இறந்த உறவினரின் சிறுநீரகத்தை தானம் கொடுப்பவர்கள் கைகளை தானம் கொடுக்க முன்வராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
“நான் வாழ விரும்பவில்லை, என்னைக் கொன்றுவிடுங்கள்” என்று, தான் சிகிச்சை பெற்று வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களிடம் கூறினார் 21 வயது வெங்கடேஷ்.
2018-ஆம் ஆண்டு ஒரு தீ விபத்தில் சேதமடைந்த தனது இரு கைகளையும் அகற்ற வேண்டும் என்ற முடிவை மருத்துவர்கள் தெரிவித்த போது இதுதான் வெங்கடேஷின் பதில்.
நான்கு ஆண்டுகள் கழித்து வெங்கடேஷ் தற்போது இரு கைகளுடன் இயல்பு வாழ்க்கைக்குப் படிப்படியாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கைத் துணையும் கிடைத்து விட்டார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கைமாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் மூலம் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு இந்த மறுவாழ்வு கிடைத்தது. ஆனால் கைகளை தானமாகப் பெறுவதற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் இப்படி ஒரு புதிய வாழ்வு கிடைப்பதில்லை.

பட மூலாதாரம், வெங்கடேஷ், வேலூர்
தமிழ்நாட்டில் உறுப்பு தானம்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிர் காக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு உறுப்பு தானம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. எனினும் கரங்களை தானமாகப் பெறுவதில் சுணக்கம் நிலவுகிறது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தரவுகளின்படி 2023-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நான்கு கரங்கள் மட்டுமே தானமாகப் பெறப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையில் 2 கரங்கள் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ் நாட்டின் முதல் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் 2 கரங்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, குளோபல் மற்றும் சிம்ஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அனுமதி பெற்றவை.

பட மூலாதாரம், வெங்கடேஷ், வேலூர்
உணர்வுப்பூர்பமான தருணம்
2022-ஆம் ஆண்டு கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட வேலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், தனக்கு கரங்கள் தானமாகக் கிடைக்க 2 ஆண்டுகள் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, “குஜராத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் மூளைச் சாவு அடைந்த பின்னர் அவரது கைகள் எனக்கு தானமாகக் கிடைத்தன. என்னுடைய புகைப்படம், வீடியோ ஆகியவற்றைக் காட்டி என்னுடைய நிலைமையைப் பற்றி விளக்கிய பிறகுதான் அவர்கள் தானம் கொடுக்கச் சம்மதித்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் என்னை நேரில் பார்க்க வந்திருந்தனர்,” என்றார்.
"தானம் பெற்ற கைகளில் வலது புறம் இலை வடிவிலும், இடது புறம் பட்டாம்பூச்சி வடிவிலும் டாட்டூ குத்தப்பட்டிருந்தது. கொடையாளியின் அக்கா என்னிடம் டாட்டூவை அழிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எனது தங்கைக்கு பதில் ஒரு தம்பி கிடைத்திருப்பதாக உணர்கிறேன் என்றார்,” என குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், வெங்கடேஷ், வேலூர்
வாழ்வை மாற்றிய தருணம்
“2018-ஆம் ஆண்டு, அக்டோபர் 9-ஆம் தேதி எனது நண்பரின் வீட்டு மாடியில் ஒரு இரும்புக் குழாயைப் பொருத்துவதற்காக உதவிக்குச் சென்றேன். அவர் கீழே இருந்து குழாயை கொடுக்க, நான் மாடியிலிருந்து அதை பெற்றுக் கொண்டிருந்தேன். என் தலைக்கு மேலே உயர் அழுத்த மின்கம்பி இருந்ததை கவனிக்கவில்லை. குழாய் அதில் பட்டு மின்சாரம் என் மீது பாய்ந்தது, எனது இரு கைகளும் கருப்பானதைப் பார்த்தேன். எனது காலணிகள் உருகி கால்களில் ஒட்டிக் கொண்டன. நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன்,” என்றார்.
"சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தேன். முதலில் எனது வலது கையை எடுத்துவிட்டார்கள். 45 நாட்கள் கழித்து, இடது கையையும் எடுக்க வேண்டும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று கூறினர்,” என தனக்கு நேர்ந்ததை நினைவுகூர்ந்தார்.
21 வயதில் தனது கைகளை இழந்த வெங்கடேஷ் தனது தாயாரின் உதவியுடனே குளித்து, உணவு உண்டு நாட்களைக் கழித்து வந்தார்.
“கை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்துப் பார்த்த போது கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்கவே முடியாது. ஒரு பொருளை தொலைத்து விட்டு, மீண்டும் கிடைத்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. தற்போது என்னால் பல் துலக்க முடியும், ஃபோன் பேச முடியும், கார் ஓட்டுவேன், ஸ்பூனில் உணவை எடுத்துச் சாப்பிட முடியும்,” என்றார்.
கைகளை இழந்திருந்த சமயத்தில் தன்னிடம் காதலுற்ற துணையோடு தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. “வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த போது, அவரது அன்பு பெரும் ஊக்கமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் நடந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் வெங்கடேஷ்.

