

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

வழக்கு விசாரணையில், இந்த குழந்தைகள் டெல்லி, புனே ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகளை 1.80 லட்சம் முதல் 5.50 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரச்சகொண்டா காவல் ஆணையர் தருண் ஜோஷி கூறுகையில், கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 50 குழந்தைகள் வரை விற்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“இந்த வழக்கில் முதலில் பீர்ஜாதிகுடாவில் முதலுதவி கிளினிக் நடத்தி வரும் ஷோபாராணியோடு சேர்த்து ஹேமலதா (ஸ்வப்னா), ஷேக் சலீம் ஆகியோரை கைது செய்தோம்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், பண்டாரி ஹரிஹர சேத்தன், காட்கேசரை சேர்ந்த பண்டாரி பத்மா, பாலகம் சரோஜா, பதான் மும்தாஜ், ஜெகநாதம் அனுராதா, முடாவத் சாரதா, மகபூப்நகரை சேர்ந்த ராஜூ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், டெல்லியைச் சேர்ந்த ப்ரீத்தி மற்றும் புனேவைச் சேர்ந்த கண்ணய்யா, கிரண் ஆகியவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்குவது தெரிய வந்தது,” என்று தெரிவித்துள்ளார் தருண் ஜோஷி.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370, 372, 373 மற்றும் சிறார் நீதிச் சட்டம் பிரிவு 81, 87, 88 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தருண் ஜோஷி கூறினார்.

இந்தக் குழந்தைகள் அனைத்தும் பிறந்து ஒரு நாளே ஆன சிசுக்களாக விற்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தருண் ஜோஷி கூறுகையில், எங்கிருந்து இந்த சிசுக்கள் கொண்டு வரப்பட்டன என்பது தெரியவில்லை என்றார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய டெல்லி மற்றும் புனேவை சேர்ந்தவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் பிடிபட்டால் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் குழந்தைகளின் உண்மையான பெற்றோர்களே இவர்களை விற்பனை செய்கிறார்களா அல்லது குழந்தைகள் கடத்தி வரப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடந்த வருகிறது.

இது குறித்து தருண் ஜோஷி பேசுகையில், “அரசின் விதிமுறைகளின்படி ஒரு குழந்தையை தத்தெடுக்க ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை ஆகும் என்பதால், விரைவில் குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்,” என்று தெரிவித்தார்.

குழந்தை விற்கும் கும்பல்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, குழந்தைகளை தத்தெடுத்த பெற்றோர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன.

போலி ஆவணங்கள்

குழந்தை விற்கும் கும்பல் போலியான பெற்றோர்கள் மற்றும் ஆவணங்கள் வழியாக இந்த செயலை செய்து வந்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மெடிப்பள்ளி காவல் ஆய்வாளர் கோவிந்த் ரெட்டி, தத்தெடுப்பதற்கான ஆவணங்கள் மற்றும் போலி பிறப்புச் சான்றிதழ்கள் தயாரிப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“பெற்றோர்களும், இது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் கூட குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.”

மேலும், “குழந்தைகளை வாங்கிய 14 பேரில் 12 பேர் படித்தவர்கள் என்றும், அதில் மென்பொறியாளர்கள் கூட இருந்தனர்,” என்றும் அவர் கூறுகிறார்.

குழந்தைகளை விற்றவர்கள் மட்டுமின்றி, அவற்றை வாங்கியவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவிந்த் ரெட்டி தெரிவித்தார்.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, தனது சகோதரி குடும்பம் குழந்தையை 5.25 லட்சத்துக்கு வாங்கியதாக கூறுகிறார் அகில் தேஜா

5.25 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை

குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பெற்றோர்களுக்கும் கூட ஒரு கதை இருக்கும். அதுகுறித்து ஒரு சில பெற்றோர்களிடம் பிபிசி பேசியது.

ஆந்திர மாநிலம் பாபத்தை சேர்ந்த குர்த் சக்ரபாணிக்கும், துர்கா என்பவருக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன போதிலும் குழந்தைகள் இல்லை.

துர்காவின் தாய் விஜயலட்சுமி பிபிசியிடம் அழுதுகொண்டே பேசினார்.

“எனக்கு ஒரே ஒரு மகள். இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதற்காகப் பல மருத்துவமனைகளுக்கு அலைந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுராதா என்ற பெண் மூலமாகவே இந்தக் குழந்தையை வாங்கினோம்,” என்றார்.

“குழந்தையை வாங்கி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில், குழந்தையின் பிறந்தநாளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் செலவு செய்தோம். தங்கத்தில் ஒரு செயின் செய்து போட்டோம். ஆனால் இப்போது காவலர்கள் குழந்தையை அழைத்துச் சென்று விட்டார்கள். அந்தக் குழந்தை மட்டும் இல்லை என்றால் நானும், எனது மகளும், மருமகனும் இறந்து விடுவோம்,” என்றார்.

விஜயவாடாவைச் சேர்ந்த துர்கா பிரசாத் மற்றும் அருணா ஆகியோர் குழந்தையைத் தத்தெடுத்த ஆவணங்களை அருணாவின் சகோதரர் கோனேட்டி அகில் தேஜா காண்பித்தார். அதில் ஃபரினா மற்றும் பாஜி என்பவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்துக் கொடுத்ததாக இருந்தது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அகில் தேஜா, “என் சகோதரிக்கு நான்கு முறை கரு உண்டானது. ஆனால் குழந்தை பிறக்கவில்லை. ஐந்தாவது முறையாகக் கரு உண்டாகிக் குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டது. அங்கிருந்த நர்ஸ் ஒருவர் குழந்தையை தத்து கொடுக்க ஆட்கள் இருப்பதாக கூறினார்,” என்றார்.

