பாலியல் புகார்: பிரஜ்வல் ரேவண்ணா கைது, ஆறு நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், FB/PRAJWAL REVANNA
பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகாரில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனியிலிருந்து வியாழக்கிழமை கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கேம்பேகௌட சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு 12.52 மணியளவில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், சிறப்பு புலனாய்வு குழு இணைந்து கைது செய்தது.
சாம்பல் நிற மேற்சட்ட அணிந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான வாயிலில் நடந்துசென்ற போது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, அவரை ஆறு நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஏப்ரல் 26ஆம் தேதி அத்தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்றிரவே ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பான 2,960 வீடியோக்கள் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ்-கள், வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பல்வேறு பொது இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
“அரசியல் சதி”

பட மூலாதாரம், ANI
கர்நாடகா திரும்புவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் முன்னர் தான் ஆஜராவேன் எனக்கூறி பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், தன் மீதான புகார் “அரசியல் சதி” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து நேரடியாக, சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டுவரும் குற்ற புலானாய்வு துறை அலுவலகத்திற்கு (சிஐடி) அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர் கைது செய்யப்படுவதை முன்னிட்டு, விமான நிலையத்திலும் சிஐடி அலுவலகத்தின் நுழைவாயிலிலும் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறவுள்ளது. தன் மீது ஹோலேனரசிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளிலும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் உள்ள மற்ற இரு வழக்குகளிலும் ரேவண்ணா ஜாமீன் கோரியுள்ளார்.
பிரஜ்வாலின் தாய் பவானி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர். நகரை சேர்ந்த பெண் ஒருவரை அவருடைய கணவர் ஹெச்.டி. ரேவண்ணா கடத்தியதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு பவானி அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த கடத்தல் வழக்கில் ஹெச்.டி. ரேவண்ணா ஏற்கெனவே ஜாமீன் பெற்றுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள்

பட மூலாதாரம், HD DEVE GOWDA'S X ACCOUNT
ஏப்ரல் 28 அன்று, ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.
"நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வாலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
"அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.
மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கசிந்த வீடியோக்கள்

பட மூலாதாரம், ANI
இதையடுத்து, கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் கே. சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒருநாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் பல வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன.
இந்த வழக்கில் அவர் மீதும் அவரது தந்தை மீதும் குற்றம்சாட்டப்படிருக்கிறது.
முன்னதாக, "விசாரணையில் கலந்துகொள்ள நான் பெங்களூருவில் இல்லை. எனவே இதனை எனது வழக்கறிஞர்கள் மூலம் பெங்களூரு சி.ஐ.டி-இடம் (CID) தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெளிவரும்," என்று எக்ஸ் தளத்தில் பிரஜ்வல் பதிவிட்டிருந்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகம் திரும்புவதற்கு முன்னதாக, வியாழக்கிழமை பல்வேறு மக்கள் அமைப்புகள் சார்பில் ‘ஹசன் சலோ’ (Hassan Chalo) எனும் பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