பட மூலாதாரம், குளோபல் மருத்துவமனை
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இது வரை கரங்களை தானமாக பெற்ற 2 பேரில் ஒருவரான தஞ்சாவூரை சேர்ந்த எம்.புவன், பிபிசி தமிழிடம் பேசும் போது, “கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, பகுதி நேரமாக அருகில் உள்ள சிறு டைல்ஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றேன். அங்கு இயந்திரத்தில் தவறுதலாக கைமாட்டிக் கொண்டதில் எனது வலது கையை இழந்து விட்டேன்,” என்றார்.
"அதே கையை மீண்டும் உடலில் ஒட்ட வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு இடது கையிலேயே எழுத, வரைய, சாப்பிட அனைத்தையும் பழகிக் கொண்டேன். பிறகு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் பதிவு செய்து கடந்த மாதம் எனக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது கைகளை லேசாக அசைக்க முடிகிறது,” என்கிறார்.
கை மாற்று அறுவை சிகிச்சை எப்படி நடக்கிறது?
கை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தனது கரங்களை மீளப்பெரும் ஒருவருக்கு வாழ்க்கையில் அது எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதுதான் இந்த சிகிச்சையின் வெற்றி என்று, புவனுக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செல்வ சீதாராமன் கூறுகிறார்.
“கை மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. ஏனென்றால், கைகளில் பல நரம்புகள், ரத்தக் குழாய்கள் உள்ளன. அவற்றை எல்லாம் சரியாக இணைக்க வேண்டும். அப்போது தான் ரத்த ஓட்டம் சீராகும்,” என்ற அவர், அறுவை சிகிச்சைக்குத் தயாராவது பற்றி விவரித்தார்.
புவன் மட்டுமல்லாமல் சென்னையைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவருக்கும் கடந்த மாதம் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரியல் எஸ்டேட் முகவரான அவர், சென்னையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தனது இரு கைகளையும் இழந்தார்.
கிளென் ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் செல்வ சீதாராமன், “31 வயது நோயாளிக்கு இரண்டு கைகள் தானம் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், எங்கள் மருத்துவக் குழுவிலிருந்து இரண்டு பேர் திருச்சிக்குச் சென்றனர். கைகள் வெகு நேரம் ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்க முடியாது. எனவே விமானத்தில் புறப்படுவதற்குச் சரியாக 45 நிமிடங்கள் முன்பு கைகளை கொடையாளரிடமிருந்து எடுத்தோம்,” என்றார்.
"கிரீன் காரிடர் மூலம் (அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் பச்சை விளக்கு இருப்பது), விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு எங்கள் குழுவினர் தேவையான ஆவணங்களைக் காண்பித்து ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். நாம் எடுத்து வரும் உறுப்புக்குத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். அதன் பின் சென்னையில் தரையிறங்கிய பிறகு கைகள் மீண்டும் கிரீன் காரிடர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில் தானம் பெறுபவரை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 16 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது,” என்றார்.

பட மூலாதாரம், மருத்துவர் செல்வ சீதாராமன்
கைகளை தானமாக கொடுப்பதில் சுணக்கம் ஏன்?
கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் தருவது அதிகரித்துள்ள போதிலும் கரங்களை தானமாக கொடுப்பது மட்டும் குறைவாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் 2018-ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல் முறையாக 2 கைகள் தானம் பெற்று கை மாற்று சிகிச்சை நடந்தது. அதே ஆண்டில் 239 சிறுநீரகங்கள், 201 கண் விழிகள், 117 கல்லீரல்கள் தானம் செய்யப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்று இருந்த போதிலும் உறுப்பு தானம் தொடர்ந்தது. ஆனால் கைகளை தானமாகத் தருவது உயரவில்லை.

“உள் உறுப்புகளை தானமாக வழங்கப்படும் போது, கொடையாளரின் உடல் உருவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் கரங்களை அகற்றி எடுப்பது வெளியில் தெரியும். ஒரு அங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ள இறந்தவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வது எளிதல்ல. ஆனால் ஒருவர் இறந்த உறவினரின் கைகளைக் கொடையாக அளிக்க முன்வந்தால் இறந்தவருக்குச் செயற்கைக் கைகள் பொருத்தப்படும்,” என்று தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுத்தவரான மருத்துவர் அமலோற்பாவநாதன் விளக்கினார்.
மேலும் அவர், “இது உயிர் காக்கும் அறுவை சிகிச்சை கிடையாது. கைகள் இல்லாமலும் ஒருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் இரண்டு கைகளையும் இழந்தவருக்கு, தொடு உணர்வு இல்லாமல் வாழ்வது மிகுந்த மன உளைச்சலை தரும். செயற்கைக் கைகள் பொருத்தினால் கூட தொடும் உணர்வு கிடைக்காது. எனவேதான் உறுப்பு தானம் அவசியமாகிறது," என்று கூறினார்.
மேலும், “இரண்டு கைகளும் இழந்தவர்களைப் பார்ப்பது அரிதானது. மேலும், கரங்களைத் தானமாகப் பெறும்போது ரத்தம் மட்டுமல்லாமல், உறுப்பின் நிறம், தன்மையும் பொருந்த வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பின் வெகு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புச் சக்தியை மட்டுப்படுத்தும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்பதையும் குறிப்பிட்டார்.
கரங்களை இழந்தவர்களுக்கு இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு அரசே காப்பீட்டுத் திட்டம் மூலம் வழி ஏற்படுத்தினால் பொருளாதாரச் சுமையைக் குறைத்து இன்னும் பலருக்குக் கைகொடுக்க முடியும் என்கிறார் கரங்களை தானமாகப் பெற்ற புவன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