“பிறகு அனுராதா என்ற பெண் மூலமாக பிறந்து 15 நாட்களே ஆன ஒரு குழந்தையைத் தத்தெடுத்தோம். அதற்காக 5.25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தோம். அதை பதிவும் செய்தோம். 101 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, அந்க்த குழந்தை நலமுடன் இருப்பதாகத் தெரிந்த பிறகே வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். இப்போது, பெற்றோரும் மற்றும் பதிவு ஆவணங்களும் போலியானவை என்று காவல்துறையினர் சொல்கிறார்கள்," என்றார் அகில் தேஜா.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ஏ.எம்ராஜா ரெட்டி

காப்பகத்தில் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?

ஹைதராபாத், ரங்காரெட்டி மற்றும் மேட்சல் மாவட்டங்களின் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ஏ.எம்.ராஜா ரெட்டி பேசுகையில், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.

தற்போது 14 குழந்தைகளும் ஹைதராபாத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஊழியர்களின் பராமரிப்பில் உள்ளனர்.

அங்குள்ள சூழல் குறித்து அறிந்துக் கொள்ள வந்த ராஜா ரெட்டி, பிபிசியிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "குழந்தைகள் அனைவரையும் அமீர்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளோம். அங்கு அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம். 24 மணி நேரமும் செவிலியர்கள் உள்ளனர். எங்களிடம் வந்தவர்களில், இருவர் ஆண் குழந்தைகள், மீதமுள்ள 12 பேர் பெண் குழந்தைகள்,'' என்றார்.

இந்தக் குழந்தைகளை திருப்பி அனுப்ப முடியுமா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதுகுறித்து பேசிய ராஜா ரெட்டி, குழந்தைகளை அதே பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாது என்றார்.

சிறார் நீதி வாரிய விதிகளின்படி தத்தெடுப்பு நடைமுறைகள் இருக்கும். மேலும், குழந்தைகள் வெகு நாட்களாக வளர்ந்து வருவதால், அவர்களை மீண்டும் அதே பெற்றோரிடம் தத்து கொடுக்க முடியாத நிலை உள்ளது.

"அவர்கள் மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வமாக தத்தெடுப்பதற்கான ஒரே வழி இதுதான். ஏற்கனவே ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களும் உண்டு. தற்போது, யாருக்காவது குழந்தைகள் வேண்டும் என்றால், இணையதளம் வாயிலாக பதிவு செய்து, தங்களின் வரிசை எண் வரும் வரை காத்திருக்க வேண்டும்,'' என்றார்.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, உளவியல் ஆலோசனை நிபுணர் மருத்துவர் ஆரே அனிதா

இந்தக் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது?

“சொத்துக்கு வாரிசுகள் வேண்டும், சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் எனப் பல்வேறு காரணங்களுக்காக பலரும் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புகிறார்கள்,” என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசனை நிபுணரான மருத்துவர் ஆரே அனிதா.

விதிகளுக்கு மாறாகத் தத்தெடுத்து வளர்க்கப்பட்டாலும், பெற்றோருடன் வளர்ந்துவிட்டு, அவர்களிடமிருந்து விலகி இருப்பது குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்கிறார் அவர்.

"குழந்தைகள், பெற்றோரை விட்டு விலகி இருக்கும்போது தாங்கள் எதையோ இழந்துவிட்டதாக உணர்கிறார்கள். இரண்டு மற்றும் மூன்று வயது குழந்தைகளால் அந்த உணர்வை வாய்விட்டு சொல்ல முடியாது. அதன் காரணமாகவே கத்தி அழுவது போன்ற ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபடுகின்றனர்," என்றார் அனிதா.

அப்படியான குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பதையும் அவரே விளக்கினார்.

குழந்தைகள் மீது போதுமான கவனம் செலுத்த வேண்டும். அவர்களை ஏதோ சிறையில் விட்டது போல் விட்டுவிடக் கூடாது. ஒரு தாயிடம் இருந்து கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்து, அவர்கள் இல்லாத உணர்வே அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், “ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக குழந்தைகள் மனச்சோர்வு அல்லது ஆக்ரோஷமான மனநிலை கொண்டவர்களாக மாறும் அபாயம் உள்ளது,” என்கிறார் அனிதா.

குழந்தை விற்கும் கும்பல்
படக்குறிப்பு, சோபாராணி நடத்திய கிளினிக்

சோபாராணி நடத்திய கிளினிக்

பீர்ஜாதிகுடாவில் சோபாராணி நடத்தி வந்த முதலுதவி க்ளினிக்கிற்கும் பிபிசி சென்றது.

க்ளினிக் இருந்த தெருவில் தற்போது அது இருந்த அடையாளமே இல்லை.

அவரது குடும்பமும் அந்த க்ளினிக் இருந்த இடத்திலேயே வசித்து வந்தது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்து விட்டதாகவும், கிளினிக்கையும் மூடி விட்டதாகவும், அருகிலிருந்த தையல்கடைக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)